யோவான் 19:23-26

யோவான் 19:23-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

படைவீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்த பின்பு, அவர்கள் அவருடைய உடைகளை எடுத்து, ஒவ்வொரு வீரனுக்கும் ஒவ்வொரு பங்காக, அதை நான்காகத் தங்களுக்குள்ளே பிரித்தெடுத்தார்கள். ஆனால் அவருடைய உள் உடை தைக்கப்படாமல் மேலிருந்து கீழ்வரை நெய்யப்பட்டதாயிருந்தது. எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “நாம் இதைக் கிழிக்கக் கூடாது. இது யாருக்குக் கிடைக்கும் என்று பார்ப்பதற்குச் சீட்டுப் போடுவோம்” என்றார்கள். “அவர்கள் என் உடைகளைத் தங்களுக்குள் பிரித்தெடுத்துக் கொண்டார்கள், எனது உடைக்காக சீட்டுப்போட்டார்கள்.” என்ற வேதவசனம் நிறைவேறும்படி இது நடந்தது. இதையே அந்த படைவீரர்கள் செய்தார்கள். இயேசுவின் சிலுவை அருகே அவருடைய தாயும், தாயின் சகோதரியும், கிலேயோப்பாவின் மனைவி மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றார்கள். தமது தாயும், தான் நேசித்த சீடனும் அருகே நிற்பதை இயேசு கண்டபோது, அங்கே அவர் தமது தாயிடம், “அம்மா, இதோ, உன் மகன்” என்றார்.

யோவான் 19:23-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

படைவீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய ஆடைகளை எடுத்து, ஒவ்வொரு படைவீரனுக்கும் ஒவ்வொரு பாகமாக நான்கு பாகமாக்கினார்கள்; மேல் அங்கியையும் எடுத்தார்கள், அந்த மேல் அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாக இருந்தது. அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் ஆடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் படைவீரர்கள் இப்படிச்செய்தார்கள். இயேசுவின் சிலுவையின் அருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும், அருகே நின்ற தமக்கு அன்பாக இருந்த சீடனையும் பார்த்து, தம்முடைய தாயிடம்: “பெண்ணே, அதோ, உன் மகன்” என்றார்.

யோவான் 19:23-26 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆணிகளால் இயேசுவைச் சிலுவையில் அறைந்த பிற்பாடு, சேவகர்கள் அவரது ஆடையை எடுத்துக்கொண்டனர். அவர்கள் அதனை நான்கு பாகங்களாகப் பங்கு வைத்தனர். ஒவ்வொரு சேவகனும் ஒரு பாகத்தைப் பெற்றான். அவர்கள் அவரது அங்கியையும் எடுத்தனர். அது தையலில்லாமல் ஒரே துணியாக நெய்யப்பட்டிருந்தது. எனவே சேவகர்கள் தங்களுக்குள், “இதனை நாம் கிழித்து பங்கு போட வேண்டாம். அதைவிட இது யாருக்கு என்று சீட்டுப் போட்டு எடுத்துக்கொள்வோம்” என சொல்லிக் கொண்டனர். “அவர்கள் என் ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டனர். என் அங்கியின் மேல் சீட்டுப்போட்டார்கள்” என்று வேதவாக்கியம் கூறியது நிறைவேறும்படிக்கு இவ்வாறு நிகழ்ந்தது. இயேசுவின் தாயார் சிலுவையின் அருகில் நின்றிருந்தார். அவரது தாயின் சகோதரியும், கிலேயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். இயேசு அவருடைய தாயைப் பார்த்தார். அவரால் பெரிதும் நேசிக்கப்பட்ட சீஷனையும் அங்கே பார்த்தார். அவர் தன் தாயிடம், “அன்பான பெண்ணே, அதோ உன் குமாரன்” என்றார்.

யோவான் 19:23-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

போர்ச்சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது. அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள். இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனாமரியாளும் நின்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.