யோவான் 5:1-14

யோவான் 5:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இவைகளுக்குப் பின்பு, யூதர்களுடைய ஒரு பண்டிகைக்கு இயேசு எருசலேமுக்குச் சென்றார். எருசலேமிலே ஆட்டு வாசலின் அருகே ஒரு குளம் இருந்தது. அது எபிரெய மொழியிலே பெதஸ்தா என்று அழைக்கப்பட்டது. அதைச் சுற்றி ஐந்து மண்டபங்கள் இருந்தன. அங்கே பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுற்றோர் போன்ற அநேக நோயாளிகள் படுத்திருப்பது வழக்கம். அவர்கள் தண்ணீர் கலங்கும் வேளைக்காகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். சிலவேளைகளில் கர்த்தருடைய தூதன் ஒருவன் இறங்கிவந்து அந்தத் தண்ணீரைக் கலக்குவான். தண்ணீர் கலங்கிய உடனே அந்தக் குளத்தில் முதலாவது இறங்குபவன் என்ன வியாதியுடையவனாய் இருந்தாலும் அவன் சுகமடைவான். அங்கிருந்த ஒருவன் முப்பத்தெட்டு வருடங்களாக நோயாளியாயிருந்தான். இயேசு அவனைக் கண்டு, அங்கே அவன் அநேக காலமாக இந்நிலையில் கிடப்பதை அறிந்துகொண்டார். அவர் அவனிடம், “நீ சுகமடைய விரும்புகிறாயா?” என்று கேட்டார். அதற்கு அந்த நோயுற்ற மனிதன், “ஐயா, தண்ணீர் கலக்கப்படும்போது, நான் குளத்தில் இறங்குவதற்கு எனக்கு உதவிசெய்ய ஒருவரும் இல்லை. நான் இறங்குவதற்கு முயற்சி செய்கையில், வேறொருவன் எனக்கு முன்பாகவே இறங்கி விடுகிறான்” என்றான். அப்பொழுது இயேசு அவனிடம், “எழுந்திரு! உன் படுக்கையை தூக்கிக்கொண்டு நட” என்றார். உடனே அவன் குணமடைந்தான்; மேலும் தன் படுக்கையையும் எடுத்துக்கொண்டு நடந்துபோனான். இது நிகழ்ந்த நாள் யூதருடைய ஒரு ஓய்வுநாளாயிருந்தது. எனவே யூதத்தலைவர்கள், குணமடைந்த அவனிடம், “இது ஓய்வுநாள்; நீ உனது படுக்கையை எடுத்துக்கொண்டு போவதை மோசேயின் சட்டம் தடைசெய்கிறது” என்றார்கள். அவன் அதற்கு, “என்னைக் குணமாக்கியவர், ‘உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று எனக்குச் சொன்னார்” என்றான். எனவே அவர்கள் அவனிடம், “உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று உனக்குச் சொன்னது யார்?” என்று கேட்டார்கள். சுகமடைந்தவனுக்கோ, தன்னை குணமாக்கினவர் யார் என்று தெரியாதிருந்தது. ஏனெனில் இயேசு அங்கு கூடியிருந்த மக்களிடையே போய் மறைந்துவிட்டார். பின்பு இயேசு அவனை ஆலயத்தில் கண்டு அவனிடம், “பார், நீ சுகமடைந்திருக்கிறாயே. இனிமேல் பாவம் செய்யாதே. செய்தால் இதைவிட மோசமானது ஏதாவது உனக்கு நேரிடலாம்” என்றார்.

யோவான் 5:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இவைகளுக்குப் பின்பு யூதர்களுடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார். எபிரெய மொழியிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்கள் உண்டு. அவைகளிலே குருடர்கள், முடவர்கள், வாதநோய் உள்ளவர்கள் முதலான வியாதி உள்ளவர்கள் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். ஏனென்றால், சில நேரங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முதலில் அதில் இறங்குவானோ அவன் எப்படிப்பட்ட வியாதியுள்ளவனாக இருந்தாலும் சுகமாவான். முப்பத்தெட்டு வருடங்கள் வியாதியாயிருந்த ஒரு மனிதன் அங்கே இருந்தான். படுத்திருந்த அவனை இயேசு பார்த்து, அவன் அநேக நாளாக வியாதி உள்ளவன் என்று அறிந்து, அவனைப் பார்த்து: சுகமாகவேண்டும் என்று விரும்புகிறாயா என்று கேட்டார். அதற்கு வியாதியுள்ளவன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய்விடுகிறதற்கு ஒருவரும் இல்லை, நான் போகிறதற்குமுன் வேறொருவன் எனக்கு முன்னே இறங்கிவிடுகிறான் என்றான். இயேசு அவனைப் பார்த்து: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். உடனே அந்த மனிதன் சுகமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாக இருந்தது. ஆதலால் யூதர்கள் சுகமாக்கப்பட்டவனைப் பார்த்து: இது ஓய்வுநாளாக இருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள். அவன் அவர்களுக்கு மறுமொழியாக: என்னைச் சுகமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று எனக்குச் சொன்னார் என்றான். அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று உன்னுடனே சொன்ன மனிதன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள். சுகமாக்கப்பட்டவனுக்கு அவர் யார் என்று தெரியவில்லை; அந்த இடத்தில் மக்கள் கூட்டமாக இருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார். அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்தில் பார்த்து: இதோ, நீ சுகமடைந்தாய், அதிக தீமையானது ஒன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவம் செய்யாதே என்றார்.

யோவான் 5:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு, இயேசு எருசலேமுக்கு யூதர்களின் ஒரு பண்டிகையின்போது சென்றார். அங்கே ஐந்து மண்டபங்கள் உள்ள ஒரு குளம் இருந்தது. யூதமொழியில் இதற்கு பெதஸ்தா என்று பெயர். இந்தக் குளம் ஆட்டுவாசல் அருகே இருந்தது. குளத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் நோயாளிகள் பலர் படுத்துக்கிடந்தனர். அவர்களில் சிலர் குருடர்கள்; சிலர் சப்பாணிகள்; சிலர் சூம்பிப்போன உறுப்புகளை உடையவர்கள். அவர்களில் ஒருவன் முப்பத்தெட்டு ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டிருந்தான். இயேசு அந்த நோயாளி அங்கு படுத்துக்கிடப்பதைக் கண்டார். அவன் நீண்ட காலமாக நோயாளியாக இருப்பதை அவர் அறிந்தார். ஆகையால் அவர் அவனிடம், “நீ குணமடைய விரும்புகிறாயா?” என்று கேட்டார். “ஐயா, தண்ணீர் கலங்கும்போது நான் போய் நீரில் இறங்குவதற்கு எனக்கு உதவி செய்ய யாருமில்லை. முதல் மனிதனாகப் போய் மூழ்குவதற்கு முயல்வேன். ஆனால் எனக்கு முன்னால் எவனாவது ஒருவன் முதல் மனிதனாகப் போய் மூழ்கிவிடுகிறான்” என்று அந்த நோயாளி பதில் சொன்னான். பிறகு இயேசு “எழுந்து நில். உனது படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்றார். உடனே அந்த நோயாளி குணமடைந்தான். அவன் தனது படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். இது நிகழ்ந்த அந்த நாளோ ஓய்வு நாள். ஆகையால் யூதர்கள், “இன்று ஓய்வு நாள். நீ படுக்கையை எடுத்துக்கொண்டு போவது சரியல்ல” என்று அவனிடம் கூறினர். ஆனால் அந்த மனிதன், “ஒரு மனிதர் என்னைக் குணமாக்கினார். எனது படுக்கையை எடுத்துக்கொண்டு போகும்படிக் கூறினார்” என்றான். “உன்னை குணமாக்கிப் படுக்கையை எடுத்துக் கொண்டு போகும்படி சொன்ன அவன் யார்?” என்று யூதர்கள் கேட்டனர். ஆனால் அந்த மனிதனுக்கு தன்னைக் குணமாக்கியவர் யார் என்று தெரியவில்லை. அங்கே ஏராளமான மக்கள் இருந்தனர். இயேசுவும் அவ்விடம் விட்டு மறைந்து போயிருந்தார். பிறகு இயேசு அவனை ஆலயத்தில் கண்டுபிடித்தார். இயேசு அவனிடம், “பார், இப்பொழுது நீ குணமாகிவிட்டாய். உனக்குக் கேடுவராதபடி மேலும் பாவம் செய்யாமல் இருப்பாயாக” என்று கூறினார்.

யோவான் 5:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இவைகளுக்குப்பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார். எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு. அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். ஏனெனில் சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதியஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான். முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான். படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதியஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார். அதற்கு வியாதியஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய்விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான். இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது. ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டுபோகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள். அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைச் சொஸ்தமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான். அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள். சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னாரென்று அறியவில்லை; அவ்விடத்தில் ஜனங்கள் கூட்டமாயிருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார். அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிகக் கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்