யோவேல் 1:14-20
யோவேல் 1:14-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பரிசுத்த உபவாசத்தை நியமியுங்கள்; பரிசுத்த திருச்சபையை ஒன்றுகூட்டுங்கள். முதியோரையும், நாட்டில் வாழும் அனைவரையும் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்கு அழைப்பித்து, யெகோவாவை நோக்கிக் கதறுங்கள். அது எவ்வளவு பயங்கரமான நாள், யெகோவாவின் நாள் நெருங்கி வந்திருக்கிறது; அது எல்லாம் வல்லவரிடமிருந்து ஒரு அழிவுபோல் வரும். எங்கள் கண்களுக்கு முன்பாகவே உணவும், நம் இறைவனின் ஆலயத்திலிருந்து மகிழ்ச்சியும் சந்தோஷமும் அகற்றப்படவில்லையோ? மண்கட்டிகளின் அடியில் விதைகள் காய்ந்து போயிருக்கின்றன. தானியம் அற்றுப்போனதால் பண்டகசாலைகள் பாழாகி, தானிய களஞ்சியங்கள் இடிந்துபோயின. வளர்ப்பு மிருகங்கள் எவ்வளவாய்த் தவிக்கின்றன; மாட்டு மந்தைகள் மேய்ச்சலின்றி கலங்குகின்றன; செம்மறியாட்டு மந்தைகளுங்கூட கஷ்டப்படுகின்றன. யெகோவாவே, உம்மையே நோக்கி நான் கதறுகிறேன், ஏனெனில் வெளியின் மேய்ச்சல் நிலங்களை நெருப்பு சுட்டுப் பொசுக்கிவிட்டது; வயல்வெளியின் மரங்கள் அனைத்தையும் நெருப்புச் சுவாலைகள் எரித்துப்போட்டன. காட்டு விலங்குகளுங்கூட உம்மை நோக்கிக் கதறுகின்றன; நீரோடைகள் வற்றிப்போய்விட்டன, வெளியின் மேய்ச்சல் நிலங்களை நெருப்பு சுட்டுப் பொசுக்கிவிட்டது.
யோவேல் 1:14-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பரிசுத்த உபவாசநாளை ஏற்படுத்துங்கள்; விசேஷித்த ஆசரிப்பை அறிவியுங்கள்; மூப்பர்களையும் தேசத்தின் எல்லா குடிமக்களையும், உங்கள் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திலே கூடிவரச்செய்து யெகோவாவை நோக்கிக் கூப்பிடுங்கள். அந்த பயங்கரமான நாளுக்காக ஐயோ, யெகோவாவுடைய நியயதீர்ப்பின் நாள், சமீபமாயிருக்கிறது; அது அழிவைப்போல சர்வ வல்ல தேவனிடத்திலிருந்து வருகிறது. நம்முடைய கண்களைவிட்டு ஆகாரமும், நம்முடைய தேவனின் ஆலயத்தைவிட்டுச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நீக்கப்படவில்லையோ? விதையானது மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போனது; பயிர் காய்ந்துபோகிறதினால் கிடங்குகள் பாழாகிக் களஞ்சியங்கள் இடிந்துபோனது. மிருகங்கள் எவ்வளவாகத் தவிக்கிறது; மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது; ஆட்டுமந்தைகளும் சேதமானது. யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நெருப்பு வனாந்திரத்தின் மேய்ச்சல்களை அழித்தது, நெருப்புத்தழல் தோட்டத்தின் மரங்களையெல்லாம் எரித்துப்போடுகிறது. வெளியின் மிருகங்களும் உம்மை நோக்கிக் கதறுகிறது; நதிகளில் தண்ணீரெல்லாம் வற்றிப்போனது; நெருப்பு வனாந்திரத்தின் மேய்ச்சல்களை அழித்துப்போட்டது.
யோவேல் 1:14-20 பரிசுத்த பைபிள் (TAERV)
உபவாசமிருக்க வேண்டிய சிறப்பு நேரம் இருக்குமென்று ஜனங்களுக்கு அறிவியுங்கள் ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு ஜனங்களைக் கூட்டுங்கள். தலைவர்களைக் கூப்பிடுங்கள். நாட்டில் வாழ்கிற எல்லா ஜனங்களையும் சேர்த்துக் கூப்பிடுங்கள். அவர்கள் அனைவரையும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்திற்கு வரவழைத்து கர்த்தரிடம் ஜெபம் செய்யுங்கள். துக்கமாயிருங்கள். ஏனென்றால் கர்த்தருடைய சிறப்புக்குரிய நாள் அருகில் இருக்கிறது. அப்போது, தண்டனையானது சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து ஒரு சங்காரம் போன்று வரும். நமது உணவு போய்விட்டது. நமது தேவனுடைய ஆலயத்திலிருந்து மகிழ்ச்சியும் சந்தோஷமும் போய்விட்டன. நாங்கள் விதைகளை விதைத்தோம். ஆனால் விதைகள் மண்ணில் காய்ந்து மரித்துக்கிடக்கின்றன. நமது செடிகள் எல்லாம் காய்ந்து மரித்துப்போயின. நமது களஞ்சியங்கள் வெறுமையாகவும் விழுந்தும் கிடக்கின்றன. மிருகங்கள் பசியோடு தவிக்கின்றன. மாட்டு மந்தைகள், அலைந்து திரிந்து கலங்குகின்றன. அவற்றுக்கு மேய்வதற்கு புல் இல்லை. ஆட்டு மந்தைகளும் மரித்துக்கொண்டிருக்கின்றன. கர்த்தாவே நான் உம்மை உதவிக்காக அழைக்கின்றேன். நெருப்பானது நமது பசுமையான வயல்களை வனாந்தரமாக்கிவிட்டது. வயல்வெளிகளில் உள்ள மரங்களை எல்லாம் நெருப்புச் ஜுவாலைகள் எரித்துவிட்டன. காட்டுமிருங்கள் கூட உமது உதவியை நாடுகின்றன. ஓடைகள் வற்றிவிட்டன. அங்கு தண்ணீரில்லை. நெருப்பானது நமது பச்சை வயல்வெளிகளை வனாந்தரமாக்கிவிட்டது.
யோவேல் 1:14-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; மூப்பரையும் தேசத்தின் எல்லாக்குடிகளையும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள். அந்த நாளினிமித்தம் ஐயோ! கர்த்தருடைய நாள், சமீபமாயிருக்கிறது; அது சங்காரம்போல சர்வவல்லவரிடத்திலிருந்து வருகிறது. நம்முடைய கண்களைவிட்டு ஆகாரமும், நம்முடைய தேவனின் ஆலயத்தைவிட்டுச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நீக்கப்படவில்லையோ? விதையானது மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போயிற்று; பயிர் தீய்ந்து போகிறதினால் பண்டசாலைகள் பாழாகிக் களஞ்சியங்கள் இடிந்துபோயின. மிருகங்கள் எவ்வளவாய்த் தவிக்கிறது; மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது; ஆட்டுமந்தைகளும் சேதமாய்ப்போயிற்று. கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; அக்கினி வனாந்தரத்தின் மேய்ச்சல்களைப் பட்சித்து, ஜூவாலை வெளியின் விருட்சங்களையெல்லாம் எரித்துப்போடுகிறது. வெளியின் மிருகங்களும் உம்மை நோக்கிக் கதறுகிறது; நதிகளில் தண்ணீரெல்லாம் வற்றிப்போயிற்று; அக்கினி வனாந்தரத்தின் மேய்ச்சல்களைப் பட்சித்துப்போட்டது.