யோபு 2:7-13

யோபு 2:7-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எனவே, சாத்தான் யெகோவாவின் சமுகத்தினின்று போய் யோபுவின் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலைவரை வேதனைமிக்க கொப்புளங்களால் வாதித்தான். யோபு, சாம்பலில் உட்கார்ந்து, உடைந்த ஓட்டை எடுத்து தன்னைச் சுரண்டிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுடைய மனைவி அவனிடம், “நீர் இன்னும் உமது உத்தமத்திலே உறுதியாக நிற்கிறீரோ? அதைவிட நீர் இறைவனைச் சபித்து உயிரை விடும்” என்றாள். அதற்கு யோபு, “நீ அறிவில்லாத பெண்ணைப்போல் பேசுகிறாய்; இறைவனிடம் நன்மைகளைப் பெற்ற நாம், துன்பத்தையும் ஏற்றுக்கொள்ளக் கூடாதோ?” என்றான். இவையெல்லாவற்றிலும் யோபு தன் பேச்சினால் பாவம் செய்யவில்லை. யோபுவுக்கு நேரிட்ட இடர்களையெல்லாம் தேமானியனான எலிப்பாஸ், சூகியனான பில்தாத், நாகமாத்தியனான சோப்பார் ஆகிய மூன்று நண்பர்களும் கேள்விப்பட்டார்கள். அவர்கள் யோபுவிடம் போய் அவனுக்கு அனுதாபங்காட்டி ஆறுதல் கூறுவதற்காக, தங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு ஒன்றுகூடி வந்தார்கள். அவர்கள் தூரத்திலிருந்து யோபுவைக் கண்டபோது, அவர்களால் அவனை இன்னார் என்று அறியமுடியவில்லை. அவர்கள் கதறி அழத்தொடங்கி தங்கள் மேலங்கிகளைக் கிழித்து, தங்கள் தலைகளில் தூசியை வாரியிறைத்தார்கள். அவனுடைய வேதனையின் கொடுமையை அவர்கள் கண்டதால், ஏழு பகல்களும் ஏழு இரவுகளும் அவனுடன் தரையில் உட்கார்ந்திருந்தார்கள். ஒருவனும் அவனுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

யோபு 2:7-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது சாத்தான் யெகோவாவுடைய முன்னிலையைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவனுடைய உச்சந்தலைவரை கொடிய கொப்புளங்களால் அவனை வாதித்தான். அவன் ஒரு உடைந்த ஓட்டை எடுத்து, தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் அமர்ந்தான். அப்பொழுது அவனுடைய மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்திலே உறுதியாக நிற்கிறீரோ? தேவனை நிந்தித்து உயிரை விடும் என்றாள். அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவம் செய்யவில்லை. யோபுவின் மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு சம்பவித்த தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது, அவனுக்காகப் பரிதாபப்படவும், அவனுக்கு ஆறுதல் சொல்லவும், ஒருவரோடொருவர் யோசனை செய்துகொண்டு, அவரவர் தங்கள் இடங்களிலிருந்து வந்தார்கள். அவர்கள் தூரத்தில் வரும்போது தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, அவனை உருத்தெரியாமல், சத்தமிட்டு அழுது, அவரவர் தங்கள் அங்கியைக் கிழித்து, வானத்தைப் பார்த்து: தங்கள் தலைகள்மேல் புழுதியைத் தூற்றிக்கொண்டுவந்து, அவனுடைய துக்கம் மகாகொடிய துக்கம் என்று கண்டு, ஒருவரும் அவனுடன் ஒரு வார்த்தையையும் பேசாமல், இரவு பகல் ஏழு நாட்கள், அவனுடன் தரையில் அமர்ந்திருந்தார்கள்.

யோபு 2:7-13 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்பு சாத்தான் கர்த்தரிடமிருந்து சென்று, யோபுவுக்கு வேதனைமிக்க புண்களைக் கொடுத்தான். அவனது பாதங்களின் அடிப்பகுதியிலிருந்து தலையின் உச்சிவரைக்கும் வேதனை தரும் அப்புண்கள் யோபுவின் உடலெங்கும் காணப்பட்டன. எனவே யோபு குப்பைக் குவியலின் அருகே உட்கார்ந்தான். அவனது புண்களைச் சுரண்டுவதற்கு உடைந்த மண்பாண்டத்தின் ஒரு துண்டைப் பயன்படுத்தினான். யோபுவின் மனைவி அவனை நோக்கி, “நீ இன்னும் தேவனுக்கு உண்மையுள்ளவனாய் இருக்கிறாயா? நீர் தேவனை சபித்தவண்ணம் மரித்துவிடு?” என்று கேட்டாள். பிறகு யோபு தனது மனைவியிடம், “நீ மூடத்தனமானவளைப் போலப் பேசுகிறாய்! தேவன் நல்லவற்றைக் கொடுக்கும்போது, நாம் அவற்றை ஏற்கிறோம். எனவே நாம் தொல்லைகளையும் ஏற்கவேண்டும், முறையிடக்கூடாது” என்று பதில் தந்தான். எல்லாத் தொல்லைகளின்போதும் யோபு பாவம் செய்யவில்லை. அவன் தேவனுக்கு எதிராக எதுவும் பேசவில்லை. தேமானிலிருந்து எலிப்பாசும், சூகியிலிருந்து பில்தாதும், நாகமாவிலிருந்து சோப்பாரும் யோபுவின் மூன்று நண்பர்கள். யோபுவுக்கு நேரிட்ட எல்லா தீய காரியங்களைபற்றி கேள்விப்பட்டார்கள். அம்மூவரும் தங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு ஓரிடத்தில் சந்தித்தார்கள். அவர்கள் அவனிடம் போய், தங்கள் அனுதாபத்தைத் தெரிவிக்கவும் ஆறுதல் கூறவும் முடிவெடுத்தார்கள் (தீர்மானித்தார்கள்). ஆனால் அம்மூவரும் யோபுவைத் தூரத்தில் கண்டபோது, (அவன் யோபுவா என ஐயுற்றார்கள்) யோபு மிகவும் வித்தியாசமாகக் காணப்பட்டதால், அவன் யோபு என நம்புவது சிரமமாக இருந்தது! அவர்கள் சத்தமிட்டு அழுதார்கள். அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்கள், துகளைக் காற்றிலும் தலையிலும் வீசியெறிந்து, தங்கள் துக்கத்தையும் மனக்கலக்கத்தையும் வெளிப்படுத்தினார்கள். பின்பு அந்த மூன்று நண்பர்களும் யோபுவோடு தரையில் ஏழு பகல்களும் ஏழு இரவுகளும் அமர்ந்திருந்தார்கள். யோபு மிகவும் துன்புற்றுக் கொண்டிருந்ததால், ஒருவரும் யோபுவோடு எதையும் பேசவில்லை.

யோபு 2:7-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான். அவன் ஒரு ஓட்டை எடுத்து, தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான். அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள். அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை. யோபுடைய மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு நேரிட்ட தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது, அவனுக்காகப் பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல் சொல்லவும், ஒருவரோடொருவர் யோசனை பண்ணிக்கொண்டு, அவரவர் தங்கள் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள். அவர்கள் தூரத்தில் வருகையில் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, அவனை உருத்தெரியாமல், சத்தமிட்டு அழுது, அவரவர் தங்கள் சால்வையைக் கிழித்து, வானத்தைப் பார்த்து: தங்கள் தலைகள்மேல் புழுதியைத் தூற்றிக்கொண்டு, வந்து, அவன் துக்கம் மகாகொடிய துக்கம் என்று கண்டு, ஒருவரும் அவனோடு ஒரு வார்த்தையையும் பேசாமல், இரவு பகல் ஏழு நாள், அவனோடுகூடத் தரையிலே உட்கார்ந்திருந்தார்கள்.