யோபு 42:1-6

யோபு 42:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதின்பின் யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக சொன்னதாவது: “உம்மால் எல்லாம் செய்யமுடியும் என்று நான் அறிவேன்; உமது திட்டம் ஒன்றும் தடைபடமாட்டாது. ‘அறிவில்லாமல் எனது ஆலோசனையை மறைக்கிறவன் யார்?’ என நீர் கேட்டீரே; உண்மையாக நான் எனக்கு விளங்காதவற்றையும், என் அறிவுக்கெட்டாத புதுமையான காரியங்களையும் குறித்துப் பேசினேனே. “நீர் என்னிடம், ‘நான் பேசுகிறேன், இப்பொழுது நீ கேள்’ என்றும்; ‘நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும்’ என்றும் சொன்னீரே. உம்மைப்பற்றி என் காதுகள் கேட்டிருந்தன; இப்பொழுதோ என் கண்களே உம்மைக் கண்டிருக்கின்றன. ஆகையால் நான் என்னை வெறுத்து, தூசியிலும் சாம்பலிலும் இருந்து மனந்திரும்புகிறேன்.”

யோபு 42:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக: “தேவரீர் எல்லாவற்றையும் செய்ய சர்வவல்லமையுள்ள தேவன்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் குழப்பினேன் என்கிறேன். நீர் நான் சொல்வதைக் கேளும், அப்பொழுது நான் பேசுவேன்; நான் உம்மைக் கேள்வி கேட்பேன், நீர் எனக்கு பதில் சொல்லும். என் காதால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால் நான் என்னை வெறுத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனவேதனைப்படுகிறேன்” என்றான்.

யோபு 42:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)

அப்போது யோபு கர்த்தருக்குப் பதிலளித்தான். யோபு, “கர்த்தாவே! நீர் எல்லாவற்றையும் செய்ய வல்லவர் என்பதை நான் அறிவேன். நீர் திட்டமிடுகிறீர், எதனாலும் உமது திட்டங்களை மாற்றவோ, தடுக்கவோ முடிவதில்லை. கர்த்தாவே, நீர் இக்கேள்வியைக் கேட்டீர்: ‘இம்மூடத்தனமான காரியங்களை சொல்லிகொண்டிருக்கும் இந்த அஞ்ஞானி யார்?’ கர்த்தாவே, நான் புரிந்துகொள்ளாதவற்றைக் குறித்துப் பேசினேன். என்னால் புரிந்துகொள்ள முடியாத மிகுந்த வியக்கத்தக்க காரியங்களைப் பற்றிப் பேசினேன். “கர்த்தாவே, நீர் என்னிடம், ‘யோபுவே கவனி, நான் உன்னோடு பேசுவேன், நான் உன்னிடம் கேள்விகளைக் கேட்பேன், நீ எனக்குப் பதில் கூறுவாய்’ என்றீர். கர்த்தாவே, முன்பு, நான் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது என் சொந்தக் கண்களாலேயே உம்மைப் பார்க்கிறேன்! கர்த்தாவே, நான் என்னைக் குறித்து வெட்கமுறுகிறேன். கர்த்தாவே, நான் மன்னிப்புக் கேட்கிறேன். நான் தூசியிலும் சாம்பலிலும் உட்கார்ந்து கொண்டே, என் இருதயத்தையும் என் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ள உறுதியளிக்கிறேன்” என்றான்.

யோபு 42:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன். நீர் எனக்குச் செவிகொடும், அப்பொழுது நான் பேசுவேன்; நான் உம்மைக் கேள்விகேட்பேன், நீர் எனக்கு உத்தரவு சொல்லும். என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.