யோவான் 14:16-20

யோவான் 14:16-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நான் உங்களுக்காகப் பிதாவினிடத்தில் வேண்டிக்கொள்வேன். அப்பொழுது அவர் காலமெல்லாம் உங்களுடன் இருக்கும்படி மற்றொரு உதவியாளரை உங்களுக்குக் கொடுப்பார். அவரே சத்திய ஆவியானவர். இந்த உலகத்தினரால் அவரை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அவர்கள் அவரைக் காணாமலும், அறியாமலும் இருக்கிறார்கள். ஆனால் நீங்களோ அவரை அறிந்திருக்கிறீர்கள். அவர் உங்களுடனேகூட இருக்கிறார்; மேலும் உங்களுக்குள்ளும் இருப்பார். நான் உங்களை திக்கற்றோராய் விடமாட்டேன்; நான் உங்களிடத்தில் மீண்டும் வருவேன். இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் வாழ்கிறேன், நீங்களும் வாழ்வீர்கள். அந்த நாள் வரும்போது, நான் பிதாவில் இருப்பதையும், நீங்கள் என்னில் இருப்பதையும், நான் உங்களில் இருப்பதையும் நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்.

யோவான் 14:16-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நான் பிதாவை கேட்டுக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தருவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைப் பார்க்காமலும், அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களோடு தங்கி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன், உங்களிடம் வருவேன். இன்னும் கொஞ்சக்காலத்தில் உலகம் என்னைப் பார்க்காது, நீங்களோ என்னைப் பார்ப்பீர்கள்; நான் பிழைக்கிறபடி நீங்களும் பிழைப்பீர்கள். நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்த நாளிலே நீங்கள் அறிவீர்கள்.

யோவான் 14:16-20 பரிசுத்த பைபிள் (TAERV)

அந்த உதவியாளர் எப்பொழுதும் உங்களோடு இருப்பார். உண்மையின் ஆவியே அந்த உதவியாளர். இந்த உலகம் அவரை ஏற்றுக்கொள்ளாது. ஏனென்றால் உலகம் அவரைக் காணாமலும் தெரிந்துகொள்ளாமலும் இருக்கிறது. ஆனால் நீங்கள் அவரை அறிவீர்கள். அவர் உங்களோடு வாழ்கிறார். அவர் உங்களிலும் வாழ்வார். “பெற்றோர் இல்லாத பிள்ளைகளைப்போன்று நான் உங்களைவிட்டுப் போகமாட்டேன். நான் மீண்டும் உங்களிடம் வருவேன். இன்னும் கொஞ்சக் காலத்தில் உலகில் உள்ள மக்கள் என்னை இனிமேல் காணமாட்டார்கள். ஆனால் நீங்கள் என்னைப் பார்ப்பீர்கள். நான் உயிர்வாழ்வதால் நீங்களும் வாழ்வீர்கள். அந்த நாளிலே நான் பிதாவில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். நான் உங்களிலும் நீங்கள் என்னிலும் இருப்பதையும் அறிவீர்கள்.

யோவான் 14:16-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன். இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள். நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.