யோவான் 21:12-25

யோவான் 21:12-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு அவர்களிடம், “வந்து சாப்பிடுங்கள்” என்றார். அவருடைய சீடர்களில் ஒருவரும், “நீர் யார்?” என்று கேட்கத் துணியவில்லை. அவர் கர்த்தர் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். இயேசு வந்து அப்பத்தை எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார். மீனையும் அப்படியே கொடுத்தார். இயேசு மரித்தோரிலிருந்து உயிருடன் எழுந்தபின்பு தமது சீடர்களுக்குக் காட்சியளித்தது இது மூன்றாவது முறையாகும். அவர்கள் சாப்பிட்டு முடித்தபின்பு, இயேசு சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகனான சீமோனே, இவர்களைவிட நீ என்னில் அதிக அன்பாயிருக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு அவன், “ஆம் ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பது உமக்குத் தெரியும்” என்றான். அப்பொழுது இயேசு, “என் ஆட்டுக்குட்டிகளைப் பராமரிப்பாயாக” என்றார். இயேசு இரண்டாவது முறை அவனிடம், “யோவானின் மகனான சீமோனே, நீ என்னில் அன்பு கூறுகிறாயா?” என்று கேட்டார். அதற்கு அவன், “ஆம் ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்று உமக்குத் தெரியும்” என்றான். அப்பொழுது இயேசு, “என் ஆடுகளை மேய்ப்பாயாக” என்றார். மூன்றாவது முறை அவர் அவனிடம், “யோவானின் மகனான சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா?” என்று கேட்டார். மூன்றாவது முறை, “நீ என்னை நேசிக்கிறாயா?” என்று இயேசு கேட்டதனால் பேதுரு துக்கமடைந்து, அவன் அவரிடம், “ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்; நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் அறிந்திருக்கிறீர்” என்றான். இயேசு அவனிடம், “என் ஆடுகளைப் பராமரிப்பாயாக என்றார். மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்கிறேன், நீ இளைஞனாய் இருந்தபோது, நீயே உடை உடுத்திக்கொண்டு நீ விரும்பிய இடத்திற்குப் போனாய்; ஆனால் நீ முதிர்வயதாகும்போது நீ உன் கைகளை நீட்டுவாய், வேறொருவன் உனக்கு உடை உடுத்தி, நீ போகவிரும்பாத இடத்திற்கு உன்னை வழிநடத்திக் கொண்டுபோவான்” என்றார். பேதுரு எவ்விதமான மரணத்தை ஏற்றுக்கொண்டு இறைவனை மகிமைப்படுத்தப் போகிறான் என்பதைக் காட்டும்படியாகவே இயேசு இதைச் சொன்னார். பின்பு அவர் அவனிடம், “என்னைப் பின்பற்று” என்றார். பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசு அன்பு செலுத்திய சீடன் பின்னாலே வருவதைக் கண்டான். இந்தச் சீடனே இரவு விருந்தின்போது இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு, “ஆண்டவரே உம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிறவன் யார்?” என்று கேட்டவன். பேதுரு இவனைக் கண்டபோது, “ஆண்டவரே இவனைக் குறித்து என்ன சொல்கிறீர்?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “நான் திரும்பி வரும்வரைக்கும் அவன் உயிரோடு இருக்கும்படி நான் விரும்பினால் அதுபற்றி உனக்கென்ன? நீ என்னைப் பின்பற்றவேண்டும்” என்றார். இதனால் இந்தச் சீடன் சாகமாட்டான் என்கிற பேச்சு சீடருக்குள்ளே இருந்தது. ஆனால் இயேசுவோ அவன் சாகமாட்டான் என்று சொல்லவில்லை; “நான் திரும்பி வரும்வரை இவன் உயிரோடிருப்பதை நான் விரும்பினால் அதுபற்றி உனக்கு என்ன?” என்று சொன்னார். அந்தச் சீடனே இவற்றைக்குறித்து சாட்சி கொடுத்து இவற்றை எழுதியவன். அவனுடைய சாட்சி உண்மையானது. இயேசு வேறு பல காரியங்களையும் செய்தார். அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் புத்தகங்களை வைப்பதற்கு இந்த முழு உலகமும் போதாமல் இருக்கும் என்று நான் எண்ணுகிறேன்.

யோவான் 21:12-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு அவர்களைப் பார்த்து: வாருங்கள், சாப்பிடுங்கள் என்றார். அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்தபடியால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை. அப்பொழுது இயேசு வந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார். இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தபின்பு மூன்றாவது முறையாக தம்முடைய சீடர்களுக்கு இவ்வாறு வெளிப்படுத்தினார். அவர்கள் சாப்பிட்டபின்பு, இயேசு சீமோன்பேதுருவைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, இவர்களைவிட நீ அதிகமாக என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். இரண்டாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். மூன்றாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாவதுமுறை தன்னைக் கேட்டதினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். நீ சிறுவயதுள்ளவனாக இருந்தபோது நீயே ஆடை அணிந்துகொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாக ஆகும்போது உன் கரங்களை நீட்டுவாய்; வேறொருவன் உனக்கு ஆடையை அணிவித்து, உனக்கு இஷ்டமில்லாத இடத்திற்கு உன்னைக் கொண்டுபோவான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். இந்தவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறான் என்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனைப் பார்த்து: என்னைப் பின்பற்றிவா என்றார். பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவிற்கு அன்பாக இருந்தவனும், இரவு உணவு சாப்பிடும்போது அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்ட சீடன் பின்னால் வருகிறதைப் பார்த்தான். அவனைப் பார்த்து, பேதுரு இயேசுவிடம்: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான். அதற்கு இயேசு: நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார். ஆகவே, அந்தச் சீடன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரர்களுக்குள்ளே பரவியது. ஆனாலும், அவன் மரிப்பதில்லை என்று இயேசு சொல்லாமல், நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பமானால் உனக்கென்ன என்று சொன்னார். அந்தச் சீடனே இவைகளைக்குறித்து சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி உண்மை என்று அறிந்திருக்கிறோம். இயேசு செய்த வேறு அநேக காரியங்களும் உண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புத்தகங்கள் உலகம் கொள்ளாது என்று நினைக்கிறேன். ஆமென்.

யோவான் 21:12-25 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு அவர்களிடம் “வாருங்கள், சாப்பிடுங்கள்” என்றார். அவர்களில் எவரும் “நீங்கள் யார்?” என்று தைரியமாகக் கேட்கவில்லை. அவர்தான் இயேசு கிறிஸ்து என்று அவர்கள் தெரிந்திருந்தனர். இயேசு உணவின் அருகில் சென்றார். அவர் அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார். அத்துடன் மீனையும் எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார். அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, இவ்வாறு மூன்றாவது முறையாகத் தம் சீஷர்களுக்குக் காட்சி தந்தார். உண்டு முடித்ததும் இயேசு பேதுருவிடம், “யோவானின் குமாரனான சீமோனே! மற்றவர்கள் நேசிப்பதைவிட என்னை நீ மிகுதியாக நேசிக்கிறாயா?” என்று கேட்டார். அதற்குப் பேதுரு, “ஆம் ஆண்டவரே, நான் நேசிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்” என்றான். பிறகு இயேசு அவனிடம், “எனது ஆட்டுக் குட்டிகளைக் கவனித்துக்கொள்” என்றார். மீண்டும் பேதுருவிடம் இயேசு “யோவானின் குமாரனான சீமோனே, என்னை நீ நேசிக்கிறாயா?” என்று கேட்டார். “ஆம் ஆண்டவரே. நான் உம்மை நேசிப்பது உமக்குத் தெரியும்” என்று பேதுரு சொன்னான். பிறகு பேதுருவிடம் இயேசு, “எனது மந்தையைக் கவனித்துக்கொள்” என்று சொன்னார். மூன்றாவது முறையாக இயேசு “யோவானின் குமாரனான சீமோனே என்னை நீ நேசிக்கிறாயா?” என்று கேட்டார். இயேசு மூன்றுமுறை இவ்வாறு கேட்டதால் பேதுருவுக்கு வருத்தமாக இருந்தது. பேதுரு அவரிடம், “ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியும். நான் உம்மை நேசிப்பதும் உமக்குத் தெரியும்” என்றான். பேதுருவிடம் இயேசு “எனது மந்தையைக் கவனித்துக்கொள். நான் உனக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நீ இளைஞனாக இருந்தபோது, உனது இடுப்புவாரை நீயே கட்டிக்கொண்டு விரும்பும் இடங்களுக்கு சென்றாய். ஆனால் நீ முதியவன் ஆகும்போது உன் கைகளை நீட்டுவாய். வேறு ஒருவன் உன் இடுப்புவாரைக் கட்டிவிடுவான். அதோடு உனக்கு விருப்பம் இல்லாத இடத்துக்கும் உன்னை இழுத்துக்கொண்டு போவான்” என்றார். (எவ்வாறு பேதுரு மரணம் அடைந்து தேவனுக்கு மகிமைசேர்க்கப் போகிறான் என்பதைக் குறிப்பிட்டே இயேசு இவ்வாறு கூறினார்.) பிறகு இயேசு பேதுருவிடம் “என்னைப் பின்தொடர்ந்து வா” என்று கூறினார். பேதுரு திரும்பிப் பார்த்தபோது தன்னோடு, இயேசுவிடம் அன்பாயிருந்த சீஷன் வருவதைப் பார்த்தான். (இந்த சீஷன்தான் முன்பு இரவு விருந்தின்போது இயேசுவிடம் “உம்மைக் காட்டிக் கொடுக்கிறவன் யார்?” என்று அவர்மீது சாய்ந்து இருந்து கேட்டவன்) பேதுரு, அவன் பின்தொடர்ந்து வருவதைப் பார்த்து, “ஆண்டவரே, இவனைப் பற்றி என்ன கூறுகிறீர்?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “நான் வருமளவும் இவன் இருக்க எனக்கு விருப்பம் உண்டு. அது உனக்கு அவ்வளவு முக்கியமில்லை. நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்றார். ஆகையால் சீஷர்களிடம் ஒரு கதை பரவிற்று. அதாவது இயேசு அன்பாயிருக்கும் அந்த சீஷன் மரணம் அடைவது இல்லை என்று சீஷர்கள் பேசிக்கொண்டனர். ஆனால் அவன் மரணம் அடைவதில்லை என்று இயேசு கூறவில்லை. அவர் “நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பம். அதைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம்” என்றே கூறினார். அந்த சீஷனே இவற்றையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறான். அவன்தான் இவற்றையெல்லாம் இப்பொழுது எழுதியுள்ளான். அவன் சொன்னது எல்லாம் உண்மை என்று நமக்குத் தெரியும். இயேசு செய்த வேறு பல செயல்களும் உள்ளன. இவை அனைத்தும் எழுதி வைக்கப்பட்டிருந்தால் அந்தப் புத்தகங்களையெல்லாம் வைக்கிற அளவிற்கு இந்த உலகம் அவ்வளவு பெரியதாக இல்லை என்று எண்ணுகிறேன்.

யோவான் 21:12-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இயேசு அவர்களை நோக்கி: வாருங்கள், போஜனம்பண்ணுங்கள் என்றார். அவரைக் கர்த்தரென்று சீஷர்கள் அறிந்தபடியினால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை. அப்பொழுது இயேசு வந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார். இயேசு மரித்தோரிலிருந்தெழுந்த பின்பு தம்முடைய சீஷருக்கு அருளின தரிசனங்களில் இது மூன்றாவது தரிசனம். அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். நீ இளயவதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைகட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறானென்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும், இராப்போஜனம்பண்ணுகையில் அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்டவனுமாகிய சீஷன் பின்னே வருகிறதைக் கண்டான். அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான். அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார். ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லையென்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார். அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம். இயேசு செய்த வேறு அநேகக் காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்.