யோவான் 13:6-10

யோவான் 13:6-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார். பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றபடி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார்.

யோவான் 13:6-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு சீமோன் பேதுருவிடம் வந்தபோது, அவன் அவரிடம், “ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவப்போகிறீரா?” என்றான். இயேசு அதற்குப் பதிலாக, “நான் செய்வது இன்னதென்று உனக்கு இப்போது புரியாது, பின்பு நீ புரிந்துகொள்வாய்” என்றார். அப்பொழுது பேதுரு அவரிடம், “இல்லை, நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவக்கூடாது” என்றான். அதற்கு இயேசு, “நான் உன்னைக் கழுவாவிட்டால், என்னுடன் உனக்கு ஒரு பங்கும் இல்லை” என்றார். அப்பொழுது சீமோன் பேதுரு, “ஆண்டவரே, அப்படியானால் என் கால்களை மாத்திரமல்ல, என்னுடைய கைகளையும் என்னுடைய தலையையுங்கூட கழுவும்!” என்றான். அதற்கு இயேசுவோ, “குளித்தவன் தன் கால்களை மாத்திரமே கழுவ வேண்டியவனாயிருக்கிறான்; மற்றப்படி அவனுடைய முழு உடலும் சுத்தமாயிருக்கிறது. நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள். ஆனால் எல்லோரும் அல்ல” என்றார்.

யோவான் 13:6-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவப்போகிறீரா? என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் செய்கிறது என்னவென்று இப்பொழுது உனக்கு தெரியாது, இனிமேல் தெரியும் என்றார். பேதுரு அவரைப் பார்த்து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். அதற்குச் சீமோன்பேதுரு: ஆண்டவரே, என் கால்களை மட்டுமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான். இயேசு அவனைப் பார்த்து: குளித்தவன் தன் கால்களைமட்டும் கழுவவேண்டியதாக இருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாக இருக்கிறான்; நீங்களும் சுத்தமாக இருக்கிறீர்கள்; ஆனாலும் எல்லோரும் அல்ல என்றார்.

யோவான் 13:6-10 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு, சீமோன் பேதுருவிடம் வந்தார். ஆனால் பேதுருவோ இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவக்கூடாது” என்றான். அதற்கு இயேசு அவனிடம், “நான் என்ன செய்கிறேன் என்று இப்போது உனக்குத் தெரியாது. ஆனால் பிறகு நீ புரிந்துகொள்வாய்” என்றார். பேதுருவோ, “இல்லை நீர் என் கால்களைக் கழுவவேகூடாது” என்றான். இயேசுவோ, “நான் உன் கால்களைக் கழுவாவிட்டால், நீ என்னோடு பங்குள்ளவனாக இருக்க முடியாது” என்றார். உடனே பேதுரு, “ஆண்டவரே, அப்படியானால் என் கால்களோடு, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவுங்கள்” என்றான். “ஒரு மனிதன் குளித்தபிறகு அவனது சரீரம் எல்லாம் சுத்தமாகிவிடுகிறது. அதன் பிறகு அவன் கால்களை மட்டும் கழுவினால் போதும். நீங்கள் சுத்தமாக இருக்கிறீர்கள். ஆனால் அனைவரும் அல்ல” என்றார் இயேசு.