யோபு 42:7-10

யோபு 42:7-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவா யோபுவுடன் இவற்றைப் பேசி முடித்தபின்பு தேமானியனான எலிப்பாசிடம் பேசினார். “நான் உன்மீதும், உன் இரண்டு நண்பர்கள்மீதும் கோபமாயிருக்கிறேன். ஏனெனில் எனது அடியவன் யோபு பேசியதுபோல நீங்கள் என்னைப்பற்றிச் சரியானவற்றைப் பேசவில்லை. ஆகையால் இப்பொழுது நீங்கள் ஏழு காளைகளையும் ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் எடுத்துக்கொண்டு என் அடியவன் யோபுவிடம் போய், உங்களுக்காகத் தகனபலியிடுங்கள். எனது அடியவன் யோபு உங்களுக்காக வேண்டுதல் செய்வான். நான் அவன் வேண்டுதலைக் கேட்டு, உங்கள் மூடத்தனத்திற்குத்தக்கதாக நான் உங்களைத் தண்டிக்கமாட்டேன். என் அடியவன் யோபு என்னைப்பற்றிச் சரியானதைப் பேசியதுபோல நீங்கள் பேசவில்லை” என்றார். எனவே தேமானியனான எலிப்பாஸ், சூகியனான பில்தாத், நாகமாத்தியனான சோப்பார் ஆகியோர் யெகோவா சொன்னபடியே செய்தார்கள். யோபுவின் வேண்டுதலை யெகோவா ஏற்றுக்கொண்டார். யோபு தன் நண்பர்களுக்காக வேண்டுதல் செய்தபின், யெகோவா அவனுக்கு முன்பு இருந்தவற்றைப்போல், இருமடங்கு அதிகமான செல்வத்தைக் கொடுத்து, திரும்பவும் அவனைச் செல்வந்தனாக்கினார்.

யோபு 42:7-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா இந்த வார்த்தைகளை யோபுடன் பேசினபின், யெகோவா தேமானியனான எலிப்பாசை நோக்கி: “உன்மேலும் உன் இரண்டு நண்பர்கள்மேலும் எனக்குக் கோபம் வருகிறது; என் ஊழியனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாகப் பேசவில்லை. ஆதலால் நீங்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்டு, என் தாசனாகிய யோபினிடத்தில் போய், உங்களுக்காகச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துங்கள்; என் தாசனாகிய யோபும் உங்களுக்காக வேண்டுதல் செய்வான்; நான் அவனுடைய முகத்தைப் பார்த்து, உங்களை உங்கள் புத்தியீனத்திற்கு ஏற்றவிதத்தில் நடத்தாதிருப்பேன்; என் ஊழியனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாகப் பேசவில்லை” என்றார். அப்பொழுது தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும்போய், யெகோவா தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்; அப்பொழுது யெகோவா யோபின் முகத்தைப் பார்த்தார். யோபு தன் நண்பனுக்காக வேண்டுதல் செய்தபோது, யெகோவா அவனுடைய சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைவிட இரண்டுமடங்காகக் யெகோவா அவனுக்குத் தந்தருளினார்.

யோபு 42:7-10 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் யோபுவிடம் பேசிமுடித்த பின்பு, அவர் தேமானிலிருந்து வந்த எலிப்பாசிடம் பேசினார். கர்த்தர் எலிப்பாசை நோக்கி, “நான் உன்னிடமும் உனது இரண்டு நண்பர்களிடமும் கோபமாயிருக்கிறேன். ஏனெனில், நீங்கள் என்னைப்பற்றிய சரியான கருத்துக்களைக் கூறவில்லை. யோபுவே என்னைப் பற்றிய சரியான செய்திகளைச் சொன்னான். ஆனால் யோபு எனது தாசன். யோபு என்னைப் பற்றிய சரியான செய்திகளைச் சொன்னான். எனவே இப்போது எலிப்பாசே, ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் கொண்டு வா. அவற்றை எனது தாசன் யோபுவிடம் கொண்டு செல். அவற்றைக் கொன்று, உனக்காக தகனபலியாகச் செலுத்து. என் தாசன் யோபு உனக்காக ஜெபம் செய்வான். நான் அவன் ஜெபத்திற்குப் பதிலளிப்பேன். உனக்குரிய தண்டனையை அப்போது நான் உனக்கு அளிக்கமாட்டேன். நீ மிகுந்த மூடனாக இருந்ததால் நீ தண்டிக்கப்படவேண்டும். நீ என்னைப்பற்றிய சரியான தகவலைக் கூறவில்லை. ஆனால் என் தாசனாகிய (பணியாளாகிய) யோபு என்னைப்பற்றிய சரியான கருத்துக்களைக் கூறினான்.” என்றார். எனவே தேமானின் எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாவின் சோப்பாரும் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தார்கள். அப்போது கர்த்தர் யோபுவின் ஜெபத்திற்குப் பதிலளித்தார்! யோபு அவனது நண்பர்களுக்காக ஜெபம் செய்தான். தேவன் யோபுவை மீண்டும் வெற்றிபெறச் செய்தார். கர்த்தர் யோபுவுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் இரண்டு மடங்காக எல்லாவற்றையும் கொடுத்தார்.

யோபு 42:7-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் இந்த வார்த்தைகளை யோபோடே பேசினபின், கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை. ஆதலால் நீங்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்டு, என் தாசனாகிய யோபினிடத்தில் போய், உங்களுக்காகச் சர்வாங்க தகனபலிகளை இடுங்கள்; என் தாசனாகிய யோபும் உங்களுக்காக வேண்டுதல் செய்வான்; நான் அவன் முகத்தைப் பார்த்து, உங்களை உங்கள் புத்தியீனத்துக்குத்தக்கதாக நடத்தாதிருப்பேன்; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை என்றார். அப்பொழுது தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும்போய், கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் யோபின் முகத்தைப் பார்த்தார். யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.