யோவான் 18:15-18

யோவான் 18:15-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சீமோன் பேதுருவும் இன்னொரு சீடனும் இயேசுவுக்குப் பின்னால் போய்க்கொண்டிருந்தார்கள். அந்தச் சீடன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானபடியால், அவன் இயேசுவுடனே பிரதான ஆசாரியரின் மாளிகை முற்றத்திற்குள் போனான். ஆனால் பேதுருவோ வெளியே வாசல் அருகே நிற்க வேண்டியதாயிருந்தது. பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமான அந்த இன்னொரு சீடன் திரும்பிவந்து, வாசல் காக்கும் பெண்ணுடனே பேசி, பேதுருவை உள்ளே கூட்டிக்கொண்டு போனான். வாசலில் இருந்த அந்த பெண் பேதுருவிடம், “நீயும் அந்த மனிதனின் சீடர்களில் ஒருவன் அல்லவா?” என்றாள். அதற்கு அவன், “நான் அல்ல” என்றான். அங்கே மிகவும் குளிராய் இருந்தது. அங்கேயிருந்த வேலைக்காரரும் சேவகர்களும் குளிர்காயும்படி, நெருப்புமூட்டி அதைச் சுற்றி நின்றார்கள். பேதுருவும் அங்கே அவர்களுடன் நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தான்.

யோவான் 18:15-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சீமோன்பேதுருவும் வேறொரு சீடனும் இயேசுவிற்குப் பின்னே சென்றார்கள். அந்தச் சீடன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாக இருந்ததினால் இயேசுவுடன் பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்குள் நுழைந்தான். பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாக இருந்த மற்றச் சீடன் வெளியே வந்து, வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான். அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவைப் பார்த்து: நீயும் அந்த மனிதனுடைய சீடர்களில் ஒருவனல்லவா என்றாள். அவன்: நான் இல்லை என்றான். குளிர்காலமாக இருந்ததினாலே அதிகாரிகளும் காவலர்களும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள்; அவர்களோடு பேதுருவும் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.

யோவான் 18:15-18 பரிசுத்த பைபிள் (TAERV)

சீமோன் பேதுருவும் இயேசுவின் இன்னொரு சீஷனும் இயேசுவைப் பின்தொடர்ந்து போனார்கள். அந்தச் சீஷன் தலைமை ஆசாரியனை அறிந்திருந்தான். அதனால் அவன் இயேசுவைப் பின்தொடர்ந்து தலைமை ஆசாரியனின் முற்றம் போனான். ஆனால் பேதுரு வாசலுக்கு வெளியே காத்திருந்தான். தலைமை ஆசாரியனைத் தெரிந்த சீஷன் வெளியே வந்தான். அவன் கதவைத் திறந்த பெண்ணோடு பேசினான். பிறகு அவன் பேதுருவையும் உள்ளே அழைத்துக்கொண்டு போனான். வாசலுக்குக் காவலாக இருந்த அந்தப் பெண் பேதுருவிடம் “நீயும் இந்த மனிதனின் சீஷர்களுள் ஒருவன் தானே?” என்று கேட்டாள். அதற்குப் பேதுரு “இல்லை. நான் அல்ல” என்றான். அது குளிர்காலம். எனவே வேலைக்காரர்களும், சேவகர்களும் நெருப்பை உண்டாக்கினர். அவர்கள் அதைச் சுற்றி நின்றுகொண்டு குளிர் காய்ந்தனர். பேதுருவும் அவர்களோடு குளிர்காய நின்றுகொண்டான்.

யோவான் 18:15-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சீமோன் பேதுருவும் வேறொரு சீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால் இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான். பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்றச் சீஷன் வெளியே வந்து, வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான். அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவை நோக்கி: நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றாள். அவன்: நான் அல்ல என்றான். குளிர்காலமானபடியினாலே ஊழியக்காரரும் சேவகரும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள்; அவர்களுடனேகூடப் பேதுருவும் நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தான்.