யோபு 37:14-24

யோபு 37:14-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“யோபுவே, இதைக் கேளும்; சற்று நின்று இறைவனின் அதிசயங்களைக் கவனித்துப் பாரும். இறைவன் மேகங்களை எவ்வாறு கட்டுப்படுத்தி தமது மின்னலை மின்னப் பண்ணுகிறார் என்று உமக்குத் தெரியுமா? அவர் மேகங்களை எப்படி ஆகாயத்தில் தொங்கவிட்டிருக்கிறார் என்பதையும், பூரண அறிவுள்ளவரின் அதிசயங்களையும் நீர் அறிவீரோ? தென்றலினால் பூமி அடங்கிக் கிடக்கும்போது, உமது ஆடைகள் வெப்பமாயிருக்கும் முறையை அறிவீரோ? வார்க்கப்பட்ட வெண்கல கண்ணாடியைப் போன்ற, கடினமான ஆகாயத்தை அவருடன் சேர்ந்து உம்மால் விரிக்க முடியுமோ? “அவருக்குச் சொல்லவேண்டியதை நீர் எங்களுக்குச் சொல்லும்; இருளின் காரணமாக எங்களால் வழக்காட முடியாதிருக்கிறது. ‘நான் பேச விரும்புகிறேன்’ என்று அவருக்குச் சொல்லலாகுமோ? தான் விழுங்கப்படுவதை எவனும் விரும்பிக் கேட்பானோ? காற்று ஆகாயத்தைச் சுத்தப்படுத்திய பின், சூரியனை எந்த மனிதனாலும் பார்க்க முடியாதே! ஏனெனில் அதின் ஒளி பிரகாசமாயிருக்கும். வடக்கிலிருந்து தங்கமயமான மகிமையிலே அவர் வருகிறார்; திகைப்பூட்டும் மாட்சிமையுடன் இறைவன் வருகிறார். எல்லாம் வல்லவர் நமக்கு எட்டாத தூரத்திலே அவர் வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவர் நீதியும் நியாயமும் நிறைந்தவர்; அவர் ஒடுக்குகிறதில்லை. ஆகையால், மனிதர்கள் அவரிடம் பயபக்தியாயிருக்கிறார்கள்; ஏனெனில், இருதயத்தில் ஞானமுள்ள ஒருவரையும் அவர் மதிப்பதில்லை.”

யோபு 37:14-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யோபே, இதற்குச் செவிகொடும்; தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பாரும். தேவன் அவைகளைத் திட்டமிட்டு, தம்முடைய மேகத்தின் மின்னலை மின்னச்செய்யும் விதத்தை அறிவீரோ? மேகங்கள் தொங்கும்படி வைக்கும் எடையையும், பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும், தென்றலினால் அவர் பூமியை அமைக்கும்போது, உம்முடைய ஆடைகள் வெப்பமாயிருக்கும் முறையையும் அறிவீரோ? செய்யப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவருடன் இருந்து விரித்தீரோ? அவருக்கு நாம் சொல்லக்கூடியதை எங்களுக்குப் போதியும்; இருளின் காரணமாக முறைதவறிப் பேசுகிறோம். நான் பேசத்துணிந்தேன் என்று யாராவது ஒருவன் அவருக்கு முன்பாகச் சொல்லமுடியுமோ? ஒருவன் பேசத்துணிந்தால் அவன் அழிக்கப்பட்டுப்போவானே. இப்போதும் காற்று வீசி ஆகாய மண்டலங்களிலுள்ள மப்பு நீங்கச் செய்திருக்கிற சமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான கதிர்கள் வருகிறபோது, ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கமுடியாதே; தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு. சர்வவல்லமையுள்ள தேவனை நாம் கண்டுபிடிக்கமுடியாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகா நீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார். ஆகையால் மனிதர் அவருக்குப் பயப்படவேண்டும்; தங்கள் மனதில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் அவர் மதிக்கமாட்டார்” என்றான்.

யோபு 37:14-24 பரிசுத்த பைபிள் (TAERV)

“யோபுவே, ஒரு நிமிடம் நின்று கவனித்துக்கேள். தேவன் செய்கிற அற்புதமான காரியங்களைக் குறித்துச் சற்று நின்று எண்ணிப்பார். யோபுவே, தேவன் எவ்வாறு மேகங்களை அடக்கியாள்கிறார் என்பது உனக்குத் தெரியுமா? அவரது மின்னலை எவ்வாறு தேவன் ஒளிவிட வைக்கிறார் என்பது உனக்குத் தெரியுமா? மேகங்கள் வானில் எவ்வாறு தொங்குகின்றன என்பது உனக்குத் தெரியுமா? தேவன் செய்த அற்புதமான காரியங்களுக்கு மேகங்கள் ஒரு எடுத்து காட்டு மட்டுமேயாகும்! அவற்றைப்பற்றிய யாவும் தேவனுக்குத் தெரியும். ஆனால் யோபுவே, உனக்கு இக்காரியங்கள் தெரியாது. நீ வியர்க்கிறாய் என்பதும், உன் ஆடைகள் உடம்பில் ஒட்டிக்கொள்கின்றன என்பதும், தெற்கிலிருந்து வெப்பமான காற்று வீசும்போது, எல்லாம் அசையாமல் இருக்கின்றன என்பது மட்டுமே உனக்குத் தெரியும். யோபுவே, வானைப் பரப்புவதற்கு நீ தேவனுக்கு உதவமுடியுமா? தேய்த்த பளபளப்பான கண்ணாடியைப்போல அது ஒளிரும்படி செய்யக் கூடுமா? “யோபுவே, நாங்கள் தேவனுக்கு என்ன சொல்லவேண்டும் என்று கூறு! எங்களுக்குச் சரிவரத் தெரியாததால் சொல்வது குறித்து எண்ண இயலாமலிருக்கிறோம். நான் அவரிடம் பேசவேண்டும் என்று தேவனிடம் கூறமாட்டேன். அழிவு வேண்டும் என்று கேட்கமாட்டேன். ஒரு மனிதன் சூரியனை ஏறெடுத்துப் பார்க்க முடியாது. காற்று மேகங்களை அடித்துச் சென்றபின் அது வானில் மிகப் பிரகாசமாக ஒளி தருகிறது. தேவனும் அவ்வாறே இருக்கிறார்! பரிசுத்த மலையிலிருந்து தேவனுடைய பொன்னான மகிமை பிரகாசிக்கிறது. தேவனைச் சுற்றிலும் பிரகாசமான ஒளி இருக்கிறது. சர்வ வல்லமையுள்ள தேவன் மேன்மையானவர்! நாம் தேவனைப் புரிந்துகொள்ள முடியாது! தேவன் மிகுந்த வல்லமை உள்ளவர். ஆனால் அவர் நமக்கு நல்லவரும் நியாயமானவரும் ஆவார். தேவன் நம்மைத் துன்புறுத்த விரும்பமாட்டார். ஆகவேதான் ஜனங்கள் தேவனை மதிக்கிறார்கள். ஆனால் தங்களை ஞானிகளாக நினைக்கிற அகங்காரம் உள்ளவர்களை தேவன் மதிக்கமாட்டார்” என்றான்.

யோபு 37:14-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யோபே, இதற்குச் செவிகொடும்; தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பாரும். தேவன் அவைகளைத் திட்டம்பண்ணி, தம்முடைய மேகத்தின் மின்னலைப் பிரகாசிக்கப்பண்ணும் விதத்தை அறிவீரோ? மேகங்கள் தொங்கும்படி வைக்கும் நிறையையும், பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும், தென்றலினால் அவர் பூமியை அமையப்பண்ணும்போது, உம்முடைய வஸ்திரங்கள் உஷ்ணமாயிருக்கும் வகையையும் அறிவீரோ? வார்க்கப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவரோடேகூட இருந்து விரித்தீரோ? அவருக்கு நாம் சொல்லத்தக்கதை எங்களுக்குப் போதியும்; அந்தகாரத்தினிமித்தம் முறைதப்பிப் பேசுகிறோம். நான் பேசத்துணிந்தேன் என்று யாதாமொருவன் அவருக்கு முன்பாகச் சொல்லத்தகுமோ? ஒருவன் பேசத்துணிந்தால் அவன் விழுங்கப்பட்டுப்போவானே. இப்போதும் காற்று வீசி ஆகாய மண்டலங்களிலுள்ள மப்பு நீங்கப்பண்ணியிருக்கிறசமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான காந்தி வருகிறபோது, ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கக்கூடாதே; தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு. சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக்கூடாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகா நீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார். ஆகையால் மனுஷர் அவருக்குப் பயப்படவேண்டும்; தங்கள் எண்ணத்தில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் அவர் மதிக்கமாட்டார் என்றான்.