யோவான் 7:40-52

யோவான் 7:40-52 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள். வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்? தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள். இவ்விதமாக அவரைக்குறித்து ஜனங்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று. அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க மனதாயிருந்தார்கள்; ஆகிலும் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை. பின்பு அந்தச் சேவகர் பிரதான ஆசாரியரிடத்திற்கும் பரிசேயரிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களை நோக்கி: நீங்கள் அவனை ஏன் கொண்டுவரவில்லை என்று கேட்டார்கள். சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள். அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா? அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா? வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள். இராத்திரியிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களிலொருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களை நோக்கி: ஒரு மனுஷன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான். அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள்.

யோவான் 7:40-52 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசுவினுடைய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களில் சிலர், “உண்மையிலேயே இவர் வர இருக்கிற இறைவாக்கினனே” என்றார்கள். வேறுசிலரோ, “இவரே கிறிஸ்து” என்றார்கள். ஆனால் இன்னும் சிலர், “கலிலேயாவிலிருந்து எப்படி கிறிஸ்து வருவார்? கிறிஸ்து தாவீதின் குடும்பத்திலிருந்தும், தாவீது வாழ்ந்த பெத்லகேம் பட்டணத்தில் இருந்து வருவார் என்று வேதவசனம் சொல்லுகிறது அல்லவா?” என்றார்கள். இயேசுவின் நிமித்தம் இவ்விதமாய் மக்கள் கருத்து வேறுபட்டார்கள். சிலர் அவரைக் கைதுசெய்ய விரும்பினார்கள். ஆனால் ஒருவரும் அவர்மேல் கைவைக்கவில்லை. பின்பு ஆலயக்காவலர், தலைமை ஆசாரியர்களிடமும் பரிசேயரிடமும் போனபோது, “நீங்கள் ஏன் அவனைப் பிடித்துக் கொண்டுவரவில்லை?” என்று கேட்டார்கள். காவலர் அதற்கு மறுமொழியாக, “இந்த மனிதன் பேசியதுபோல் ஒருவனும் ஒருக்காலும் பேசியதில்லையே” என்றார்கள். அப்பொழுது பரிசேயர் அவர்களிடம், “அவன் உங்களையும் ஏமாற்றி விட்டானா? ஆளுநர்களில், அல்லது பரிசேயரைச் சேர்ந்த எவராவது இயேசுவை விசுவாசிக்கிறார்களா? இல்லையே! ஆனால் இந்த மக்களோ மோசேயின் சட்டத்தை அறியாதவர்கள். இவர்கள்மேல் சாபம் உண்டு” என்றார்கள். முன்பு இயேசுவினிடம் போயிருந்தவனும், பரிசேயரைச் சேர்ந்தவனுமான நிக்கொதேமு அவர்களிடம், “ஒருவன் என்ன செய்கிறான் என்று அறியும்படி முதலாவது அவனை விசாரிக்காமல், அவனுக்கு நமது மோசேயின் சட்டம் தண்டனைத்தீர்ப்பு கொடுக்கிறதா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள் அவனிடம், “நீயும் கலிலேயாவைச் சேர்ந்தவனா? வேதவசனத்தை ஆராய்ந்து பார். அப்பொழுது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் வருவதில்லை என்பதைக் கண்டுகொள்வாய்” என்றார்கள்.

யோவான் 7:40-52 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மக்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: உண்மையாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள். வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்? தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள். இவ்விதமாக அவரைக்குறித்து மக்களுக்குள்ளே பிரிவினை உண்டானது. அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க விருப்பமாக இருந்தார்கள்; ஆனாலும் ஒருவனும் அவரைத் தொடவில்லை. பின்பு அந்தக் காவலர்கள் பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் பரிசேயர்களிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களைப் பார்த்து: நீங்கள் அவனை ஏன் அழைத்து வரவில்லை என்று கேட்டார்கள். காவலர்கள் மறுமொழியாக: அந்த மனிதன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருபோதும் பேசினது இல்லை என்றார்கள். அப்பொழுது பரிசேயர்கள்: நீங்களும் ஏமாற்றப்பட்டீர்களா? அதிகாரிகளிலாவது பரிசேயர்களிலாவது யாரேனும் ஒருவர் அவனை விசுவாசித்ததுண்டா? வேதத்தை அறியாதவர்களாகிய இந்த மக்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள். இரவிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களில் ஒருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களைப் பார்த்து: ஒரு மனிதன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனைத் தண்டனைக்கு உட்படுத்தலாம் என்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான். அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவில் இருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறது இல்லை என்பதை ஆராய்ந்து பாரும் என்றார்கள்.

யோவான் 7:40-52 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு சொன்ன இக்காரியங்களை மக்கள் கேட்டனர். சிலர், “இந்த மனிதர் உண்மையான தீர்க்கதரிசிதான்” என்றனர். வேறு சிலரோ, “இவர்தான் கிறிஸ்து” என்றனர். மற்றும் சிலரோ, “கிறிஸ்து கலிலேயாவிலிருந்து வரமாட்டார். வேதவாக்கியங்கள், தாவீதின் குடும்பத்திலிருந்து தான் கிறிஸ்து வரப்போகிறார் என்று கூறுகின்றன. அத்துடன் தாவீது வாழ்ந்த பெத்லகேமிலிருந்துதான் கிறிஸ்து வருவார் என்றும் கூறுகின்றன” என்றனர். எனவே, இயேசுவைப் பற்றிய கருத்துக்களில் ஒருவருக்கொருவர் ஒத்துக்கொள்ளவில்லை. சிலர் அவரைக் கைதுசெய்ய விரும்பினர். ஆனால் ஒருவரும் உண்மையில் அவர் மேல் கை வைக்கவில்லை. தேவாலயச் சேவகர்கள் தலைமை ஆசாரியர்களிடமும் பரிசேயர்களிடமும் திரும்பிப் போனார்கள். “ஏன் இயேசுவைக் கொண்டுவரவில்லை?” என்று அவர்கள் கேட்டனர். தேவாலயச் சேவகர்களோ, “எந்த ஒரு மனிதனும் அவரைப்போல் கருத்துக்களைக் கூறியதில்லை” என்றனர். இதற்குப் பரிசேயர்கள், “அப்படியானால் இயேசு உங்களையும் முட்டாளாக்கிவிட்டார். எந்தத் தலைவராவது இயேசுவின்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களா? இல்லை. எந்தப் பரிசேயராவது அவனை நம்புகிறார்களா? இல்லை. ஆனால் அவரை நம்புகிற மக்கள் மோசேயின் சட்டத்தைப்பற்றி ஒன்றும் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தேவனின் சாபத்திற்கு ஆளாவார்கள்” என்றார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தில் நிக்கொதேமுவும் இருந்தான். நிக்கொதேமுவும் இயேசுவைக் காண்பதற்காகப் போனவர்களில் ஒருவன். அவன், “ஒரு மனிதனைப் பற்றி முழுவதும் கேட்டறிவதற்கு முன்னால் தண்டிப்பதற்கு நம் சட்டம் இடம் கொடுப்பதில்லை. அவன் என்னென்ன செய்திருக்கிறான் என்பதைத் தெரிந்துகொள்ளும்வரை நாம் தீர்ப்பளிக்க முடியாது” என்றான். யூதத் தலைவர்கள் அவனிடம், “நீயும் கலிலேயாவிலிருந்துதான் வந்திருக்கிறாயா? வேதவாக்கியங்களைப் படித்துப் பார். கலிலேயாவிலிருந்து எந்தவொரு தீர்க்கதரிசியும் வர முடியாது என்று நீ அறிந்துகொள்வாய்” என்றனர்.