யோவான் 9:13-23
யோவான் 9:13-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பார்வையற்றவனாயிருந்தவனை மக்கள் பரிசேயரிடம் கொண்டுவந்தார்கள். இயேசு சேறுண்டாக்கி, அந்த மனிதனின் கண்களைத் திறந்த நாள் ஒரு ஓய்வுநாளாயிருந்தது. எனவே பரிசேயரும் அவனிடம், “நீ எப்படிப் பார்வை பெற்றாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “அவர் எனது கண்களில் சேற்றைப் பூசினார். நான் அதைக் கழுவினேன். இப்பொழுது நான் பார்க்கிறேன்” என்றான். அப்பொழுது பரிசேயரில் சிலர், “இவன் இறைவனிடமிருந்து வந்தவனல்ல. ஏனெனில் இவன் யூதரின் ஓய்வுநாளைக் கைக்கொள்ளவில்லையே” என்றார்கள். அதற்கு மற்றவர்கள், “பாவியான ஒருவனால் இப்படிப்பட்ட அடையாளங்களை எப்படிச் செய்யமுடியும்?” என்றார்கள். அதனால் அவர்களுக்கிடையே பிரிவினை ஏற்பட்டது. கடைசியாக அவர்கள் மீண்டும் அந்தக் பார்வையற்றவனைப் பார்த்து, “உனது கண்களைத் திறந்தவரைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “அவர் ஒரு இறைவாக்கினர்” என்றான். பார்வையற்றவனாயிருந்தவனுடைய பெற்றோரைக் கூப்பிட்டு விசாரிக்கும் வரைக்கும், அவன் பார்வையற்றவனாய் இருந்து பார்வை பெற்றான் என்று யூதர்கள் நம்பவில்லை. அவர்கள் அவனுடைய பெற்றோரிடம், “பார்வையற்றவனாய்ப் பிறந்தான் என்று நீங்கள் சொன்ன உங்கள் மகன் இவன்தானா? இவன் எப்படி இப்பொழுது பார்வையடைந்தான்?” என்று கேட்டார்கள். அதற்கு அவனுடைய பெற்றோர், “இவன் எங்கள் மகன் என்பதும், இவன் பார்வையற்றவனாய் பிறந்தான் என்பதும் எங்களுக்குத் தெரியும். ஆனால் இவனால் இப்பொழுது எப்படிப் பார்க்க முடிகிறது என்பதோ, இவனுடைய கண்களைத் திறந்தது யார் என்பதோ எங்களுக்குத் தெரியாது. அவனையே கேளுங்கள். அவன் வயது வந்தவனாய் இருக்கிறானே; அவனே தனக்காகப் பேசுவான்” என்றார்கள். அவனுடைய பெற்றோர் யூதத்தலைவர்களுக்கு பயந்தபடியினாலேயே இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவை யாராவது கிறிஸ்து என அங்கீகரித்தால், அவன் ஜெப ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று யூதர்கள் ஏற்கெனவே தீர்மானித்திருந்தார்கள். அதனாலேயே அவனுடைய பெற்றோர், “அவன் வயது வந்தவன்; அவனையே கேளுங்கள்” என்று சொன்னார்கள்.
யோவான் 9:13-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
குருடனாக இருந்த அவனைப் பரிசேயர்களிடத்திற்குக் கொண்டுபோனார்கள். இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைத் திறந்த நாள் ஓய்வுநாளாக இருந்தது. ஆகவே, பரிசேயர்களும் அவனைப் பார்த்து: நீ எப்படிப் பார்வை அடைந்தாய் என்று மீண்டும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், பார்க்கிறேன் என்றான். அப்பொழுது பரிசேயர்களில் சிலர்: அந்த மனிதன் ஓய்வுநாளைக் கடைபிடிக்காததினால் அவன் தேவனிடத்தில் இருந்து வந்தவன் இல்லை என்றார்கள். வேறுசிலர்: பாவியாக இருக்கிற மனிதன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இந்தவிதமாக அவர்களுக்குள்ளே பிரிவினை ஏற்பட்டது. மீண்டும் அவர்கள் குருடனைப் பார்த்து: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான். அவன் குருடனாக இருந்து பார்வை அடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார்வை அடைந்தவனுடைய பெற்றோரை அழைத்து, அவர்களைப் பார்த்து: உங்களுடைய மகன் குருடனாகப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள். பெற்றோர் மறுமொழியாக; இவன் எங்களுடைய மகன்தான் என்றும், குருடனாகப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும். இப்பொழுது இவன் பார்வை அடைந்தது எப்படி என்று எங்களுக்குத் தெரியாது; இவனுடைய கண்களைத் திறந்தவன் யார் என்பதும் எங்களுக்குத் தெரியாது; இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள். அவனுடைய பெற்றோர்கள் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனென்றால், இயேசுவைக் கிறிஸ்து என்று யாராவது அறிக்கை செய்தால் அவனை ஜெப ஆலயத்திற்குப் வெளியாக்க வேண்டும் என்று யூதர்கள் அதற்கு ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள். அதினிமித்தம்: இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவனுடைய பெற்றோர்கள் சொன்னார்கள்.
யோவான் 9:13-23 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு மக்கள் பரிசேயரிடம் அந்த மனிதனை அழைத்துச்சென்றனர். குருடாயிருந்த அந்த மனிதன் இவன்தான். இயேசு சேறு உண்டாக்கி இவனது கண்களைக் குணப்படுத்தினார். அவர் இதனை ஓய்வு நாளில் செய்திருக்கிறார். ஆகையால் இப்பொழுது பரிசேயர்கள் அந்த மனிதனிடம், “எப்படி நீ பார்வை பெற்றாய்?” என மீண்டும் கேட்டனர். அதற்கு அந்த மனிதன், “அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார். நான் கழுவினேன். இப்பொழுது என்னால் பார்க்க முடிகிறது” என்றான். சில பரிசேயர்கள், “அந்த மனிதன் ஓய்வு நாள் பற்றிய சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. எனவே அவன் தேவனிடமிருந்து வரவில்லை” என்றனர். ஆனால் சிலரோ, “பாவம் செய்கிற எந்த மனிதராலும் இதுபோன்ற அற்புதங்களைச் செய்ய முடியாதே” என்றனர். யூதர்கள் தங்களுக்குள் ஒத்துப்போகவில்லை. யூதர்கள் குருடனாயிருந்த அந்த மனிதனிடம் மீண்டும் கேட்டார்கள். “இயேசு உன்னைக் குணமாக்கினான். உன்னால் பார்க்க முடிகிறது. அவனைப்பற்றி நீ என்ன சொல்கிறாய்?” அந்த மனிதன் “அவர் ஒரு தீர்க்கதரிசி” என்றான். அந்த மனிதன் குருடனாயிருந்து பார்வை பெற்றது குறித்து யூதர்களுக்கு இன்னும் முழுமையான நம்பிக்கை ஏற்படவில்லை. எனவே அந்த மனிதனின் பெற்றோர்களுக்கு ஆளனுப்பினர். யூதர்கள் அவனது பெற்றோர்களிடம், “இவன் உங்கள் குமாரன்தானே. அவன் குருடனாகவே பிறந்தான் என்று சொன்னீர்கள். இப்பொழுது அவனால் எவ்வாறு பார்க்கமுடிகிறது?” என்று கேட்டனர். அதற்கு அவனது பெற்றோர்கள், “இவன் எங்கள் குமாரன் என்பது எங்களுக்குத் தெரியும். அவன் குருடனாகப் பிறந்தான் என்பதும் தெரியும். அவன் இப்போது எப்படிப் பார்க்கிறான் என்றும், கண்களைக் குணமாக்கியது யார் என்றும் எங்களுக்குத் தெரியாது. அவனைக் கேளுங்கள். அவனே பதில் சொல்லுகிற வகையில் வளர்ந்திருக்கிறான்” என்றனர். ஏனென்றால் அவர்களுக்கு யூதத் தலைவர்களைப்பற்றிய அச்சம் இருந்தது. இயேசுதான் கிறிஸ்து என்று சொல்கிற எவரொருவரையும் தண்டித்துவிட வேண்டும் என்று யூதத்தலைவர்கள் முடிவு செய்திருந்தனர். அவர்கள் அம்மக்களை வழிபாட்டு இடத்திலிருந்து விலக்கியும் வைப்பர். எனவே அவனது பெற்றோர்கள். “இவன் வளர்ந்து நிற்கிறவன். அவனையே கேளுங்கள்” என்றனர்.
யோவான் 9:13-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
குருடனாயிருந்த அவனைப் பரிசேயரிடத்திற்குக் கொண்டுபோனார்கள். இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைத் திறந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது. ஆகையால் பரிசேயரும் அவனை நோக்கி: நீ எப்படிப் பார்வையடைந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன் என்றான். அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள். வேறுசிலர்: பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று. மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான். அவன் குருடனாயிருந்து பார்வையடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார்வையடைந்தவனுடைய தாய்தகப்பன்மாரை அழைப்பித்து. அவர்களை நோக்கி: உங்கள் குமாரன் குருடனாய்ப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள். தாய்தகப்பன்மார் பிரதியுத்தரமாக; இவன் எங்கள் குமாரன்தான் என்றும், குருடனாய்ப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும். இப்பொழுது இவன் பார்வையடைந்த வகை எங்களுக்குத் தெரியாது; இவன் கண்களைத் திறந்தவன் இன்னான் என்பதும் எங்களுக்குத் தெரியாது; இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனைக் கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள். அவனுடைய தாய்தகப்பன்மார் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கைபண்ணினால் அவனை ஜெப ஆலயத்துக்குப் புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்குமுன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள். அதினிமித்தம்: இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவன் தாய்தகப்பன்மார் சொன்னார்கள்.