யோவான் 7:1-9
யோவான் 7:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இவைகளுக்குப்பின், இயேசுவைக் கொலைசெய்வதற்கு யூதத்தலைவர்கள் வழி தேடிக்கொண்டிருந்ததால், அவர் யூதேயாவுக்குப் போக விரும்பாமல் கலிலேயாவிலேயே வெவ்வேறு இடங்களுக்குச் சென்றார். ஆனால் யூதரின் கூடாரப்பண்டிகைச் சமீபித்தபோது, இயேசுவின் சகோதரர் அவரிடம், “நீர் இவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு யூதேயாவுக்குச் செல்லும். அப்பொழுதே நீர் செய்யும் கிரியைகளை உமது சீடர்கள் காண்பார்கள். பிரபலமடைய விரும்புகிற எவனும் இரகசியமாக செயல்படுவதில்லை. நீர் இந்தக் காரியங்களைச் செய்கிறதினால், உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தலாமே” என்றார்கள். ஏனெனில் இயேசுவின் சொந்தச் சகோதரர்கள்கூட அவரை விசுவாசிக்கவில்லை. எனவே இயேசு அவர்களிடம், “எனது நேரம் இன்னும் வரவில்லை; ஆனால் உங்களுக்கோ எந்த நேரமும் சரியானதே. உலகம் உங்களை வெறுக்க முடியாது. உலகத்தின் செயல்கள் தீமையென்று நான் சாட்சிக் கொடுக்கிறதினால் உலகம் என்னை வெறுக்கிறது. இந்தப் பண்டிகைக்கு நீங்கள் போங்கள். நானோ இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை. ஏனெனில் எனக்கேற்ற நேரம் இன்னும் வரவில்லை” என்றார். இதைச் சொல்லிவிட்டு, இயேசு கலிலேயாவிலேயே தங்கியிருந்தார்.
யோவான் 7:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இவைகளுக்குப் பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினதால், அவர் யூதேயாவிலே வசிப்பதற்கு விருப்பம் இல்லாமல் கலிலேயாவிலே வசித்து வந்தார். யூதர்களுடைய கூடாரப்பண்டிகை நெருங்கியிருந்தது. அப்பொழுது அவருடைய சகோதரர்கள் அவரைப் பார்த்து: நீர் செய்கிற செயல்களை உம்முடைய சீடர்களும் பார்க்கும்படி, இந்த இடத்தைவிட்டு யூதேயாவிற்கு செல்லும். பிரபலமாக இருக்கவிரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்வதால் உலகத்திற்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். அவருடைய சகோதரர்களும் அவரை விசுவாசிக்காததினால் இப்படிச் சொன்னார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: என் நேரம் இன்னும் வரவில்லை, உங்களுடைய நேரமோ எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கிறது. உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் செயல்கள் பொல்லாதவைகளாக இருக்கிறது என்று நான் சாட்சி கொடுக்கிறதினாலே அது என்னைப் பகைக்கிறது. நீங்கள் இந்த பண்டிகைக்குப் போங்கள்; என் நேரம் இன்னும் வராததினால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார். இவைகளை அவர்களிடம் சொல்லி, கலிலேயாவிலே தங்கிவிட்டார்.
யோவான் 7:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)
இதற்குப் பிறகு இயேசு கலிலேயாவைச் சுற்றிப் பிரயாணம் செய்தார். அவர் யூதேயா நாட்டில் பிரயாணம் செய்ய விரும்பவில்லை. ஏனென்றால் அங்குள்ள யூதர்கள் அவரைக் கொலை செய்ய விரும்பினர். அப்பொழுது யூதர்களின் கூடாரப் பண்டிகை நெருங்கிக்கொண்டிருந்தது. ஆகையால் இயேசுவின் சகோதரர்கள் அவரிடம், “நீங்கள் இந்த இடத்தை விட்டு பண்டிகைக்காக யூதேயாவிற்கு போங்கள். அங்கே உமது சீஷர்கள் உம்முடைய அற்புதங்களைக் காண்பார்கள். மக்கள் தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஒருவன் விரும்பினால் அவன், தான் செய்கிற காரியங்களை மறைக்கக் கூடாது. உங்களை உலகத்துக்கு வெளிப்படுத்துங்கள். அவர்களும் நீங்கள் செய்யும் அற்புதங்களைக் கண்டுகொள்ளட்டும்” என்றார்கள். (இயேசுவின் சகோதரர்கூட அவரிடம் நம்பிக்கை இல்லாமலேயே இருந்தார்கள்.) இயேசு தனது சகோதரர்களிடம், “எனக்கான சரியான நேரம் இன்னும் வரவில்லை. ஆனால் நீங்கள் போவதற்கு எந்த நேரமும் சரியான நேரம்தான். இந்த உலகம் உங்களை வெறுப்பதில்லை. ஆனால் உலகம் என்னை வெறுக்கிறது. ஏனென்றால் நான் அவர்களிடம் அவர்கள் தீமை செய்கிறார்கள் என்று சொல்கிறேன். ஆகையால் நீங்கள் பண்டிகைக்குப் போங்கள். நான் இப்பொழுது பண்டிகைக்குப் போவதாக இல்லை. எனக்கான சரியான நேரம் இன்னும் வரவில்லை” என்றார். இயேசு இவற்றைச் சொன்ன பிறகு கலிலேயாவிலேயே தங்கிவிட்டார்.
யோவான் 7:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இவைகளுக்குப்பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்கமனதில்லாமல் கலிலேயாவிலே சஞ்சரித்து வந்தார். யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது. அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப்போம். பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள். இயேசு அவர்களை நோக்கி: என் வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது. உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது. நீங்கள் இந்தப் பண்டிகைக்குப் போங்கள்; என் வேளை இன்னும் வராதபடியால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார். இவைகளை அவர்களுடனே சொல்லி, பின்னுங் கலிலேயாவிலே தங்கினார்.