யோவான் 6:5-11

யோவான் 6:5-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு நிமிர்ந்து பார்த்தபோது, மக்கள் பெருங்கூட்டமாகத் தம்மிடம் வருவதைக் கண்டார். அவர் பிலிப்புவிடம், “இந்த மக்கள் சாப்பிடும்படி உணவை நாம் எங்கே வாங்கலாம்?” என்று கேட்டார். அவனைச் சோதித்துப் பார்ப்பதற்காகவே இயேசு அதைக் கேட்டார். ஏனெனில் தாம் என்ன செய்யப்போகிறார் என்று அவர் ஏற்கெனவே தீர்மானித்திருந்தார். பிலிப்பு இயேசுவுக்கு மறுமொழியாக, “ஒவ்வொருவருக்கும் ஒரு கைப்பிடி அளவு உணவு கொடுத்தால்கூட, இவர்களுக்காக உணவு வாங்க, ஆறுமாதச் சம்பளம் போதாதே!” என்றான். அவருடைய சீடர்களில் இன்னொருவனான சீமோன் பேதுருவின் சகோதரன் அந்திரேயா அவரிடம், “இங்கே ஒரு சிறுவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும், இரண்டு சிறு மீன்களும் இருக்கின்றன. ஆனால் இவ்வளவு பெரும் கூட்டமான மக்களுக்கு அது எப்படிப் போதும்?” என்றான். அதற்கு இயேசுவோ, “மக்களை உட்காரச் செய்யுங்கள்” என்றார். அந்த இடமோ புல் நிறைந்த தரையாய் இருந்தது. எனவே மக்கள் உட்கார்ந்தார்கள். அவர்களில் ஆண்கள் மட்டும் ஏறக்குறைய ஐயாயிரம் பேராயிருந்தார்கள். அப்பொழுது இயேசு அந்த அப்பங்களை எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தியபின் அங்கு உட்கார்ந்திருப்பவர்களுக்கு வேண்டியமட்டும் பகிர்ந்து கொடுத்தார். மீன்களையும் அவ்விதமாகவே கொடுத்தார்.

யோவான் 6:5-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, அநேக மக்கள் தம்மிடத்தில் வருகிறதைப் பார்த்து, பிலிப்புவினிடம்: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே வாங்கலாம் என்று கேட்டார். தாம் செய்ய போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார். பிலிப்பு அவருக்கு மறுமொழியாக: இவர்களில் ஒவ்வொருவரும் கொஞ்சம், எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்திற்கு வாங்கும் அப்பங்களும் இவர்களுக்குப் போதுமானதாக இருக்காதே என்றான். அப்பொழுது அவருடைய சீடர்களில் ஒருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரைப் பார்த்து: இங்கே ஒரு சிறுவன் இருக்கிறான், அவனுடைய கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் இருக்கின்றது, ஆனாலும் அவைகள் இவ்வளவு மக்களுக்கு எப்படிப் போதும் என்றான். இயேசு: மக்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாக இருந்தது. பந்தியிருந்த ஆண்கள் ஏறக்குறைய ஐந்தாயிரம் பேர் இருந்தார்கள். இயேசு அந்த அப்பங்களை எடுத்து, நன்றிசெலுத்தி, சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் பந்தி இருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்குத் தேவையானஅளவு கொடுத்தார்.

யோவான் 6:5-11 பரிசுத்த பைபிள் (TAERV)

ஏராளமான மக்கள் அவரை நோக்கி வருவதை இயேசு கண்களை ஏறெடுத்து நோக்கினார். பிலிப்புவிடம் இயேசு, “இவர்களெல்லாம் உண்பதற்கு நாம் அப்பத்தை எங்கே வாங்குவது?” என்று கேட்டார். (பிலிப்புவை சோதனை செய்வதற்காகவே இயேசு அவனிடம் இவ்வாறு கேட்டார். தனது திட்டத்தை இயேசு ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்தார்.) பிலிப்பு, “இவர்களில் ஒவ்வொருவரும் கொஞ்சம், கொஞ்சம் அப்பம் உண்பதற்குக்கூட, நாம் அனைவரும் ஒரு மாதத்திற்கு மேல் வேலை செய்ய வேண்டியதிருக்குமே” என்றான். அந்திரேயா அவரது இன்னொரு சீஷன். அவன் சீமோன் பேதுருவின் சகோதரன். அந்திரேயா இயேசுவிடம், “இங்கே ஒரு சிறுவன் வாற்கோதுமையால் ஆன ஐந்து அப்பத் துண்டுகளையும், இரண்டு சிறு மீன்களையும் வைத்திருக்கிறான். ஆனால் அவை இவ்வளவு மிகுதியான மக்களுக்குப் போதுமானதல்ல” என்றான். “மக்களை உட்காரும்படிக் கூறுங்கள்” என்றார் இயேசு. அந்த இடத்தில் நிறைய புல் இருந்தது. அங்கே ஐயாயிரம் எண்ணிக்கை வரையுள்ள ஆண்கள் உட்கார்ந்தனர். பிறகு இயேசு அப்பத் துண்டுகளை எடுத்தார். அவர் தேவனுக்கு நன்றி சொன்னார். அதை அங்கு அமர்ந்திருந்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்கச் செய்தார். அவர் மீனையும் அதைப்போலவே பகிர்ந்தளிக்கச் செய்தார். இயேசு அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு வேண்டியமட்டும் கொடுத்தார்.

யோவான் 6:5-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார். தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார். பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக: இவர்களில் ஒவ்வொருவன் கொஞ்சங்கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான். அப்பொழுது அவருடைய சீஷரிலொருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரை நோக்கி: இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான். இயேசு: ஜனங்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள். இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் பந்தியிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்கு வேண்டியமட்டும் கொடுத்தார்.