யோபு 40:1-9

யோபு 40:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மேலும் யெகோவா யோபுவிடம் சொன்னதாவது: “எல்லாம் வல்லவருடன் வாதாடுகிறவன் அவரைத் திருத்துவானோ? இறைவனைக் குற்றம் சாட்டுகிறவன் அவருக்குப் பதிலளிக்கட்டும்.” யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக சொன்னது: “நான் தகுதியற்றவன்; நான் உமக்கு என்ன பதிலளிக்க முடியும்? நான் என் கையினால் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன். நான் ஒருமுறை பேசினேன், ஆமாம் இரண்டொருமுறை பேசினேன், ஆனால் என்னிடம் பதில் இல்லை; நான் இனிமேல் ஒன்றுமே சொல்லமாட்டேன்.” அப்பொழுது யெகோவா பெருங்காற்றிலிருந்து யோபுவுடன் பேசினார்: “இப்பொழுது நீ மனிதனைப்போல் திடமாய் நில்; நான் உன்னிடம் கேள்வி கேட்பேன், நீ எனக்குப் பதில் சொல். “நீ என் நீதியை அவமதிப்பாயோ? நீ உன்னை நீதியுள்ளவனாக்குவதற்கு, என்னைக் குற்றவாளியென்று தீர்ப்பாயோ? உன் புயம் இறைவனுடையதைப் போன்றதோ? உன் குரல் அவருடைய குரலைப்போல் முழங்குமோ?

யோபு 40:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்னும் யெகோவா யோபுக்கு பதிலாக: “சர்வவல்லமையுள்ள தேவனுடன் வழக்காடி அவருக்குப் புத்தி சொல்லுகிறவன் யார்? தேவன் பேரில் குற்றம் கண்டுபிடிக்கிறவன் இவைகளுக்குப் பதில் சொல்லட்டும் என்றார். அப்பொழுது யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக: இதோ, நான் எளியவன்; நான் உமக்கு என்ன பதில் சொல்லுவேன்; என் கையால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன். நான் இரண்டொருமுறை பேசினேன்; இனி நான் மறுமொழி கொடுக்காமலும் பேசாமலும் இருப்பேன் என்றான். அப்பொழுது யெகோவா பெருங்காற்றில் இருந்து யோபுக்கு பதில் சொன்னார். இப்போதும் மனிதனைப்போல நீ ஆடையைக்கட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு பதில் சொல். நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்வதற்காக என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ? தேவனுடைய பலத்த கைகளைப்போல உனக்கு கைகளுண்டோ? அவரைப்போல இடிமுழக்கமாகச் சத்தமிடமுடியுமோ?

யோபு 40:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

“யோபுவே, “நீ சர்வ வல்லமையுள்ள தேவனோடு விவாதித்தாய். தவறிழைத்த குற்ற முடையவனாக என்னை நீ நியாயந்தீர்த்தாய்! நீ தவறு செய்தாயென இப்போது நீ ஒப்புக்கொள்வாயா? நீ எனக்குப் பதில் கூறுவாயா?” என்றார். அப்போது யோபு, தேவனுக்குப் பதிலுரைத்தான். அவன்: “நான் பேசுவதற்கும் தகுதியற்றவன்! நான் உம்மிடம் என்ன கூறமுடியும்? நான் உமக்கு பதில் கூற முடியாது! நான் என் கைகளை வாயின் மீது வைப்பேன். நான் ஒரு முறை பேசினேன், ஆனால் நான் மீண்டும் பேசமாட்டேன். நான் இருமுறை பேசினேன், ஆனால், இனிமேல் எதுவும் கூறமாட்டேன்” என்றான். அப்போது புயலிலிருந்து கர்த்தர் மீண்டும் யோபுவிடம் பேசினார். கர்த்தர், “யோபுவே, உன் இடையைக் கட்டிக்கொண்டு நான் உன்னிடம் கேட்கப்போகும் கேள்விகளுக்குப் பதில் கூறு, “யோபுவே, நான் நியாயமற்றவனென்று நீ நினைக்கிறாயா? என்னை தவறிழைக்கும் குற்றவாளியாகக் கூறுவதால், நீ களங்கமற்றவனெனக் காட்ட நினைக்கிறாய்! யோபுவே, உன் கரங்கள் தேவனுடைய கரங்களைப்போன்று வலிமையுடையனவா? இடிபோல முழங்க வல்ல தேவனுடைய குரலைப்போன்ற குரல் உனக்கு உள்ளதா?

யோபு 40:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்னும் கர்த்தர் யோபுக்கு உத்தரமாக: சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்? தேவன் பேரில் குற்றம் பிடிக்கிறவன் இவைகளுக்கு உத்தரவு சொல்லக்கடவன் என்றார். அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன். நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான். அப்பொழுது கர்த்தர் பெருங்காற்றில் இருந்து யோபுக்கு உத்தரவு அருளினார். இப்போதும் புருஷனைப்போல நீ அரைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு. நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ? தேவனுடைய புயத்தைப்போல் உனக்குப் புயமுண்டோ? அவரைப்போல் இடிமுழக்கமாய்ச் சத்தமிடக்கூடுமோ?