யோவான் 6:60-71
யோவான் 6:60-71 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இதைக் கேட்ட இயேசுவினுடைய சீடர்களில் பலர், “இது ஒரு கடுமையான போதனை. யாரால் இதை ஏற்றுக்கொள்ள முடியும்?” என்றார்கள். தமது சீடர்கள் இதைக்குறித்து முறுமுறுக்கிறார்கள் என்று இயேசு அறிந்து அவர்களிடம், “இது உங்கள் மனதுக்கு கஷ்டமாய் இருக்கிறதா? மானிடமகனாகிய நான் முன்பிருந்த இடத்திற்கு மேலெழுந்து போவதை நீங்கள் கண்டீர்களானால், அது உங்களுக்கு எப்படியிருக்கும்! பரிசுத்த ஆவியானவரே ஜீவனைக் கொடுக்கிறார்; மாம்சமானதோ ஒன்றுக்கும் உதவாது. நான் உங்களுடன் பேசிய வார்த்தைகள் ஆவியானவரையும் ஜீவனையும் கொண்டுள்ளன. ஆனால் உங்களில் சிலர் விசுவாசியாமல் இருக்கிறீர்கள்” என்றார். ஏனெனில் இயேசு தொடக்கத்திலிருந்தே அவர்களில் யார் தம்மை விசுவாசிக்கவில்லை என்றும், யார் தம்மைக் காட்டிக்கொடுப்பான் என்றும் அறிந்திருந்தார். மேலும் இயேசு சொன்னதாவது, “யாரையாவது என் பிதா எனக்கு கொடுத்தால் மட்டுமே, அவர் என்னிடம் வரமுடியும் என்று இதனாலேயே நான் உங்களுக்குச் சொன்னேன்” என்றார். அப்பொழுதிலிருந்து இயேசுவின் சீடர்களில் பலர் அவரைவிட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள். தொடர்ந்து அவர்கள் அவரைப் பின்பற்றவில்லை. அப்பொழுது இயேசு பன்னிரண்டு பேரிடமும், “நீங்களும் போய்விட விரும்புகிறீர்களா?” என்று கேட்டார். சீமோன் பேதுரு அதற்குப் பதிலாக, “ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம் அல்லவா உண்டு. நீர் இறைவனின் பரிசுத்தர் என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்” என்றான். அப்பொழுது இயேசு, “பன்னிரண்டு பேராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? ஆனால் உங்களில் ஒருவன் பிசாசாக இருக்கிறான்!” என்றார். இயேசு சீமோன் ஸ்காரியோத்தின் மகனான யூதாஸைக் குறித்தே இவ்விதம் சொன்னார். அவன் பன்னிரண்டு பேரில் ஒருவனாயிருந்தும் அவரைக் காட்டிக்கொடுக்கிறவனாய் இருந்தான்.
யோவான் 6:60-71 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவருடைய சீடர்களில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்றார்கள். சீடர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்கள் என்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களைப் பார்த்து: இது உங்களுக்கு இடறலாக இருக்கிறதோ? மனிதகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் பார்ப்பீர்களானால் எப்படி இருக்கும்? ஆவியே உயிர்ப்பிக்கிறது, சரீரமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாகவும், ஜீவனாகவும் இருக்கிறது. ஆனாலும் உங்களில் விசுவாசிக்காதவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்றார்; விசுவாசிக்காதவர்கள் இவர்கள் என்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இவன்தான் என்றும் ஆரம்பமுதல் இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்: ஒருவன் என் பிதாவின் அனுமதி பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதற்காகவே உங்களுக்குச் சொன்னேன் என்றார். அதுமுதல் அவருடைய சீடர்களில் அநேகர் அவருடனேகூட நடக்காமல் பின்வாங்கிப்போனார்கள். அப்பொழுது இயேசு பன்னிரண்டுபேரையும் பார்த்து: நீங்களும் போய்விட விருப்பமாக இருக்கிறீர்களோ என்றார். சீமோன்பேதுரு அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறது. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். இயேசு அவர்களைப் பார்த்து: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாக இருக்கிறான் என்றார். சீமோனின் மகனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரில் ஒருவனாக இருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனாக இருந்தபடியினால் அவனைக்குறித்து இப்படிச் சொன்னார்.
யோவான் 6:60-71 பரிசுத்த பைபிள் (TAERV)
இயேசுவின் சீஷர்கள் இவற்றைக் கேட்டார்கள். “இந்த உபதேசங்கள் ஏற்றுக்கொள்வதற்குக் கடினமானவை, இவற்றை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும்?” என சீஷர்கள் கூறினர். அவருடைய சீஷர்கள் முறுமுறுப்பதை இயேசு அறிந்துகொண்டார். எனவே இயேசு அவர்களிடம், “நான் சொன்னவற்றை ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கிறதா?” என்று கேட்டார். “அப்படியானால் மனித குமாரன் தாம் வந்த இடத்திற்கே திரும்பி ஏறிப்போவதைக் காண்பது எப்படியிருக்கும்? ஒரு மனிதனுக்கு அவனது சரீரம் மட்டுமே வாழ்வு அளிப்பது இல்லை. அவனது ஆவியே ஜீவனைத் தருகிறது. நான் உங்களுக்குச் சொன்ன வசனங்கள் யாவும் ஆவியே. இவையே ஜீவனைத் தருவன. ஆனால் உங்களில் சிலர் விசுவாசம் இல்லாமல் இருக்கிறீர்கள்” என்றார். (தன்னை விசுவாசிக்காதவர்களை இயேசு புரிந்துகொண்டார். இதனை அவர் துவக்கம் முதலே புரிந்துகொண்டார். தனக்கு எதிராகத் திரும்புகிறவனையும் இயேசு அறிந்திருந்தார்.) அதனால்தான், “நான், ‘பிதா அனுமதித்தால் ஒழிய ஒருவனும் என்னிடம் வரமாட்டான்’ என்று சொன்னேன்” என்றார் இயேசு. இயேசு இவ்வாறு சொன்னபிறகு அவரது சீஷர்களில் அநேகர் அவரை விட்டுப் போயினர். அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து செல்வதை நிறுத்தினர். பிறகு இயேசு தனது பன்னிரண்டு அப்போஸ்தலர்களையும் பார்த்து, “நீங்களும் விட்டுவிட்டு விலகிச் செல்ல விரும்புகிறீர்களா?” என்று கேட்டார். சீமோன் பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாங்கள் எங்கே போவோம்? நித்திய ஜீவனுக்குரிய வார்த்தைகளை நீரே வைத்திருக்கிறீர். நாங்கள் உம்மை நம்புகிறோம். நீரே தேவனிடமிருந்து வந்த பரிசுத்தமானவர் என்பதை நாங்கள் அறிவோம்” என்றார். பிறகு இயேசு அவர்களிடம், “என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிருவர் நீங்கள். ஆனால் உங்களில் ஒருவன் பிசாசு” என்றார். இயேசு யூதாஸைப்பற்றியே இவ்வாறு கூறினார். அவன் சீமோன் ஸ்காரியோத்தின் குமாரன். பன்னிருவரில் ஒருவன். ஆனால் பிற்காலத்தில் யூதாஸ் இயேசுவிற்கு எதிராகத் திரும்பிவிட்டான்.
யோவான் 6:60-71 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள். சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ? மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்? ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார்; விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்: ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார். அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள். அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார். சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரிலொருவனாயிருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனாயிருந்தபடியினால் அவனைக் குறித்து இப்படிச் சொன்னார்.