யோவான் 12:1-7

யோவான் 12:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பஸ்கா என்ற பண்டிகைக்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். இங்குதான் இயேசு மரித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பிய லாசரு வாழ்ந்தான். அங்கே அவர்கள் இயேசுவுக்கு ஒரு விருந்து கொடுத்தார்கள். மார்த்தாள் உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். லாசருவோ இயேசுவுடனே சாப்பாட்டுப் பந்தியில் உள்ளவர்களில் ஒருவனாக இருந்தான். அப்பொழுது மரியாள், மிகவும் விலை உயர்ந்த நளதம் என்னும் நறுமணத் தைலத்தில் அரை லிட்டர் கொண்டுவந்து, அதை அவள் இயேசுவின் பாதங்களில் ஊற்றி, அவருடைய பாதங்களைத் தனது கூந்தலால் துடைத்தாள். அந்த நறுமணத் தைலத்தின் வாசனை வீட்டை நிரப்பியது. ஆனால் இயேசுவின் சீடர்களில் ஒருவனான யூதாஸ் ஸ்காரியோத்து இதை எதிர்த்தான். இவனே பின்னர் இயேசுவைக் காட்டிக்கொடுத்தவன். அவன், “இந்த நறுமணத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, அந்தப் பணத்தை ஏன் ஏழைகளுக்குக் கொடுக்கவில்லை? அதன் மதிப்பு ஒரு வருட சம்பளமாய் இருக்கிறதே!” என்றான். யூதாஸ் ஏழைகளைக் குறித்து அக்கறையுடையவனாய் இருந்ததினால் இதைச் சொல்லவில்லை; திருடனாயிருந்தபடியாலேயே இப்படிச் சொன்னான். பணப்பைக்குப் பொறுப்பாய் இருந்த அவன், அதில் போடப்படும் பணத்திலிருந்து தனக்காக எடுத்துக்கொள்வதுண்டு. ஆனால் இயேசுவோ, “மரியாளை விட்டுவிடுங்கள். என்னை அடக்கம்பண்ணும் நாளுக்கென்றே இவள் இந்தத் தைலத்தை வைத்திருந்தாள்.

யோவான் 12:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பஸ்காபண்டிகை வருவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவிற்கு வந்தார். அங்கே அவருக்கு இரவு விருந்து கொடுத்தார்கள்; மார்த்தாள் பணிவிடைசெய்தாள்; லாசருவும் அவருடனே பந்தியிருந்தவர்களில் ஒருவனாக இருந்தான். அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் (அரை லிட்டர்) கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் நல்ல வாசனையினால் நிறைந்திருந்தது. அப்பொழுது அவருடைய சீடர்களில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து: இந்தத் தைலத்தை முந்நூறு வெள்ளிப் பணத்திற்கு விற்று, தரித்திரர்களுக்குக் கொடுக்காமல்போனது என்ன என்றான். அவன் ஏழைகளைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனாக இருந்ததினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனாக இருந்ததினாலும் இப்படிச் சொன்னான். அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம் செய்யும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.

யோவான் 12:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

பஸ்கா பண்டிகைக்கு இன்னும் ஆறு நாட்கள் இருந்தன. இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். அங்கே லாசரு வாழ்ந்து வந்தான். (இவன் இறந்த பின்னரும் இயேசுவால் உயிர் பெற்று எழுந்தவன்) பெத்தானியாவில் இயேசுவுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்தனர். மார்த்தாள் உணவு பரிமாறினாள். இயேசுவோடு லாசருவும் இன்னும் பலரும் விருந்தில் கலந்துகொண்டனர். மரியாள் சுத்தமான நளதம் என்னும் விலை உயர்ந்த வாசனைத் தைலத்தை ஒரு இராத்தல் கொண்டு வந்தாள். அவள் அதனை இயேசுவின் பாதங்களில் ஊற்றினாள். பிறகு அதனைத் தன் தலை மயிரால் துடைத்தாள். வீடு முழுவதும் தைலத்தின் வாசனை நிறைந்துவிட்டது. யூதாஸ்காரியோத்தும் அங்கிருந்தான். (யூதாஸ் இயேசுவின் சீஷரில் ஒருவன். இவன்தான் பிறகு இயேசுவிற்கு எதிரானவன்.) மரியாள் செய்தவற்றை இவன் விரும்பவில்லை. அவன் “இத்தைலம் முந்நூறு வெள்ளிகாசுகள் மதிப்பு உடையது. இதனை விற்று, அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாம்” என்றான். ஆனால் உண்மையில் அவனுக்கு ஏழைகளின்மீது அக்கறையில்லை. அவன் ஒரு திருடனானபடியால் இவ்வாறு சொன்னான். இவன்தான் இயேசுவின் சீஷர்களுள் பணப்பையை வைத்திருந்தவன். இவன் அவ்வப்போது பணப்பையிலிருந்து பணம் திருடி வந்தான். இயேசு அவனிடம், “அவளைத் தடை செய்யாதீர்கள். என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதைச் சேமித்து வைத்திருந்தாள்.

யோவான் 12:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பஸ்கா பண்டிகை வர ஆறுநாளைக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார். அங்கே அவருக்கு இராவிருந்துபண்ணினார்கள்; மார்த்தாள் பணிவிடை செய்தாள்; லாசருவும் அவருடனேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான். அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது. அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிகொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து: இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான். அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான். அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.