யோவான் 2:12-17

யோவான் 2:12-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இதற்குப் பின்பு இயேசு தம்முடைய தாயோடும், சகோதரரோடும், தம்முடைய சீடரோடும் கப்பர்நகூமுக்குச் சென்றார். அங்கே அவர்கள் சிலநாட்கள் தங்கினார்கள். யூதருடைய பஸ்கா என்ற பண்டிகைக்கான காலம் நெருங்கி வந்தபோது, இயேசு எருசலேமுக்குச் சென்றார். ஆலய முற்றத்திலே ஆடுமாடுகளையும், புறாக்களையும் விற்கிறவர்களை அவர் கண்டார். இன்னும் சிலர் அங்கே உட்கார்ந்து மேஜைகளிலே நாணய மாற்று வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும் கண்டார். எனவே இயேசு ஒரு கயிற்றைச் சவுக்கைப்போல் முறுக்கி எடுத்துக்கொண்டு, அவர்கள் எல்லோரையும் ஆலயப் பகுதியில் இருந்து துரத்தினார். ஆடுமாடுகளையும் துரத்தினார். நாணயம் மாற்றுவதில் ஈடுபட்டிருந்தவர்களின் நாணயங்களை எல்லாம் அவர் கொட்டிச் சிதறடித்து, அவர்களுடைய மேஜைகளைப் புரட்டித்தள்ளினார். இயேசு புறாக்களை விற்றுக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து, “இவைகளை இங்கிருந்து அகற்றிவிடுங்கள். என்னுடைய பிதாவின் வீட்டைச் சந்தையாக மாற்ற எப்படித் துணிந்தீர்கள்!” என்றார். அப்பொழுது இயேசுவினுடைய சீடர்களுக்கு, “உம்முடைய வீட்டைக் குறித்த பக்தி வைராக்கியம் என்னைச் சுட்டெரித்தது” என்று எழுதப்பட்டிருப்பது நினைவுக்கு வந்தது.

யோவான் 2:12-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அதன்பின்பு, அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரர்களும் அவருடைய சீடர்களும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சிலநாட்கள் தங்கினார்கள். பின்பு யூதர்களுடைய பஸ்காபண்டிகை நெருங்கியிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப்போய், தேவாலயத்திலே ஆடுகள், மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், பணம் மாற்றுகிறவர்கள் உட்கார்ந்திருக்கிறதையும் பார்த்து, கயிற்றினால் ஒரு சாட்டையை உண்டாக்கி, அவர்கள் அனைவரையும் ஆடுமாடுகளையும், தேவாலயத்திற்கு வெளியே துரத்திவிட்டு, பணம் மாற்றுக்காரர்களுடைய பணங்களைக் கொட்டி, மேசைகளைக் கவிழ்த்துப்போட்டு, புறா விற்கிறவர்களைப் பார்த்து: இவைகளை இந்த இடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்தியின் வைராக்கியம் தீயைப்போல என்னை எரித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீடர்கள் நினைவுகூர்ந்தார்கள்.

யோவான் 2:12-17 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு இயேசு கப்பர்நகூம் நகருக்குச் சென்றார். அவரோடு அவரது தாயும், சகோதரர்களும் சீஷர்களும் சென்றனர். அவர்கள் அங்கே கொஞ்ச நாட்கள் தங்கினர். அப்போது யூதர்களின் பஸ்கா பண்டிகை நெருங்கிக்கொண்டிருந்தது. ஆகையால் இயேசு எருசலேமுக்குச் சென்றார். அங்கே அவர் தேவாலயத்தில் நுழைந்தார். தேவாலயத்தில் வியாபாரிகள் ஆடுகள், மாடுகள், புறாக்கள் போன்றவற்றை விற்றுக்கொண்டிருந்தனர். மேசைக்கு அருகில் அமர்ந்திருக்கும் வேறு சிலரையும் இயேசு கவனித்தார். அவர்கள் பொதுமக்கள் பணத்தை பண்டமாற்று செய்தபடி இருந்தார்கள். இயேசு கயிறுகளால் ஒரு சவுக்கை உருவாக்கினார். அந்த வியாபாரிகளையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்திற்கு வெளியே அடித்துத் துரத்தினார். அவர் மேஜைகள் பக்கம் திரும்பி காசுக்காரர்களுடைய காசுகளைக் கொட்டினார். அப்பலகைகளைக் கவிழ்த்துப்போட்டார். புறா விற்கிறவர்களைப் பார்த்து, “இவற்றை எடுத்துக்கொண்டு இங்கே இருந்து வெளியே செல்லுங்கள். என் பிதாவின் வீட்டைச் சந்தைக்கடை ஆக்காதீர்கள்” என்று இயேசு கட்டளையிட்டார். இது இவ்வாறு நிகழும்போது, இயேசுவின் சீஷர்கள் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும் வேதவாக்கியங்களை நினைவுகூர்ந்தனர்.

யோவான் 2:12-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அதன் பின்பு, அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவருடைய சீஷரும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சில நாள் தங்கினார்கள். பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய், தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு, புறா விற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள்.