யோபு 2:1-10

யோபு 2:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இன்னொருநாள் இறைவனின் தூதர்கள் யெகோவாவின் சமுகத்தில் கூடிவந்தார்கள், சாத்தானும் அவர்களுடன் வந்து நின்றான். அப்பொழுது யெகோவா சாத்தானிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” எனக் கேட்டார். அதற்கு சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக, “நான் பூமியெங்கும் சுற்றித்திரிந்து அங்குமிங்கும் போய் வருகிறேன்” என்றான். பின்பு யெகோவா சாத்தானிடம், “எனது அடியான் யோபுவைக் கவனித்தாயோ? பூமியில் அவனைப்போல் யாருமே இல்லை; அவன் குற்றமில்லாதவனும், நேர்மையானவனும், இறைவனுக்குப் பயந்து தீமையைவிட்டு நடக்கிற மனிதனுமாய் இருக்கிறான். காரணமில்லாமல் அவனை அழிப்பதற்கு நீ என்னை அவனுக்கெதிராகத் தூண்டின போதிலும், இன்னும் அவன் தனது உத்தமத்திலே நிலைத்திருக்கிறானே” என்றார். சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக, “தோலுக்குத் தோல், ஒருவன் தன் உயிருக்காகத் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் மனிதன் கொடுப்பான். ஆனாலும் நீர் உமது கரத்தை நீட்டி அவனுடைய சதையையும் எலும்புகளையும் தொடுவீரானால், அப்போது அவன் நிச்சயமாய் உம்மை உமது முகத்துக்கு நேரே சபிப்பான்” என்றான். அதற்கு யெகோவா சாத்தானிடம், “சரி, இப்பொழுது அவன் உன் கைகளில் இருக்கிறான்; ஆனாலும் நீ அவனுடைய உயிரை மாத்திரம் தொடாதே” என்றார். எனவே, சாத்தான் யெகோவாவின் சமுகத்தினின்று போய் யோபுவின் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலைவரை வேதனைமிக்க கொப்புளங்களால் வாதித்தான். யோபு, சாம்பலில் உட்கார்ந்து, உடைந்த ஓட்டை எடுத்து தன்னைச் சுரண்டிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுடைய மனைவி அவனிடம், “நீர் இன்னும் உமது உத்தமத்திலே உறுதியாக நிற்கிறீரோ? அதைவிட நீர் இறைவனைச் சபித்து உயிரை விடும்” என்றாள். அதற்கு யோபு, “நீ அறிவில்லாத பெண்ணைப்போல் பேசுகிறாய்; இறைவனிடம் நன்மைகளைப் பெற்ற நாம், துன்பத்தையும் ஏற்றுக்கொள்ளக் கூடாதோ?” என்றான். இவையெல்லாவற்றிலும் யோபு தன் பேச்சினால் பாவம் செய்யவில்லை.

யோபு 2:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்னொருநாளிலே தேவபுத்திரர்கள் யெகோவாவுடைய முன்னிலையில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே யெகோவாவுடைய முன்னிலையில் வந்து நின்றான். யெகோவா சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார்; சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான். அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனிதனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; காரணமில்லாமல் அவனை அழிப்பதற்கு நீ என்னை தூண்டினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாக நிற்கிறான் என்றார். சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் உயிருக்குப் பதிலாகத் தனக்கு இருந்த எல்லாவற்றையும், மனிதன் கொடுத்துவிடுவான். ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவனுடைய எலும்பையும் அவனுடைய உடலையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்திற்கு முன்பாக உம்மை நிந்திக்கமாட்டானோ பாரும் என்றான். அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆனாலும் அவனுடைய உயிரை மாத்திரம் விட்டுவிடு என்றார். அப்பொழுது சாத்தான் யெகோவாவுடைய முன்னிலையைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவனுடைய உச்சந்தலைவரை கொடிய கொப்புளங்களால் அவனை வாதித்தான். அவன் ஒரு உடைந்த ஓட்டை எடுத்து, தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் அமர்ந்தான். அப்பொழுது அவனுடைய மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்திலே உறுதியாக நிற்கிறீரோ? தேவனை நிந்தித்து உயிரை விடும் என்றாள். அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவம் செய்யவில்லை.

யோபு 2:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

மற்றொருநாள், தேவதூதர்கள் கர்த்தரை சந்திக்க வந்தார்கள். சாத்தானும் கர்த்தரை சந்திப்பதற்காக வந்தான். கர்த்தர் சாத்தானிடம், “நீ எங்கிருந்து வருகின்றாய்?” என்று கேட்டார். சாத்தான் கர்த்தருக்கு, “நான் பூமியெங்கும் சுற்றித்திரிந்துக்கொண்டிருந்தேன்” என்று பதில் கூறினான். அப்போது கர்த்தர் சாத்தானை நோக்கி, “என் தாசனாகிய யோபுவைக் கண்டாயா? பூமியில் அவனைப் போன்றோர் எவருமில்லை. அவன் உண்மையுள்ளவனுமாயிருக்கிறான். அவன் தேவனுக்கு பயந்து தீயவற்றைவிட்டு விலகுகிறான். எக்காரணமுமின்றி அவனுக்குள்ளவை அனைத்தையும் அழிக்கும்படி நீ கேட்டும் கூட, அவன் இன்னும் உண்மையுள்ளவனாக இருக்கிறான்” என்றார். சாத்தான், “தோலுக்குத் தோல்! என்று பதில் சொன்னான். ஒருவன் தன் உயிரை காப்பதற்காக தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கொடுப்பான். அவனது உடம்பைத் துன்புறுத்தும்படி நீர் உமது கையை நீட்டு வீரானால், அப்போது உமது முகத்திற்கு நேராக அவன் உம்மை சபிப்பான்!” என்றான். அப்போது கர்த்தர் சாத்தானைப் பார்த்து, “அது சரி, யோபு உன் ஆற்றலுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறான். ஆனால் அவனைக் கொல்வதற்குமட்டும் உனக்கு அனுமதியில்லை” என்றார். பின்பு சாத்தான் கர்த்தரிடமிருந்து சென்று, யோபுவுக்கு வேதனைமிக்க புண்களைக் கொடுத்தான். அவனது பாதங்களின் அடிப்பகுதியிலிருந்து தலையின் உச்சிவரைக்கும் வேதனை தரும் அப்புண்கள் யோபுவின் உடலெங்கும் காணப்பட்டன. எனவே யோபு குப்பைக் குவியலின் அருகே உட்கார்ந்தான். அவனது புண்களைச் சுரண்டுவதற்கு உடைந்த மண்பாண்டத்தின் ஒரு துண்டைப் பயன்படுத்தினான். யோபுவின் மனைவி அவனை நோக்கி, “நீ இன்னும் தேவனுக்கு உண்மையுள்ளவனாய் இருக்கிறாயா? நீர் தேவனை சபித்தவண்ணம் மரித்துவிடு?” என்று கேட்டாள். பிறகு யோபு தனது மனைவியிடம், “நீ மூடத்தனமானவளைப் போலப் பேசுகிறாய்! தேவன் நல்லவற்றைக் கொடுக்கும்போது, நாம் அவற்றை ஏற்கிறோம். எனவே நாம் தொல்லைகளையும் ஏற்கவேண்டும், முறையிடக்கூடாது” என்று பதில் தந்தான். எல்லாத் தொல்லைகளின்போதும் யோபு பாவம் செய்யவில்லை. அவன் தேவனுக்கு எதிராக எதுவும் பேசவில்லை.

யோபு 2:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்னொருநாளிலே தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றான். கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார்; சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான். அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனுஷனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; முகாந்தரமில்லாமல் அவனை நிர்மூலமாக்கும்படி நீ என்னை ஏவினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும், மனுஷன் கொடுத்துவிடுவான். ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவன் எலும்பையும் அவன் மாம்சத்தையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான். அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆகிலும் அவன் பிராணனைமாத்திரம் தப்பவிடு என்றார். அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான். அவன் ஒரு ஓட்டை எடுத்து, தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான். அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள். அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.