யோவான் 20:24-28
யோவான் 20:24-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இயேசு அங்கே வந்தபோது, பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான திதிமு என்றழைக்கப்பட்ட தோமா சீடர்களுடன் இருக்கவில்லை. எனவே மற்றச் சீடர்கள் அவனிடம், “நாங்கள் கர்த்தரைக் கண்டோம்!” என்றார்கள். ஆனால், தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகள் அடிக்கப்பட்டக் காயத்தை நான் கண்டு, எனது விரலை ஆணி பாய்ந்த காயத்திலும், அவருடைய விலாவிலும் வைத்து பார்த்தாலொழிய நான் அதை விசுவாசிக்கமாட்டேன்” என்றான். இது நடந்து எட்டு நாட்களுக்குப்பின் இயேசுவின் சீடர்கள் அந்த வீட்டில் மீண்டும் கூடியிருந்தார்கள். தோமாவும் அவர்களுடனே இருந்தான். கதவுகள் பூட்டப்பட்டிருந்த போதுங்கூட, இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்” என்றார். பின்பு அவர் தோமாவிடம், “இங்கே உனது விரலைப் போட்டு எனது கைகளைப் பார். உனது கையை நீட்டி என் விலாவைத் தொட்டுப்பார். அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிரு” என்றார். அப்பொழுது தோமா, “என் ஆண்டவரே, என் இறைவனே!” என்றான்.
யோவான் 20:24-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இயேசு வந்திருந்தபோது பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களோடு இருக்கவில்லை. மற்றச் சீடர்கள்: இயேசுவை பார்த்தோம் என்று அவனிடம் சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினால் உண்டான காயத்தை நான் பார்த்து, அந்தக் காயத்திலே என் விரலைவிட்டு, என் கையை அவருடைய விலாவிலே வைத்துப்பார்க்காமல் விசுவாசிக்கமாட்டேன் என்றான். மீண்டும் எட்டு நாட்களுக்குப்பின்பு அவருடைய சீடர்கள் வீட்டிற்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களோடு இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். பின்பு அவர் தோமாவைப் பார்த்து: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கரங்களைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாக இல்லாமல் விசுவாசியாக இரு என்றார். தோமா அவருக்கு மறுமொழியாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.
யோவான் 20:24-28 பரிசுத்த பைபிள் (TAERV)
இயேசு அங்கு தோன்றியபோது தோமா சீஷர்களுடன் இல்லை. அவரது பன்னிரண்டு சீஷர்களுள் தோமாவும் ஒருவன். ஏனைய சீஷர்கள் “நாங்கள் ஆண்டவரைப் பார்த்தோம்” என்று தோமாவிடம் சொன்னார்கள். அதற்கு தோமா “நான் அவரது கைகளில் ஆணிகளின் துவாரங்களைக் காணும்வரை நீங்கள் சொல்வதை நம்பமாட்டேன். அப்படிப் பார்த்தாலும் அந்த ஆணித் துவாரங்களில் எனது விரல்களையும், விலாகாயத்தில் எனது கைகளையும் வைத்துப் பார்ப்பேன். இல்லாவிட்டால் நான் நம்பமாட்டேன்” என்றான். ஒரு வாரத்திற்குப் பின் சீஷர்கள் முன்புபோல் அந்த வீட்டில் மீண்டும் கூடினர். தோமா அவர்களோடு இருந்தான். கதவுகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் இயேசு வந்து அவர்களின் நடுவில் நின்றார். “சமாதானம் உங்களோடு இருக்கட்டும்” என்றார். பிறகு இயேசு தோமாவிடம் “உனது விரல்களை இங்கே வை. எனது கைகளைப் பார். எனது விலாவிலே உன் கையை வைத்துப் பார். சந்தேகத்தை விட்டுவிடு. விசுவாசி” என்றார். அதற்குத் தோமா இயேசுவிடம், “என் ஆண்டவரே! என் தேவனே!” என்று பதில் சொன்னான்.
யோவான் 20:24-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை. மற்ற சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான். மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார். தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.