யோனா 1:1-17

யோனா 1:1-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அமித்தாயின் மகனாகிய யோனாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. “நீ பெரிய பட்டணமான நினிவேக்குப் போய், அதற்கு எதிராகப் பிரசங்கம்பண்ணு. ஏனெனில், அதன் கொடுமை எனக்கு முன்பாக வந்திருக்கிறது.” ஆனால் யோனாவோ, யெகோவாவைவிட்டு ஓடி மறுதிசையிலிருக்கும் தர்ஷீசுக்குப் போகப் புறப்பட்டான். அவன் யோப்பாவுக்குப் போய் அங்கே தர்ஷீஸ் துறைமுகத்துக்குப் போகும் ஒரு கப்பலைக் கண்டான். அவன் பயணத்துக்கான கட்டணத்தைச் செலுத்தி, கப்பலேறி, யெகோவாவிடமிருந்து தப்பிக்கொள்வதற்காக தர்ஷீசுக்குப் பயணமானான். அப்பொழுது யெகோவா கடலில் பெருங்காற்றை அனுப்பினார். கப்பல் உடைந்துபோகுமென பயப்படத்தக்கதான, ஒரு பெரும்புயல் கடலில் உண்டாயிற்று. கப்பலாட்கள் எல்லோரும் பயந்து, ஒவ்வொருவனும் தன்தன் தெய்வத்தை நோக்கிக் கதறினான். அத்துடன் அவர்கள் கப்பலின் பாரத்தைக் குறைப்பதற்காக, அதிலிருந்த சரக்குகள் எல்லாவற்றையும் கடலில் எறிந்தார்கள். ஆனால் யோனாவோ, கப்பலின் அடித்தளத்திற்குச் சென்று அங்கே படுத்து ஆழ்ந்த நித்திரையாயிருந்தான். அப்பொழுது மாலுமி அவனிடம் சென்று, “நீ எப்படி நித்திரை செய்யலாம்? எழுந்து நீயும் உன் தெய்வத்திடம் மன்றாடு; ஒருவேளை அவர் நம்மில் கவனம்கொண்டு, அழிவிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடும் என்றான்.” அப்பொழுது கப்பலாட்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வாருங்கள், இந்த பேராபத்திற்குக் காரணம் யார் என்று அறியச் சீட்டுப் போடுவோம் என்றார்கள்.” அவர்கள் சீட்டுப் போட்டபொழுது, அது யோனாவின் பெயருக்கு விழுந்தது. எனவே அவர்கள் அவனிடம், “இந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் யார்? என்று இப்பொழுது நீ எங்களுக்குச் சொல்லவேண்டும். நீ என்ன வேலைசெய்கிறாய்? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உனது நாடு எது? நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன்?” எனக் கேட்டார்கள். அதற்கு அவன் அவர்களிடம், “நான் ஒரு எபிரெயன், கடலையும் நிலத்தையும் படைத்த பரலோகத்தின் இறைவனாகிய யெகோவாவை ஆராதிக்கிறவன்” எனப் பதிலளித்தான். அவன் தான் யெகோவாவைவிட்டு ஓடிப்போகிறவன் என்று ஏற்கெனவே அவர்களிடம் சொல்லியிருந்தான். எனவே அவர்கள் அதைப்பற்றி அறிந்ததால் மிகவும் பயந்து, நீ என்ன செய்துவிட்டாய்? என்று கேட்டார்கள். கடல் மென்மேலும் கொந்தளித்தது. எனவே அவர்கள், “கடலின் கொந்தளிப்பை அமைதிப்படுத்த, நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும்?” என அவனைக் கேட்டார்கள். “என்னைத் தூக்கிக் கடலுக்குள் எறிந்துவிடுங்கள்; அப்பொழுது அது அமைதலாகும். என் குற்றத்தினாலேயே உங்கள்மேல் இப்பெரும் புயல் வந்திருக்கிறது என நான் அறிவேன்” என அவன் விடையளித்தான். ஆனாலும் அந்த மனிதர், கப்பலை தண்டுவலித்து கரைக்குக் கொண்டுபோகும்படி, தங்களால் இயன்றவரை முயற்சித்தனர். ஆனால் அது அவர்களால் முடியவில்லை. கடலோ முன்பு இருந்ததைவிட, மிக அதிகமாக கொந்தளித்துக் கொண்டேயிருந்தது. அப்பொழுது அவர்கள் யெகோவாவிடம் வேண்டுதல்செய்து, “யெகோவாவே, இந்த மனிதனின் உயிரை எடுத்ததற்காக எங்களைச் சாகவிடாதேயும். குற்றமற்ற ஒரு மனிதனைக் கொன்றதற்கான பழியை எங்கள்மீது சுமத்தாதேயும். ஏனெனில், நீர் எப்பொழுதும் உமது விருப்பத்தின்படியே செய்திருக்கிறீர்” என அழுதார்கள். அதன்பின் அவர்கள் யோனாவைத் தூக்கிக் கப்பலைவிட்டு கடலுக்குள் எறிந்தார்கள். அப்பொழுது கொந்தளித்த கடல் அமைதியானது. இதைக் கண்ட அம்மனிதர்கள் யெகோவாவுக்கு மிகவும் பயந்து, அவருக்கு பலியைச் செலுத்தினார்கள்; அவருக்கு நேர்த்திக்கடன்களையும் செய்தார்கள். ஆனால் யெகோவாவோ, யோனாவை விழுங்கும்படி, ஒரு பெரிய மீனை ஆயத்தப்படுத்தியிருந்தார்; யோனா அந்த மீனின் வயிற்றில் மூன்றுநாள் இரவும் பகலும் இருந்தான்.

யோனா 1:1-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அமித்தாயின் மகனாகிய யோனாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அவர்: நீ எழுந்து பெரிய நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு எதிராகப் பிரசங்கம் செய்; அவர்களுடைய அக்கிரமம் என்னுடைய சந்நிதியில் வந்து எட்டினது என்றார். அப்பொழுது யோனா யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போவதற்கா எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப்போகிற ஒரு கப்பலைக்கண்டு, கட்டணம் செலுத்தி, தான் யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகும்படி, அவர்களோடு தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான். யெகோவா கடலின்மேல் பெருங்காற்றை அனுப்பினார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமளவிற்கு பெரிய கொந்தளிப்பு உண்டானது. அப்பொழுது கப்பற்காரர்கள் பயந்து, அவனவன் தன்தன் தெய்வங்களை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தைக் குறைப்பதற்காக கப்பலில் இருந்த சரக்குகளைக் கடலில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோ கப்பலின் கீழ்த்தளத்தில் இறங்கிப்போய்ப் படுத்துக்கொண்டு, ஆழ்ந்து தூங்கினான். அப்பொழுது மாலுமி அவனிடம் வந்து: நீ தூங்கிக் கொண்டிருக்கிறது என்ன? எழுந்திருந்து உன்னுடைய தெய்வத்தை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாமலிருக்க உன்னுடைய தெய்வம் ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான். அவர்கள் யாரால் இந்த ஆபத்து நமக்கு வந்ததென்று நாம் தெரிந்துகொள்ள சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பெயருக்குச் சீட்டு விழுந்தது. அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யாரால் இந்த ஆபத்து நமக்கு வந்ததென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழில் என்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நான் எபிரெயன்; கடலையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தரிடம் பயபக்தியுள்ளவன் என்றான். அவன் யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனிதர்கள் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள். பின்னும் கடல் அதிகமாகக் கொந்தளித்துக்கொண்டிருந்ததால், அவர்கள் அவனை நோக்கி: கடல் நமக்காக அமைதியாகும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்து கடலிலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது கடல் அமைதியாக இருக்கும்; என்னால்தான் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான். அந்த மனிதர்கள் கரைசேருவதற்காக வேகமாகத் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் கடல் மிகவும் மும்முரமாகக் கொந்தளித்துக் கொண்டேயிருந்ததால் அவர்களால் முடியாமற்போனது. அப்பொழுது அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: ஆ யெகோவாவே, இந்த மனிதனுடைய ஜீவனுக்காக எங்களை அழித்துப்போடாதிரும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதிரும்; தேவரீர் யெகோவா; உமக்குச் சித்தமாக இருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி, யோனாவை எடுத்துக் கடலிலே போட்டுவிட்டார்கள்; கடல் தன்னுடைய மும்முரத்தைவிட்டு அமைதியானது. அப்பொழுது அந்த மனிதர்கள் யெகோவாவுக்கு மிகவும் பயந்து, யெகோவாவுக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைச் செய்தார்கள். யோனாவை விழுங்குவதற்காக ஒரு பெரிய மீனை யெகோவா ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீனின் வயிற்றிலே யோனா இரவுபகல் மூன்றுநாட்கள் இருந்தான்.

யோனா 1:1-17 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் அமித்தாயின் குமாரனான யோனாவோடு பேசினார். கர்த்தர், “நினிவே ஒரு பெரிய நகரம். நான் அங்கே மக்கள் செய்து கொண்டிருக்கிற அநேக தீமைகைளப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே அந்நகரத்திற்குப் போய் அம்மக்களிடம் அத்தீமைகளை நிறுத்தும்படிச் சொல்” என்றார். யோனா தேவனுக்குக் கீழ்ப்படிய விரும்பவில்லை. எனவே யோனா கர்த்தரிடமிருந்து விலகி ஓடிவிட முயற்சித்தான். யோப்பா பட்டணத்திற்குப் போனான். யோனா அங்கே தர்ஷீசுக்குப் போகும் படகு ஒன்றைக் கண்டான். யோனா பயணத்துக்காக பணம் கொடுத்து படகில் ஏறினான். யோனா அம்மக்களோடு தர்ஷீசுக்குப் பயணம் செய்து கர்த்தரை விட்டு விலகி ஓடிப்போக விரும்பினான். ஆனால் கர்த்தர் கடலில் ஒரு பெரும் புயலை உருவாக்கினார். காற்றானது கடலைக் கொந்தளிக்கச் செய்தது. புயல் மிகவும் பலமாக வீச, படகு இரண்டு பகுதியாக உடைந்துவிடும் போலத் தோன்றியது. பணியாட்கள் படகை மூழ்குவதிலிருந்து காப்பாற்ற அதன் கனத்தைக் குறைக்க விரும்பினார்கள். எனவே அவர்கள் கடலுக்குள் சரக்குகளைத் தூக்கி எறிந்தனர். படகோட்டிகள் மிகவும் பயந்தார்கள். ஒவ்வொருவரும் தனது தேவனிடம் ஜெபம் செய்யத் தொடங்கினார்கள். யோனா படகின் கீழ்த்தளத்திற்குச் சென்று படுத்து தூங்கிக்கொண்டிருந்தான். படகின் தலைவன் யோனாவிடம், “எழுந்திரு! ஏன் தூங்கிக்கொண்டிருக்கிறாய்? உனது தேவனிடம் ஜெபம் செய். ஒரு வேளை உனது தேவன் உன் ஜெபத்தைக் கேட்டு நம்மைக் காப்பாற்றலாம்!” என்றான். பிறகு அவர்கள் ஒருவரோடு ஒருவர், “நாம் சீட்டுக் குலுக்கிப்போட்டு இத்துன்பம் வரக் காரணம் என்னவென்று பார்ப்போம்” என்று பேசிக்கொண்டார்கள். எனவே அவர்கள் சீட்டுப் போட்டார்கள். யோனாவால் இந்தத் துன்பம் வந்தது என்பதை அது காட்டியது. பிறகு அவர்கள் யோனவிடம், “உனது குற்றத்தால்தான் எங்களுக்கு இந்த பயங்கரமான துன்பம் ஏற்பட்டிருக்கிறது. எனவே நீ என்ன செய்திருக்கிறாய் என்று எங்களிடம் சொல். உனது தொழில் என்ன? நீ எங்கிருந்து வருகிறாய்? உனது நாடு எது? உனது மக்கள் யார்?” என்று கேட்டார்கள். யோனா அவர்களிடம், “நான் ஒரு எபிரேயன் (யூதன்). நான் பரலேகத்தின் தேவனாகிய கர்த்தரை ஆராதிக்கிறேன். அவரே கடலையும் நிலத்தையும் படைத்த தேவன்” என்றான். யோனா, தான் கர்த்தரிடமிருந்து ஓடி வந்ததாகச் சொன்னான். அவர்கள் அதனை அறிந்ததும் மிகவும் பயந்தார்கள். அவர்கள் யோனாவிடம் “உனது தேவனுக்கு எதிராக எந்த பயங்கரமான செயலைச் செய்தாய்?” என்று கேட்டார்கள். காற்றும், கடல் அலைகளும் மேலும், மேலும் பலமடைந்தன. எனவே அவர்கள் யோனாவிடம், “நாங்கள் எங்களைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யவேண்டும்? நாங்கள் கடலை அமைதிப்படுத்த உனக்கு என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள். யோனா அவர்களிடம், “நான் குற்றம் செய்துவிட்டேன் என்று எனக்குத் தெரியும். என்னால்தான் இந்தப் புயல் வந்துள்ளது என்று எனக்குத் தெரியும். எனவே என்னைக் கடலுக்குள் எறியுங்கள். கடல் அமைதி அடையும்” என்றான். ஆனால் அவர்கள் யோனாவைக் கடலுக்குள் எறிய விரும்பவில்லை. அவர்கள் கப்பலை மறுபடியும் கரைக்குக் கொண்டுப்போக முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. காற்றும், கடல் அலைகளும் மேலும், மேலும் பலமடைந்தன. எனவே அவர்கள் கர்த்தரிடம், “கர்த்தாவே, நாங்கள் இவனை அவன் செய்த தவறுக்காக கடலில் தூக்கி எறிகிறோம். எனவே, ஒரு அப்பாவி மனிதனைக் கொன்றோம் என்று எங்களைக் குற்றப்படுத்தாதிரும். நாங்கள் அவனைக் கொன்றதற்காக எங்களை மரிக்கச் செய்யாதிரும். நீர்தான் கர்த்தர், நீர் என்ன செய்ய விரும்புகிறீரோ அதைச் செய்வீர் என்பதை நாங்கள் அறிகிறோம். ஆனால் தயவு செய்து எங்களிடம் இரக்கமாய் இரும்” என்று அழுதார்கள். அவர்கள் யோனாவைக் கடலுக்குள் வீசினார்கள். புயல் நின்று கடல் அமைதியானது. இதனைப் பார்த்த அவர்கள் பயப்படத் தொடங்கி கர்த்தரிடம் மரியாதை செலுத்தத் தொடங்கினார்கள். அவர்கள் பலி கொடுத்து கர்த்தருக்குச் சிறப்பான வாக்குறுதிகளைச் செய்தார்கள். யோனா கடலுக்குள் விழுந்தவுடன், கர்த்தர் ஒரு பெரிய மீனைத் தேர்ந்தெடுத்து, யோனாவை விழுங்கும்படிச் செய்தார். யோனா அந்த மீனின் வயிற்றுக்குள் மூன்று பகல்களும், மூன்று இரவுகளும் இருந்தான்.

யோனா 1:1-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்: நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார். அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப்போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான். கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று. அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிப்போய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரை பண்ணினான். அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து: நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான். அவர்கள் யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாம் அறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது. அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழிலென்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான். அவன் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனுஷர் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள். பின்னும் சமுத்திரம் அதிகமாய்க் கொந்தளித்துக்கொண்டிருந்தபடியால், அவர்கள் அவனை நோக்கி: சமுத்திரம் நமக்கு அமரும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும்; என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான். அந்த மனுஷர் கரைசேரும்படி வேகமாய்த் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் சமுத்திரம் வெகு மும்முரமாய்க் கொந்தளித்துக்கொண்டேயிருந்தபடியால் அவர்களால் கூடாமற்போயிற்று. அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: ஆ கர்த்தாவே, இந்த மனுஷனுடைய ஜீவனிமித்தம் எங்களை அழித்துப்போடாதேயும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும்; தேவரீர் கர்த்தர்; உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி, யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள்; சமுத்திரம் தன் மும்முரத்தைவிட்டு அமர்ந்தது. அப்பொழுது அந்த மனுஷர் கர்த்தருக்கு மிகவும் பயந்து, கர்த்தருக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைப்பண்ணினார்கள். யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்