யோவான் 20:1-10
யோவான் 20:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
வாரத்தின் முதலாவது நாள் அதிகாலையிலே, இன்னும் இருட்டாயிருக்கையிலே மகதலேனா மரியாள் கல்லறைக்குப் போனாள். அங்கே கல்லறையின் வாசலில் இருந்த கல் புரட்டப்பட்டிருப்பதை அவள் கண்டாள். எனவே அவள் சீமோன் பேதுருவிடமும், இயேசு அன்பு செலுத்திய மற்றச் சீடர்களிடமும் ஓடிவந்து, “கல்லறையிலிருந்து கர்த்தரின் உடலை அவர்கள் எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். அவர்கள் அவரை எங்கே வைத்திருக்கிறார்களோ எங்களுக்குத் தெரியாது!” என்றாள். எனவே பேதுருவும், மற்றச் சீடனும் கல்லறையை நோக்கிச் சென்றார்கள். அவர்கள் இருவரும் ஒருமித்து ஓடினார்கள். ஆனால் மற்றச் சீடனோ பேதுருவை முந்திக் கொண்டு கல்லறைக்கு முதலில் போய்ச் சேர்ந்தான். அவன் குனிந்து பார்த்தபோது, மென்பட்டுத் துணிகள் அங்கே கிடப்பதைக் கண்டான். அவனோ உள்ளே போகவில்லை. பின்பு அவனுக்குப்பின்னாக வந்த சீமோன் பேதுருவோ, வந்து சேர்ந்தவுடன் கல்லறைக்கு உள்ளே போனான். அங்கே மென்பட்டுத் துணிகள் கிடப்பதைக் கண்டான். இயேசுவின் தலையைச் சுற்றிக் கட்டியிருந்த துணியும் அங்கே கிடந்தது. அது மென்பட்டுத் துணியோடு அல்லாமல், தனியாக மடித்து வைக்கப்பட்டிருந்தது. பின்பு முதலாவதாகக் கல்லறைக்கு வந்திருந்த மற்றச் சீடனும் உள்ளே போனான். அவனும் கண்டு விசுவாசித்தான். ஆனால் இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்க வேண்டும் என்ற வேதவசனத்தை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. பின்பு சீடர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றார்கள்.
யோவான் 20:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடு, மகதலேனா மரியாள் கல்லறைக்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போடப்பட்டிருப்பதைப் பார்த்தாள். உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவிடமும் இயேசுவிற்கு அன்பாக இருந்த மற்ற சீடனிடமும்போய்: கர்த்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள். அப்பொழுது பேதுருவும் மற்ற சீடனும் கல்லறைக்குப் போவதற்காகப் புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள். பேதுருவைவிட மற்ற சீடன் வேகமாக ஓடி, முதலில் கல்லறைக்கு வந்து, அதற்குள்ளே குனிந்து பார்த்து, துணிகள் கிடக்கிறதைப் பார்த்தான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை. சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே நுழைந்து, துணிகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த துணி மற்றத் துணிகளோடு வைக்காமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் பார்த்தான். முதலில் கல்லறைக்கு வந்த மற்ற சீடனும் அப்பொழுது உள்ளே நுழைந்து, பார்த்து விசுவாசித்தான். அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாமல் இருந்தார்கள். பின்பு அந்தச் சீடர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
யோவான் 20:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)
வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் மகதலேனா மரியாள், இயேசுவின் சரீரம் இருந்த கல்லறைக்குச் சென்றாள். அது அப்பொழுதும் இருளாக இருந்தது. கல்லறை வாசலை மூடியிருந்த பெரிய கல் விலக்கி வைக்கப்பட்டிருப்பதை அவள் கண்டாள். எனவே மரியாள் சீமோன் பேதுருவிடமும் இன்னொரு சீஷனிடமும் (இயேசு நேசித்தவன்) ஓடிச் சென்று “அவர்கள் கர்த்தரது சரீரத்தைக் கல்லறையைவிட்டு அப்புறப்படுத்திவிட்டனர். அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்றாள். உடனே பேதுருவும் இன்னொரு சீஷனும் கல்லறையை நோக்கிப் போனார்கள். இருவரும் ஓடினாலும், பேதுருவைவிட அடுத்தவன் வேகமாக ஓடிப் போனான். எனவே அந்த சீஷன் முதலில் கல்லறையை அடைந்தான். அவன் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்தான். துண்டுத்துணிகள் அங்கே கிடப்பதைக் கண்டான். ஆனால் உள்ளே அவன் போகவில்லை. பிறகு சீமோன் பேதுரு அவனுக்குப் பின்னால் வந்தான். பேதுரு கல்லறைக்குள்ளே போனான். அங்கே துணிகள் கிடப்பதைப் பார்த்தான். தலையில் சுற்றப்பட்ட துணி தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பிறகு அடுத்த சீஷனும் உள்ளே போனான். இந்த சீஷன்தான் கல்லறையை முதலாவது ஓடிவந்து சேர்ந்தவன். அவன் நிகழ்ந்ததை எல்லாம் பார்த்து நம்பிக்கைகொண்டான். (இந்த சீஷர்கள், வேதவாக்கியங்களின்படி இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழவேண்டும் என்று இன்னும் புரிந்துகொள்ளாமல் இருந்தனர்) பிறகு அவரது சீஷர்கள் வீட்டிற்குத் திரும்பிப்போனார்கள்.
யோவான் 20:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போட்டிருக்கக்கண்டாள். உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்ற சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள். அப்பொழுது பேதுருவும் மற்ற சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள். பேதுருவைப்பார்க்கிலும் மற்ற சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து, அதற்குள்ளே குனிந்து பார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை. சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து, சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்ற சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான். முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த மற்ற சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, கண்டு விசுவாசித்தான். அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள். பின்பு அந்த சீஷர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.