யோவான் 21:1-7

யோவான் 21:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இதற்குப் பின்பு இயேசு மீண்டும் தமது சீடர்களுக்கு கலிலேயா கடல் அருகே காட்சியளித்தார். அது இவ்வாறு நடந்தது: சீமோன் பேதுருவும், திதிமு என்று அழைக்கப்பட்ட தோமாவும், கலிலேயாவிலுள்ள கானா ஊரைச்சேர்ந்த நாத்தான்யேலும், செபெதேயுவின் மகன்களும், வேறு இரண்டு சீடர்களும் கூடியிருந்தார்கள். சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன் பிடிக்கப் போகிறேன்” என்றான். மற்றவர்களும், “நாங்களும் உன்னுடன் வருகிறோம்” என்றார்கள். எனவே அவர்கள் புறப்பட்டு ஒரு படகில் ஏறிச்சென்றார்கள். ஆனால் அந்த முழு இரவும், அவர்கள் மீன்கள் எதையுமே பிடிக்கவில்லை. அதிகாலையிலே இயேசு கடற்கரையிலே நின்றார். ஆனால் சீடரோ, அவர் இயேசுவே என்று அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களைக் கூப்பிட்டு, “பிள்ளைகளே, உங்களுக்கு மீன் கிடைக்கவில்லையா?” என்று கேட்டார். அவர்கள், “இல்லை” என்றார்கள். “வலையைப் படகின் வலது புறமாக வீசுங்கள். அப்பொழுது உங்களுக்கு மீன்கள் அகப்படும்” என்றார். அவர்கள் அப்படி செய்தபோது, பெருந்திரளான மீன்கள் அகப்பட்டன. அதனால் அந்த வலையை அவர்களால் இழுத்தெடுக்க முடியவில்லை. அப்பொழுது இயேசுவுக்கு அன்பான சீடன், “அவர் கர்த்தர்” என்று பேதுருவிடம் கூறினான். அவர் கர்த்தர் என்று அவன் சொன்னதைச் சீமோன் பேதுரு கேட்டவுடனே, அவன், தான் மேலுடைகளின்றி நின்றதினால் இடையில் ஒரு துணியைக் கட்டிக்கொண்டு கடலுக்குள் குதித்தான்.

யோவான் 21:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இவைகளுக்குப் பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மீண்டும் சீடர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விபரமாவது: சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டில் உள்ள கானா ஊரைச்சேர்ந்த நாத்தான்வேலும், செபெதேயுவின் மகன்களும், அவருடைய சீடர்களில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது, சீமோன்பேதுரு மற்றவர்களைப் பார்த்து: மீன்பிடிக்கப் போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்மோடு வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படகில் ஏறினார்கள். அந்த இரவிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீடர்கள் அறியாமல் இருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: பிள்ளைகளே, சாப்பிடுவதற்கு ஏதாவது உங்களிடம் இருக்கிறதா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றும் இல்லை என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் படகுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு மீன்கள் கிடைக்கும் என்றார். அப்படியே அவர்கள் வலைகளைப் போட்டு, அதிகமான மீன்கள் கிடைத்ததினால், வலையை இழுக்க முடியாமல் இருந்தார்கள். ஆகவே, இயேசுவின்மேல் அன்பாக இருந்த சீடன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் மேற்சட்டை அணியாதவனாக இருந்ததினால், தன் மேற்சட்டையை அணிந்துகொண்டு கடலிலே குதித்தான்.

யோவான் 21:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

இதற்குப் பின்பு இயேசு மறுபடியும் தன்னை சீஷர்களுக்குக் காண்பித்தார். அது திபேரியா (கலிலேயா) கடற்கரையில் நிகழ்ந்தது. அதைப்பற்றிய விபரமாவது: அங்கே சில சீஷர்கள் கூடியிருந்தனர். அவர்களில் சீமோன் பேதுரு, தோமா, செபெதேயுவின் இரு குமாரர்கள், கலிலேயா நாட்டின் கானா ஊரானாகிய நாத்தான்வேல், மேலும் இரண்டு சீஷர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். சீமோன் பேதுரு மற்றவர்களிடம், “நான் மீன் பிடிக்கப் போகிறேன்” என்று சொன்னார். அதற்கு மற்ற சீஷர்களும், “நாங்களும் உம்மோடு வருகிறோம்” என்றனர். எனவே அனைவரும் படகில் ஏறிச்சென்றனர். அன்று இரவு அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. மறுநாள் அதிகாலையில் இயேசு கரையில் நின்றிருந்தார். ஆனால் சீஷர்கள் அவரை இயேசு என்று அறிந்துகொள்ளவில்லை. பிறகு இயேசு தன் சீஷர்களிடம், “நண்பர்களே! நீங்கள் ஏதாவது மீன் பிடித்தீர்களா?” என்று கேட்டார். அதற்கு “இல்லை” என்று சீஷர்கள் சொன்னார்கள். இயேசு அவர்களிடம், “நீங்கள் உங்கள் வலைகளைப் படகுக்கு வலது புறமாகப் போடுங்கள். அப்பொழுது நீங்கள் மீன்களைப் பிடிப்பீர்கள்” என்றார். அதன்படி சீஷர்களும் செய்தனர். அவர்கள் வலையைப் படகுக்குள் இழுக்க முடியாத அளவுக்கு ஏராளமான மீன்களைப் பிடித்தனர். எனவே இயேசுவிடம் அன்பாயிருந்த சீஷன் பேதுருவிடம் “இவர் ஆண்டவர்” என்றார். “அவர் இயேசு” என்று சொல்லக் கேட்டவுடன் பேதுரு, இதுவரை மூடப்படாத தன் சரீரத்தை ஆடையால் மூடினான். பிறகு அவன் கடலுக்குள் குதித்துவிட்டான்.

யோவான் 21:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விவரமாவது: சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும், செபெதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது, சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள். ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்