யோவான் 15:18-25

யோவான் 15:18-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“உலகம் உங்களை வெறுக்கும்போது, முதலில் அது என்னையே வெறுத்தது என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் உலகத்துக்கு சொந்தமானவர்களாய் இருந்தால், அது உங்களைத் தன்னுடையவர்களென்று ஏற்று, உங்களில் அன்பாயிருக்கும். ஆனால், நீங்கள் உலகத்துக்குச் சொந்தமானவர்கள் அல்ல. நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்தெடுத்து வேறுபிரித்தேன். அதனாலேயே உலகம் உங்களை வெறுக்கிறது. நான் உங்களுடன் பேசிய வார்த்தைகளை நினைவில் வைத்திருங்கள்: ‘எந்த வேலையாளும் தன்னுடைய எஜமானைவிடப் பெரியவன் அல்ல.’ அவர்கள் என்னைத் துன்புறுத்தினால், உங்களையும் துன்புறுத்துவார்கள். அவர்கள் என்னுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தால், உங்களுடைய வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிவார்கள். அவர்கள் என்னை அனுப்பிய பிதாவை அறியாமல் இருக்கிறார்கள். அதனாலேயே என் பெயரின் நிமித்தம் உங்களைத் துன்புறுத்துவார்கள். நான் வந்து அவர்களுடனே பேசியிருக்காவிட்டால், பாவத்தின் குற்றம் அவர்கள்மேல் சுமராது. ஆனால் இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்து அவர்களால் எந்தச் சாக்குப்போக்கும் சொல்லமுடியாது. என்னை வெறுக்கிறவன் என் பிதாவையும் வெறுக்கிறான். வேறு யாரும் செய்திராத கிரியைகளை நான் அவர்கள் மத்தியில் செய்தேனே. அப்படி நான் செய்திராவிட்டால் அவர்கள்மேல் பாவத்தின் குற்றம் சுமராது. ஆனால் இப்பொழுதோ அவர்கள் இந்த கிரியைகளைக் கண்டிருந்தும், என்னையும் என் பிதாவையும் வெறுக்கிறார்கள். ‘அவர்கள் காரணமின்றி என்னை வெறுக்கிறார்கள்’ என்று அவர்களுடைய சட்டத்தில் எழுதப்பட்டிருப்பது நிறைவேறும்படியே இப்படி நடந்தது.

யோவான் 15:18-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராக இருந்தால், உலகம் தன்னுடையதை நேசித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராக இல்லாதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. வேலைக்காரன் தன் எஜமானைவிட பெரியவன் இல்லை என்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினது உண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வார்த்தையை கடைபிடித்தது உண்டானால், உங்களுடைய வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள். அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள். நான் வந்து அவர்களோடு பேசாதிருந்தால் அவர்களுக்குப் பாவம் இருக்காது; இப்பொழுதோ தங்களுடைய பாவத்தைக்குறித்து சாக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை. என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான். வேறொருவரும் செய்யாத செயல்களை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தால், அவர்களுக்குப் பாவம் இருக்காது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் பார்த்தும், பகைத்தும் இருக்கிறார்கள். காரணம் இல்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதி இருக்கிற வாக்கியம் நிறைவேறும்படி இப்படியானது.

யோவான் 15:18-25 பரிசுத்த பைபிள் (TAERV)

“இந்த உலகம் உங்களைப் பகைத்தால், அது என்னைத்தான் முதலில் பகைக்கிறது என்பதை நினைவுகொள்ளுங்கள். நீங்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் அது தன் மனிதர்களை நேசிப்பதுபோன்று உங்களையும் நேசிக்கும். ஆனால் நான் உங்களை உலகத்திலிருந்து தேர்ந்து எடுத்துவிட்டேன். அதனால்தான் உலகம் உங்களைப் பகைக்கிறது. “ஒரு வேலைக்காரன் தன் எஜமானனைவிடப் பெரியவன் அல்லன் என்று நான் சொன்ன கருத்தை நினைத்துப்பாருங்கள். மக்கள் என்னைத் துன்புறுத்தினால் அவர்கள் உங்களையும் துன்புறுத்துவார்கள். மக்கள் என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படிந்தால் உங்கள் உபதேசத்திற்கும் கீழ்ப்படிவார்கள். மக்கள் இவற்றையெல்லாம் என்பொருட்டே உங்களுக்குச் செய்வார்கள். அவர்கள் என்னை அனுப்பியவரைப்பற்றி அறியமாட்டார்கள். நான் உலகத்துக்கு வந்து மக்களிடம் பேசாமல் இருந்திருந்தால் அவர்களுக்குப் பாவம் பற்றிய எண்ணம் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது நான் அவர்களிடம் பேசிவிட்டேன். எனவே அவர்கள் தம் பாவங்களுக்குச் சாக்குபோக்கு சொல்ல முடியாது. “என்னை வெறுக்கிற எவனும் என் பிதாவையும் வெறுக்கிறான். நான், இதுவரை எவரும் செய்யாதவற்றை மக்கள் மத்தியில் செய்திருக்கிறேன். நான் அவற்றைச் செய்யாமல் இருந்திருந்தால் மக்களுக்குத் தம் பாவத்தைப் பற்றிய குற்ற உணர்வு இல்லாமல் போயிருக்கும். ஆனால் நான் செய்தவற்றையெல்லாம் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். எனினும் அவர்கள் என்னையும் என் பிதாவையும் வெறுக்கிறார்கள். ‘அவர்கள் காரணம் இல்லாமல் என்னை வெறுக்கிறார்கள்’ என்னும் வாக்கியம் உண்மையாகும்படி இது நடந்தது.

யோவான் 15:18-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள். அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள். நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை. என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான். வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள். முகாந்தரமில்லாமல் என்னைப்பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்