யோவான் 5:31-40
யோவான் 5:31-40 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது. என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன். நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சிகொடுத்தான். நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனுஷருடைய சாட்சியல்ல, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன். அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள். யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது. என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சிகொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை. அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை. வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.
யோவான் 5:31-40 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“என்னைப்பற்றி நானே சாட்சி கூறினால், எனது சாட்சி உண்மையற்றது. எனக்காகச் சாட்சி கூறுகிற இன்னொருவர் இருக்கிறார். என்னைப்பற்றிய அவருடைய சாட்சி உண்மையானது என்று நான் அறிவேன். “நீங்கள் யோவானிடம் ஆட்களை அனுப்பினீர்கள். அவன் சத்தியத்திற்குச் சாட்சி கொடுத்தான். மனிதனுடைய சாட்சியை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்பதற்காக இதைச் சொல்லவில்லை; நீங்கள் இரட்சிக்கப்படும்படியாகவே நான் இதைச் சொல்கிறேன். யோவான் எரிந்து வெளிச்சம் கொடுத்த ஒரு விளக்காய் இருந்தான். நீங்களும் அவனுடைய வெளிச்சத்தில் சொற்ப காலத்திற்கு மகிழ்ச்சியடைவதைத் தெரிந்துகொண்டீர்கள். “யோவான் கொடுத்த சாட்சியைப் பார்க்கிலும், அதிக மதிப்புள்ள சாட்சி எனக்கு இருக்கிறது. நான் செய்து முடிக்கும்படி பிதா எனக்கு ஒரு வேலையைக் கொடுத்திருக்கிறார். அதையே நான் செய்கிறேன். அந்த வேலையே பிதா என்னை அனுப்பினார் என்பதற்குச் சாட்சி கொடுக்கிறது. என்னை அனுப்பிய பிதா தாமே என்னைக்குறித்து சாட்சி கொடுத்தார். நீங்கள் ஒருபோதும் அவருடைய குரலைக் கேட்டதுமில்லை, அவருடைய உருவத்தைக் கண்டதும் இல்லை, அவருடைய வார்த்தை உங்களில் தங்கியிருப்பதும் இல்லை. ஏனெனில் நீங்கள் அவர் அனுப்பியவரை விசுவாசியாமல் இருக்கிறீர்கள். நீங்கள் வேதவசனங்களை ஆராய்ந்து பார்க்கிறீர்கள். ஏனெனில் அவற்றின் மூலமாய் நித்திய ஜீவனை உரிமையாக்கிக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறீர்கள். இந்த வேதவசனங்களே என்னைக்குறித்து சாட்சி கொடுக்கின்றன. ஆனால் ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி என்னிடம் வருவதற்கு உங்களுக்கு விருப்பமில்லை.
யோவான் 5:31-40 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி உண்மையாக இருக்காது. என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி உண்மையான சாட்சி என்று அறிந்திருக்கிறேன். நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சி கொடுத்தான். நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனிதர்களுடைய சாட்சி இல்லை, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன். அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காய் இருந்தான்; நீங்களும் சிலநேரம் அவன் வெளிச்சத்திலே மகிழ்ச்சியாக இருக்க விருப்பமாக இருந்தீர்கள். யோவானுடைய சாட்சியைவிட மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அது என்னவென்றால், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான செயல்களே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது. என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சிக் கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருபோதும் அவர் சத்தத்தைக் கேட்டதும் இல்லை, அவர் உருவத்தைப் பார்த்ததும் இல்லை. அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிக்காதபடியால் அவருடைய வசனம் உங்களில் நிலைத்திருக்கிறதும் இல்லை. வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நினைக்கிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படி இருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு விருப்பம் இல்லை.
யோவான் 5:31-40 பரிசுத்த பைபிள் (TAERV)
“நானே என்னைப்பற்றிச் சொல்லி வந்தால், மக்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால் என்னைக்குறித்து மக்களிடம் சொல்லுகிற வேறொருவர் இருக்கிறார். அவர் என்னைக் குறித்துச் சொல்வது உண்மையென்று எனக்கும் தெரியும். “நீங்கள் யோவானிடம் சிலரை அனுப்பியிருந்தீர்கள். அவன் உங்களுக்கு உண்மையைப்பற்றிச் சொன்னான். மக்களுக்கு என்னைப்பற்றி ஒருவன் சாட்சி சொல்லி விளக்க வேண்டும் என்ற தேவை எனக்கில்லை. ஆனால் நீங்கள் இரட்சிக்கப்படும்படியாக இவற்றை நான் உங்களுக்குக் கூறுகிறேன். யோவான் எரிந்து ஒளியைக் கொடுக்கிற ஒரு விளக்கைப்போன்றிருந்தான். நீங்கள் அவனது ஒளியைப் பெற்று சில காலம் மகிழ்ச்சி அடைந்தீர்கள். “ஆனால் நான் யோவானைவிடப் பெரியவர் என்பதற்கு என்னிடம் சாட்சி உள்ளது. நான் செய்கிற செயல்களே எனக்கு உரிய சாட்சிகளாகும். இவைகளே என் பிதா, நான் செய்யும்படியாகக் கொடுத்தவை என்பதைக் காட்டுகின்றன. என்னை அனுப்பிய என் பிதா, என்னைப் பற்றி அவரே சாட்சி தருகிறார். ஆனால் நீங்கள் அவர் சத்தத்தை ஒருபொழுதும் கேட்டதில்லை. அவர் எப்படி இருப்பார் என்று நீங்கள் பார்த்ததும் இல்லை. பிதாவின் அறிவுரை உங்களில் வாழ்வதுமில்லை. ஏனென்றால் பிதா அனுப்பிய ஒருவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் வேதவாக்கியங்களைக் கவனமாகப் படித்துப் பாருங்கள். அவை நித்திய ஜீவனை உங்களுக்குக் கொடுக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த வாக்கியங்களே என்னைப்பற்றி கூறுகின்றன. ஆனால் அந்த நித்திய ஜீவனைப் பெற விரும்பும் நீங்கள், என்னிடம் வர மறுக்கின்றீர்கள்.