யோவான் 15:1-27

யோவான் 15:1-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“நானே உண்மையான திராட்சைக்கொடி. என் பிதாவே தோட்டக்காரர். கனிகொடாத என்னிலுள்ள ஒவ்வொரு கிளையையும் அவர் தூக்கிவைக்கிறார். ஆனால், கனி கொடுக்கிற கிளைகளையோ அவர் கத்தரித்துச் சுத்தம் பண்ணுகிறார். அதனால் அவை இன்னும் அதிகமாய்க் கனிகொடுக்கும். நான் உங்களோடு பேசிய வார்த்தையினாலே நீங்கள் ஏற்கெனவே சுத்திகரிக்கப் பட்டிருக்கிறீர்கள். என்னில் நிலைத்திருங்கள். நானும் உங்களில் நிலைத்திருப்பேன். எந்தக் கிளையும் தன் சுயமாகவே கனி கொடுப்பதில்லை; அது திராட்சைக் கொடியிலே நிலைத்திருக்க வேண்டும். நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால் உங்களால் கனிகொடுக்க இயலாது. “நானே திராட்சைக்கொடி; நீங்களோ கிளைகள். நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் அதிகமாய் கனி கொடுப்பீர்கள்; என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவுமே செய்யமுடியாது. நீங்கள் என்னில் நிலைத்திராவிட்டால், நீங்கள் வெட்டி எறியப்பட்டு வாடிப்போகிற ஒரு கிளையைப்போல் இருப்பீர்கள்; அப்படிப்பட்ட கிளைகள் சேர்த்து எடுக்கப்பட்டு நெருப்பில்போட்டு எரிக்கப்படும். நீங்கள் என்னில் நிலைத்திருந்து என் வார்த்தைகள் உங்களில் நிலைத்திருக்குமானால், நீங்கள் விரும்பிய எதை வேண்டுமானாலும் கேளுங்கள். அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் அதிகமாய் கனிகொடுத்து, என்னுடைய சீடர்கள் எனக் காண்பியுங்கள். இதுவே என் பிதாவுக்கு மகிமையைக் கொண்டுவரும். “பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன். இப்பொழுது நீங்கள் என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். நான் என் பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறேன். அதுபோல் நீங்கள் என்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். என்னுடைய சந்தோஷம் உங்களில் இருக்கும்படியும், உங்களுடைய சந்தோஷம் முழுமை பெறும்படி இதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். நான் உங்களில் அன்புகூர்ந்தது போலவே, நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்புகூரவேண்டுமென்பதே என் கட்டளை. ஒருவன் தன்னுடைய நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைப் பார்க்கிலும் பெரிதான அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்தால், நீங்கள் எனக்கு நண்பர்களாயிருப்பீர்கள். நான் இனிமேலும் உங்களை வேலைக்காரர்கள் என்று சொல்லப்போவதில்லை. ஏனெனில் ஒரு வேலைக்காரன் தன் எஜமானுடைய வேலைகளை அறியமாட்டானே. நானோ உங்களை நண்பர்கள் என்றே சொல்கிறேன். ஏனெனில் என் பிதாவினிடத்திலிருந்து நான் அறிந்து கொண்டவற்றையெல்லாம் உங்களுக்குத் தெரியப்படுத்தினேன். நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை. நானே உங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறேன், நீங்கள் போய் நிலையான கனி கொடுக்கும்படி உங்களை நியமித்தேன். அப்பொழுது நீங்கள் என் பெயரில் பிதாவினிடத்தில் எதைக் கேட்டாலும், அவர் அதை உங்களுக்குத் தருவார். ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள். இதுவே என் கட்டளை. “உலகம் உங்களை வெறுக்கும்போது, முதலில் அது என்னையே வெறுத்தது என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் உலகத்துக்கு சொந்தமானவர்களாய் இருந்தால், அது உங்களைத் தன்னுடையவர்களென்று ஏற்று, உங்களில் அன்பாயிருக்கும். ஆனால், நீங்கள் உலகத்துக்குச் சொந்தமானவர்கள் அல்ல. நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்தெடுத்து வேறுபிரித்தேன். அதனாலேயே உலகம் உங்களை வெறுக்கிறது. நான் உங்களுடன் பேசிய வார்த்தைகளை நினைவில் வைத்திருங்கள்: ‘எந்த வேலையாளும் தன்னுடைய எஜமானைவிடப் பெரியவன் அல்ல.’ அவர்கள் என்னைத் துன்புறுத்தினால், உங்களையும் துன்புறுத்துவார்கள். அவர்கள் என்னுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தால், உங்களுடைய வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிவார்கள். அவர்கள் என்னை அனுப்பிய பிதாவை அறியாமல் இருக்கிறார்கள். அதனாலேயே என் பெயரின் நிமித்தம் உங்களைத் துன்புறுத்துவார்கள். நான் வந்து அவர்களுடனே பேசியிருக்காவிட்டால், பாவத்தின் குற்றம் அவர்கள்மேல் சுமராது. ஆனால் இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்து அவர்களால் எந்தச் சாக்குப்போக்கும் சொல்லமுடியாது. என்னை வெறுக்கிறவன் என் பிதாவையும் வெறுக்கிறான். வேறு யாரும் செய்திராத கிரியைகளை நான் அவர்கள் மத்தியில் செய்தேனே. அப்படி நான் செய்திராவிட்டால் அவர்கள்மேல் பாவத்தின் குற்றம் சுமராது. ஆனால் இப்பொழுதோ அவர்கள் இந்த கிரியைகளைக் கண்டிருந்தும், என்னையும் என் பிதாவையும் வெறுக்கிறார்கள். ‘அவர்கள் காரணமின்றி என்னை வெறுக்கிறார்கள்’ என்று அவர்களுடைய சட்டத்தில் எழுதப்பட்டிருப்பது நிறைவேறும்படியே இப்படி நடந்தது. “நான் பிதாவினிடத்திலிருந்து உங்களிடத்திற்கு அனுப்பும் உதவியாளார் உங்களிடம் வருவார். அப்போது பிதாவினிடமிருந்து வரும் சத்திய ஆவியானவர் என்னைக்குறித்து சாட்சி கொடுப்பார். நீங்களும் என்னைக்குறித்து சாட்சி கொடுக்கவேண்டும். ஏனெனில் நீங்கள் ஊழிய தொடக்கத்திலிருந்து என்னுடன் இருக்கிறீர்களே.

யோவான் 15:1-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நான் உண்மையான திராட்சைச்செடி, என் பிதா திராட்சைத்தோட்டக்காரர். என்னில் கனிகொடுக்காதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்செய்கிறார். நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாக இருக்கிறீர்கள். என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சைச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாக கனிகொடுக்காததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னை அல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எரியப்பட்ட கொடியைப்போல அவன் எரியப்பட்டு உலர்ந்துபோவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீடராக இருப்பீர்கள். பிதா என்னில் அன்பாக இருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாக இருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். நான் என் பிதாவின் கட்டளைகளைக் கடைபிடித்து அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைபிடித்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன். நான் உங்களில் அன்பாக இருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டும் என்பதே என்னுடைய கட்டளையாக இருக்கிறது. ஒருவன் தன் நண்பனுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை. நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் நண்பர்களாக இருப்பீர்கள். இனி நான் உங்களை வேலைக்காரர்கள் என்று சொல்லுகிறதில்லை, வேலைக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களை நண்பர்கள் என்றேன், ஏனென்றால், என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன். நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்ளுவது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கும்படி நீங்கள் போய்க் கனி கொடுக்கும்படிக்கும், உங்களுடைய கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராக இருந்தால், உலகம் தன்னுடையதை நேசித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராக இல்லாதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. வேலைக்காரன் தன் எஜமானைவிட பெரியவன் இல்லை என்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினது உண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வார்த்தையை கடைபிடித்தது உண்டானால், உங்களுடைய வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள். அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள். நான் வந்து அவர்களோடு பேசாதிருந்தால் அவர்களுக்குப் பாவம் இருக்காது; இப்பொழுதோ தங்களுடைய பாவத்தைக்குறித்து சாக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை. என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான். வேறொருவரும் செய்யாத செயல்களை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தால், அவர்களுக்குப் பாவம் இருக்காது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் பார்த்தும், பகைத்தும் இருக்கிறார்கள். காரணம் இல்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதி இருக்கிற வாக்கியம் நிறைவேறும்படி இப்படியானது. பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார். நீங்களும் ஆரம்பமுதல் என்னுடனே இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்.

யோவான் 15:1-27 பரிசுத்த பைபிள் (TAERV)

“நானே உண்மையான திராட்சைச் செடி, எனது பிதாவே தோட்டக்காரர். அவர், கனிகொடுக்காத எனது கிளைகள் எவையோ அவற்றை வெட்டிப் போடுகிறார். கனிகொடுக்கிற கிளைகளை மேலும் கனி கொடுக்கும்படி அவர் சுத்தம் பண்ணுகிறார். நான் உங்களுக்குச் செய்த உபதேசங்களால் நீங்கள் ஏற்கெனவே சுத்தமாகியிருக்கிறீர்கள். நீங்கள் என்னில் நிலைத்திருங்கள். நானும் உங்களில் நிலைத்திருப்பேன். எந்தக் கிளையும் தனியாகக் கனிகொடுக்க இயலாது. அது செடியிலேயே தொடர்ந்து இருக்கவேண்டும். இதுபோலத்தான் நீங்களும். நீங்கள் தனியாக இருந்து கனிதர முடியாது. என்னோடு சேர்ந்தே இருக்கவேண்டும். “நான்தான் திராட்சைச் செடி. நீங்கள் கிளைகள். எவனொருவன் என்னிடம் நிரந்தரமாக இருக்கிறானோ, எவனொருவனிடம் நான் நிரந்தரமாக இருக்கிறேனோ, அவன் கனிதரும் கிளையாக இருப்பான். ஆனால் அவன் நான் இல்லாமல் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இல்லாத எவனும் செடியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட கிளைபோல் ஆகிவிடுகிறான். அது காய்ந்துபோகும். மக்கள் அவற்றைப் பொறுக்கி நெருப்பிலே போட்டு எரித்துவிடுகிறார்கள். என்னில் நிரந்தரமாக இருங்கள், என் உபதேசங்களைக் கடைப்பிடியுங்கள். நீங்கள் இவற்றைச் செய்தால் நீங்கள் விரும்புகிற எவற்றையும் என்னிடம் கேட்கலாம். அவை உங்களுக்குக் கொடுக்கப்படும். நீங்கள் அதிகக் கனிகளைத் தந்து, நீங்களே என் சீஷர்கள் என்பதைக் காட்ட வேண்டும். இது என் பிதாவுக்கும் மகிமையைக் கொண்டுவரும். “பிதா என்னை நேசிப்பதுபோன்று நான் உங்களை நேசிக்கிறேன். இப்பொழுது எனது அன்பில் நிலைத்திருங்கள். நான் என் பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறேன். நான் அவரது அன்பில் நிலைத்திருக்கிறேன். இதைப்போலவே, நீங்களும் எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் எனது அன்பில் நிலைத்திருப்பீர்கள். நான் இவற்றையெல்லாம் உங்களுக்குக் கூறுகிறேன். எனவே நான் பெற்ற மகிழ்ச்சியை நீங்களும் பெறலாம். உங்கள் மகிழ்ச்சி முழுமையாக இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதைத்தான் நான் உங்களுக்குக் கட்டளை இடுகிறேன்: நான் உங்களை நேசிப்பது போல் நீங்களும் ஒருவரை ஒருவர் நேசியுங்கள். ஒருவன் தன் நண்பனுக்காக இறப்பதைவிடச் சிறந்த அன்பு வேறு எதுவுமில்லை. நான் சொன்னபடி செய்தால் நீங்களும் எனது சிறந்த நண்பர்களாவீர்கள். இனி நான் உங்களை வேலைக்காரன் என்று அழைப்பதில்லை. ஏனெனில் வேலைக்காரன் தன் எஜமானன் செய்வதை அறியமாட்டான். நான் இப்பொழுது உங்களை நண்பர்கள் என்றே அழைக்கிறேன். ஏனென்றால் என் பிதா எனக்குச் சொன்னவற்றையெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். “நீங்கள் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. நானே உங்களைத் தேர்ந்தெடுத்தேன். நானே உங்களைக் கனிகொடுக்குமாறு ஏற்படுத்தினேன். உங்கள் வாழ்வில் இந்தக் கனி நிரந்தரமாக இருக்கவேண்டும். பிறகு என் பிதா என்பேரில் நீங்கள் கேட்கிற எதையும் உங்களுக்குத் தருவார். இதுவே எனது கட்டளை. ஒருவரோடு ஒருவர் அன்பாயிருங்கள். “இந்த உலகம் உங்களைப் பகைத்தால், அது என்னைத்தான் முதலில் பகைக்கிறது என்பதை நினைவுகொள்ளுங்கள். நீங்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் அது தன் மனிதர்களை நேசிப்பதுபோன்று உங்களையும் நேசிக்கும். ஆனால் நான் உங்களை உலகத்திலிருந்து தேர்ந்து எடுத்துவிட்டேன். அதனால்தான் உலகம் உங்களைப் பகைக்கிறது. “ஒரு வேலைக்காரன் தன் எஜமானனைவிடப் பெரியவன் அல்லன் என்று நான் சொன்ன கருத்தை நினைத்துப்பாருங்கள். மக்கள் என்னைத் துன்புறுத்தினால் அவர்கள் உங்களையும் துன்புறுத்துவார்கள். மக்கள் என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படிந்தால் உங்கள் உபதேசத்திற்கும் கீழ்ப்படிவார்கள். மக்கள் இவற்றையெல்லாம் என்பொருட்டே உங்களுக்குச் செய்வார்கள். அவர்கள் என்னை அனுப்பியவரைப்பற்றி அறியமாட்டார்கள். நான் உலகத்துக்கு வந்து மக்களிடம் பேசாமல் இருந்திருந்தால் அவர்களுக்குப் பாவம் பற்றிய எண்ணம் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது நான் அவர்களிடம் பேசிவிட்டேன். எனவே அவர்கள் தம் பாவங்களுக்குச் சாக்குபோக்கு சொல்ல முடியாது. “என்னை வெறுக்கிற எவனும் என் பிதாவையும் வெறுக்கிறான். நான், இதுவரை எவரும் செய்யாதவற்றை மக்கள் மத்தியில் செய்திருக்கிறேன். நான் அவற்றைச் செய்யாமல் இருந்திருந்தால் மக்களுக்குத் தம் பாவத்தைப் பற்றிய குற்ற உணர்வு இல்லாமல் போயிருக்கும். ஆனால் நான் செய்தவற்றையெல்லாம் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். எனினும் அவர்கள் என்னையும் என் பிதாவையும் வெறுக்கிறார்கள். ‘அவர்கள் காரணம் இல்லாமல் என்னை வெறுக்கிறார்கள்’ என்னும் வாக்கியம் உண்மையாகும்படி இது நடந்தது. “நான் என் பிதாவிடமிருந்து அந்த உதவியாளரை உங்களிடம் அனுப்புவேன். என் பிதாவிடமிருந்து வருகிற அவர் உண்மையின் ஆவியாக இருப்பார். அவர் வரும்போது என்னைப்பற்றிக் கூறுவார். நீங்கள் தொடக்கக்கால முதலே என்னோடு இருப்பதால் நீங்களும் என்னைப்பற்றி மக்களிடம் சாட்சி கூறுவீர்கள்.”

யோவான் 15:1-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள். என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்துபோவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன். நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள். இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன். நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுகொள்ளுவது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன். உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள். அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள். நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை. என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான். வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள். முகாந்தரமில்லாமல் என்னைப்பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று. பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார். நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.

யோவான் 15:1-27

யோவான் 15:1-27 TAOVBSIயோவான் 15:1-27 TAOVBSI