யோவான் 8:28-59
யோவான் 8:28-59 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எனவே இயேசு அவர்களிடம், “நீங்கள் மானிடமகனாகிய என்னை உயர்த்திய பின்பு, நானே அவர் என்றும், எனது சுயமாக நான் ஒன்றும் செய்கிறதில்லையென்றும், பிதா எனக்கு போதித்தபடியே நான் இவற்றைச் சொல்கிறேன் என்றும் அறிந்துகொள்வீர்கள். என்னை அனுப்பிய பிதா என்னுடனே இருக்கிறார்; அவர் என்னைத் தனிமையாய் விட்டுவிடவில்லை. ஏனெனில் அவருக்குப் பிரியமானதையே நான் எப்பொழுதும் செய்கிறேன்” என்றார். அவர் இந்தக் காரியங்களைக் குறித்துச் சொன்னபோது, பலர் அவரில் விசுவாசம் வைத்தார்கள். இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களிடம், “நீங்கள் எனது உபதேசத்தில் தொடர்ந்து நிலைத்திருந்தால், நீங்கள் உண்மையாகவே எனது சீடர்களாய் இருப்பீர்கள். அப்பொழுது நீங்கள் சத்தியத்தை அறிந்துகொள்வீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்றார். அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம். நாங்கள் ஒருபோதும் ஒருவருக்கும் அடிமைகளாய் இருந்ததில்லை. அப்படியிருக்க நாங்கள் விடுதலையாவோம் என்று நீர் எப்படிச் சொல்லலாம்?” என்றார்கள். அதற்கு இயேசு பதிலாக, “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். பாவம் செய்கிற ஒவ்வொருவரும் பாவத்திற்கு அடிமையாய் இருக்கிறார்கள். ஒரு அடிமைக்குக் குடும்பத்தில் நிரந்தர இடம் இருப்பதில்லை. ஆனால் மகனோ குடும்பத்திற்கு என்றென்றும் சொந்தமானவனாயிருக்கிறான். ஆகவே இறைவனின் மகன் உங்களை விடுதலையாக்கினால், நீங்கள் உண்மையாகவே விடுதலை பெறுவீர்கள். நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரென்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் என்னைக் கொல்வதற்கு ஆயத்தமாய் இருக்கிறீர்கள். ஏனெனில் எனது வார்த்தைக்கு உங்கள் உள்ளத்தில் இடமில்லை. எனது பிதாவின் முன்னிலையில் கண்டவற்றையே நான் அறிவிக்கிறேன். ஆனால் நீங்களோ உங்கள் தகப்பனிடமிருந்து கேள்விப்பட்டதையே செய்கிறீர்கள்” என்றார். அதற்கு அவர்கள், “ஆபிரகாமே எங்கள் தந்தை” என்றார்கள். இயேசுவோ அவர்களிடம், “நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளானால் ஆபிரகாம் செய்தவற்றையே நீங்களும் செய்வீர்கள். ஆனால் நீங்களோ, இறைவனிடம் கேட்டறிந்த சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனிதனான என்னைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள். ஆபிரகாம் இப்படியான காரியங்களைச் செய்யவில்லையே. நீங்கள் உங்கள் சொந்தத் தகப்பன் செய்ததையே செய்கிறீர்கள்” என்றார். அதற்கு அவர்கள் அவரிடம், “நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்கள் இல்லை. இறைவன் ஒருவரே எங்களுக்கும் பிதா” என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவன் உங்கள் பிதாவாக இருந்தால், நீங்கள் என்னிலும் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் இப்பொழுது இங்கே இருக்கின்ற நான் இறைவனிடமிருந்தே வந்தேன். நான் எனது சுயவிருப்பத்தின்படி வரவில்லை; அவரே என்னை அனுப்பினார். நான் சொல்வது ஏன் உங்களுக்குத் தெளிவாய் இல்லை? நான் சொல்வதைக் கேட்க உங்களுக்கு மனதில்லாமல் இருக்கிறதினால்தானே. நீங்கள் உங்கள் தகப்பனான சாத்தானுக்கு உரியவர்கள். உங்கள் தகப்பனின் ஆசைகளைச் செய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள். அவன் தொடக்கத்திலிருந்தே கொலைகாரனாய் இருக்கிறான். அவனிடம் சத்தியமில்லை. அதனால் அவன் சத்தியத்தில் நிலைத்திருப்பதில்லை. அவன் பொய் பேசும்போது தன் சொந்த மொழியையே பேசுகிறான். ஏனெனில் அவன் ஒரு பொய்யன், பொய்களின் தகப்பன். இருந்தும் நானோ உங்களுக்கு சத்தியத்தை சொல்கிறபடியால், நீங்கள் என்னை விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள். நான் பாவம் செய்தேன் என்று என்னைக் குற்றம் சாட்டி நிரூபிக்க உங்களில் எவனால் முடியும்? நான் உங்களுக்கு சத்தியத்தைச் சொல்லியும், நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்? யார் இறைவனுக்குரியவராய் இருக்கிறவர்கள், அவன் இறைவன் சொல்லும் வார்த்தையைக் கேட்கிறான். நீங்களோ இறைவனுக்குரியவர்கள் அல்லாதபடியினாலே, இறைவனுடைய வார்த்தையைக் கேளாமல் இருக்கிறீர்கள்” என்றார். அப்பொழுது யூதத்தலைவர்கள் அவரிடம், “நீ ஒரு சமாரியன். நீ பிசாசு பிடித்தவன் என்று நாங்கள் சொன்னது சரியல்லவா?” என்றார்கள். அதற்கு இயேசு, “நான் பிசாசு பிடித்தவன் அல்ல. நான் என் பிதாவைக் கனம்பண்ணுகிறேன். நீங்களோ என்னை அவமதிக்கிறீர்கள். நான் எனது சுய மகிமையைத் தேடவில்லை; ஆனால் எனக்காக மகிமையைத் தேடுகிறவரும் நியாயந்தீர்க்கிறவரும் ஒருவர் இருக்கிறாரே. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது எனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் ஒருபோதும் மரணத்தைக் காணமாட்டார்கள்” என்றார். அப்பொழுது யூதத்தலைவர்கள், “உனக்குப் பிசாசு பிடித்திருக்கிறது என்று இப்பொழுது நாங்கள் நன்றாய் தெரிந்துகொண்டோம். ஆபிரகாம் இறந்தார், இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் நீயோ, யாராவது உனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் எவ்விதத்திலும் மரணத்தை அனுபவிப்பதில்லை என்று சொல்கிறாய். நீ எங்கள் தகப்பன் ஆபிரகாமைப் பார்க்கிலும் பெரியவனோ? அவர் மரித்தார், அப்படியே இறைவாக்கினரும் மரித்தார்கள். நீ உன்னை யார் என்று எண்ணுகிறாய்?” என்று கேட்டார்கள். இயேசு அதற்கு மறுமொழியாக, “நானே என்னை மகிமைப்படுத்தினால், எனது மகிமை அர்த்தமற்றது. நீங்கள் உங்கள் இறைவன் என்று உரிமையோடு சொல்கிற, எனது பிதாவே என்னை மகிமைப்படுத்துகிறவர். நீங்கள் அவரை அறியாதிருந்தாலும், நான் அவரை அறிந்திருக்கிறேன். நான் அவரை அறியவில்லை என்று சொன்னால், நானும் உங்களைப்போலவே ஒரு பொய்யனாய் இருப்பேன். ஆனால் நானோ அவரை அறிந்திருக்கிறேன். அவரின் வார்த்தையைக் கைக்கொள்கிறேன். உங்கள் முற்பிதாவான ஆபிரகாம் எனது நாளைக் காண்பதை எண்ணி மகிழ்ச்சி கொண்டிருந்தான்; அதைக்கண்டு அவன் சந்தோஷப்பட்டான்” என்றார். அப்பொழுது யூதத்தலைவர்கள் அவரிடம், “உனக்கோ இன்னும் ஐம்பது வயதாகவில்லை. நீ ஆபிரகாமைக் கண்டாயோ!” என்றார்கள். அதற்கு இயேசு, “மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்கிறேன், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்னமே இருக்கிறவர் நானே” என்றார். இதைக் கேட்டவுடன் அவர்மேல் எறியும்படி அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டார்கள். ஆனால் இயேசுவோ அவர்கள் நடுவே கடந்து ஆலயப் பகுதியை விட்டு வெளியே போய்விட்டார்.
யோவான் 8:28-59 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஆதலால் இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் மனிதகுமாரனை உயர்த்தினபின்பு, நானே அவர் என்றும், நான் என் சொந்தமாக ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள். என்னை அனுப்பினவர் என்னுடனே இருக்கிறார், பிதாவிற்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறதினால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார். இவைகளை அவர் சொன்னபோது, அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களைப் பார்த்து: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் உண்மையாகவே என் சீடராக இருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். அவர்கள் அவருக்கு மறுமொழியாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறோம், நாங்கள் ஒருபோதும் ஒருவனுக்கும் அடிமைகளாக இருக்கவில்லை; விடுதலையாவீர்கள் என்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: பாவம் செய்கிறவன் எவனும் பாவத்திற்கு அடிமையாக இருக்கிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். ஆகவே, குமாரன் உங்களை விடுதலை ஆக்கினால் உண்மையாகவே விடுதலை ஆவீர்கள். நீங்கள் ஆபிரகாமின் சந்ததியார் என்று அறிவேன்; ஆனாலும் உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம் பெறாததினால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள். நான் என் பிதாவினிடத்தில் பார்த்ததைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்களுடைய பிதாவினிடத்தில் பார்த்ததைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்களுடைய பிதா என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாக இருந்தால் ஆபிரகாமின் செயல்களைச் செய்வீர்களே. தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனிதனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே. நீங்கள் உங்களுடைய பிதாவின் செயல்களைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்கள் இல்லை; ஒரே பிதா எங்களுக்கு இருக்கிறார், அவர் தேவன் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: தேவன் உங்களுடைய பிதாவாக இருந்தால் என்னிடத்தில் அன்பாக இருப்பீர்கள். ஏனென்றால், நான் தேவனிடத்தில் இருந்து வந்திருக்கிறேன்; நான் நானாக வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமல் இருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாமல் இருக்கிறதினால் அல்லவா? நீங்கள் உங்களுடைய தகப்பனாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்களுடைய தகப்பனின் ஆசைகளின்படி செய்ய விருப்பமாக இருக்கிறீர்கள்; அவன் ஆரம்ப முதற்கொண்டு மனித கொலைபாதகனாக இருக்கிறான்; சத்தியம் அவனிடத்தில் இல்லாததினால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் தகப்பனுமாக இருக்கிறதினால் அவன் பொய் பேசும்போது தன்னுடைய சுபாவத்தின்படி அப்படிப் பேசுகிறான். நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறதினால் நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை. என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தமுடியும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருந்தும், நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கவில்லை. தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாகாததினால் செவிகொடுக்காமல் இருக்கிறீர்கள் என்றார். அப்பொழுது யூதர்கள் அவருக்கு மறுமொழியாக: உன்னைச் சமாரியன் என்றும், பிசாசு பிடித்தவன் என்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள். அதற்கு இயேசு: நான் பிசாசு பிடித்தவன் இல்லை, நான் என் பிதாவை மதிக்கிறேன், நீங்கள் என்னை மதிக்காமலிருக்கிறீர்கள். நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி, நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார். ஒருவன் என் வார்த்தையைக் கடைபிடித்தால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைப் பார்ப்பதில்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீ பிசாசு பிடித்தவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன், என் வார்த்தையைக் கடைபிடித்தால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். எங்களுடைய பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ யார் என்று நினைக்கிறாய் என்றார்கள். இயேசு மறுமொழியாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்களுடைய தேவன் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். ஆனாலும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன்; அவரை அறியேன் என்று சொன்னால் உங்களைப்போல நானும் பொய்யனாக இருப்பேன்; அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கடைபிடிக்கிறேன். உங்களுடைய தகப்பனாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாக இருந்தான்; பார்த்து மகிழ்ந்தான் என்றார். அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைப் பார்த்தாயோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது அவர்மேல் எறியும்படி கற்களை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தைவிட்டுப்போனார்.
யோவான் 8:28-59 பரிசுத்த பைபிள் (TAERV)
எனவே இயேசு மக்களிடம், “நீங்கள் மனித குமாரனைக் கொல்லும்போது நான்தான் என்று அறிந்துகொள்வீர்கள். அத்துடன் நான் இதுவரை செய்த செயல்களை என் சொந்த அதிகாரத்தில் செய்யவில்லை என்பதையும் அறிவீர்கள். பிதா எனக்குச் சொன்னவற்றையே நான் உங்களுக்குச் சொன்னேன் என்பதையும் அறிந்துகொள்வீர்கள். என்னை அனுப்பிய ஒருவர் எப்போதும் என்னோடேயே இருக்கிறார். அவருக்கு விருப்பமானவற்றையே நான் எப்போதும் செய்துகொண்டிருக்கிறேன். எனவே, அவர் என்னைத் தனியாக விட்டுவிடவில்லை” என்றார். இவ்வாறு இயேசு சொல்லிக்கொண்டிருந்தபோது ஏராளமான மக்கள் அவரிடம் விசுவாசம் வைத்தனர். இயேசு தன்மீது நம்பிக்கை வைத்த யூதர்களைப் பார்த்து, “நீங்கள் என் உபதேசத்தைக் கைக்கொண்டு வந்தால், நீங்கள் உண்மையில் எனது சீஷர்களாக இருப்பீர்கள். பின்னர் நீங்கள் உண்மையை அறிந்துகொள்வீர்கள். அந்த உண்மை உங்களுக்கு விடுதலையைத் தரும்” என்றார். “நாங்கள் ஆபிரகாமின் மக்கள். நாங்கள் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. ஆகவே நாங்கள் விடுதலை பெறுவோம் என்று ஏன் சொல்கிறீர்?” என்று யூதர்கள் கேட்டனர். அதற்குப் பதிலாக, “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், பாவம் செய்கிற ஒவ்வொருவனும் அடிமைதான். பாவமே அவனது எஜமானன். ஓர் அடிமை எப்பொழுதும் ஒரு குடும்பத்தில் நிலையாக இருக்கமாட்டான். குமாரன் என்றென்றும் குடும்பத்தில் நிலைத்திருக்கிறார். எனவே குமாரன் உங்களை விடுதலை செய்தால் நீங்கள் உண்மையான விடுதலையைப் பெறுவீர்கள். நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று எனக்குத் தெரிகிறது. ஆனால் நீங்கள் என்னைக் கொல்ல விரும்புகிறீர்கள். ஏனென்றால் நீங்கள் என் உபதேசத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. என் பிதா எனக்குக் காட்டியவற்றையே நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனால் உங்கள் பிதா உங்களுக்குச் சொன்னபடியே செய்துகொண்டிருக்கிறீர்கள்” என்றார். “எங்கள் பிதா ஆபிரகாம்தான்” என்றனர் யூதர்கள். இயேசு அவர்களுக்கு விடையாக “நீங்கள் உண்மையிலேயே ஆபிரகாமின் பிள்ளைகள் என்றால் அவர் செய்தவற்றையே நீங்களும் செய்ய வேண்டும். நான் தேவனிடமிருந்து கேட்ட உண்மையை உங்களுக்குச் சொல்லுகிற மனிதன். ஆனால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இதுபோல் எதுவும் செய்யவில்லை. ஆகையால் நீங்கள் உங்கள் சொந்தப் பிதா செய்ததையே செய்கிறீர்கள்” என்றார். ஆனால் யூதர்கள், “எங்கள் பிதா யாரென்று தெரிந்துகொள்ள இயலாத குழந்தைகள் அல்ல நாங்கள். தேவனே எங்கள் பிதா. எங்களுக்குரிய ஒரே பிதாவும் அவரே” என்றனர். இயேசு அவர்களிடம், “தேவன்தான் உங்களது உண்மையான பிதா என்றால் நீங்கள் என்மீது அன்பு செலுத்தியிருப்பீர்கள். நான் தேவனிடமிருந்து வந்தேன். இப்பொழுது இங்கே இருக்கிறேன். நான் என் சொந்த அதிகாரத்தின் பேரில் வரவில்லை. தேவன் என்னை அனுப்பினார். நான் சொல்லுகிறவற்றையெல்லாம் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் என் உபதேசத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பிசாசே உங்கள் பிதாவாயிருக்கிறான். நீங்கள் அவனுக்கு உரியவர்கள். அவனுக்கு விருப்பமானவற்றையே நீங்கள் செய்யவிரும்புகிறீர்கள். தொடக்கம் முதலே பிசாசானவன் கொலைகாரனாக இருக்கிறான். அவன் உண்மைக்கு எதிரானவன். அவனிடம் உண்மை இல்லை. அவன் அவனால் சொல்லப்படுகிற பொய்யைப் போன்றவன். அவன் ஒரு பொய்யன். அவன் பொய்களின் பிதா. “நான் உண்மையைப் பேசுகிறேன். அதனால்தான் நீங்கள் என்னை நம்புவதில்லை. உங்களில் எவராவது ஒருவர் நான் பாவம் செய்தவன் என்று நிரூபிக்க இயலுமா? நான் சொல்வது உண்மையாக இருக்கும்போது என்னை ஏன் நம்பாமல் இருக்கிறீர்கள்? தேவனைச் சேர்ந்த எவனும் தேவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்கிறான். ஆனால் நீங்கள் தேவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால் நீங்கள் தேவனைச் சார்ந்தவர்கள் இல்லை” என்றார். யூதர்கள் இயேசுவிடம், “நாங்கள் உன்னை சமாரியன் என்று சொல்கிறோம். பிசாசு உன்னிடம் புகுந்ததால் நீ உளறுகிறாய் என்றும் சொல்கிறோம். நாங்கள் சொல்வது சரிதானே?” என்று கேட்டனர். “என்னிடம் எந்தப் பிசாசும் இல்லை. நான் என் பிதாவுக்கு மகிமை உண்டாக்குகிறேன். ஆனால் நீங்கள் எனக்கு மகிமையை அளிப்பதில்லை. நான் எனக்கு மகிமையைச் சேர்த்துக்கொள்ள முயன்று கொண்டிருக்கவில்லை. இந்த மகிமைக்குரியவர் ஒருவர் இருக்கிறார். அவரே நீதிபதி. நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். எவனொருவன் என் உபதேசத்துக்கு கீழ்ப்படிகிறானோ அவன் ஒருபோதும் இறந்துபோவதில்லை” என்றார் இயேசு. யூதர்களோ இயேசுவிடம், “உனக்குப் பிசாசு பிடித்திருக்கிறது என்பது இப்பொழுது உறுதியாயிற்று. ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும்கூட இறந்துபோய்விட்டார்கள். ஆனால் நீயோ, ‘என் உபதேசத்துக்குக் கீழ்ப்படிகிறவன் ஒருபோதும் இறந்துபோவதில்லை’ என்று கூறுகிறாய். எங்கள் பிதா ஆபிரகாமைவிடப் பெரியவன் என்று நீ உன்னை நினைத்துக்கொள்கிறாயா? ஆபிரகாம் இறந்துபோனார். தீர்க்கதரிசிகளும் இறந்துபோயினர். உன்னை நீ யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?” எனக் கேட்டனர். இயேசு அவர்களிடம், “எனக்கு நானே மகிமை அளித்துக்கொண்டால் அது வீணாகிவிடும். என் பிதா எனக்கு மகிமை அளித்துக்கொண்டிருக்கிறார். அவர் உங்கள் தேவன் என்று நீங்கள் சொல்லிக்கொள்கிறீர்கள். ஆனால் அவரை நீங்கள் உண்மையில் அறிந்து கொள்ளவில்லை. நான் அவரை அறிகிறேன். நான் அவரை அறியேன் என்று சொன்னால், நான் உங்களைப் போன்றே ஒரு பொய்யனாக இருப்பேன். ஆனால் அவரை நான் அறிவேன். அவர் சொன்னவற்றுக்குக் கீழ்ப்படிகிறேன். உங்கள் தந்தையாகிய ஆபிரகாம் நான் வந்த நாளைக் காண்பேன் என்று மகிழ்ச்சியடைந்தார். அவர் அந்த நாளைக் கண்டு மகிழ்ச்சியும் அடைந்தார்” என்றார். யூதர்கள் இயேசுவிடம், “என்ன சொன்னாய்? நீ ஒருபோதும் ஆபிரகாமைப் பார்த்திருக்க முடியாது. உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லையே!” என்று கேட்டனர். “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன்” என்றார் இயேசு. இயேசு இதைச் சொன்னதும் மக்கள் அவர் மீதுக் கல் எறிவதற்குக் கற்களைப் பொறுக்கினார்கள். ஆனால் இயேசு மறைந்து அந்த தேவாலயத்தை விட்டு விலகிப்போனார்.
யோவான் 8:28-59 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தினபின்பு, நானே அவரென்றும், நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள். என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை என்றார். இவைகளை அவர் சொல்லுகையில், அநேகர் அவரிடத்தில் விசுவாசம்வைத்தார்கள். இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை; விடுதலையாவீர்களென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரென்று அறிவேன்; ஆனாலும் உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம்பெறாதபடியால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள். நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே. தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே. நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்குண்டு, அவர் தேவன் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா? நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை. என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை. தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார். அப்பொழுது யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: உன்னைச் சமாரியனென்றும், பிசாசு பிடித்தவனென்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள். அதற்கு இயேசு: நான் பிசாசு பிடித்தவனல்ல, நான் என் பிதாவைக் கனம்பண்ணுகிறேன், நீங்கள் என்னைக் கனவீனம்பண்ணுகிறீர்கள். நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி, நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார். ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீ பிசாசுபிடித்தவனென்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள். ஆயினும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன்; அவரை அறியேன் என்று சொல்வேனாகில் உங்களைப்போல நானும் பொய்யனாயிருப்பேன்; அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டிருக்கிறேன். உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.