யோவான் 4:4-9
யோவான் 4:4-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர் சமாரியா நாட்டின் வழியாய்ப் போகவேண்டியதாயிருந்தபடியால், யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார். அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார்; அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி வேளையாயிருந்தது. அவருடைய சீஷர்கள் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள். அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத் தா என்றார். யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத் தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.
யோவான் 4:4-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இயேசு சமாரியா வழியாகப் போகவேண்டியிருந்தது. எனவே அவர் சமாரியாவிலுள்ள சீகார் என்னும் பட்டணத்திற்கு வந்தார். அது யாக்கோபு தன் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்தின் அருகேயிருந்தது. அங்கே யாக்கோபின் கிணறு இருந்தது. இயேசு பிரயாணத்தினால் களைப்படைந்தவராய், கிணற்றின் அருகே உட்கார்ந்தார். அப்பொழுது நேரம் நண்பகல் பன்னிரண்டு மணியாயிருந்தது. அவ்வேளையில் சமாரிய பெண் ஒருத்தி தண்ணீர் மொள்ளுவதற்கு வந்தாள். இயேசு அவளிடம், “நீ எனக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் தருவாயா?” என்று கேட்டார். அப்பொழுது அவருடைய சீடர்கள் உணவு வாங்கும்படி பட்டணத்திற்கு போயிருந்தார்கள். அந்தச் சமாரியப் பெண் இயேசுவிடம், “நீர் ஒரு யூதன், நானோ ஒரு சமாரியப் பெண். என்னிடம் நீர் எப்படித் தண்ணீர் கேட்கலாம்?” என்று கேட்டாள். ஏனெனில் யூதர் சமாரியருடன் பழகுவதில்லை.
யோவான் 4:4-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது அவர் சமாரியா நாட்டின்வழியாகப் போகவேண்டியதாக இருந்தபடியால், யாக்கோபு தன் மகனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்திற்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார். அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பயணத்தின் களைப்பினால் ஏறக்குறைய நண்பகல் நேரத்தில் சற்று ஓய்வெடுக்க அந்தக் கிணற்றின் அருகே உட்கார்ந்திருந்தார். அவருடைய சீடர்கள் உணவு வாங்குவதற்கு ஊருக்குள்ளே சென்றிருந்தார்கள். அப்பொழுது சமாரியா தேசத்தாளாகிய ஒரு பெண் தண்ணீர் எடுக்க வந்தாள். இயேசு அவளைப் பார்த்து: தாகத்திற்குத் தா என்றார். யூதர்கள் சமாரியருடனே எந்தத் தொடர்பும் வைக்காதவர்களானபடியால், சமாரிய பெண் அவரைப் பார்த்து: நீர் யூதனாக இருக்க, சமாரிய பெண்ணாகிய என்னிடத்தில், தாகத்திற்குத் தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.
யோவான் 4:4-9 பரிசுத்த பைபிள் (TAERV)
கலிலேயாவுக்குச் செல்கிற வழியில் இயேசு சமாரியா நாட்டைக் கடந்து செல்ல இருந்தார். சமாரியாவில் இயேசு சீகார் என்னும் பட்டணத்துக்கு வந்தார். அந்தப் பட்டணம், யாக்கோபு தன் குமாரன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்தின் அருகில் இருந்தது. யாக்கோபின் கிணறும் அங்கே இருந்தது. இயேசு தன் நீண்ட பயணத்தால் களைத்துப் போயிருந்தார். ஆகையால் இயேசு கிணற்றின் அருகில் இளைப்பாறிட அமர்ந்தார். அது மதிய வேளை. ஒரு சமாரியப் பெண் தண்ணீரெடுப்பதற்காக அக்கிணற்றுக்கு வந்தாள். இயேசு அவளிடம், “தயவுசெய்து நான் குடிப்பதற்குத் தண்ணீர் கொடு” என்று கேட்டார். (இயேசுவின் சீஷர்கள் பட்டணத்தில் உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கும்போது இது நடந்தது.) “குடிப்பதற்கு நீங்கள் என்னிடம் கேட்பதை எண்ணி எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் ஒரு யூதர். நானோ சமாரியப் பெண்” என்று அவள் பதிலுரைத்தாள். (ஏனென்றால் யூதர்கள் சமாரியர்களோடு எப்பொழுதும் நட்புடன் இருப்பதில்லை.)