யோவான் 7:25-38

யோவான் 7:25-38 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர்: இவனையல்லவா கொலைசெய்யத் தேடுகிறார்கள்? இதோ, இவன் தாராளமாய்ப் பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, மெய்யாய் இவன் கிறிஸ்துதான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ? இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவனென்று நாம் அறிந்திருக்கிறோம், கிறிஸ்து வரும்போதோ, அவர் இன்ன இடத்திலிருந்து வருகிறவரென்று ஒருவனும் அறியமாட்டானே என்றார்கள். அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார். அப்பொழுது அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை. ஜனங்களில் அநேகர் அவரை விசுவாசித்து: கிறிஸ்து வரும்போது, இவர் செய்கிற அற்புதங்களைப்பார்க்கிலும் அதிகம் செய்வாரோ என்றார்கள். ஜனங்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயரும் பிரதான ஆசாரியரும் சேவகரை அனுப்பினார்கள். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: இன்னுங் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரவுங்கூடாது என்றார். அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் காணாதபடிக்கு எங்கே போவார், கிரேக்கருக்குள்ளே சிதறியிருக்கிறவர்களிடத்திற்குப் போய், கிரேக்கருக்கு உபதேசம்பண்ணுவாரோ? நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்னவென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

யோவான் 7:25-38 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது எருசலேமைச் சேர்ந்த மக்களில் சிலர், “இந்த மனிதனையல்லவா அவர்கள் கொலைசெய்ய முயற்சிக்கிறார்கள்? இதோ இங்கே இவர் வெளிப்படையாகப் பேசுகிறார். அவர்கள் இவரை எதிர்த்து ஒரு வார்த்தையும் சொல்லாதிருக்கிறார்கள். ஒருவேளை அதிகாரத்தில் உள்ளவர்கள் இவர்தான் கிறிஸ்து என்று உண்மையாகவே அறிந்துகொண்டார்களோ? ஆனால் இந்த மனிதன் எங்கிருந்து வந்திருக்கிறான் என்று நமக்குத் தெரியும்; ஆனால் கிறிஸ்து வரும்போது, அவர் எங்கிருந்து வருகிறார் என்று யாருக்கும் தெரியாதே” என்று பேசத் தொடங்கினார்கள். அப்பொழுது தொடர்ந்து ஆலய முற்றத்தில் போதித்துக்கொண்டிருந்த இயேசு, சத்தமாய் சொன்னதாவது, “ஆம்! நீங்கள் என்னை அறிவீர்கள். நான் எங்கே இருந்து வந்தேன் என்றும் உங்களுக்குத் தெரியும். நான் என் சுயவிருப்பத்தின்படி வரவில்லை. என்னை அனுப்பிய பிதா உண்மையுள்ளவர். நீங்களோ அவரை அறியவில்லை. நானோ பிதாவை அறிந்திருக்கிறேன். ஏனெனில் நான் அவரிடமிருந்து வந்திருக்கிறேன். அவரே என்னை அனுப்பினவர்” என்றார். அப்பொழுது அவர்கள் இயேசுவைக் கைதுசெய்ய முயன்றார்கள். ஆனால் ஒருவரும் அவர்மேல் கைவைக்கவில்லை. ஏனெனில் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை. ஆனால் கூடியிருந்த மக்களில் பலர் இயேசுவின்மேல் விசுவாசம் வைத்தார்கள். அவர்கள், “கிறிஸ்து வரும்போது, இவர் செய்ததைப் பார்க்கிலும் அதிகமான அடையாளங்களை அவர் செய்வாரோ?” என்றார்கள். கூடியிருந்த மக்கள் இயேசுவைக்குறித்து இப்படிப்பட்ட காரியங்களை தங்களுக்குள் மெதுவாய் பேசிக்கொண்டதை பரிசேயர் கேட்டார்கள். எனவே தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் இயேசுவைக் கைதுசெய்யும்படி, ஆலயக்காவலரை அனுப்பினார்கள். அப்பொழுது இயேசு, “இன்னும் சிறிது காலமே நான் உங்களுடன் இருப்பேன். பின்பு என்னை அனுப்பிய பிதாவிடம் நான் போய்விடுவேன். நீங்களோ என்னைத் தேடுவீர்கள். ஆனால் என்னைக் காணமாட்டீர்கள். நான் இருக்கும் இடத்திற்கும் உங்களால் வரமுடியாது” என்றார். அப்பொழுது யூதத்தலைவர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “நாம் கண்டுபிடிக்க முடியாதபடி, இவன் எங்குபோக இருக்கிறான்? “கிரேக்கருக்குள்ளே சிதறடிக்கப்பட்டிருக்கின்ற நம் மக்களிடம்போய், அங்கே கிரேக்கருக்குக் போதிக்க போகிறானா? ‘நீங்களோ என்னைத் தேடுவீர்கள், ஆனால் என்னைக் காணமாட்டீர்கள், நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரமுடியாது’ என்று சொல்லுகிறானே. இதன் அர்த்தம் என்ன?” என்று பேசிக்கொண்டார்கள். பண்டிகையின் கடைசி நாளான அந்தப் பெரிய நாளிலே, இயேசு எழுந்து நின்று சத்தமாய்ச் சொன்னதாவது: “யாராவது தாகமுள்ளவராய் இருந்தால், அவர்கள் என்னிடம் வந்து பானம்பண்ணட்டும். வேதவசனத்தில் சொல்லியிருக்கிறபடி, என்னை விசுவாசிக்கிறவர்களுடைய உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீர் நதியாய் பெருக்கெடுத்து ஓடும்” என்றார்.

யோவான் 7:25-38 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர்: இவனைத்தானே கொலைசெய்யத் தேடுகிறார்கள்? இதோ, இவன் வெளிப்படையாக பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, உண்மையாக இவன் கிறிஸ்து தான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ? இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவன் என்று நாம் அறிந்திருக்கிறோம், கிறிஸ்து வரும்போதோ, அவர் இன்ன இடத்திலிருந்து வருகிறவர் என்று ஒருவனும் அறியமாட்டானே என்றார்கள். அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கும்போது சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கே இருந்து வந்தேன் என்றும் அறிவீர்கள்; நான் நானாகவே வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியம் உள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் அவரால் வந்திருக்கிறதினாலும், அவர் என்னை அனுப்பி இருக்கிறதினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார். அப்பொழுது அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் அவருடைய நேரம் இன்னும் வராததினால் ஒருவனும் அவரைத் தொடவில்லை. மக்களில் அநேகர் அவரை விசுவாசித்து: கிறிஸ்து வரும்போது, இவர் செய்கிற அற்புதங்களைவிட அதிகமாகச் செய்வாரோ என்றார்கள். மக்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர்கள் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயர்களும் பிரதான ஆசாரியர்களும் காவலர்களை அனுப்பினார்கள். அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களோடுகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவர் இடத்திற்குப் போகிறேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைப் பார்க்கமாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரவும் கூடாது என்றார். அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் பார்க்காதபடிக்கு எங்கே போவார், கிரேக்கர்களுக்குள்ளே சிதறியிருக்கிற நமது மக்களிடம் போய், கிரேக்கர்களுக்கு உபதேசம் செய்வாரோ? நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைப் பார்க்கமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரக்கூடாது என்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்ன என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். பண்டிகையின் கடைசிநாளாகிய முக்கியமான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாக இருந்தால் என்னிடத்தில் வந்து பானம்பண்ணட்டும். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

யோவான் 7:25-38 பரிசுத்த பைபிள் (TAERV)

எருசலேமில் உள்ள மக்களில் சிலர் “அவர்கள் கொலை செய்ய முயல்கிற மனிதர் இவர்தான். ஆனால் இவரோ எல்லோரும் காணும்படியும் கேட்கும்படியும் உபதேசம் செய்துகொண்டிருக்கிறார். ஒருவரும் அவர் உபதேசிப்பதை நிறுத்திவிட முயற்சி செய்யவில்லை. ஒருவேளை, யூதத் தலைவர்கள் இவர்தான் உண்மையான கிறிஸ்து என்று முடிவு செய்துவிட்டார்கள் போலும். ஆனால் இந்த மனிதர் எங்கிருந்து வருகிறாரென்று நாம் அறிவோம். ஆனால் உண்மையான கிறிஸ்து வரும்போது அவர் எங்கிருந்து வந்தார் என்பது எவருக்கும் தெரியாமல் இருக்கும்” என்றனர். இயேசு தேவாலயத்தில் தொடர்ந்து உபதேசம் செய்துகொண்டிருந்தார். “ஆம், நான் யார் என்பதையும் எங்கிருந்து வந்தேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆனால் நான் என் சொந்த அதிகாரத்தின் பேரில் வரவில்லை. உண்மையான ஒருவரால் நான் அனுப்பப்பட்டேன். நீங்கள் அவரை அறியமாட்டீர்கள். ஆனால் அவரை நான் அறிவேன். நான் அவரிடமிருந்தே வந்தேன். அவர் என்னை அனுப்பினார்” என்றார் இயேசு. இயேசு இவ்வாறு சொன்னபிறகு மக்கள் அவரைப் பிடிக்க முயன்றார்கள். ஆனால் ஒருவராலும் இயேசுவைத் தொடமுடியவில்லை. இயேசு கொல்லப்படுவதற்கான சரியான நேரம் இன்னும் வரவில்லை. ஆனால் ஏராளமான மக்கள் இயேசுவிடம் நம்பிக்கை வைத்தார்கள். “நாங்கள் கிறிஸ்துவின் வருகைக்காகக் காத்திருக்கிறோம். கிறிஸ்து வந்தால், அவர் இந்த மனிதரைவிட அதிகமான அற்புதங்களைச் செய்வாரோ? இல்லை. எனவே, இந்த மனிதரே கிறிஸ்துவாக இருக்க வேண்டும்” என்றனர். இயேசுவைப்பற்றி மக்கள் பேசிக்கொள்வதைப் பரிசேயர்கள் அறிந்தனர். தலைமை ஆசாரியரும், பரிசேயரும் தேவாலயச் சேவகர்களை இயேசுவைக் கைதுசெய்ய அனுப்பினர். இயேசு மக்களிடம், “இன்னும் கொஞ்சக் காலம் நான் உங்களோடு இருப்பேன். பிறகு நான் என்னை அனுப்பியவரிடம் திரும்பிப்போவேன். அப்போது என்னை நீங்கள் தேடுவீர்கள். ஆனால் உங்களால் கண்டுபிடிக்க முடியாது. நான் இருக்கும் இடத்துக்கும் உங்களால் வர முடியாது” என்றார். “நாம் கண்டுபிடிக்க முடியாதபடி இவன் எந்த இடத்திற்குப் போகப்போகிறான்? இவன் நமது மக்கள் வாழ்கிற கிரேக்க நகரங்களுக்குப் போகப் போகிறானா? அல்லது அங்கேயுள்ள கிரேக்க மக்களுக்கு உபதேசிக்கப் போகிறானா? ‘நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனால் உங்களால் என்னைக் கண்டுபிடிக்க முடியாது’ என்று கூறுகிறானே. ‘நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரமுடியாது’ என்றும் கூறுகிறானே, அதற்கு என்ன பொருள்?” என்று யூதர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். பண்டிகையின் இறுதி நாளும் வந்தது. இது மிக முக்கியமான நாள். அன்று இயேசு எழுந்து நின்று உரத்த குரலில் பேசினார். “ஒருவன் தாகமாய் இருந்தால் அவன் என்னிடம் வந்து பருகட்டும். என்னில் நம்பிக்கை வைக்கிறவனுடைய இதயத்தில் இருந்து ஜீவத் தண்ணீருள்ள ஆறுகள் பெருக்கெடுக்கும், இதைத்தான் வேத வாக்கியங்கள் கூறுகின்றன” என்றார்.