யோபு 11:6-20

யோபு 11:6-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஞானத்தின் மறைபொருட்களை உனக்கு வெளிப்படுத்தினால் நல்லது; ஏனெனில் மெய்ஞானம் இருபக்கங்களைக் கொண்டது. இறைவன் உனது பாவங்களில் சிலவற்றைக்கூட மறந்துவிட்டார் என்பதை அறிந்துகொள். “இறைவனின் மறைபொருட்களின் ஆழத்தை உன்னால் அறியமுடியுமோ? எல்லாம் வல்லவரின் எல்லைகளை ஆராய உன்னால் முடியுமோ? அவை வானங்களைவிட உயரமானவை, உன்னால் என்ன செய்யமுடியும்? அவை பாதாளத்தின் ஆழங்களிலும் ஆழமானவை, உன்னால் எதை அறியமுடியும்? அவைகளின் அளவு பூமியைவிட நீளமானவை; கடலைவிட அகலமானவை. “அவரே வந்து உன்னைச் சிறையிலடைத்து, நீதிமன்றத்தைக் கூட்டினால், யாரால் அவரை எதிர்த்து நிற்கமுடியும்? ஏமாற்றுகிற மனிதரை நிச்சயமாய் அவர் அறிவார்; தீமையைக் காணும்போது அவர் கவனியாமல் இருப்பாரோ? ஒரு காட்டுக் கழுதைக்குட்டி எப்படி மனிதனாகப் பிறக்க முடியாதோ, அப்படியே பகுத்தறிவில்லாத ஒருவனும் ஞானமுள்ளவனாகமாட்டான். “அப்படியிருந்தும் உன் உள்ளத்தில் அவரிடம் பயபக்தியாயிருந்து உன் கைகளை அவரிடத்திற்கு நீட்டி, உன் கையிலுள்ள பாவத்தை விலக்கிவிட்டு, உன் வீட்டில் தீமை குடிகொள்ளாமல் தடைசெய்தால், நீ உன் முகத்தை வெட்கமின்றி உயர்த்தி, பயமின்றி உறுதியாய் நிற்பாய். நீ உன் தொல்லையை மறந்துவிடுவாய், கடந்துபோன தண்ணீரைப்போல அது உன் ஞாபகத்தில் இருக்கும். அப்பொழுது வாழ்க்கை நண்பகலைவிட வெளிச்சமாயிருக்கும், இருள் காலையைப்போல மாறும். நம்பிக்கை இருப்பதினால் உறுதிகொள்வீர், சுற்றிலும் பார்த்து, பாதுகாப்பாக இளைப்பாறுவாய். யாரும் உன்னைப் பயமுறுத்தாமல் நீ படுத்திருப்பாய்; அநேகர் உன் தயவை தேடிவருவார்கள். ஆனால் கொடியவர்களின் கண்கள் மங்கிப்போகும், அவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டார்கள்; அவர்களின் நம்பிக்கை மரணமே.”

யோபு 11:6-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; உள்ளபடி பார்த்தால், அது இரண்டுமடங்காக இருக்கிறது; ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ளும். தேவனுடைய மறைவான ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியமுடியுமோ? அது வானம்வரை உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறிந்து கொள்வது என்ன? அதின் அளவு பூமியைவிட நீளமும், சமுத்திரத்தைவிட அகலமுமாயிருக்கிறது. அவர் பிடித்தாலும், அவர் அடைத்தாலும், அவர் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்தினாலும், அவரைத் தடை செய்கிறவன் யார்? மனிதருடைய மாயத்தை அவர் அறிவார்; அக்கிரமத்தை அவர் கண்டும், அதைக் கவனிக்காமல் இருப்பாரோ? புத்தியில்லாத மனிதன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், அறிவுள்ளவனாக இருக்கிறான். நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும். உம்முடைய கையிலே அநீதி இருந்தால், அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் தங்கவிடாதிரும். அப்பொழுது உம்முடைய முகத்தை வெட்கமில்லாமல் தலைநிமிர்ந்து, பயப்படாமல் பலன்கொண்டிருப்பீர். அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து, கடந்துபோன தண்ணீரைப்போல அதை நினைப்பீர். அப்பொழுது உம்முடைய ஆயுள்காலம் நடுப்பகலைவிட பிரகாசமாயிருக்கும்; இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப்போலிருப்பீர். நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் பெலனாயிருப்பீர்; தோண்டி ஆராய்ந்து சுகமாகப் படுத்துக்கொள்வீர். பயமுறுத்துவாரில்லாமல் தூங்குவீர்; அநேகர் உமது முகத்தை நோக்கி விண்ணப்பம் செய்வார்கள். துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், அவர்கள் அடைக்கலம் அவர்களை விட்டு அகன்று, அவர்கள் நம்பிக்கை மரணமடைகிறவன் சுவாசம்போல் அழிந்துபோகும்” என்றான்.

யோபு 11:6-20 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவன் ஞானத்தின் இரகசியங்களை உனக்குச் சொல்லமுடியும். ஏனெனில் ஞானத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை அவர் உனக்குச் சொல்வார். தேவன் உன்னைத் தண்டிக்க வேண்டிய அளவிற்கு அவர் தண்டிப்பதில்லை. “யோபுவே, நீ உண்மையாகவே தேவனைப் புரிந்துகொண்டதாக நினைக்கிறாயா? சர்வ வல்லமையுள்ள தேவனுடைய அறிவை நீ புரிந்துகொள்ள முடியுமோ? அது பரலோகத்திற்கும் உயர்ந்தது. மரணத்தின் இடத்தைக் காட்டிலும் ஆழமானது. அதுபற்றி நீர் அறியக்கூடுமோ? தேவனுடைய அறிவின் அளவு உயர்ந்தது. பூமியைக் காட்டிலும் கடல்களைக் காட்டிலும் பெரியது. “தேவன் உன்னைச் சிறைபிடித்து நியாய சபைக்கு அழைத்துவந்தால், ஒருவனும் அவரைத் தடுக்க முடியாது. உண்மையாகவே, யார் தகுதியற்றவரென்று தேவன் அறிகிறார். தேவன் தீமையைப் பார்க்கும்போது அதை நினைவுக்கூர்கிறார். ஒரு காட்டுக் கழுதை மனிதனை ஈன்றெடுக்காது. மூடனான மனிதன் ஒருபோதும் ஞானம் பெறமாட்டான். ஆனால் யோபுவே, உன் இருதயத்தை தேவனுக்கு நேராக தயார்ப்படுத்த வேண்டும். உன் கரங்களை அவருக்கு நேராக உயர்த்தி அவரைத் தொழுதுகொள்ள வேண்டும். உன் வீட்டிலிருக்கும் பாவத்தை நீ அகற்றிப்போட வேண்டும். உன் கூடாரத்தில் தீமை தங்கியிருக்கவிடாதே. அப்போது நீ தேவனை வெட்கமின்றிப் பார்க்கக்கூடும். நீ தைரியமாக நின்று, அச்சமில்லாது இருக்க முடியும். அப்போது நீ உன் தொல்லைகளை மறக்கக் கூடும். வழிந்தோடும் வெள்ளத்தைப்போல் உன் தொல்லைகள் நீங்கிவிடும். நண்பகலில் சூரியனின் பிரகாசத்தைக் காட்டிலும், உன் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும். வாழ்க்கையின் இருண்ட நேரங்களும் காலை சூரியனைப் போன்று பிரகாசிக்கும். அப்போது நீ பாதுகாவலை உணர்வாய். ஏனெனில், உனக்கு நம்பிக்கை உண்டு. தேவன் உன்னைக் கவனித்து உனக்கு ஓய்வளிப்பார். நீ ஓய்வெடுக்கப் படுத்துக்கொள்வாய், யாரும் உனக்குத் தொல்லை தரமாட்டார்கள். பலர் உன்னிடம் உதவி நாடி வருவார்கள். தீயோர் உன்னிடம் உதவியை எதிர்பார்ப்பர், அவர்கள் தங்கள் தொல்லைகளிலிருந்து தப்பமுடியாது. அவர்களின் நம்பிக்கை அவர்களை மரணத்திற்கு நேராக மட்டுமே வழிநடத்தும்” என்றான்.

யோபு 11:6-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; உள்ளபடி பார்த்தால், அது இரட்டிப்புள்ளதாயிருக்கிறது; ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ளும். தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ? அது வானபரியந்தம் உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறியக்கூடியது என்ன? அதின் அளவு பூமியைப்பார்க்கிலும் நீளமும், சமுத்திரத்தைப்பார்க்கிலும் அகலமுமாயிருக்கிறது. அவர் பிடித்தாலும், அவர் அடைத்தாலும், அவர் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்தினாலும், அவரைத் தடைபண்ணுகிறவன் யார்? மனுஷருடைய மாயத்தை அவர் அறிவார்; அக்கிரமத்தை அவர் கண்டும், அதைக் கவனியாதிருப்பாரோ? புத்தியில்லாத மனுஷன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், பெருநெஞ்சுள்ளவனாயிருக்கிறான். நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும். உம்முடைய கையிலே அக்கிரமம் இருந்தால், அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் வாசமாயிருக்கவொட்டாதிரும். அப்பொழுது உம்முடைய முகத்தை மாசில்லாமல் ஏறெடுத்து, பயப்படாமல் திடன்கொண்டிருப்பீர். அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து, கடந்துபோன தண்ணீரைப்போல அதை நினைப்பீர். அப்பொழுது உம்முடைய ஆயுசுகாலம் பட்டப்பகலைப்பார்க்கிலும் பிரகாசமாயிருக்கும்; இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப்போலிருப்பீர். நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் திடனாயிருப்பீர்; தோண்டி ஆராய்ந்து சுகமாய்ப் படுத்துக்கொள்வீர். பயப்படுத்துவாரில்லாமல் நித்திரை செய்வீர்; அநேகர் உமது முகத்தை நோக்கி விண்ணப்பம் பண்ணுவார்கள். துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், அவர்கள் அடைக்கலம் அவர்களை விட்டொழிந்து, அவர்கள் நம்பிக்கை சாகிறவன் சுவாசம்போல் அழிந்துபோகும் என்றான்.