யோவான் 14:1-31
யோவான் 14:1-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“உங்கள் இருதயம் கலங்குவதற்கு இடங்கொடுக்க வேண்டாம். இறைவனில் விசுவாசமாயிருங்கள்; என்னிலும் விசுவாசமாயிருங்கள். என்னுடைய பிதாவின் வீட்டிலே அநேக உறைவிடங்கள் இருக்கின்றன; அப்படி இல்லாதிருந்தால் நான் எப்படி உங்களுக்குச் சொல்லியிருப்பேன். உங்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தும்படி நான் அங்கு போகிறேன். நான் போய், உங்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்திய பின்பு, மீண்டும் வந்து, நீங்கள் என்னுடன் இருக்கும்படி உங்களைக் கூட்டிச் செல்வேன். அப்பொழுது நான் இருக்கும் இடத்திலே நீங்களும் இருப்பீர்கள். நான் போகிற இடத்திற்கான வழியை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்” என்றார். தோமா இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்று எங்களுக்குத் தெரியாதே. அப்படியிருக்க, அங்கு போகும் வழி எங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றான். அதற்கு இயேசு, “வழியும், சத்தியமும், ஜீவனும் நானே. என் மூலமாய் அன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரமுடியாது. நீங்கள் உண்மையாக என்னை அறிந்திருந்தால், என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள். இதுமுதல் நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். அவரைக்கண்டும் இருக்கிறீர்கள்” என்றார். அதற்குப் பிலிப்பு, “ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும். அது எங்களுக்குப் போதும்” என்றான். அப்பொழுது இயேசு அவனிடம் சொன்னதாவது: “பிலிப்புவே, நான் இவ்வளவு காலம் உங்களோடிருந்தும், நீ இன்னும் என்னை அறிந்துக்கொள்ளவில்லையா? என்னைக் கண்டிருக்கிறவன் பிதாவைக் கண்டிருக்கிறான். அப்படியிருக்க, ‘பிதாவை எங்களுக்குக் காண்பியும்’ என்று நீ எப்படிச் சொல்லலாம்? நான் பிதாவில் இருக்கிறதையும், பிதா என்னில் இருக்கிறதையும் நீ விசுவாசிக்கவில்லையா? நான் உங்களுக்குச் சொல்கிற இந்த வார்த்தைகள் என்னுடையதல்ல. அவை என் பிதாவின் வார்த்தைகளே. அவர் எனக்குள் இருந்து தமது செயல்களைச் செய்கிறார். நான் பிதாவில் இருக்கிறேன் என்றும், பிதா என்னில் இருக்கிறார் என்றும் நான் சொல்லும்போது அதை நம்புங்கள்; இல்லாவிட்டால் நான் செய்த கிரியைகளின் நிமித்தமாவது அதை நம்புங்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னில் விசுவாசம் வைக்கிறவர்கள் நான் செய்த கிரியைகளை அவர்களும் செய்வார்கள். நான் என் பிதாவினிடத்திற்கு போகிறபடியால், அவர்கள் இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் செய்வார்கள். நீங்கள் என் பெயரில் எதைக் கேட்கிறீர்களோ, அதை நான் செய்வேன். மகனால் பிதாவுக்கு மகிமை உண்டாகும்படியாக அதைச் செய்வேன். என்னுடைய பெயரில் நீங்கள் எதைக் கேட்டாலும், நான் அதைச் செய்வேன். “நீங்கள் என்னில் அன்பாயிருந்தால், நான் கொடுக்கும் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். நான் உங்களுக்காகப் பிதாவினிடத்தில் வேண்டிக்கொள்வேன். அப்பொழுது அவர் காலமெல்லாம் உங்களுடன் இருக்கும்படி மற்றொரு உதவியாளரை உங்களுக்குக் கொடுப்பார். அவரே சத்திய ஆவியானவர். இந்த உலகத்தினரால் அவரை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அவர்கள் அவரைக் காணாமலும், அறியாமலும் இருக்கிறார்கள். ஆனால் நீங்களோ அவரை அறிந்திருக்கிறீர்கள். அவர் உங்களுடனேகூட இருக்கிறார்; மேலும் உங்களுக்குள்ளும் இருப்பார். நான் உங்களை திக்கற்றோராய் விடமாட்டேன்; நான் உங்களிடத்தில் மீண்டும் வருவேன். இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் வாழ்கிறேன், நீங்களும் வாழ்வீர்கள். அந்த நாள் வரும்போது, நான் பிதாவில் இருப்பதையும், நீங்கள் என்னில் இருப்பதையும், நான் உங்களில் இருப்பதையும் நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள். என்னுடைய கட்டளைகளை ஏற்று, அவைகளுக்குக் கீழ்ப்படிகிறவன் எவனோ, அவனே என்னில் அன்பாயிருக்கிறவன். என்னில் அன்பாயிருக்கிறவன் பிதாவினால் அன்பு செலுத்தப்படுவான். நானும் அவனில் அன்பாயிருந்து, என்னை அவனுக்கு வெளிப்படுத்துவேன்.” அப்பொழுது யூதாஸ் ஸ்காரியோத் அல்லாத மற்ற யூதா அவரிடம், “ஆண்டவரே உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப் போகிறீரே, அது ஏன்?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “யாராவது என்னில் அன்பாயிருந்தால், அவர்கள் என்னுடைய போதனைக்குக் கீழ்ப்படிவார்கள். என்னுடைய பிதா அவர்களில் அன்பாயிருப்பார். நாங்கள் அவனிடத்தில் வந்து, அவனுடன் குடியிருப்போம். என்னில் அன்பாயிராதவன் என்னுடைய போதனைக்குக் கீழ்ப்படியமாட்டான். நீங்கள் கேட்கிற இந்த வார்த்தைகள் என்னுடைய வார்த்தைகள் அல்ல; அவை என்னை அனுப்பிய பிதாவுக்குரிய வார்த்தைகள். “நான் உங்களோடு இருக்கும்போதே இவைகளையெல்லாம் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். ஆனால், என்னுடைய பெயரிலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியானவரான உதவியாளர், உங்களுக்கு எல்லாவற்றையும் போதிப்பார். அவர் நான் உங்களுக்குச் சொன்ன ஒவ்வொன்றையும் உங்களுக்கு நினைவு படுத்துவார். சமாதானத்தை உங்களுக்கு கொடுத்துவிட்டுப் போகிறேன். என்னுடைய சமாதனத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் கொடுக்கிற இந்த சமாதானமோ உலகம் கொடுக்கும் சமாதானத்தைப் போன்றது அல்ல, ஆகையால் உங்கள் உள்ளம் கலங்கவேண்டாம்; பயப்படவும் வேண்டாம். “ ‘நான் உங்களைவிட்டுப் போகப்போகிறேன்’ என்றும், ‘உங்களிடத்தில் திரும்பிவருவேன்’ என்றும் நான் சொன்னதைக் கேட்டீர்கள். நீங்கள் என்னில் அன்பாயிருந்தால், நான் பிதாவினிடத்தில் போகிறதைக் குறித்து மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் பிதா, என்னிலும் பெரியவராயிருக்கிறார். அது நிகழும் முன்னதாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். அதனால் அது நிகழும்போது நீங்கள் என்னை விசுவாசிப்பீர்கள். இன்னும் நான் உங்களுடன் மிகுதியாக பேசப்போவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்குரியது என்னிடத்தில் ஒன்றுமில்லை. ஆனால் நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டிருப்பதை மட்டுமே நான் செய்கிறேன் என்றும் உலகம் அறிந்துகொள்ளவேண்டும். “எழுந்திருங்கள்; இப்பொழுது நாம் இங்கிருந்து போவோம்” என்றார்.
யோவான் 14:1-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உங்களுடைய இருதயம் கலங்காமல் இருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாக இருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாக இருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக தங்கும் இடங்கள் இருக்கின்றன; அப்படி இல்லாமலிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு இடத்தை உங்களுக்காக ஆயத்தம் செய்யப்போகிறேன். நான் போய் உங்களுக்காக இடத்தை ஆயத்தம்செய்தபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார். தோமா அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறேன்; என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைப் பார்த்தும் இருக்கிறீர்கள் என்றார். பிலிப்பு அவரைப் பார்த்து: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைப் பார்த்தவன் பிதாவைப் பார்த்தான்; அப்படி இருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களோடு சொல்லுகிற வசனங்களை நானாகவே சொல்லவில்லை; எனக்குள் வாழ்கிற பிதாவானவரே இந்த செயல்களைச்செய்து வருகிறார். நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படி இல்லாவிட்டாலும் என்னுடைய செயல்களினாலாவது என்னை நம்புங்கள். உண்மையாகவே உண்மையாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற செயல்களைத் தானும் செய்வான், இவைகளைவிடப் பெரிய செயல்களையும் செய்வான். நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படி அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன். நீங்கள் என்னிடத்தில் அன்பாக இருந்தால் என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள். நான் பிதாவை கேட்டுக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தருவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைப் பார்க்காமலும், அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களோடு தங்கி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன், உங்களிடம் வருவேன். இன்னும் கொஞ்சக்காலத்தில் உலகம் என்னைப் பார்க்காது, நீங்களோ என்னைப் பார்ப்பீர்கள்; நான் பிழைக்கிறபடி நீங்களும் பிழைப்பீர்கள். நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்த நாளிலே நீங்கள் அறிவீர்கள். என் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவைகளைக் கடைபிடிக்கிறவனே என்னிடத்தில் அன்பாக இருக்கிறான், என்னிடத்தில் அன்பாக இருக்கிறவன்மேல் என் பிதா அன்பாக இருப்பார்; நானும் அவன்மேல் அன்பாக இருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உலகத்திற்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணம் என்ன என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் என்னில் அன்பாக இருந்தால் அவன் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பான், அவனில் என் பிதா அன்பாக இருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனுடன் குடிகொள்ளுவோம். என்னில் அன்பாக இல்லாதவன் என் வார்த்தைகளைக் கடைப்பிடிக்கமாட்டான். நீங்கள் கேட்கிற வார்த்தை என்னுடையதாக இல்லாமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாக இருக்கிறது. நான் உங்களோடு தங்கியிருக்கும்போது இவைகளை உங்களுக்குச் சொன்னேன். என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியானவராகிய தேற்றரவாளன் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைவுபடுத்துவார். சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபடி நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்களுடைய இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாக. நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடம் வருவேன் என்றும் நான் உங்களுக்குச் சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாக இருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனென்றால், என் பிதா என்னைவிட பெரியவராக இருக்கிறார். இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்கு முன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன். இனி நான் உங்களோடு அதிகமாக பேசுவதில்லை. இந்த உலகத்தின் தலைவன் வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை. நான் பிதாவில் அன்பாக இருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இந்த இடத்தைவிட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.
யோவான் 14:1-31 பரிசுத்த பைபிள் (TAERV)
இயேசு அவர்களிடம், “நீங்கள் மனம் கலங்காதீர்கள். தேவனை விசுவாசியுங்கள். என்னிலும் விசுவாசம் வையுங்கள். எனது பிதாவின் வீட்டில் அறைகள் ஏராளமாக உள்ளன. அது உண்மை இல்லை என்றால் நான் இதனை உங்களிடம் சொல்லமாட்டேன். உங்களுக்கு ஓர் இடத்தைத் தயார் செய்வதற்காக நான் அங்கே செல்லுகிறேன். நான் அங்கே போனதும் உங்களுக்கான இடத்தை தயார் செய்வேன். நான் திரும்பி வருவேன். என்னோடு உங்களை அழைத்துச் செல்வேன். எனவே, நான் எங்கே இருப்பேனோ அங்கே நீங்களும் இருப்பீர்கள். நான் போகிற இடத்திற்கு வழி உங்களுக்குத் தெரியும்” என்றார். உடனே, “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியவில்லை. அவ்வாறு இருக்கும்போது வழி எங்களுக்கு எப்படித் தெரியும்?” என தோமா கேட்டான். அதற்கு இயேசு, “நானே வழி, நானே உண்மை, நானே வாழ்வு. என் மூலமாகத்தான் என் பிதாவிடம் போக முடியும். நீங்கள் உண்மையிலேயே என்னைப் புரிந்துகொண்டால் என் பிதாவையும் புரிந்துகொள்ளலாம். ஆனால் இப்பொழுது என் பிதாவை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அவரைப் பார்த்திருக்கிறீர்கள்” என்றார். இயேசுவிடம் பிலிப்பு, “ஆண்டவரே, எங்களுக்கு பிதாவைக் காட்டுங்கள். அதுதான் எங்களுக்குத் தேவையானது” என்றான். அதற்கு இயேசு “பிலிப்பு, நான் உன்னோடு நீண்ட நாட்களாக இருக்கிறேன். ஆகையால் நீ என்னை அறிந்திருக்கவேண்டும். என்னைப் பார்க்கிறவன் எவனும் என் பிதாவைப் பார்க்கிறான். அப்படியிருக்க நீ என்னிடம், ‘எங்களுக்குப் பிதாவைக் காட்டுங்கள்’ என்று கூறுகிறாயே. நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நீ உண்மையாகவே நம்புகிறாயா? நான் உங்களுக்குச் சொன்னவை எல்லாம் என்னிடமிருந்து வந்தவை அல்ல. பிதா என்னில் வாழ்கிறார். அவர் அவருடைய பணியைச் செய்கிறார். நான் பிதாவில் இருக்கிறேன். பிதா என்னில் இருக்கிறார் என்று நான் சொல்லும்போது என்னை நம்புங்கள். இல்லாவிட்டால் நான் செய்த அற்புதங்களுக்காவது என்னை நம்புங்கள். “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், என்னில் நம்பிக்கை வைக்கிற எவனும் நான் செய்த அத்தகைய அற்புதங்களைச் செய்வான். என்னைவிட மேலான காரியங்களைக்கூட செய்வான். ஏனென்றால் நான் என் பிதாவிடம் செல்கிறேன். எனது பெயரில் நீங்கள் எதை வேண்டினாலும் அதை உங்களுக்காக நான் செய்வேன். பிறகு பிதாவின் மகிமை குமாரனின் மூலமாக விளங்கும். நீங்கள் எனது பெயரில் என்னை என்ன கேட்டாலும் அதை நான் செய்வேன். “நீங்கள் என்னை நேசித்தால், நான் கட்டளையிட்டபடி நீங்கள் காரியங்களைச் செய்வீர்கள். நான் பிதாவை வேண்டுவேன். அவர் உங்களுக்கு இன்னொரு உதவியாளரைத் தருவார். அந்த உதவியாளர் எப்பொழுதும் உங்களோடு இருப்பார். உண்மையின் ஆவியே அந்த உதவியாளர். இந்த உலகம் அவரை ஏற்றுக்கொள்ளாது. ஏனென்றால் உலகம் அவரைக் காணாமலும் தெரிந்துகொள்ளாமலும் இருக்கிறது. ஆனால் நீங்கள் அவரை அறிவீர்கள். அவர் உங்களோடு வாழ்கிறார். அவர் உங்களிலும் வாழ்வார். “பெற்றோர் இல்லாத பிள்ளைகளைப்போன்று நான் உங்களைவிட்டுப் போகமாட்டேன். நான் மீண்டும் உங்களிடம் வருவேன். இன்னும் கொஞ்சக் காலத்தில் உலகில் உள்ள மக்கள் என்னை இனிமேல் காணமாட்டார்கள். ஆனால் நீங்கள் என்னைப் பார்ப்பீர்கள். நான் உயிர்வாழ்வதால் நீங்களும் வாழ்வீர்கள். அந்த நாளிலே நான் பிதாவில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். நான் உங்களிலும் நீங்கள் என்னிலும் இருப்பதையும் அறிவீர்கள். ஒருவன் எனது கட்டளைகளைத் தெரிந்துகொண்டு, அவற்றுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் உண்மையாகவே என்னை நேசிக்கிறான். என்னை நேசிக்கிறவனை என் பிதாவும் நேசிப்பார். அதோடு நானும் அவனை நேசிப்பேன். நான் என்னை அவனிடம் வெளிப்படுத்துவேன்” என்றார். பிறகு யூதா என்பவன் (யூதாஸ்காரியோத் அல்ல) இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் உம்மை உலகத்துக்கு இல்லாமல் எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்று ஏன் திட்டமிடுகிறீர்?” என்றான். அதற்கு இயேசு, “எவனொருவன் என்னை நேசிக்கிறானோ அவன் என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படிகிறான். எனது பிதா அவன்மீது அன்பு வைப்பார். நானும் எனது பிதாவும் அவனிடம் வந்து அவனோடு வாழ்வோம். ஆனால் என்னை நேசிக்காதவன், என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படியமாட்டான். நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கிற எனது உபதேசங்கள் எல்லாம் என்னுடையவையல்ல. அவை என்னை அனுப்பின எனது பிதாவினுடையவை. “நான் உங்களோடு இருக்கையில் இவற்றை எல்லாம் உங்களுக்குச் சொல்லிவிட்டேன். ஆனால் உதவியாளர் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதிப்பார். நான் உங்களுக்குச் சொன்னவற்றையெல்லாம் உங்களுக்கு அவர் நினைவுபடுத்துவார். அவரே பரிசுத்த ஆவியானவர். பிதா எனது நாமத்தினால் அவரை அனுப்புவார். “நான் சமாதானத்தை உங்களுக்கு வைத்துவிட்டுப் போகிறேன். எனது சொந்த சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுப்பதுபோல் இல்லாமல் நான் வித்தியாசமான சமாதானத்தைக் கொடுக்கிறேன். ஆகையால் உங்கள் மனம் கலங்காமல் இருக்கட்டும். அஞ்சவும் வேண்டாம். ‘நான் போவேன், மீண்டும் உங்களிடம் வருவேன்’ என்று சொன்னதை நீங்கள் கேட்டீர்கள். நீங்கள் என்னை நேசிப்பதானால், நான் என் பிதாவிடம் திரும்பிப்போவதைப்பற்றி மகிழ்ச்சியடைவீர்கள், ஏனென்றால் என்னைவிட என் பிதா பெரியவர். நான் இவை நடப்பதற்கு முன்னரே இவற்றை உங்களிடம் சொல்கிறேன். இவை நடைபெறும்போது என்னை நீங்கள் நம்புவீர்கள். “நான் உங்களோடு அதிகம் பேசமாட்டேன். இந்த உலகத்தை ஆளுகிறவன் (சாத்தான்) வந்துகொண்டிருக்கிறான். அவனுக்கு என்மீது அதிகாரமில்லை. ஆனால் நான் என் பிதாவை நேசிக்கிறேன் என்று உலகத்துக்குத் தெரியவேண்டும். ஆகையால் என் பிதா எனக்குச் சொன்னவற்றை மட்டும் நான் செய்கிறேன். இப்பொழுது வாருங்கள், இந்த இடத்தைவிட்டுப் போவோம்” என்றார்.
யோவான் 14:1-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார். தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார். பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன். நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன். இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள். நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள். என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது. நான் உங்களுடனே தங்கியிருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன். என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக. நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார். இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன். இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை. நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.