யோவான் 5:6-30

யோவான் 5:6-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு அவனைக் கண்டு, அங்கே அவன் அநேக காலமாக இந்நிலையில் கிடப்பதை அறிந்துகொண்டார். அவர் அவனிடம், “நீ சுகமடைய விரும்புகிறாயா?” என்று கேட்டார். அதற்கு அந்த நோயுற்ற மனிதன், “ஐயா, தண்ணீர் கலக்கப்படும்போது, நான் குளத்தில் இறங்குவதற்கு எனக்கு உதவிசெய்ய ஒருவரும் இல்லை. நான் இறங்குவதற்கு முயற்சி செய்கையில், வேறொருவன் எனக்கு முன்பாகவே இறங்கி விடுகிறான்” என்றான். அப்பொழுது இயேசு அவனிடம், “எழுந்திரு! உன் படுக்கையை தூக்கிக்கொண்டு நட” என்றார். உடனே அவன் குணமடைந்தான்; மேலும் தன் படுக்கையையும் எடுத்துக்கொண்டு நடந்துபோனான். இது நிகழ்ந்த நாள் யூதருடைய ஒரு ஓய்வுநாளாயிருந்தது. எனவே யூதத்தலைவர்கள், குணமடைந்த அவனிடம், “இது ஓய்வுநாள்; நீ உனது படுக்கையை எடுத்துக்கொண்டு போவதை மோசேயின் சட்டம் தடைசெய்கிறது” என்றார்கள். அவன் அதற்கு, “என்னைக் குணமாக்கியவர், ‘உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று எனக்குச் சொன்னார்” என்றான். எனவே அவர்கள் அவனிடம், “உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று உனக்குச் சொன்னது யார்?” என்று கேட்டார்கள். சுகமடைந்தவனுக்கோ, தன்னை குணமாக்கினவர் யார் என்று தெரியாதிருந்தது. ஏனெனில் இயேசு அங்கு கூடியிருந்த மக்களிடையே போய் மறைந்துவிட்டார். பின்பு இயேசு அவனை ஆலயத்தில் கண்டு அவனிடம், “பார், நீ சுகமடைந்திருக்கிறாயே. இனிமேல் பாவம் செய்யாதே. செய்தால் இதைவிட மோசமானது ஏதாவது உனக்கு நேரிடலாம்” என்றார். அவன் பிறகு புறப்பட்டுப்போய் தன்னை குணமாக்கியது இயேசுவே என்று யூதருக்குச் சொன்னான். இந்தக் காரியங்களை இயேசு ஓய்வுநாளிலே செய்தபடியால், யூதர் இயேசுவைத் துன்புறுத்தினார்கள். இயேசு அவர்களிடம், “இன்றுவரை என் பிதா ஓய்வில்லாமல் தன் வேலைகளைச் செய்கிறார்; நானும் வேலைசெய்கிறேன்” என்றார். இயேசு ஓய்வுநாளின் முறைமையை மீறியது மட்டுமல்லாமல், இறைவனைத் தன்னுடைய சொந்தத் தந்தை என்றும் சொல்லி தன்னை இறைவனுக்குச் சமமாக்கினார் என்பதால், யூதர் அவரைக் கொலைசெய்ய இன்னும் அதிகமாய் முயற்சிசெய்தார்கள். இயேசு அவர்களுக்கு சொன்னது: “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், எவைகளையெல்லாம் பிதாவானர் செய்கிறதை மகன் காண்கிறாரோ, அவைகளையே அன்றி தாமாக வேறொன்றையும் செய்யமாட்டார்; பிதா எவைகளை செய்கிறாரோ அவைகளையே மகனும் செய்கிறார். ஏனெனில் பிதா மகனில் அன்பாயிருந்து, தாம் செய்வதையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார். ஆம், நீங்கள் வியப்படையும்படி பிதா இவற்றை விடவும் பெரிதான செயல்களைக் காண்பிப்பார். பிதா மரித்தவர்களை உயிருடன் எழுப்பி, அவர்களுக்கு ஜீவன் கொடுப்பது போலவே, மகனும் தமக்கு விருப்பமுள்ளவர்களுக்கு ஜீவனைக் கொடுக்கிறார். மேலும், பிதா ஒருவரையும் நியாயந்தீர்ப்பதில்லை. நியாயத்தீர்ப்பை கொடுக்கும் வேலை முழுவதையும் மகனிடமே ஒப்படைத்திருக்கிறார். எல்லா மனிதரும் பிதாவைக் கனம் பண்ணுவதுபோல, மகனையும் கனம்பண்ணும்படி இப்படிச் செய்தார். மகனுக்கு கனம் கொடாத எவனும், அவரை அனுப்பிய பிதாவுக்கும் கனம் கொடாதிருக்கிறான். “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னுடைய வார்த்தையைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவர்கள் யாரோ, அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்கப்படுவதில்லை; அவர்கள் மரணத்தைக் கடந்துசென்று ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறார்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு காலம் வருகிறது, அது இப்பொழுதே வந்துவிட்டது. இக்காலத்திலேயே மரித்தவர்கள் இறைவனுடைய மகனின் குரலைக் கேட்பார்கள்; அதைக் கேட்கிறவர்கள் ஜீவனைப் பெறுவார்கள். பிதா தம்மில்தாமே ஜீவனாய் இருப்பதுபோல, மகனும் தம்மில்தாமே நித்திய ஜீவனாய் இருக்கும்படி செய்கிறார். நான் மானிடமகனாய் இருப்பதால், நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் அதிகாரத்தையும் பிதா அவருக்கே கொடுத்திருக்கிறார். “இதைக்குறித்து ஆச்சரியப்படவேண்டாம். ஏனெனில் காலம் வருகிறது, கல்லறைகளில் இருக்கிறவர்கள் எல்லோரும் மானிடமகனுடைய குரலைக் கேட்டு, வெளியே வருவார்கள். நல்ல செயல்களைச் செய்தவர்கள் ஜீவன் பெறும்படி எழுந்திருப்பார்கள். தீய செயல்களைச் செய்தவர்கள் தண்டனைத் தீர்ப்பைப் பெறும்படி எழுந்திருப்பார்கள். சுயமாய் நான் எதையும் செய்ய முடியாதிருக்கிறேன்; பிதா சொல்கிறபடி மட்டுமே நான் நியாயத்தீர்ப்பு கொடுக்கிறேன். எனது நியாயத்தீர்ப்பு நீதியானது. ஏனெனில் நான் என் சித்தத்தை அல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தை நிறைவேற்றவே நாடுகிறேன்.

யோவான் 5:6-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

படுத்திருந்த அவனை இயேசு பார்த்து, அவன் அநேக நாளாக வியாதி உள்ளவன் என்று அறிந்து, அவனைப் பார்த்து: சுகமாகவேண்டும் என்று விரும்புகிறாயா என்று கேட்டார். அதற்கு வியாதியுள்ளவன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய்விடுகிறதற்கு ஒருவரும் இல்லை, நான் போகிறதற்குமுன் வேறொருவன் எனக்கு முன்னே இறங்கிவிடுகிறான் என்றான். இயேசு அவனைப் பார்த்து: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். உடனே அந்த மனிதன் சுகமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாக இருந்தது. ஆதலால் யூதர்கள் சுகமாக்கப்பட்டவனைப் பார்த்து: இது ஓய்வுநாளாக இருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள். அவன் அவர்களுக்கு மறுமொழியாக: என்னைச் சுகமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று எனக்குச் சொன்னார் என்றான். அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று உன்னுடனே சொன்ன மனிதன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள். சுகமாக்கப்பட்டவனுக்கு அவர் யார் என்று தெரியவில்லை; அந்த இடத்தில் மக்கள் கூட்டமாக இருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார். அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்தில் பார்த்து: இதோ, நீ சுகமடைந்தாய், அதிக தீமையானது ஒன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவம் செய்யாதே என்றார். அந்த மனிதன்போய், தன்னைச் சுகமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான். இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்திக் கொலைசெய்ய வகைதேடினார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: என் பிதா இதுவரைக்கும் செயல்களைச் செய்துவருகிறார், நானும் செயல்களைச் செய்துவருகிறேன் என்றார். அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதும் அல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றும் சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாக வகைதேடினார்கள். அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் பார்க்கிறது எதுவோ, அதையே அன்றி, வேறு ஒன்றையும் தாமாக செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாக இருந்து, தாம் செய்கிறவைகளை எல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைவிட பெரிதான செயல்களையும் அவருக்குக் காண்பிப்பார். பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்கு விருப்பமானவர்களை உயிர்ப்பிக்கிறார். அன்றியும் பிதாவைக் மதிப்பதுபோல எல்லோரும் குமாரனையும் மதிக்கும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவரையும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் மதிக்காதவன் அவரை அனுப்பின பிதாவையும் மதிக்காதவனாக இருக்கிறான். என் வசனத்தைக்கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாகாமல், மரணத்தைவிட்டு விலகி, ஜீவனுக்குள்ளாகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனென்றால், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராக இருக்கிறதுபோல, குமாரனும் தம்மில் தாமே ஜீவனுடையவராக இருக்கும்படி அருள்செய்திருக்கிறார். அவர் மனிதகுமாரனாக இருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால், கல்லறைகளில் உள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும்; அப்பொழுது, நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் தண்டனையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். நான் தானாக ஒன்றும் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்கு விருப்பமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவிற்கு விருப்பமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாக இருக்கிறது.

யோவான் 5:6-30 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு அந்த நோயாளி அங்கு படுத்துக்கிடப்பதைக் கண்டார். அவன் நீண்ட காலமாக நோயாளியாக இருப்பதை அவர் அறிந்தார். ஆகையால் அவர் அவனிடம், “நீ குணமடைய விரும்புகிறாயா?” என்று கேட்டார். “ஐயா, தண்ணீர் கலங்கும்போது நான் போய் நீரில் இறங்குவதற்கு எனக்கு உதவி செய்ய யாருமில்லை. முதல் மனிதனாகப் போய் மூழ்குவதற்கு முயல்வேன். ஆனால் எனக்கு முன்னால் எவனாவது ஒருவன் முதல் மனிதனாகப் போய் மூழ்கிவிடுகிறான்” என்று அந்த நோயாளி பதில் சொன்னான். பிறகு இயேசு “எழுந்து நில். உனது படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்றார். உடனே அந்த நோயாளி குணமடைந்தான். அவன் தனது படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். இது நிகழ்ந்த அந்த நாளோ ஓய்வு நாள். ஆகையால் யூதர்கள், “இன்று ஓய்வு நாள். நீ படுக்கையை எடுத்துக்கொண்டு போவது சரியல்ல” என்று அவனிடம் கூறினர். ஆனால் அந்த மனிதன், “ஒரு மனிதர் என்னைக் குணமாக்கினார். எனது படுக்கையை எடுத்துக்கொண்டு போகும்படிக் கூறினார்” என்றான். “உன்னை குணமாக்கிப் படுக்கையை எடுத்துக் கொண்டு போகும்படி சொன்ன அவன் யார்?” என்று யூதர்கள் கேட்டனர். ஆனால் அந்த மனிதனுக்கு தன்னைக் குணமாக்கியவர் யார் என்று தெரியவில்லை. அங்கே ஏராளமான மக்கள் இருந்தனர். இயேசுவும் அவ்விடம் விட்டு மறைந்து போயிருந்தார். பிறகு இயேசு அவனை ஆலயத்தில் கண்டுபிடித்தார். இயேசு அவனிடம், “பார், இப்பொழுது நீ குணமாகிவிட்டாய். உனக்குக் கேடுவராதபடி மேலும் பாவம் செய்யாமல் இருப்பாயாக” என்று கூறினார். பிறகு அந்த மனிதன் யூதர்களிடம் திரும்பிப் போனான். அவன் யூதர்களிடம், “இயேசுதான் என்னைக் குணமாக்கியவர்” என்று சொன்னான். இயேசு இவ்வாறு ஓய்வு நாளில் நோயைக் குணப்படுத்தியதால் யூதர்கள் இயேசுவைக் குற்றம்சாட்டத் தொடங்கினர். ஆனால் இயேசுவோ யூதர்களிடம், “எனது பிதா (தேவன்) வேலை செய்வதை நிறுத்துவதே இல்லை. நானும் வேலை செய்துகொண்டிருக்கிறேன்” என்றார். இதைக் கேட்ட யூதர்கள் இயேசுவைக் கொன்றுவிடக் கடுமையாக முயற்சி செய்தார்கள். அவர்கள், “முதலில் இயேசு ஓய்வு நாளின் சட்டத்தை உடைத்துவிட்டார். பிறகு அவர் தேவனை அவரது பிதா என்று கூறுகிறார். அவர் தன்னை தேவனுக்குச் சமமாகக் கூறி வருகிறார்” என்று விளக்கம் கூறினர். ஆனால் இயேசுவோ, “உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன், இந்தக் குமாரன் தனியாக எதுவும் செய்வதில்லை. இவர் தன் பிதாவிடம் எதைப் பார்க்கிறாரோ அவற்றையே செய்து வருகிறார். பிதா குமாரனை நேசிக்கிறார். அவர் தான் செய்பவற்றையெல்லாம் தனது குமாரனுக்குக் காட்டி வருகிறார். இந்த மனிதன் குணமானான். இதைவிட மேலான காரியங்களைப் பிதாவானவர் தனது குமாரன் மூலம் செய்வார். பின்பு நீங்கள் எல்லோரும் ஆச்சரியப்படுவீர்கள். பிதாவானவர் இறந்தவர்களை உயிரோடு எழுப்புகிறார். இதைப்போலவே அவரது குமாரனும் தமது விருப்பத்தின்படி இறந்துபோனவர்களை உயிரோடு எழச் செய்வார். “அத்துடன் பிதாவானவர் யாருக்கும் தீர்ப்பளிப்பதில்லை. ஆனால் அவர் இத்தகைய தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை தன் மகனிடம் ஒப்படைத்திருக்கிறார். தேவன் இதைச் செய்தார். எனவே அனைத்து மக்களும் பிதாவுக்குச் செய்கிற மரியாதையைக் குமாரனுக்கும் செய்ய வேண்டும். ஒருவன் குமாரனுக்கு மரியாதை செய்யாவிட்டால் அவன் பிதாவையும் அவமரியாதை செய்தவனாகிறான். பிதாவே தன் குமாரனை நம்மிடம் அனுப்பியிருக்கிறார். “நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன், நான் சொல்கிறதை எவன் கேட்டு என்னை அனுப்பினவரை நம்புகிறானோ அவனுக்கு நித்தியமான வாழ்வு உண்டு. அவன் தீர்ப்புக்கு உட்படமாட்டான். அவன் ஏற்கெனவே மரணத்தை விட்டு நீங்கி ஜீவனைப் பெற்றவனாகிறான். உங்களுக்கு ஓர் உண்மையைக் கூறுகிறேன். முக்கியமான வேளை வரும். அவ்வேளை ஏற்கெனவே இங்கே இருக்கிறது. பாவத்தில் இறந்தவர்கள் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும். குமாரனிடமிருந்து கேட்பவற்றை நம்புகிறவர்கள் நித்திய ஜீவனைப் பெறுகின்றார்கள். பிதாவிடமிருந்தே (தேவனிடமிருந்தே) ஜீவன் வருகின்றது. ஆகையால் அவர் தன் குமாரனுக்கும் ஜீவனையளிக்கும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். அத்துடன் அவர் குமாரனுக்கு, அனைத்து மக்களுக்கும் தீர்ப்பளிக்கிற அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார். ஏனென்றால் அந்தக் குமாரனே மனித குமாரனாக இருக்கிறார். “இதுபற்றி நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம். செத்துப்போய் கல்லறையில் இருக்கிறவர்கள் அவரது சத்தத்தைக் கேட்கும் காலம் வரும். அப்போது அவர்கள் கல்லறையை விட்டு வெளியே வருவார்கள். தங்கள் வாழ்வில் நன்மையைச் செய்தவர்கள், எழுந்து நித்திய ஜீவனைப் பெறுவார்கள். தீமை செய்தவர்கள் எழுந்து தண்டனையைப் பெறுவார்கள். “நான் தனியாக எதுவும் செய்வதில்லை. நான் எனக்குச் சொல்லியிருக்கிறபடியே தீர்ப்பளிக்கிறேன். எனவே எனது தீர்ப்பு நீதியானதே. ஏனென்றால் நான் எனக்குப் பிடித்தமானதைச் செய்வதில்லை; என்னை அனுப்பினவருக்குப் பிடித்தமானதையே செய்கிறேன்.

யோவான் 5:6-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதியஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார். அதற்கு வியாதியஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய்விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான். இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது. ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டுபோகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள். அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைச் சொஸ்தமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான். அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள். சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னாரென்று அறியவில்லை; அவ்விடத்தில் ஜனங்கள் கூட்டமாயிருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார். அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிகக் கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார். அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான். இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தி, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள். இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன் என்றார். அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ் சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார். பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில் பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார். அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்