யோவான் 12:37-41

யோவான் 12:37-41 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது. ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல்போனார்கள். ஏனெனில் ஏசாயா பின்னும்: அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கும்படிக்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான். ஏசாயா அவருடைய மகிமையைக் கண்டு, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான்.

யோவான் 12:37-41 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு இத்தனை அடையாளங்களை எல்லாம் யூதர்களுக்கு முன்பாக செய்த போதிலும், அவர்களில் பலர் அவரில் விசுவாசம் வைக்காமலேயே இருந்தார்கள். இறைவாக்கினன் ஏசாயாவின் மூலம் கூறப்பட்ட வார்த்தை நிறைவேறும்படியாகவே இது நடந்தது: “ஆண்டவரே, எங்களுடைய செய்தியை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய கரம் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?” என்று அவன் கூறியிருக்கிறான். இந்தக் காரணத்தினாலேயே அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை. ஏனெனில் ஏசாயா வேறொரு இடத்தில் சொல்லியிருப்பதாவது: “கர்த்தர் அவர்களுடைய கண்களைக் குருடாக்கிவிட்டார். அவர்களுடைய இருதயத்தையோ கடினப்படுத்திவிட்டார். இதனாலேயே அவர்கள் தங்களுடைய கண்களால் காணாமலும், தங்கள் இருதயங்களினால் உணராமலும் இருக்கிறார்கள். நான் அவர்களை குணமாக்கும்படி, அவர்களால் என்னிடம் மனந்திரும்பி வரமுடியவும் இல்லை.” ஏசாயா கர்த்தரின் மகிமையைக் கண்டு அவரைக்குறித்துப் பேசியபோதே இதைச் சொன்னான்.

யோவான் 12:37-41 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. “கர்த்தாவே, எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடையக் கரம் யாருக்கு வெளிப்பட்டது” என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது. ஆகவே, அவர்கள் விசுவாசிக்காமல் போனார்கள். ஏனென்றால், ஏசாயா பின்னும்: அவர்கள் கண்களினால் பார்க்காமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருப்பதற்கும், நான் அவர்களைச் சுகமாக்காமல் இருப்பதற்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார்” என்றான். ஏசாயா அவருடைய மகிமையைப் பார்த்து, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான்.

யோவான் 12:37-41 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு இவ்வாறு ஏராளமான அற்புதங்களைச் செய்தார். மக்கள் அவற்றைப் பார்த்தனர். எனினும் அவர்மீது அவர்கள் நம்பிக்கை வைக்கவில்லை. தீர்க்கதரிசி ஏசாயா சொன்னது நிறைவேறும்படிக்கு இவ்வாறு நிகழ்ந்தது. “கர்த்தாவே, நாங்கள் சொன்னதைக் கேட்டு நம்பிக்கை வைத்தவர்கள் யார்? தேவனின் வல்லமையைக் கண்டுகொண்டவர்கள் யார்?” இதனால்தான் மக்கள் நம்பவில்லை. ஏனென்றால் ஏசாயா மேலும், “தேவன் மக்களைக் குருடாக்கினார். தேவன் அவர்களின் மனதை மூடினார். அவர்கள் கண்களினால் பாராமலும் மனதின் மூலம் அறியாமலும் இருக்கவேண்டும் என்றே தேவன் இதைச் செய்தார். அதன்பின் அவர்களை நான் குணப்படுத்துவேன்.” இயேசுவின் மகிமையை ஏசாயா அறிந்திருந்தபடியால் அவர் இவ்வாறு சொன்னார். எனவே ஏசாயா இயேசுவைப்பற்றிப் பேசினார்.