யோவான் 8:21-36
யோவான் 8:21-36 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மீண்டும் இயேசு அவர்களிடம், “நான் போகிறேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் பாவத்திலேயே சாவீர்கள். நான் போகிற இடத்திற்கு உங்களால் வரமுடியாது” என்றார். அப்பொழுது யூதர்கள், “இவன் தற்கொலை செய்துகொள்ள போகிறானா? அதனால்தான், ‘நான் போகிற இடத்திற்கு உங்களால் வரமுடியாது’ என்று சொல்கிறானோ!” என்று கேட்டார்கள். இயேசு தொடர்ந்து அவர்களிடம், “நீங்கள் கீழேயிருந்து வந்தவர்கள்; நான் மேலேயிருந்து வந்தவன். நீங்கள் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள்; நான் இந்த உலகத்தைச் சேர்ந்தவன் அல்ல. நீங்கள் உங்கள் பாவங்களிலேயே சாவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால், நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள்” என்றார். அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “நீர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு பதிலாக, “அதைத்தான் நான் தொடக்கத்திலிருந்தே உங்களுக்குச் சொல்கிறேனே” என்று இயேசு சொல்லி, “உங்களைப் பற்றிச் சொல்லவும், நியாயத்தீர்ப்பு அளிக்கவும் என்னிடம் அநேக காரியங்கள் இருக்கிறது. ஆனால் என்னை அனுப்பியவரிடமிருந்து கேட்டதை மட்டும் நான் உலகத்திற்கு அறிவிக்கிறேன். ஏனென்றால் என்னை அனுப்பியவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார்” என்றார். இயேசு பிதாவாகிய இறைவனைக் குறித்தே பேசுகிறார் என்று அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை. எனவே இயேசு அவர்களிடம், “நீங்கள் மானிடமகனாகிய என்னை உயர்த்திய பின்பு, நானே அவர் என்றும், எனது சுயமாக நான் ஒன்றும் செய்கிறதில்லையென்றும், பிதா எனக்கு போதித்தபடியே நான் இவற்றைச் சொல்கிறேன் என்றும் அறிந்துகொள்வீர்கள். என்னை அனுப்பிய பிதா என்னுடனே இருக்கிறார்; அவர் என்னைத் தனிமையாய் விட்டுவிடவில்லை. ஏனெனில் அவருக்குப் பிரியமானதையே நான் எப்பொழுதும் செய்கிறேன்” என்றார். அவர் இந்தக் காரியங்களைக் குறித்துச் சொன்னபோது, பலர் அவரில் விசுவாசம் வைத்தார்கள். இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களிடம், “நீங்கள் எனது உபதேசத்தில் தொடர்ந்து நிலைத்திருந்தால், நீங்கள் உண்மையாகவே எனது சீடர்களாய் இருப்பீர்கள். அப்பொழுது நீங்கள் சத்தியத்தை அறிந்துகொள்வீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்றார். அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம். நாங்கள் ஒருபோதும் ஒருவருக்கும் அடிமைகளாய் இருந்ததில்லை. அப்படியிருக்க நாங்கள் விடுதலையாவோம் என்று நீர் எப்படிச் சொல்லலாம்?” என்றார்கள். அதற்கு இயேசு பதிலாக, “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். பாவம் செய்கிற ஒவ்வொருவரும் பாவத்திற்கு அடிமையாய் இருக்கிறார்கள். ஒரு அடிமைக்குக் குடும்பத்தில் நிரந்தர இடம் இருப்பதில்லை. ஆனால் மகனோ குடும்பத்திற்கு என்றென்றும் சொந்தமானவனாயிருக்கிறான். ஆகவே இறைவனின் மகன் உங்களை விடுதலையாக்கினால், நீங்கள் உண்மையாகவே விடுதலை பெறுவீர்கள்.
யோவான் 8:21-36 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இயேசு மறுபடியும் அவர்களைப் பார்த்து: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்களுடைய பாவங்களிலே மரித்துப்போவீர்கள்; நான் போகிற இடத்திற்கு உங்களால் வர முடியாது என்றார். அப்பொழுது யூதர்கள்: நான் போகிற இடத்திற்கு உங்களால் வர முடியாது என்கிறானே, தன்னைத்தானே கொலைசெய்து கொள்ளுவானோ என்று பேசிக்கொண்டார்கள். அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் கீழேயிருந்து உண்டானவர்கள், நான் மேலேயிருந்து உண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்து உண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்து உண்டானவன் இல்லை. ஆகவே, நீங்கள் உங்களுடைய பாவங்களில் மரித்துப்போவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால் உங்களுடைய பாவங்களிலே மரித்துப்போவீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நான் ஆரம்ப முதலாக உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர் தான். உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்கள் இருக்கிறது; என்னை அனுப்பினவர் சத்தியமானவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளை உலகத்திற்குச் சொல்லுகிறேன் என்றார். பிதாவைக்குறித்துப் பேசினார் என்று அவர்கள் அறியாதிருந்தார்கள். ஆதலால் இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் மனிதகுமாரனை உயர்த்தினபின்பு, நானே அவர் என்றும், நான் என் சொந்தமாக ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள். என்னை அனுப்பினவர் என்னுடனே இருக்கிறார், பிதாவிற்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறதினால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார். இவைகளை அவர் சொன்னபோது, அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களைப் பார்த்து: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் உண்மையாகவே என் சீடராக இருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். அவர்கள் அவருக்கு மறுமொழியாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறோம், நாங்கள் ஒருபோதும் ஒருவனுக்கும் அடிமைகளாக இருக்கவில்லை; விடுதலையாவீர்கள் என்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: பாவம் செய்கிறவன் எவனும் பாவத்திற்கு அடிமையாக இருக்கிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். ஆகவே, குமாரன் உங்களை விடுதலை ஆக்கினால் உண்மையாகவே விடுதலை ஆவீர்கள்.
யோவான் 8:21-36 பரிசுத்த பைபிள் (TAERV)
மீண்டும் இயேசு மக்களிடம், “நான் உங்களை விட்டுப் போகிறேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நீங்கள் உங்கள் பாவங்களோடு சாவீர்கள். நான் போகிற இடத்துக்கு உங்களால் வரமுடியாது” என்றார். எனவே யூதர்கள் தங்களுக்குள், “இயேசு தன்னைத்தானே கொன்றுகொள்வாரா? அதனால்தான் நான் போகிற இடத்துக்கு உங்களால் வர முடியாது என்று கூறினாரா?” என்று கேட்டுக்கொண்டனர். அந்த யூதர்களைப் பார்த்து இயேசு, “நீங்கள் கீழே இருந்து வந்தவர்கள். ஆனால் நான் மேலே இருந்து வந்தவன். நீங்கள் இந்த உலகத்துக்கு உரியவர்கள். ஆனால் நான் இந்த உலகத்தைச் சார்ந்தவன் அல்லன். நீங்கள் உங்கள் பாவங்களிலேயே மரிப்பீர்கள் என்று நான் சொல்லியிருக்கிறேன். ஆம். நானே அவர் என்பதை நம்பாவிட்டால் உங்கள் பாவங்களோடேயே நீங்கள் மரணமடைவீர்கள்.” அதற்கு யூதர்கள், “நீங்கள் யார்?” என்று கேட்டார்கள். இயேசுவோ அவர்களிடம், “நான் ஆரம்பத்திலேயே உங்களுக்குச் சொல்லியவர்தான். உங்களைப்பற்றிச் சொல்ல என்னிடம் நிறைய செய்திகள் உள்ளன. நான் உங்களை நியாயம் தீர்க்கவும் முடியும். என்னை அனுப்பினவரிடமிருந்து கேட்டவற்றையே நான் மக்களுக்குச் சொல்கிறேன். அவர் உண்மையைப் பேசுகிறவர்” என்றார். இயேசு யாரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் என்று யூதர்கள் அறிந்துகொள்ள முடியாமல் இருந்தனர். இயேசு அவர்களிடம் பிதாவைப்பற்றி கூறிக்கொண்டிருந்தார். எனவே இயேசு மக்களிடம், “நீங்கள் மனித குமாரனைக் கொல்லும்போது நான்தான் என்று அறிந்துகொள்வீர்கள். அத்துடன் நான் இதுவரை செய்த செயல்களை என் சொந்த அதிகாரத்தில் செய்யவில்லை என்பதையும் அறிவீர்கள். பிதா எனக்குச் சொன்னவற்றையே நான் உங்களுக்குச் சொன்னேன் என்பதையும் அறிந்துகொள்வீர்கள். என்னை அனுப்பிய ஒருவர் எப்போதும் என்னோடேயே இருக்கிறார். அவருக்கு விருப்பமானவற்றையே நான் எப்போதும் செய்துகொண்டிருக்கிறேன். எனவே, அவர் என்னைத் தனியாக விட்டுவிடவில்லை” என்றார். இவ்வாறு இயேசு சொல்லிக்கொண்டிருந்தபோது ஏராளமான மக்கள் அவரிடம் விசுவாசம் வைத்தனர். இயேசு தன்மீது நம்பிக்கை வைத்த யூதர்களைப் பார்த்து, “நீங்கள் என் உபதேசத்தைக் கைக்கொண்டு வந்தால், நீங்கள் உண்மையில் எனது சீஷர்களாக இருப்பீர்கள். பின்னர் நீங்கள் உண்மையை அறிந்துகொள்வீர்கள். அந்த உண்மை உங்களுக்கு விடுதலையைத் தரும்” என்றார். “நாங்கள் ஆபிரகாமின் மக்கள். நாங்கள் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. ஆகவே நாங்கள் விடுதலை பெறுவோம் என்று ஏன் சொல்கிறீர்?” என்று யூதர்கள் கேட்டனர். அதற்குப் பதிலாக, “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், பாவம் செய்கிற ஒவ்வொருவனும் அடிமைதான். பாவமே அவனது எஜமானன். ஓர் அடிமை எப்பொழுதும் ஒரு குடும்பத்தில் நிலையாக இருக்கமாட்டான். குமாரன் என்றென்றும் குடும்பத்தில் நிலைத்திருக்கிறார். எனவே குமாரன் உங்களை விடுதலை செய்தால் நீங்கள் உண்மையான விடுதலையைப் பெறுவீர்கள்.
யோவான் 8:21-36 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்; நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்றார். அப்பொழுது யூதர்கள்: நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்கிறானே, தன்னைத்தான் கொலை செய்துகொள்ளுவானோ என்று பேசிக்கொண்டார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல. ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான். உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேகக் காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார். பிதாவைக்குறித்துப் பேசினாரென்று அவர்கள் அறியாதிருந்தார்கள். ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தினபின்பு, நானே அவரென்றும், நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள். என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை என்றார். இவைகளை அவர் சொல்லுகையில், அநேகர் அவரிடத்தில் விசுவாசம்வைத்தார்கள். இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை; விடுதலையாவீர்களென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.