யோவான் 20:10-18
யோவான் 20:10-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்பு அந்த சீஷர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள். மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து, இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள். அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள். இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள். இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். மகதலேனாமரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.
யோவான் 20:10-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பின்பு சீடர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றார்கள். ஆனால் மரியாளோ கல்லறைக்கு வெளியே அழுதுகொண்டு நின்றாள். அவள் அழுதுகொண்டு குனிந்து கல்லறையினுள்ளே பார்த்தாள். அங்கே வெள்ளையுடை அணிந்த இரண்டு இறைத்தூதர்கள், இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு தூதன் தலைமாட்டிலும் இன்னொரு தூதன் கால்மாட்டிலும் இருந்தார்கள். அவர்கள் அவளிடம், “பெண்ணே, ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவளோ, “அவர்கள் என் கர்த்தரை எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். அவர்கள் அவரை எங்கே வைத்தார்களோ எனக்குத் தெரியவில்லை” என்றாள். இதைச் சொல்லிவிட்டு, அவள் திரும்பியபோது இயேசு அங்கே நிற்பதைக் கண்டாள். ஆனால் அவர் இயேசுவே என்று அவள் அறிந்துகொள்ளவில்லை. அப்பொழுது இயேசு, “பெண்ணே, நீ ஏன் அழுகிறாய்? நீ யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். அவள் அவரைத் தோட்டக்காரன் என நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைக் கொண்டு போயிருந்தால், அவரை எங்கே வைத்தீர் என்று எனக்குச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றாள். அப்பொழுது இயேசு அவளிடம், “மரியாளே!” என்றார். அவள் அவர் நின்ற பக்கமாய்த் திரும்பி, “ரபூனி!” என்று எபிரெய மொழியில் சத்தமாய் சொன்னாள். ரபூனி என்றால், “போதகரே” என்று அர்த்தம். அப்பொழுது இயேசு அவளிடம், “நீ என்னைப் பற்றிக்கொள்ளாதே. ஏனெனில் நான் இன்னும் என் பிதாவினிடத்திற்குத் திரும்பிப் போகவில்லை. நீயோ என் சகோதரரிடம் போய் அவர்களிடம், ‘நான் என் பிதாவினிடத்திற்கும், உங்கள் பிதாவினிடத்திற்கும், என் இறைவனிடத்திற்கும், உங்கள் இறைவனிடத்திற்கும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்” என்றார். மகதலேனா மரியாள் சீடர்களிடம் போய், “நான் கர்த்தரைக் கண்டேன்!” என்று அறிவித்தாள், அவள், கர்த்தர் தனக்குக் கூறிய காரியங்களையும் அவர்களுக்குச் சொன்னாள்.
யோவான் 20:10-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்பு அந்தச் சீடர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள். மரியாள் கல்லறையின் அருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கும்போது அவள் குனிந்து கல்லறைக்கு உள்ளே பார்த்து, இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளை உடை அணிந்தவர்களாக இரண்டு தூதர்கள், தலைபக்கம் ஒருவனும் கால்பக்கம் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாள். அவர்கள் அவளைப் பார்த்து: பெண்ணே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள். இவைகளைச் சொல்லிப் பின்பக்கம் திரும்பி, இயேசு நிற்கிறதைப் பார்த்தாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாமல் இருந்தாள். இயேசு அவளைப் பார்த்து: பெண்ணே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரன் என்று நினைத்து: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போயிருந்தால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்வேன் என்றாள். இயேசு அவளைப் பார்த்து: மரியாளே என்றார். அவள் திரும்பிப்பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தம். இயேசு அவளைப் பார்த்து: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடம் திரும்பிப்போகவில்லை; நீ என் சகோதரர்களிடம்போய், நான் என் பிதாவினிடமும் உங்களுடைய பிதாவினிடமும், என் தேவனிடமும் உங்களுடைய தேவனிடமும் திரும்பிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். மகதலேனா மரியாள் போய், தான் இயேசுவைப் பார்த்ததையும், அவர் தன்னிடம் சொன்னவைகளையும் சீடர்களுக்கு அறிவித்தாள்.
யோவான் 20:10-18 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு அவரது சீஷர்கள் வீட்டிற்குத் திரும்பிப்போனார்கள். ஆனால் மரியாள் கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள். அவ்வாறு அழும்போதே, அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்தாள். வெள்ளை உடைகள் அணிந்த இரு தேவ தூதர்களைப் பார்த்தாள். இயேசுவின் சரீரம் இருந்த இடத்தில் அவர்கள் இருந்தனர். இயேசுவின் தலை இருந்த இடத்தில் ஒரு தேவதூதனும் அவரது பாதங்கள் இருந்த இடத்தில் இன்னொரு தேவதூதனும் இருப்பதைக் கண்டாள். அந்த தேவதூதர்கள் மரியாளிடம், “பெண்ணே! ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டனர். “சிலர் என் ஆண்டவரின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்றாள் மரியாள். அவள் இவ்வாறு சொல்லிவிட்டு திரும்பியபோது இயேசு நின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். ஆனால் அவர்தான் இயேசு என்பதை அவள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவளிடம், “பெண்ணே! ஏன் அழுகிறாய்? நீ யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். மரியாள் அவரை, அந்தத் தோட்டத்தின் காவல்காரனாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். எனவே அவள் அவரிடம், “ஐயா, நீங்களா இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போனீர்கள்? அவரை எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். நான் போய் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றாள். இயேசு “மரியாளே” என்று அழைத்தார். மரியாள் திரும்பி இயேசுவைப் பார்த்து, “ ரபூனீ ” என்று யூத மொழியில் கூப்பிட்டாள். (இதற்கு போதகரே என்று பொருள்) இயேசு அவளிடம், “என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவிடம் திரும்பிச் செல்லவில்லை. ஆனால் போய் என் சகோதரர்களிடம், ‘நான் என் பிதாவிடமும் உங்களின் பிதாவிடமும் செல்கிறேன். நான் என் தேவனிடமும் உங்களின் தேவனிடமும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்” என்றார். மகதலேனா மரியாள் சீஷர்களிடம் சென்று, “நான் ஆண்டவரைப் பார்த்தேன்” என்று சொன்னாள். அதோடு அவர் சொன்னவற்றையும் சொன்னாள்.