யோவான் 12:37-50
யோவான் 12:37-50 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இயேசு இத்தனை அடையாளங்களை எல்லாம் யூதர்களுக்கு முன்பாக செய்த போதிலும், அவர்களில் பலர் அவரில் விசுவாசம் வைக்காமலேயே இருந்தார்கள். இறைவாக்கினன் ஏசாயாவின் மூலம் கூறப்பட்ட வார்த்தை நிறைவேறும்படியாகவே இது நடந்தது: “ஆண்டவரே, எங்களுடைய செய்தியை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய கரம் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?” என்று அவன் கூறியிருக்கிறான். இந்தக் காரணத்தினாலேயே அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை. ஏனெனில் ஏசாயா வேறொரு இடத்தில் சொல்லியிருப்பதாவது: “கர்த்தர் அவர்களுடைய கண்களைக் குருடாக்கிவிட்டார். அவர்களுடைய இருதயத்தையோ கடினப்படுத்திவிட்டார். இதனாலேயே அவர்கள் தங்களுடைய கண்களால் காணாமலும், தங்கள் இருதயங்களினால் உணராமலும் இருக்கிறார்கள். நான் அவர்களை குணமாக்கும்படி, அவர்களால் என்னிடம் மனந்திரும்பி வரமுடியவும் இல்லை.” ஏசாயா கர்த்தரின் மகிமையைக் கண்டு அவரைக்குறித்துப் பேசியபோதே இதைச் சொன்னான். ஆனால் அதிகாரிகளில் பலர், அவரில் விசுவாசம் வைத்தார்கள். ஆனாலும் பரிசேயர்களின் நிமித்தம் அவர்கள் தங்கள் விசுவாசத்தைக்குறித்து வெளிப்படையாய் பேசவில்லை. அப்படிப் பேசினால் யூதருடைய ஜெப ஆலயத்திலிருந்து தாங்கள் வெளியேற்றப்படலாம் என்று அவர்கள் பயந்தார்கள். ஏனெனில் இறைவனிடமிருந்து வரும் புகழ்ச்சியைவிட, மனிதரிடமிருந்து வந்த புகழ்ச்சியை அவர்கள் விரும்பினார்கள். அப்பொழுது இயேசு உரத்த குரலில் சொன்னதாவது: “யாராவது என்னில் விசுவாசம் வைக்கும்போது, அவர்கள் என்னிடத்தில் மாத்திரம் அல்ல என்னை அனுப்பியவரிலும் விசுவாசம் வைக்கிறார்கள். அவர்கள் என்னை நோக்கிப் பார்க்கும்போது, என்னை அனுப்பியவரை அவர்கள் காண்கிறார்கள். என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவர்கள் தொடர்ந்து இருளில் இராதபடிக்கே, நான் இந்த உலகத்திற்கு வெளிச்சமாய் வந்திருக்கிறேன். “என்னுடைய வார்த்தையைக் கேட்டும் அதைக் கைக்கொள்ளாதவனையோ, நான் இப்போது நியாயந்தீர்ப்பதில்லை. ஏனெனில் உலகத்தை நியாயந்தீர்க்க நான் வரவில்லை. அதை இரட்சிக்கவே நான் வந்தேன். என்னைப் புறக்கணித்து என் வார்த்தையை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு ஒரு நீதிபதி உண்டு; அது நான் பேசிய இந்த வார்த்தையே ஆகும். அது கடைசி நாளில் அவர்களை நியாயந்தீர்க்கும். ஏனெனில் நான் என்னுடைய சுயவிருப்பத்தின்படி பேசவில்லை. என்னை அனுப்பிய பிதாவே நான் என்ன சொல்லவேண்டும் என்றும், அதை எப்படிச் சொல்லவேண்டும் என்றும் எனக்குக் கட்டளையிட்டார். அவருடைய கட்டளை நித்திய வாழ்வுக்கு வழிநடத்துகிறது என்று எனக்குத் தெரியும். எனவே பிதா எனக்குச் சொல்லும்படி சொன்னதையே நான் சொல்கிறேன்” என்றார்.
யோவான் 12:37-50 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. “கர்த்தாவே, எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடையக் கரம் யாருக்கு வெளிப்பட்டது” என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது. ஆகவே, அவர்கள் விசுவாசிக்காமல் போனார்கள். ஏனென்றால், ஏசாயா பின்னும்: அவர்கள் கண்களினால் பார்க்காமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருப்பதற்கும், நான் அவர்களைச் சுகமாக்காமல் இருப்பதற்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார்” என்றான். ஏசாயா அவருடைய மகிமையைப் பார்த்து, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான். ஆனாலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடம் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெப ஆலயத்தைவிட்டு வெளியேற்றப்படாமல் இருக்க, பரிசேயர்களுக்கு பயந்து அதை அறிக்கைசெய்யாமலும் இருந்தார்கள். அவர்கள் தேவனால் வருகிற மகிமையைவிட மனிதர்களால் வருகிற மகிமையை அதிகமாக விரும்பினார்கள். அப்பொழுது இயேசு சத்தமாக: என்மேல் விசுவாசமாக இருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடம் விசுவாசமாக இருக்கிறான். என்னைப் பார்க்கிறவன் என்னை அனுப்பினவரைப் பார்க்கிறான். என்னிடம் விசுவாசமாக இருக்கிறவனெவனும் இருளில் இல்லாதபடி, நான் உலகத்திற்கு ஒளியாக வந்தேன். ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசிக்காமல்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்க வராமல், உலகத்தை இரட்சிக்க வந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற ஒன்று இருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். நான் சுயமாகப் பேசவில்லை, நான் பேசவேண்டியது என்ன என்றும் உபதேசிக்கவேண்டியது என்ன என்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். அவருடைய கட்டளை நித்தியஜீவனாக இருக்கிறது என்று அறிவேன்; ஆகவே, நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.
யோவான் 12:37-50 பரிசுத்த பைபிள் (TAERV)
இயேசு இவ்வாறு ஏராளமான அற்புதங்களைச் செய்தார். மக்கள் அவற்றைப் பார்த்தனர். எனினும் அவர்மீது அவர்கள் நம்பிக்கை வைக்கவில்லை. தீர்க்கதரிசி ஏசாயா சொன்னது நிறைவேறும்படிக்கு இவ்வாறு நிகழ்ந்தது. “கர்த்தாவே, நாங்கள் சொன்னதைக் கேட்டு நம்பிக்கை வைத்தவர்கள் யார்? தேவனின் வல்லமையைக் கண்டுகொண்டவர்கள் யார்?” இதனால்தான் மக்கள் நம்பவில்லை. ஏனென்றால் ஏசாயா மேலும், “தேவன் மக்களைக் குருடாக்கினார். தேவன் அவர்களின் மனதை மூடினார். அவர்கள் கண்களினால் பாராமலும் மனதின் மூலம் அறியாமலும் இருக்கவேண்டும் என்றே தேவன் இதைச் செய்தார். அதன்பின் அவர்களை நான் குணப்படுத்துவேன்.” இயேசுவின் மகிமையை ஏசாயா அறிந்திருந்தபடியால் அவர் இவ்வாறு சொன்னார். எனவே ஏசாயா இயேசுவைப்பற்றிப் பேசினார். ஆனால் ஏராளமான மக்கள் இயேசுவை நம்பினார்கள். ஏராளமான யூதத்தலைவர்கள் கூட இயேசுவை நம்பினார்கள். ஆனால் அவர்கள் பரிசேயர்களுக்குப் பயந்தனர். எனவே, அவர்கள் இயேசுவை நம்புவதாக வெளிப்படையாகக் கூறவில்லை. தாம் ஜெப ஆலயத்திற்குப் புறம்பாக்கப்படுவோமோ என்று அவர்கள் பயந்தனர். அவர்கள் தேவனால் வரும் பாராட்டைவிட மனிதரால் வரும் பாராட்டை விரும்பினர். பிறகு இயேசு உரத்த குரலில், “என்னில் விசுவாசம் வைக்கிறவன் எவனோ அவன், என்னை அனுப்பிய தேவனிடமும் விசுவாசம் வைப்பான். என்னைப் பார்க்கிறவன் எவனோ, அவனே, என்னை அனுப்பிய தேவனையும் பார்க்கிறவனாகிறான். நானே ஒளி, நான் இந்த உலகத்துக்கு வந்திருக்கிறேன். ஆகவே, என்னில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொருவனும் இருளில் தங்கமாட்டான். “நான் மக்களுக்குத் தீர்ப்பளிப்பதற்காக இந்த உலகத்துக்கு வரவில்லை. உலகத்தில் உள்ள மக்களைப் பாதுகாக்கவே வந்திருக்கிறேன். எனவே, என் வார்த்தைகளைக் கேட்டும் என்னை நம்பாமல் போகிறவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை. என்னை நம்ப மறுக்கிறவர்களையும் நான் சொல்பவற்றை ஏற்றுக்கொள்ளாதவர்களையும் நியாயந்தீர்க்க ஒரு நீதிபதி உண்டு. அதுதான் நான் சொன்ன உபதேசங்கள். அவை இறுதி நாளில் அவர்களை நியாயம்தீர்க்கும். ஏனென்றால் நான் சொன்ன உபதேசங்கள் என்னிடமிருந்து வந்தவையல்ல. நான் சொன்னவையும் உபதேசித்தவையும் என்னை அனுப்பிய என் பிதாவாகிய தேவன் எனக்குச் சொன்னவையாகும். என் பிதாவின் கட்டளைகள் நித்திய ஜீவனுக்குரியவை என்பதை அறிவேன். ஆகையால் நான் சொல்கிறவைகளை என் பிதா எனக்குச் சொன்னபடியே சொல்கிறேன்” என்றார்.
யோவான் 12:37-50 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது. ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல்போனார்கள். ஏனெனில் ஏசாயா பின்னும்: அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கும்படிக்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான். ஏசாயா அவருடைய மகிமையைக் கண்டு, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான். ஆகிலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம்வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெப ஆலயத்துக்குப் புறம்பாக்கப்படாதபடி, பரிசேயர்நிமித்தம் அதை அறிக்கைபண்ணாதிருந்தார்கள். அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள். அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான். என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன். ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.