யோவேல் 2:1-27

யோவேல் 2:1-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த குன்றிலே எச்சரிப்பின் ஒலியை எழுப்புங்கள். நாட்டில் வாழும் அனைவரும் நடுங்குவார்களாக; ஏனெனில், யெகோவாவின் நாள் வருகிறது. அது நெருங்கி வந்திருக்கிறது. அது இருளும் காரிருளும் கலந்த நாள், மப்பும் மந்தாரமும் நிறைந்த நாள். விடியற்காலை வெளிச்சம் மலைகளின்மீது பரவுவதுபோல் வலிமைமிக்க வெட்டுக்கிளிகளின் பெரும் படையொன்று வருகிறது! இதுபோன்ற படை முற்காலத்தில் இருந்ததுமில்லை, வரப்போகும் காலங்களில் இருக்கப் போவதுமில்லை. அவற்றிற்கு முன்னாக நெருப்பு சுட்டெரிக்கும், அவற்றிற்கு பின்னாக நெருப்புப் பற்றியெரியும். அவற்றிற்கு முன்னாக நாடு ஏதேன் தோட்டத்தைப் போலவும், அவற்றிற்குப் பின்னாக நாடு பாழான பாலைவனம் போலவும் இருக்கிறது; அவற்றிலிருந்து தப்புவது எதுவுமேயில்லை. அவை குதிரைகளின் தோற்றமுடையவை; அவை குதிரைப் படைபோல் பாய்ந்தோடுகின்றன. தேர்களின் இரைச்சலைப் போன்ற சத்தத்துடனும், காய்ந்த சருகுகளை எரிக்கும்போது எழும்பும் சத்தத்துடனும், யுத்தத்திற்கு அணிவகுக்கும் வலிமைமிக்க படையைப்போல் அவை மலைமேல் பாய்ந்து வருகின்றன. அவைகளைக் கண்டதும் நாடுகள் நடுங்கும்; பயத்தால் எல்லாருடைய முகங்களும் வெளிறிப்போகும். வெட்டுக்கிளிகள் இராணுவவீரரைப்போல் தாவி ஓடுகின்றன; அவை போர் வீரரைப்போல் மதில்களில் ஏறுகின்றன. அவை தங்கள் பாதையிலிருந்து விலகாமல் நேராய் அணிவகுத்துச் செல்கின்றன. அவை ஒன்றையொன்று இடித்துக்கொள்ளாமல் ஒவ்வொன்றும் தன் வழிதவறாமல் செல்கின்றன. அணிவகுப்பைக் குலைக்காமல் போராயுதங்களை இடித்து முன்னேறுகின்றன. அவை நகரத்தை நோக்கி விரைகின்றன; மதில்கள்மேல் ஓடுகின்றன. வீடுகளுக்குள் ஏறுகின்றன; அவை திருடர்களைப்போல் ஜன்னல் வழியே நுழைகின்றன. அவற்றின் முன்பாக பூமி அதிருகிறது, வானம் அசைகிறது. சூரியனும் சந்திரனும் இருளடைகின்றன, நட்சத்திரங்கள் ஒளிகொடாதிருக்கின்றன. யெகோவா தமது படையின் முன்னின்று முழக்கமிடுகிறார்; அவருடைய பாளையம் மிகப்பெரியது, அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறதற்கு வலிமைமிக்கது. யெகோவாவின் நாள் பெரிதும் பயங்கரமுமானது. அதை யாரால் சகிக்கமுடியும்? ஆகையால், “இப்பொழுதேனும் நீங்கள் உபவாசித்து, அழுது புலம்பி, உங்கள் முழுமனதுடன் என்னிடம் திரும்புங்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். உங்கள் உடைகளையல்ல, உங்கள் உள்ளத்தையே கிழியுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்புங்கள்; ஏனெனில் அவர் கிருபையும் கருணையும் உள்ளவர், கோபிக்கத் தாமதிக்கிறவர், அன்பு நிறைந்தவர்; பேரழிவை அனுப்பாமல் மனம் மாறுகிறவர். யாருக்குத் தெரியும்? ஒருவேளை அவர் மனமாறி, அனுதாபங்கொண்டு, உங்களுக்குத் தனது ஆசீர்வாதத்தையும் தரக்கூடும். அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்காக தானிய காணிக்கையையும் பானகாணிக்கையையும் நீங்கள் கொண்டுவரலாம். ஆசாரியர்களே, சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசத்தை அறிவியுங்கள்; பரிசுத்த திருச்சபையை ஒன்றுகூட்டுங்கள். மக்களை ஒன்றுசேர்த்து, சபையை பரிசுத்தம் செய்யுங்கள். முதியோரை ஒன்றுகூட்டுங்கள், பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். மணமகன் தன் அறையையும், மணமகள் தன் படுக்கையையும் விட்டுப் புறப்படட்டும். யெகோவாவுக்கு முன்பாக ஊழியஞ்செய்யும் ஆசாரியர்கள் புலம்பட்டும்; ஆலய மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழட்டும். அவர்கள், “யெகோவாவே, உமது மக்களைத் தப்புவியும். உமது உரிமைச்சொத்தை பிறநாடுகளின் நடுவே நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதேயும். ‘அவர்களுடைய இறைவன் எங்கே?’ என்று மக்கள் கூட்டங்கள் மத்தியில் அவர்கள் ஏன் சொல்லவேண்டும்?” என்று சொல்வார்களாக. அப்பொழுது யெகோவா தமது நாட்டின்மேல் வைராக்கியங்கொண்டு, தமது மக்களில் அனுதாபங்கொள்வார். யெகோவா தம் மக்களுக்கு மறுமொழியாக கூறியது: “இதோ, நான் உங்களுக்குத் தானியத்தையும், புதிய திராட்சை இரசத்தையும், எண்ணெயையும் முழுமையாய் திருப்தியளிக்கும் வகையில் அனுப்புகிறேன்; நான் இனியும் பிற தேசத்தாருக்கு உங்களை நிந்தையாக வைக்கமாட்டேன். “வடதிசைப் படைகளை உங்களைவிட்டுத் தூரமாய்த் விலக்கிவிடுவேன்; பாழடைந்த வறண்ட நாட்டிற்கு அவர்களைத் தள்ளிவிடுவேன். அதன் முன்னணிப் படைகளை கிழக்கே சாக்கடலிலும், அதன் பின்னணிப் படைகளை மேற்கே மத்திய தரைக்கடலிலும் தள்ளுவேன். அங்கே அவற்றின் நாற்றமும் தீய வாடையும் நாட்டின் மேலெழும்பும்.” நிச்சயமாகவே யெகோவா பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார். நாடே நீ பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; நிச்சயமாகவே யெகோவா பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார். காட்டு மிருகங்களே, பயப்படாதேயுங்கள், வனாந்திரத்தின் மேய்ச்சலிடங்கள் பசுமையாகின்றன. மரங்கள் கனி கொடுக்கின்றன; அத்திமரமும் திராட்சைக்கொடியும் நிறைவாய்ப் பலனளிக்கின்றன. சீயோன் மக்களே, மகிழுங்கள், உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் களிகூருங்கள். ஏனெனில் அவர் தம் நீதியை நிலைநாட்ட உங்களுக்கு முன்மாரியைத் தந்திருக்கிறார். முன்போலவே உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் நிறைவாய்ப் பொழிகிறார். சூடடிக்கும் களங்கள் தானியத்தினால் நிரம்பியிருக்கும்; ஆலைகள் புதிய திராட்சை இரசத்தினாலும் எண்ணெயினாலும் நிரம்பிவழியும். நான் உங்களுக்கு மத்தியில் அனுப்பின பச்சைப்புழுக்களும், இளம் வெட்டுக்கிளிகளும், துள்ளும் வெட்டுக்கிளிகளும், வளர்ந்த வெட்டுக்கிளிகளும் தின்று அழித்த வருடங்களுக்குப் பதிலாக, உங்களுக்கு ஈடுசெய்வேன். நீங்கள் திருப்தியாகும்வரை சாப்பிடுவதற்கு உங்களுக்கு உணவு நிறைவாய் இருக்கும். அப்பொழுது உங்களுக்காக அதிசயங்கள் செய்த உங்கள் யெகோவாவாகிய இறைவனின் பெயரைத் துதிப்பீர்கள்; என்னுடைய மக்கள் இனி ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள். அப்பொழுது நான் இஸ்ரயேலில் உங்களுடன் இருக்கிறேன் என்றும், உங்கள் இறைவனாகிய யெகோவா நானே என்றும், வேறொருவரும் இல்லை என்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்; என் மக்கள் இனி ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள்.

யோவேல் 2:1-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த மலையிலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின் குடிமக்கள் எல்லோரும் தத்தளிப்பார்களாக; ஏனெனில் யெகோவாவுடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது. அது இருளும் காரிருளுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு மலைகளின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு மக்கள்கூட்டம் தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன்பு ஒரு காலத்திலும் உண்டாகவுமில்லை, இனித் தலைமுறை தலைமுறையாக இனிவரும் வருடங்களிலும் உண்டாவதுமில்லை. அவைகளுக்கு முன்னாக நெருப்பு எரிக்கும், அவைகளுக்குப் பின்னாக தழல் எரிக்கும்; அவைகளுக்கு முன்னாக தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்திரத்தைப்போலவும் இருக்கும்; அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை. அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலைப்போல இருக்கும்; அவைகள் குதிரை வீரர்களைப்போல ஓடும். அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சலைப்போலவும், வைக்கோலை எரிக்கிற நெருப்பு ஜூவாலையின் சத்தத்தைப்போலவும், போருக்கு ஆயத்தப்பட்ட பெரும் மக்கள்கூட்டத்தின் இரைச்சலைப்போலவும், மலைகளுடைய உச்சியின்மேல் குதிக்கும். அவைகளுக்கு முன்பாக மக்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும். அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; போர்வீரர்களைப்போல மதில் ஏறும்; வரிசைகள் கலையாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும். ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம் ஏற்படாமற்போகும். அவைகள் பட்டணம் எங்கும் செல்லும்; மதிலின்மேல் ஓடும்; வீடுகளின்மேல் ஏறும்; ஜன்னல் வழியாகத் திருடனைப்போல உள்ளே நுழையும். அவைகளுக்கு முன்பாக பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மங்கும். யெகோவா தமது படைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய முகாம் மகா பெரியது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; யெகோவாவுடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாக இருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்? ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புங்கள் என்று யெகோவா சொல்லுகிறார். நீங்கள் உங்கள் உடைகளையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையும் உள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாக இருக்கிறார். ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு உணவுபலிகளையும் பானபலிகளையும் செலுத்துவதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார். சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பை அறிவியுங்கள். மக்களைக் கூட்டுங்கள். சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோர்களைச் சேருங்கள்; பிள்ளைகளையும் பால் குடிக்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மணவறையையும்விட்டுப் புறப்படுவார்களாக. யெகோவாவின் ஊழியக்காரர்களாகிய ஆசாரியர்கள் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே அழுது: யெகோவாவே, நீர் உமது மக்களைத் தப்பவிட்டு அந்நிய மக்கள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது மக்களை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று அந்நியமக்களுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக. அப்பொழுது யெகோவா தமது தேசத்திற்காக வைராக்கியங்கொண்டு, தமது மக்கள்மேல் இரக்கம் காட்டுவார். யெகோவா மறுமொழி கொடுத்து, தமது மக்களை நோக்கி: இதோ, நான் உங்களை இனி அந்நிய மக்களுக்குள்ளே நிந்தையாக வைக்காமல், உங்களுக்குத் தானியத்தையும் திராட்சைரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதினால் திருப்தியாவீர்கள். வடதிசைப் படையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன்படையை கீழ்க்கடலுக்கும், அதின் பின்படையை மத்திய தரைக் கடலுக்கு, நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்நாற்றம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது. தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; யெகோவா பெரிய செயல்களைச் செய்வார். வெளியின் மிருகங்களே பயப்படாதேயுங்கள்; வனாந்திரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும்; மரங்கள் காய்களைக் காய்க்கும்; அத்திமரமும் திராட்சைச்செடியும் பலனைத்தரும். சீயோன் மக்களே, உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; சரியான அளவுபடி அவர் உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே பெய்யச்செய்வார். களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சைரசமும் எண்ணெயும் வழிந்தோடும். நான் உங்களிடத்திற்கு அனுப்பின என் பெரிய படையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருடங்களின் விளைச்சலை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பார். நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாக நடத்திவந்த உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் மக்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய யெகோவா, வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்; என் மக்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

யோவேல் 2:1-27 பரிசுத்த பைபிள் (TAERV)

சீயோனில் எக்காளம் ஊதுங்கள். என் பரிசுத்தமான மலையின் மேல் எச்சரிக்கை சத்தமிடுங்கள். இந்நாட்டில் வாழ்கிற எல்லா ஜனங்களும் பயத்தால் நடுங்கட்டும். கர்த்தருடைய சிறப்பான நாள் வந்துகொண்டிருக்கிறது. கர்த்தருடைய சிறப்பு நாள் அருகில் உள்ளது. அது இருண்ட அந்தகாரமான நாளாக இருக்கும். அது இருளும் மந்தாரமுமான நாளாக இருக்கும். சூரிய உதயத்தின்போது நீங்கள் மலை முழுவதும் படை பரவியிருப்பதைப் பார்ப்பீர்கள். அப்படை சிறந்ததாகவும் வல்லமையுடையதாகவும் இருக்கும். இதற்கு முன்னால் எதுவும் இதுபோல் இருந்ததில்லை. இதற்கு பிறகு எதுவும் இதுபோல் இருப்பதில்லை. படையானது எரியும் நெருப்பைப் போன்று நாட்டை அழிக்கும். அவைகளின் முன்னால் அந்நாடு ஏதேன் தோட்டம் போன்றிருக்கும். அதற்குப் பிறகு நாடானது வெற்று வனாந்தரம் போன்றிருக்கும். அவைகளிடமிருந்து எதுவும் தப்பமுடியாது. வெட்டுக்கிளிகள் குதிரைகளைப் போன்று தோன்றும். அவை போர்க் குதிரைகளைப்போன்று ஓடும். அவைகளுக்குச் செவிகொடுங்கள். இது மலைகளின் மேல்வரும் இரதங்களின் ஒலி போல் உள்ளது. இது பதரை எரிக்கும் நெருப்பின் ஒலிபோல் உள்ளது. அவர்கள் வல்லமை வாய்ந்த ஜனங்கள். அவர்கள் போருக்குத் தயாராக இருக்கிறார்கள். இந்தப் படைக்கு முன்னால் ஜனங்கள் அச்சத்தால் நடுங்குகிறார்கள். அவர்களின் முகங்கள் அச்சத்தால் வெளுத்தன. வீரர்கள் விரைவாக ஓடுகிறார்கள். வீரர்கள் சுவர்களின் ஏறுகிறார்கள். ஒவ்வொரு வீரனும் நேராகக் செல்கிறான். அவர்கள் தம் பாதையில் இருந்து விலகமாட்டார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் விழச்செய்யமாட்டார்கள். ஒவ்வொரு வீரனும் தன் சொந்தப் பாதையில் நடக்கிறான். வீரர்களில் ஒருவன் மோதிக் கீழே விழுந்தாலும் மற்றவர்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பார்கள். அவர்கள் நகரத்திற்கு ஓடுகிறார்கள். அவர்கள் விரைவாகச் சுவர்மேல் ஏறுகிறார்கள். அவர்கள் வீடுகளுக்குள் ஏறுகிறார்கள். அவர்கள் ஜன்னல் வழியாகத் திருடர்களைப்போல் ஏறுகின்றனர். அவர்களுக்கு முன்பு, பூமியும் வானமும் நடுங்குகிறது. சூரியனும் சந்திரனும் இருளாகிவிடுகின்றன. நட்சத்திரங்கள் ஒளிவீசுவதை நிறுத்துகின்றன. கர்த்தர் தனது படையை உரக்க அழைக்கிறார். அவரது பாளையம் மிகப்பெரியது. அப்படை அவரது கட்டளைக்கு அடிபணிகிறது. அப்படை மிகவும் வல்லமையுடையது. கர்த்தருடைய சிறப்பு நாள் உயர்வானதாகவும் பயங்கரமானதாகவும் உள்ளது. ஒருவரும் இதை நிறுத்த முடியாது. இது கர்த்தருடைய செய்தி. “உங்கள் முழுமனதோடு இப்பொழுது என்னிடம் திரும்பி வாருங்கள். நீங்கள் தீமை செய்தீர்கள். அழுங்கள், உணவு உண்ணவேண்டாம். உங்கள் ஆடைகளையல்ல, இதயத்தைக் கிழியுங்கள்.” உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பி வாருங்கள். அவர் இரக்கமும் கருணையும் உள்ளவர். அவர் விரைவாகக் கோபப்படமாட்டார். அவரிடம் மிகுந்த அன்பு உண்டு. ஒருவேளை அவர் தனது மனதை, திட்டமிட்டிருந்த பயங்கரமான தண்டனையிலிருந்து மாற்றிக்கொள்ளலாம். யாருக்குத் தெரியும். கர்த்தர் தனது மனதை மாற்றிக்கொள்ளலாம். ஒருவேளை அவர் உங்களுக்காக ஆசீர்வாதத்தை விட்டு வைத்திருக்கலாம். பிறகு நீங்கள் உங்கள் தேவானாகிய கர்த்தருக்கு தானியக் காணிக்கைகளும் பானங்களின் காணிக்கைகளும் தரலாம். சீயோனில் எக்காளம் ஊதுங்கள். சிறப்புக் கூட்டத்திற்குக் கூப்பிடுங்கள். ஒரு உபவாச காலத்துக்காகக் கூப்பிடுங்கள். ஜனங்களைக் கூட்டிச் சேருங்கள். சிறப்புக் கூட்டத்திற்குக் கூப்பிடுங்கள். வயதானவர்களைக் கூட்டிச் சேருங்கள். குழந்தைகளையும் கூட்டிச் சேருங்கள் இன்னும் தாயின் மார்பில் பால்குடிக்கும் சிறுகுழந்தைகளையும் சேர்த்துக்கொண்டு வாருங்கள். தங்களது படுக்கை அறையிலிருந்து புதிதாய்த் திருமணமான மணமகனும் மணமகளும் வரட்டும். மண்டபத்துக்கும் பலிபீடத்திற்கும் இடையில் நின்று ஆசாரியர்களும், கர்த்தருடைய பணியாளர்களும் அழுது புலம்பட்டும். அந்த ஜனங்கள் அனைவரும் இவற்றைச் சொல்லவேண்டும். “கர்த்தாவே, உமது ஜனங்கள் மீது இரக்கம் காட்டும். உமது ஜனங்களை அவமானப்பட விடாதிரும். மற்ற ஜனங்கள் உமது ஜனங்களைக் கேலிச்செய்யும்படி விடாதிரும். மற்ற நாடுகளின் ஜனங்கள் ‘அவர்கள் தேவன் எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டுச் சிரிக்கும்படிச் செய்யாதிரும்.” பிறகு கர்த்தர் தனது நாட்டைப்பற்றி பரவசம் கொண்டார். அவர் ஜனங்களுக்காக வருத்தப்பட்டார். கர்த்தர் தமது ஜனங்களிடம், “நான் உங்களுக்குத் தானியம், திராட்சைரசம். எண்ணெய் இவற்றை அனுப்புவேன். உங்களுக்கு ஏராளமாக இருக்கும். நான் உங்களை மற்ற நாடுகளுக்கிடையில் இனிமேல் அவமானம் அடையவிடமாட்டேன். இல்லை. வடக்கிலுள்ள ஜனங்களை உங்கள் நாட்டைவிட்டு போகும்படி வற்புறுத்துவேன். நான் அவர்களை வறண்ட வெறுமையான நாட்டுக்குப் போகச்செய்வேன். அவர்களில் சிலர் கீழ்க்கடலுக்குப் போவார்கள். அவர்களில் சிலர் மேற்கடலுக்குப் போவார்கள் அந்த ஜனங்கள் இத்தகைய பயங்கரச் செயல்களைச் செய்தார்கள். ஆனால் அவர்கள் மரித்து அழுகிப்போனவற்றைப் போலாவார்கள். அங்கே பயங்கரமான துர்வாசனை இருக்கும்!” என்று சொன்னார். தேசமே, பயப்படாதே. சந்தோஷமாக இரு. முழுமையாகக் களிகூரு. கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். வெளியின் மிருகங்களே, பயப்படவேண்டாம். வனாந்திரத்தில் மேய்ச்சல்கள் உண்டாகும். மரங்கள் கனிகளைத் தரும், அத்தி மரங்களும் திராட்சைக் கொடிகளும் மிகுதியான பழங்களைத் தரும். எனவே மகிழ்ச்சியாய் இருங்கள். சீயோன் ஜனங்களே உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் சந்தோஷமாய் இருங்கள், அவர் நல்லவர், அவர் உங்களுக்கு மழையைத் தருவார். அவர் உங்களுக்கு முன்போலவே முன்மாரியையும் பின்மாரியையும் அனுப்புவார். களங்கள் தானியத்தால் நிரம்பும். குடங்கள் திராட்சைரசத்தாலும், என்ணெயாலும் நிரம்பி வழியும். “கர்த்தராகிய நான் உங்களுக்கு எதிராக எனது படையை அனுப்பினேன். உங்களுக்குரிய எல்லாவற்றையும் வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும் முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் தின்றுவிட்டன. ஆனால் கர்த்தராகிய நான், அத்துன்பக் காலத்துக்கானவற்றைத் திருப்பிக் கொடுப்பேன். பிறகு உங்களுக்கு உண்ண ஏராளம் இருக்கும். நீங்கள் நிறைவு அடைவீர்கள். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் போற்றுவீர்கள். அவர் உங்களுக்காக அற்புதமானவற்றைச் செய்திருக்கிறார். எனது ஜனங்கள் இனி ஒருபோதும் வெட்டகப்பட்டுப்போவதில்லை. நான் இஸ்ரவேலோடு இருப்பதை நீங்கள் அறிவீர்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். வேறு தேவன் இல்லை. எனது ஜனங்கள் மீண்டும் அவமானம் அடையமாட்டார்கள்.”

யோவேல் 2:1-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின் குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது. அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன் ஒரு காலத்திலும் உண்டானதுமில்லை, இனித் தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டாவதுமில்லை. அவைகளுக்கு முன்னாக அக்கினி பட்சிக்கும், அவைகளுக்குப் பின்னாக ஜூவாலை எரிக்கும்; அவைகளுக்கு முன்னாக தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்தரத்தைப்போலவும் இருக்கும்; அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை. அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலை ஒத்தது; அவைகள் குதிரை வீரரைப்போல ஓடும். அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சல் போலவும், செத்தைகளை எரிக்கிற அக்கினி ஜூவாலையின் இரைச்சல் போலவும், யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இரைச்சல் போலவும், பர்வதங்களுடைய சிகரங்களின்மேல் குதிக்கும். அவைகளுக்கு முன்பாக ஜனங்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும். அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; யுத்தவீரரைப்போல மதிலேறும்; வரிசைகள் பிசகாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும். ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம்படாமற்போகும். அவைகள் பட்டணம் எங்கும் செல்லும்; மதிலின்மேல் ஓடும்; வீடுகளின்மேல் ஏறும்; பலகணி வழியாய்த் திருடனைப்போல உள்ளே நுழையும். அவைகளுக்கு முன்பாகப் பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும். கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய பாளயம் மகா பெரிது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்? ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார். ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துகிறதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார். சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள். ஜனத்தைக் கூட்டுங்கள். சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோரைச் சேருங்கள்; பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப்புறப்படுவார்களாக. கர்த்தரின் பணிவிடைக்காரராகிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது: கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக. அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார். கர்த்தர் மறுமொழி கொடுத்து, தமது ஜனத்தை நோக்கி: இதோ, நான் உங்களை இனிப் புறஜாதிகளுக்குள்ளே நிந்தையாக வைக்காமல் உங்களுக்குத் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதினால் திருப்தியாவீர்கள். வடதிசைச்சேனையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன்தண்டு கீழ்க்கடலுக்கும், அதின் பின்தண்டு மேற்கடலுக்கும், நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்துக்குத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்க்கந்தம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது. தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். வெளியின் மிருகங்களே, பயப்படாதேயுங்கள்; வனாந்தரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும்; விருட்சங்கள் காய்களைக் காய்க்கும்; அத்திமரமும் திராட்சச்செடியும் பலனைத்தரும். சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கெனவே வருஷிக்கப்பண்ணுவார். களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சரசமும் எண்ணெயும் வழிந்தோடும். நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன். நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

யோவேல் 2:1-27

யோவேல் 2:1-27 TAOVBSI