யோவான் 20:1-18

யோவான் 20:1-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போட்டிருக்கக்கண்டாள். உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்ற சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள். அப்பொழுது பேதுருவும் மற்ற சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள். பேதுருவைப்பார்க்கிலும் மற்ற சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து, அதற்குள்ளே குனிந்து பார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை. சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து, சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்ற சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான். முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த மற்ற சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, கண்டு விசுவாசித்தான். அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள். பின்பு அந்த சீஷர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள். மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து, இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள். அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள். இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள். இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். மகதலேனாமரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.

யோவான் 20:1-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

வாரத்தின் முதலாவது நாள் அதிகாலையிலே, இன்னும் இருட்டாயிருக்கையிலே மகதலேனா மரியாள் கல்லறைக்குப் போனாள். அங்கே கல்லறையின் வாசலில் இருந்த கல் புரட்டப்பட்டிருப்பதை அவள் கண்டாள். எனவே அவள் சீமோன் பேதுருவிடமும், இயேசு அன்பு செலுத்திய மற்றச் சீடர்களிடமும் ஓடிவந்து, “கல்லறையிலிருந்து கர்த்தரின் உடலை அவர்கள் எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். அவர்கள் அவரை எங்கே வைத்திருக்கிறார்களோ எங்களுக்குத் தெரியாது!” என்றாள். எனவே பேதுருவும், மற்றச் சீடனும் கல்லறையை நோக்கிச் சென்றார்கள். அவர்கள் இருவரும் ஒருமித்து ஓடினார்கள். ஆனால் மற்றச் சீடனோ பேதுருவை முந்திக் கொண்டு கல்லறைக்கு முதலில் போய்ச் சேர்ந்தான். அவன் குனிந்து பார்த்தபோது, மென்பட்டுத் துணிகள் அங்கே கிடப்பதைக் கண்டான். அவனோ உள்ளே போகவில்லை. பின்பு அவனுக்குப்பின்னாக வந்த சீமோன் பேதுருவோ, வந்து சேர்ந்தவுடன் கல்லறைக்கு உள்ளே போனான். அங்கே மென்பட்டுத் துணிகள் கிடப்பதைக் கண்டான். இயேசுவின் தலையைச் சுற்றிக் கட்டியிருந்த துணியும் அங்கே கிடந்தது. அது மென்பட்டுத் துணியோடு அல்லாமல், தனியாக மடித்து வைக்கப்பட்டிருந்தது. பின்பு முதலாவதாகக் கல்லறைக்கு வந்திருந்த மற்றச் சீடனும் உள்ளே போனான். அவனும் கண்டு விசுவாசித்தான். ஆனால் இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்க வேண்டும் என்ற வேதவசனத்தை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. பின்பு சீடர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றார்கள். ஆனால் மரியாளோ கல்லறைக்கு வெளியே அழுதுகொண்டு நின்றாள். அவள் அழுதுகொண்டு குனிந்து கல்லறையினுள்ளே பார்த்தாள். அங்கே வெள்ளையுடை அணிந்த இரண்டு இறைத்தூதர்கள், இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு தூதன் தலைமாட்டிலும் இன்னொரு தூதன் கால்மாட்டிலும் இருந்தார்கள். அவர்கள் அவளிடம், “பெண்ணே, ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவளோ, “அவர்கள் என் கர்த்தரை எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். அவர்கள் அவரை எங்கே வைத்தார்களோ எனக்குத் தெரியவில்லை” என்றாள். இதைச் சொல்லிவிட்டு, அவள் திரும்பியபோது இயேசு அங்கே நிற்பதைக் கண்டாள். ஆனால் அவர் இயேசுவே என்று அவள் அறிந்துகொள்ளவில்லை. அப்பொழுது இயேசு, “பெண்ணே, நீ ஏன் அழுகிறாய்? நீ யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். அவள் அவரைத் தோட்டக்காரன் என நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைக் கொண்டு போயிருந்தால், அவரை எங்கே வைத்தீர் என்று எனக்குச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றாள். அப்பொழுது இயேசு அவளிடம், “மரியாளே!” என்றார். அவள் அவர் நின்ற பக்கமாய்த் திரும்பி, “ரபூனி!” என்று எபிரெய மொழியில் சத்தமாய் சொன்னாள். ரபூனி என்றால், “போதகரே” என்று அர்த்தம். அப்பொழுது இயேசு அவளிடம், “நீ என்னைப் பற்றிக்கொள்ளாதே. ஏனெனில் நான் இன்னும் என் பிதாவினிடத்திற்குத் திரும்பிப் போகவில்லை. நீயோ என் சகோதரரிடம் போய் அவர்களிடம், ‘நான் என் பிதாவினிடத்திற்கும், உங்கள் பிதாவினிடத்திற்கும், என் இறைவனிடத்திற்கும், உங்கள் இறைவனிடத்திற்கும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்” என்றார். மகதலேனா மரியாள் சீடர்களிடம் போய், “நான் கர்த்தரைக் கண்டேன்!” என்று அறிவித்தாள், அவள், கர்த்தர் தனக்குக் கூறிய காரியங்களையும் அவர்களுக்குச் சொன்னாள்.

யோவான் 20:1-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடு, மகதலேனா மரியாள் கல்லறைக்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போடப்பட்டிருப்பதைப் பார்த்தாள். உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவிடமும் இயேசுவிற்கு அன்பாக இருந்த மற்ற சீடனிடமும்போய்: கர்த்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள். அப்பொழுது பேதுருவும் மற்ற சீடனும் கல்லறைக்குப் போவதற்காகப் புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள். பேதுருவைவிட மற்ற சீடன் வேகமாக ஓடி, முதலில் கல்லறைக்கு வந்து, அதற்குள்ளே குனிந்து பார்த்து, துணிகள் கிடக்கிறதைப் பார்த்தான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை. சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே நுழைந்து, துணிகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த துணி மற்றத் துணிகளோடு வைக்காமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் பார்த்தான். முதலில் கல்லறைக்கு வந்த மற்ற சீடனும் அப்பொழுது உள்ளே நுழைந்து, பார்த்து விசுவாசித்தான். அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாமல் இருந்தார்கள். பின்பு அந்தச் சீடர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள். மரியாள் கல்லறையின் அருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கும்போது அவள் குனிந்து கல்லறைக்கு உள்ளே பார்த்து, இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளை உடை அணிந்தவர்களாக இரண்டு தூதர்கள், தலைபக்கம் ஒருவனும் கால்பக்கம் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாள். அவர்கள் அவளைப் பார்த்து: பெண்ணே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள். இவைகளைச் சொல்லிப் பின்பக்கம் திரும்பி, இயேசு நிற்கிறதைப் பார்த்தாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாமல் இருந்தாள். இயேசு அவளைப் பார்த்து: பெண்ணே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரன் என்று நினைத்து: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போயிருந்தால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்வேன் என்றாள். இயேசு அவளைப் பார்த்து: மரியாளே என்றார். அவள் திரும்பிப்பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தம். இயேசு அவளைப் பார்த்து: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடம் திரும்பிப்போகவில்லை; நீ என் சகோதரர்களிடம்போய், நான் என் பிதாவினிடமும் உங்களுடைய பிதாவினிடமும், என் தேவனிடமும் உங்களுடைய தேவனிடமும் திரும்பிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். மகதலேனா மரியாள் போய், தான் இயேசுவைப் பார்த்ததையும், அவர் தன்னிடம் சொன்னவைகளையும் சீடர்களுக்கு அறிவித்தாள்.

யோவான் 20:1-18 பரிசுத்த பைபிள் (TAERV)

வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் மகதலேனா மரியாள், இயேசுவின் சரீரம் இருந்த கல்லறைக்குச் சென்றாள். அது அப்பொழுதும் இருளாக இருந்தது. கல்லறை வாசலை மூடியிருந்த பெரிய கல் விலக்கி வைக்கப்பட்டிருப்பதை அவள் கண்டாள். எனவே மரியாள் சீமோன் பேதுருவிடமும் இன்னொரு சீஷனிடமும் (இயேசு நேசித்தவன்) ஓடிச் சென்று “அவர்கள் கர்த்தரது சரீரத்தைக் கல்லறையைவிட்டு அப்புறப்படுத்திவிட்டனர். அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்றாள். உடனே பேதுருவும் இன்னொரு சீஷனும் கல்லறையை நோக்கிப் போனார்கள். இருவரும் ஓடினாலும், பேதுருவைவிட அடுத்தவன் வேகமாக ஓடிப் போனான். எனவே அந்த சீஷன் முதலில் கல்லறையை அடைந்தான். அவன் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்தான். துண்டுத்துணிகள் அங்கே கிடப்பதைக் கண்டான். ஆனால் உள்ளே அவன் போகவில்லை. பிறகு சீமோன் பேதுரு அவனுக்குப் பின்னால் வந்தான். பேதுரு கல்லறைக்குள்ளே போனான். அங்கே துணிகள் கிடப்பதைப் பார்த்தான். தலையில் சுற்றப்பட்ட துணி தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பிறகு அடுத்த சீஷனும் உள்ளே போனான். இந்த சீஷன்தான் கல்லறையை முதலாவது ஓடிவந்து சேர்ந்தவன். அவன் நிகழ்ந்ததை எல்லாம் பார்த்து நம்பிக்கைகொண்டான். (இந்த சீஷர்கள், வேதவாக்கியங்களின்படி இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழவேண்டும் என்று இன்னும் புரிந்துகொள்ளாமல் இருந்தனர்) பிறகு அவரது சீஷர்கள் வீட்டிற்குத் திரும்பிப்போனார்கள். ஆனால் மரியாள் கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள். அவ்வாறு அழும்போதே, அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்தாள். வெள்ளை உடைகள் அணிந்த இரு தேவ தூதர்களைப் பார்த்தாள். இயேசுவின் சரீரம் இருந்த இடத்தில் அவர்கள் இருந்தனர். இயேசுவின் தலை இருந்த இடத்தில் ஒரு தேவதூதனும் அவரது பாதங்கள் இருந்த இடத்தில் இன்னொரு தேவதூதனும் இருப்பதைக் கண்டாள். அந்த தேவதூதர்கள் மரியாளிடம், “பெண்ணே! ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டனர். “சிலர் என் ஆண்டவரின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்றாள் மரியாள். அவள் இவ்வாறு சொல்லிவிட்டு திரும்பியபோது இயேசு நின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். ஆனால் அவர்தான் இயேசு என்பதை அவள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவளிடம், “பெண்ணே! ஏன் அழுகிறாய்? நீ யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். மரியாள் அவரை, அந்தத் தோட்டத்தின் காவல்காரனாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். எனவே அவள் அவரிடம், “ஐயா, நீங்களா இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போனீர்கள்? அவரை எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். நான் போய் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றாள். இயேசு “மரியாளே” என்று அழைத்தார். மரியாள் திரும்பி இயேசுவைப் பார்த்து, “ ரபூனீ ” என்று யூத மொழியில் கூப்பிட்டாள். (இதற்கு போதகரே என்று பொருள்) இயேசு அவளிடம், “என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவிடம் திரும்பிச் செல்லவில்லை. ஆனால் போய் என் சகோதரர்களிடம், ‘நான் என் பிதாவிடமும் உங்களின் பிதாவிடமும் செல்கிறேன். நான் என் தேவனிடமும் உங்களின் தேவனிடமும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்” என்றார். மகதலேனா மரியாள் சீஷர்களிடம் சென்று, “நான் ஆண்டவரைப் பார்த்தேன்” என்று சொன்னாள். அதோடு அவர் சொன்னவற்றையும் சொன்னாள்.