யோவான் 13:21-30
யோவான் 13:21-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இயேசு இதைச் சொன்னபின்பு, அவர் உள்ளம் கலங்கியவராய், “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறான்” என்று வெளிப்படையாகச் சொல்கிறேன். அவருடைய சீடர்களோ அவர் யாரைக்குறித்துச் சொல்கிறார் என்று புரியாதவர்களாய், குழப்பத்துடன் ஒருவரையொருவர் பார்த்தார்கள். இயேசுவின் அன்பிற்குரிய சீடன் உணவுப் பந்தியிலே அவருக்கருகில் நெருங்கி உட்கார்ந்திருந்தான். சீமோன் பேதுரு அவனுக்குச் சைகை காட்டி, இயேசு யாரைக்குறித்துப் பேசுகிறார் என்று அவரிடத்தில் கேட்கும்படி அவனுக்குச் சொன்னான். எனவே அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு, “ஆண்டவரே அவன் யார்?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “நான் இந்த அப்பத் துண்டை பாத்திரத்தில் தோய்த்து யாருக்குக் கொடுக்கிறேனோ, அவனே” என்றார். பின்பு அந்த அப்பத் துண்டைத் தோய்த்து, சீமோனின் மகனான யூதாஸ் ஸ்காரியோத்துக்குக் கொடுத்தார். யூதாஸ் அந்த அப்பத் துண்டை வாங்கிப் புசித்தான். பிறகு சாத்தான் அவனுக்குள்ளே புகுந்தான். இயேசு அவனிடம், “நீ செய்யப் போகிறதை விரைவாய்ச் செய்” என்றார். ஆனால் இயேசு ஏன் இப்படி அவனுக்குச் சொன்னார் என்று சாப்பாட்டுப் பந்தியிலிருந்த ஒருவருக்கும் விளங்கவில்லை. யூதாஸ் பணத்துக்குப் பொறுப்பாயிருந்தபடியால், பண்டிகைக்குத் தேவையானதை வாங்கும்படியோ, அல்லது ஏழைகளுக்கு எதையாவது கொடுக்கும்படியோ இயேசு அவனுக்குச் சொல்கிறார் என்று சிலர் நினைத்தார்கள். அப்பத்தை வாங்கிக்கொண்டதும் யூதாஸ் புறப்பட்டுப் போனான். அப்பொழுது இரவு நேரமாயிருந்தது.
யோவான் 13:21-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இயேசு இவைகளைச் சொன்னபின்பு ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சாட்சியாகச் சொன்னார். அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீடர்கள் சந்தேகப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்தார்கள். அந்தச் நேரத்தில் அவருடைய சீடர்களில் இயேசுவிற்கு அன்பானவனாக இருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். யாரைக்குறித்துச் சொல்லுகிறார் என்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான். அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான். இயேசு மறுமொழியாக: நான் இந்த அப்பத்துண்டைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துண்டைத் தோய்த்து, சீமோன் மகனாகிய யூதாஸ்காரியோத்திற்குக் கொடுத்தார். அந்த அப்பத் துண்டை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து: நீ செய்கிறதைச் சீக்கிரமாகச் செய் என்றார். அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் யாருக்கும் புரியவில்லை. யூதாஸ் பணப்பையை வைத்துக் கொண்டிருந்தபடியினால், அவன்போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் வாங்குவதற்காவது, ஏழைகளுக்கு ஏதாவது கொடுப்பதற்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள். அவன் அந்த அப்பத் துண்டை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இரவு நேரமாக இருந்தது.
யோவான் 13:21-30 பரிசுத்த பைபிள் (TAERV)
இவற்றைச் சொன்னபிறகு இயேசு மிகவும் கலக்கம் அடைந்தார். வெளிப்படையாக அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். உங்களில் ஒருவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார். இயேசுவின் சீஷர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இயேசுவால் குறிப்பிடப்பட்டவன் எவனென்று அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. சீஷர்களில் ஒருவன் இயேசுவுக்கு அடுத்து அமர்ந்திருந்தான். அவனைத்தான் இயேசு பெரிதும் நேசித்தார். சீமோன் பேதுரு அவனிடம் இயேசுவிடம் கேட்கும்படி சாடையாகத் தெரிவித்தான். அவன் இயேசுவின் அருகில் சாய்ந்து, “ஆண்டவரே, உங்களுக்கு எதிரானவன் யார்?” என்று கேட்டான். இயேசு அதற்கு, “நான் இந்தத் தோய்த்தெடுத்த அப்பத்துண்டை எவனுக்குக் கொடுக்கிறேனோ அவனே எனக்கு எதிரானவன்” என்றார். பின்னர் அவர் அப்பத்துண்டை தோய்த்து எடுத்தார். சீமோனின் குமாரனான யூதாஸ்காரியோத்திடம் அதனைக் கொடுத்தார். யூதாஸ் அந்த அப்பத்துண்டை வாங்கிக்கொண்டதும் சாத்தான் அவனுக்குள் புகுந்துகொண்டான். இயேசு யூதாஸிடம், “நீ செய்யப் போவதைச் சீக்கிரமாகக் செய்” என்றார். அந்த மேஜையைச் சுற்றியிருந்த எவருக்கும் இயேசு யூதாஸிடம் ஏன் அவ்வாறு சொன்னார் என்பது புரியவில்லை. அவர்களில் யூதாஸ் மட்டும் தான் பணப்பெட்டியைப் பாதுகாப்பவன். எனவே அவர்கள், இயேசு யூதாஸிடம் விருந்துக்கான பொருட்களை வாங்கி வரும்படியாக ஏதோ கூறுவதாக எண்ணிக்கொண்டார்கள். அல்லது யூதாஸ் ஏழைகளுக்குக் கொஞ்சம் பணம் கொடுக்குமாறு இயேசு கூறுவதாக நினைத்துக்கொண்டனர். இயேசு கொடுத்த அப்பத்துண்டை யூதாஸ் பெற்றுக்கொண்டான். பிறகு அவன் வெளியேறினான். அப்போது இரவு நேரமாயிருந்தது.
யோவான் 13:21-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இயேசு இவைகளைச் சொன்னபின்பு. ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சாட்சியாகச் சொன்னார். அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள். அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். யாரைக்குறித்துச் சொல்லுகிறாரென்று விசாரிக்கும்படி சீமோன் பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான். அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார். அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார். அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் ஒருவனும் அறியவில்லை. யூதாஸ் பணப்பையை வைத்துக்கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள். அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இராக்காலமாயிருந்தது.