யோவான் 18:19-23
யோவான் 18:19-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அவ்வேளையில் பிரதான ஆசாரியன், இயேசுவின் சீடரைக் குறித்தும், அவருடைய போதனையைக் குறித்தும் விசாரித்தான். இயேசு அவனுக்கு சொன்னதாவது: “நான் உலகத்துடன் பகிரங்கமாகப் பேசினேன். யூதரெல்லோரும் கூடிவருகின்ற ஜெப ஆலயங்களிலும், எருசலேம் ஆலயத்திலும் எப்பொழுதும் போதித்தேன். நான் இரகசியமாக எதுவுமே சொல்லவில்லை. நீங்கள் ஏன் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள்? நான் சொன்னவற்றைக் கேட்டவர்களிடம் விசாரியுங்கள். நான் என்ன சொன்னேன் என்பது நிச்சயமாக அவர்களுக்குத் தெரியும்.” இயேசு இப்படியாக சொன்னபோது, அருகே நின்ற காவலரில் ஒருவன் அவருடைய முகத்திலே அறைந்தான். அவன், “பிரதான ஆசாரியனுக்கு இவ்விதமாகவா பதில் சொல்வது?” என்றான். அதற்கு இயேசு, “நான் எதையாவது தவறாகச் சொல்லியிருந்தால், தவறு என்னவென்று சொல். நான் பேசியது உண்மையானால், நீ ஏன் என்னை அடித்தாய்?” என்றார்.
யோவான் 18:19-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீடர்களைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் வெளியரங்கமாக மக்களுடனே பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும், யூதர்கள் எல்லோரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் போதித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை. நீர் என்னிடத்தில் விசாரிக்க வேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார். இப்படி அவர் சொன்னபொழுது, அருகில் நின்ற காவலர்களில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். இயேசு அவனைப் பார்த்து: நான் பேசியது, தவறாக இருந்தால் எது தவறு என்று காட்டு; நான் பேசியது சரியானால், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.
யோவான் 18:19-23 பரிசுத்த பைபிள் (TAERV)
தலைமை ஆசாரியன் இயேசுவிடம் அவரது சீஷர்களைக் குறித்து விசாரித்தான். அதோடு அவரது போதனைகளைக்குறித்து விசாரித்தான். அதற்கு இயேசு, “நான் மக்களிடம் எப்பொழுதும் வெளிப்படையாகவே பேசிவந்தேன். நான் எப்பொழுதும் யூதர்கள் கூடும் அரங்கங்களிலும், ஆலயங்களிலுமே உபதேசித்து இருக்கிறேன். யூதர்கள் எல்லோரும் அங்கு வந்திருக்கிறார்கள். நான் எதையும் இரகசியமாகப் பேசவில்லை. அப்படியிருக்க நீங்கள் ஏன் என்னை விசாரிக்கிறீர்கள்? என் போதனைகளைக் கேட்டவர்களை விசாரித்துப் பாருங்கள். நான் என்ன சொன்னேன் என்பது அவர்களுக்குத் தெரியும்” என்றார். இயேசு இவ்வாறு சொன்னபோது, அவர் அருகிலே நின்றிருந்த சேவகரில் ஒருவன் அவரை ஓர் அறை அறைந்தான். அவன், “நீ தலைமை ஆசாரியனிடம் அந்த முறையில் பதில் சொல்லக்கூடாது” என்று எச்சரித்தான். அதற்கு இயேசு, “நான் ஏதாவது தப்பாகப் பேசியிருந்தால் எது தப்பு என்று இங்கு இருக்கிற எல்லாருக்கும் சொல். ஆனால் நான் சொன்னவை சரி என்றால் பிறகு ஏன் என்னை அடிக்கிறாய்?” என்று கேட்டார்.
யோவான் 18:19-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை. நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார். இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.