யோபு 1:6-22
யோபு 1:6-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஒரு நாள் இறைவனின் தூதர்கள் யெகோவாவின் சமுகத்தில் கூடிவந்தார்கள், சாத்தானும் அவர்களுடன் வந்து நின்றான். யெகோவா சாத்தானிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” எனக் கேட்டார். சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக, “நான் பூமியெங்கும் சுற்றித்திரிந்து, அங்குமிங்கும் போய் வருகிறேன்” என்றான். அப்பொழுது யெகோவா சாத்தானிடம், “நீ எனது அடியவன் யோபுவைக் கவனித்தாயா? அவனைப்போல் பூமியில் ஒருவனும் இல்லை. அவன் குற்றமில்லாதவனும், நேர்மையானவனும், இறைவனுக்குப் பயந்து தீமையைவிட்டு விலகி நடக்கிறவனுமாய் இருக்கிறான்” என்றார். சாத்தான் யெகோவாவுக்குப் பதிலாக, “யோபு வீணாகவா இறைவனுக்குப் பயந்து நடக்கிறான்? நீர் அவனையும் அவன் வீட்டையும், அவனுக்கு உள்ள எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? நீர் அவனுடைய கைகளின் வேலைகளை ஆசீர்வதித்திருக்கிறீர்; அதினால் அவனுடைய ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும் நாட்டில் பெருகியிருக்கின்றன. ஆனாலும் இப்பொழுது நீர் உமது கரத்தை நீட்டி அவன் வைத்திருக்கும் எல்லாவற்றையும் அடியும். அப்பொழுது நிச்சயமாக அவன் உமது முகத்துக்கு நேராகவே உம்மைச் சபிப்பான்” என்றான். அதற்கு யெகோவா சாத்தானிடம், “சரி, இதோ, அவனிடத்தில் இருப்பதெல்லாம் உன் கையிலிருக்கின்றன; ஆனால் அவனை மட்டும் தொடாதே” என்றார். உடனே சாத்தான் யெகோவாவின் சமுகத்தினின்று வெளியேறினான். ஒரு நாள் யோபுவின் மகன்களும், மகள்களும், தங்கள் மூத்த சகோதரனுடைய வீட்டில் விருந்துண்டு, திராட்சை இரசம் குடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு தூதுவன் யோபுவிடம் வந்து, “உமது எருதுகள் உழுது கொண்டிருந்தன; அருகில் கழுதைகள் மேய்ந்து கொண்டிருந்தன. அவ்வேளையில் சபேயர் வந்து தாக்கி அவற்றைக் கொண்டுபோய்விட்டார்கள்; அத்துடன் உமது பணியாட்களையும் வாளால் வெட்டிப் போட்டார்கள். நான் ஒருவன் மட்டுமே தப்பி இதைச் சொல்லவந்தேன்” என்றான். அவன் சொல்லிக்கொண்டிருக்கையில் இன்னொரு தூதுவன் வந்து, “ஆகாயத்தில் இருந்து இறைவனின் அக்கினி விழுந்து உமது செம்மறியாடுகளையும் பணியாட்களையும் எரித்துப்போட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பி இதைச் சொல்லவந்தேன்” என்றான். அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வேறொரு தூதுவன் வந்து, “கல்தேயர் மூன்று கூட்டமாக வந்து, உமது ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு போய்விட்டார்கள். வேலையாட்களையும் வாள் முனையில் வீழ்த்தினர், நான் ஒருவன் மட்டுமே தப்பி இதை உம்மிடம் சொல்லவந்தேன்” என்றான். அவன் சொல்லிக்கொண்டிருக்கையில் இன்னுமொரு தூதுவன் வந்து, “உமது மகள்களும், மகன்களும் அவர்களுடைய மூத்த சகோதரன் வீட்டில் விருந்துண்டு, திராட்சை இரசம் குடித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது திடீரென வனாந்திரத்திலிருந்து பெருங்காற்று உண்டாகி, வீட்டின் நான்கு மூலைகளையும் மோதியடித்தது. வீடு அவர்கள்மேல் விழுந்ததால் அவர்கள் இறந்துபோனார்கள். நான் மட்டும் தப்பி இதை உமக்குச் சொல்லவந்தேன்” என்றான். அப்பொழுது யோபு எழுந்து, துக்கத்தில் தன் மேலாடையைக் கிழித்து, தலையை மொட்டையடித்து, தரையில் விழுந்து வணங்கி சொன்னதாவது: “என் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தேன்; நிர்வாணியாகவே திரும்புவேன். யெகோவா கொடுத்தார், யெகோவா எடுத்துக்கொண்டார்; யெகோவாவின் பெயர் துதிக்கப்படுவதாக.” இவையெல்லாவற்றிலும் யோபு இறைவன் தனக்குத் தீங்கு செய்தார் எனக் குறைகூறி பாவம் செய்யவில்லை.
யோபு 1:6-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஒருநாள் தேவதூதர்கள் யெகோவாவுடைய முன்னிலையில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான். யெகோவா சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான். யெகோவா சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார். அதற்குச் சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: யோபு வீணாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? நீர் அவனையும் அவனுடைய வீட்டையும் அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவனுடைய கைகளின் வேலைகளை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகியது. ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு இருக்கிறவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்திற்கு முன்னே உம்மை நிந்திக்கமாட்டானோ பாரும் என்றான். யெகோவா சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு இருக்கிறவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல்மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்; அப்பொழுது சாத்தான் யெகோவாவுடைய சமுகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போனான். பின்பு ஒருநாள் யோபுடைய மகன்களும் அவனுடைய மகள்களும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே சாப்பிட்டு திராட்சைரசம் குடிக்கிறபோது, ஒரு ஆள் அவனிடத்தில் வந்து: எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்து கொண்டிருக்கும்போது, சபேயர்கள் அவைகளை தாக்கி, அவைகளைக் கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான். இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேறொருவன் வந்து: வானத்திலிருந்து தேவனுடைய நெருப்பு விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான். இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று குழுக்களாக வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள், வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான். இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேறொருவன் வந்து: உம்முடைய மகன்களும் உம்முடைய மகள்களும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டில் சாப்பிட்டுத் திராட்சைரசம் குடிக்கிறபோது, வனாந்திரவழியாகப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நான்கு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்து போனார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான். அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து: நிர்வாணியாக என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாக அவ்விடத்திற்குத் திரும்புவேன்; எனக்கு இருந்ததெல்லாம் யெகோவா கொடுத்தார், யெகோவா அவைகளை எடுத்தார்; யெகோவாவுடைய நாமத்திற்கு நன்றி என்றான். இவையெல்லாவற்றிலும் யோபு பாவம்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.
யோபு 1:6-22 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவதூதர்கள் கர்த்தரைச் சந்திக்கும் நாள் வந்தது. சாத்தானும் தேவதூதர்களோடு வந்தான். கர்த்தர் சாத்தானிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். சாத்தான் கர்த்தரை நோக்கி, “நான் பூமியைச் சுற்றிப் பார்த்து வந்தேன்” என்றான். அப்போது கர்த்தர் சாத்தானிடம், “நீ எனது தாசனாகிய யோபுவைக் கண்டாயா? பூமியில் அவனைப் போன்றோர் எவருமில்லை. யோபு உத்தமனும் உண்மையுள்ளவனுமாயிருக்கிறான். அவன் தேவனுக்கு பயந்து தீயவற்றை விட்டு விலகியிருக்கிறான்” என்றார். சாத்தான், “ஆம்! ஆனால் யோபு தேவனுக்குப் பயப்படுவதற்கு தக்க காரணங்கள் உள்ளன! நீர் எப்போதும் அவனையும், அவனது குடும்பத்தையும், அவனுக்கிருக்கும் எல்லாவற்றையும் வேலியடைத்துப் பாதுகாக்கிறீர். அவன் செய்கின்ற எல்லாவற்றிலும் அவனை வெற்றி காணச்செய்தீர். ஆம் நீர் அவனை ஆசீர்வதித்திருக்கிறீர். நாடு முழுவதும் அவனது மந்தைகளும் விலங்குகளும் பெருகி, அவன் மிகுந்த செல்வந்தனாக இருக்கிறான். ஆனால் அவனுக்கிருப்பவை அனைத்தையும் நீர் உமது கையை நீட்டி அழித்துவிட்டால் உம் முகத்திற்கு நேராக உம்மை அவன் சபிப்பான் என்று உறுதியளிக்கிறேன்” என்று பதிலளித்தான். கர்த்தர் சாத்தானிடம், “அப்படியே ஆகட்டும். யோபுக்குச் சொந்தமான பொருள்களின் மேல் உன் விருப்பப்படி எது வேண்டுமானாலும் செய். ஆனால் அவன் உடம்மைத் துன்புறுத்தாதே” என்றார். பின்பு சாத்தான் கர்த்தருடைய சந்நிதியை விட்டுச் சென்றுவிட்டான். ஒருநாள், மூத்த சகோதரனின் வீட்டில் யோபுவின் குமாரர்களும், குமாரத்திகளும் உண்டு, திராட்சை ரசம் அருந்திக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவன் யோபுவிடம் வந்து, “காளைகள் உழுதுக்கொண்டிருந்தன, கழுதைகள் அருகே புல் மேய்ந்துக்கொண்டிருந்தன. ஆனால் சபேயர் எங்களைத் தாக்கிவிட்டு உமது மிருகங்களை கவர்ந்துக்கொண்டார்கள்! சபேயர் என்னைத் தவிர எல்லா வேலையாட்களையும் கொன்றுவிட்டார்கள். உம்மிடம் சொல்லும்படியாக தப்பிவர முடிந்தவன் நான் மட்டுமே!” எனச் செய்தியைக் கூறினான். அவன் இதனைக் கூறிக்கொண்டிருக்கும்போது மற்றொருவன் யோபுவிடம் வந்தான். இரண்டாம் ஆள், “வானிலிருந்து மின்னல் மின்னி உமது ஆடுகளையும் வேலையாட்களையும் எரித்துவிட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பினேன். உமக்கு அந்தச் செய்தியை கூறும்படியாக வந்தேன்!” எனக் கூறினான். அந்த ஆள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இன்னொருவன் வந்தான். இந்த மூன்றாவது ஆள், “கல்தேயர் மூன்று குழுக்களை அனுப்பி, எங்களைத் தாக்கி, ஒட்டகங்களைக் கவர்ந்து சென்றுவிட்டார்கள்! அவர்கள் வேலையாட்களையும் கொன்றுவிட்டார்கள். நான் மட்டுமே தப்பினேன் இந்தச் செய்தியை உமக்குச் சொல்லும்படியாக வந்தேன்!” என்றுச் சொன்னான். மூன்றாம் ஆள் பேசிக்கொண்டிருக்கும்போதே, மற்றும் ஒருவன் வந்தான். நான்காவது ஆள், “உமது குமாரர்களும் குமாரத்திகளும் மூத்த சகோதரனின் வீட்டில் உண்டு, திராட்சைரசம் பருகிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பலத்தக் காற்று பாலைவனத்திலிருந்து வீசி, வீட்டை அழித்தது, உமது குமாரர்களின் மீதும், குமாரத்திகளின் மீதும் வீடு வீழ்ந்ததால், அவர்கள் மரித்துப்போனார்கள். நான் ஒருவன் மட்டுமே தப்பித்தேன். எனவே உம்மிடம் இந்த செய்தியை தெரிவிக்க வந்தேன்!” என்றான். யோபு இதைக் கேட்டபோது, அவனது துக்கத்தை வெளிப்படுத்தும்பொருட்டு ஆடைகளைக் கிழித்துக்கொண்டான், தலையை மழித்துவிட்டான். பின்பு யோபு தரையில் விழுந்து, தேவனை ஆராதித்தான். “நான் இந்த உலகத்தில் பிறந்தபோது நிர்வாணமாக இருந்தேன், என்னிடம் எதுவும் இருக்கவில்லை. நான் மரித்து இந்த உலகை விட்டு நீங்கிச் செல்லும்போது, நான் நிர்வாணமாக எதுவுமின்றி செல்லுவேன். கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்துக்கொண்டார். கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்!” என்றான். இவையெல்லாம் நிகழ்ந்தாலும், யோபு பாவம் செய்யவில்லை. தேவன் தவறு செய்திருந்தார் என்று யோபு குறை சொல்லவுமில்லை.
யோபு 1:6-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான். கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான். கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார். அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று. ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான். கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல் மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்; அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டுப்போனான். பின்பு ஒருநாள் யோபுடைய குமாரரும், அவன் குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்து, திராட்சரசம் குடிக்கிறபோது, ஒரு ஆள் அவனிடத்தில் வந்து: எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்து கொண்டிருக்கையில், சபேயர் அவைகள்மேல் விழுந்து, அவைகளைச் சாய்த்துக்கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று பவுஞ்சாய் வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள், வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: உம்முடைய குமாரரும் உம்முடைய குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்துத் திராட்சரசம் குடிக்கிறபோது, வனாந்தரவழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்து போனார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து: நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான். இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.