யோவான் 12:1-19
யோவான் 12:1-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பஸ்கா என்ற பண்டிகைக்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். இங்குதான் இயேசு மரித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பிய லாசரு வாழ்ந்தான். அங்கே அவர்கள் இயேசுவுக்கு ஒரு விருந்து கொடுத்தார்கள். மார்த்தாள் உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். லாசருவோ இயேசுவுடனே சாப்பாட்டுப் பந்தியில் உள்ளவர்களில் ஒருவனாக இருந்தான். அப்பொழுது மரியாள், மிகவும் விலை உயர்ந்த நளதம் என்னும் நறுமணத் தைலத்தில் அரை லிட்டர் கொண்டுவந்து, அதை அவள் இயேசுவின் பாதங்களில் ஊற்றி, அவருடைய பாதங்களைத் தனது கூந்தலால் துடைத்தாள். அந்த நறுமணத் தைலத்தின் வாசனை வீட்டை நிரப்பியது. ஆனால் இயேசுவின் சீடர்களில் ஒருவனான யூதாஸ் ஸ்காரியோத்து இதை எதிர்த்தான். இவனே பின்னர் இயேசுவைக் காட்டிக்கொடுத்தவன். அவன், “இந்த நறுமணத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, அந்தப் பணத்தை ஏன் ஏழைகளுக்குக் கொடுக்கவில்லை? அதன் மதிப்பு ஒரு வருட சம்பளமாய் இருக்கிறதே!” என்றான். யூதாஸ் ஏழைகளைக் குறித்து அக்கறையுடையவனாய் இருந்ததினால் இதைச் சொல்லவில்லை; திருடனாயிருந்தபடியாலேயே இப்படிச் சொன்னான். பணப்பைக்குப் பொறுப்பாய் இருந்த அவன், அதில் போடப்படும் பணத்திலிருந்து தனக்காக எடுத்துக்கொள்வதுண்டு. ஆனால் இயேசுவோ, “மரியாளை விட்டுவிடுங்கள். என்னை அடக்கம்பண்ணும் நாளுக்கென்றே இவள் இந்தத் தைலத்தை வைத்திருந்தாள். ஏழைகள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள், ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடன் இருக்கமாட்டேன்” என்றார். இதற்கிடையில் இயேசு அங்கே இருக்கிறார் என்று யூதர்கள் அறிந்து, ஒரு பெருங்கூட்டமாய் அங்கே வந்தார்கள். அவர்கள் இயேசுவைப் பார்ப்பதற்காக மாத்திரமல்ல, மரித்ததோரில் இருந்து உயிருடன் அவர் எழுப்பிய லாசருவையும் பார்ப்பதற்கு வந்தார்கள். எனவே தலைமை ஆசாரியர்கள் லாசருவையும் கொல்வதற்குத் திட்டம் வகுத்தார்கள். ஏனெனில் லாசருவின் நிமித்தம் யூதர்களில் பலர் இயேசுவினிடத்தில் போய் அவரில் விசுவாசம் வைத்தார்கள். மறுநாள் பண்டிகைக்காக வந்திருந்த பெருந்திரளான மக்கள் இயேசு எருசலேமுக்கு வந்து கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டார்கள். அவர்கள் குருத்தோலைகளை எடுத்துக்கொண்டு அவரைச் சந்திக்கப் புறப்பட்டார்கள். அவர்கள், “ஓசன்னா!” “கர்த்தருடைய பெயரால் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!” “இஸ்ரயேலின் அரசர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!” என்று ஆர்ப்பரித்தார்கள். இயேசு ஒரு கழுதைக் குட்டியைக் கண்டு அதன்மேல் உட்கார்ந்தார். ஏனெனில் அவரைக்குறித்து எழுதப்பட்டிருக்கிறதாவது: “சீயோன் மகளே, பயப்படாதே; இதோ உன்னுடைய அரசர் கழுதைக் குட்டியின்மேல் வருகிறார்.” ஆரம்பத்திலே அவருடைய சீடர்கள் இதையெல்லாம் விளங்கிக்கொள்ளவில்லை. இயேசு மகிமைப்பட்ட பின்பே, இவை எல்லாம் அவரைக்குறித்து இறைவாக்கினரால் எழுதப்பட்டிருந்தன என்றும், இவற்றை மக்கள் அவருக்கு அப்படியே செய்தார்கள் என்றும் உணர்ந்துகொண்டார்கள். இயேசு லாசருவைக் கல்லறையிலிருந்து கூப்பிட்டு, அவனை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினபோது, அவருடன் இருந்த மக்கள் கூட்டம் தொடர்ந்து இந்தச் செய்தியைப் பரப்பினார்கள். அநேக மக்கள் இயேசு இப்படிப்பட்ட ஒரு அடையாளத்தைச் செய்தார் என்று கேள்விப்பட்டதினால், அவரைச் சந்திப்பதற்குச் சென்றார்கள். அப்பொழுது பரிசேயர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “நம்மால் ஒன்றுமே செய்யமுடியாமல் இருக்கிறதே. பாருங்கள்! முழு உலகமும் அவருக்குப் பின்னால் எப்படிப்போகிறது” என்றார்கள்.
யோவான் 12:1-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பஸ்காபண்டிகை வருவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவிற்கு வந்தார். அங்கே அவருக்கு இரவு விருந்து கொடுத்தார்கள்; மார்த்தாள் பணிவிடைசெய்தாள்; லாசருவும் அவருடனே பந்தியிருந்தவர்களில் ஒருவனாக இருந்தான். அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் (அரை லிட்டர்) கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் நல்ல வாசனையினால் நிறைந்திருந்தது. அப்பொழுது அவருடைய சீடர்களில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து: இந்தத் தைலத்தை முந்நூறு வெள்ளிப் பணத்திற்கு விற்று, தரித்திரர்களுக்குக் கொடுக்காமல்போனது என்ன என்றான். அவன் ஏழைகளைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனாக இருந்ததினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனாக இருந்ததினாலும் இப்படிச் சொன்னான். அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம் செய்யும் நாளுக்காக இதை வைத்திருந்தாள். ஏழைகள் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடம் இருக்கமாட்டேன் என்றார். அப்பொழுது யூதர்களில் திரளான மக்கள் அவர் அங்கே இருக்கிறதை அறிந்து, இயேசுவைப் பார்ப்பதற்கு மட்டுமல்ல, அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின லாசருவைப் பார்க்கும்படியாகவும் வந்தார்கள். லாசருவினால் யூதர்களில் அநேகர்போய், இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்ததினால், பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனை செய்தார்கள். அடுத்தநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று பண்டிகைக்கு வந்த திரளான மக்கள் கேள்விப்பட்டு, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டு போகும்படி புறப்பட்டு: “ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா போற்றப்படத்தக்கவர்” என்று ஆர்ப்பரித்தார்கள். அல்லாமலும்: “சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக் குட்டியின்மேல் ஏறிவருகிறார்” என்று எழுதியிருக்கிறபடி, இயேசு ஒரு கழுதைக்குட்டியைப் பார்த்து அதின்மேல் ஏறிப்போனார். இவைகளை அவருடைய சீடர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்தபின்பு, இப்படி அவரைக்குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள். அன்றியும் அவருடன் இருந்த மக்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடு எழுப்பினார் என்று சாட்சிகொடுத்தார்கள். அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று மக்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டு போனார்கள். அப்பொழுது பரிசேயர்கள் ஒருவரையொருவர் பார்த்து: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலக மக்கள் அனைவரும் அவருக்குப் பின்னே சென்றனர் என்றார்கள்.
யோவான் 12:1-19 பரிசுத்த பைபிள் (TAERV)
பஸ்கா பண்டிகைக்கு இன்னும் ஆறு நாட்கள் இருந்தன. இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். அங்கே லாசரு வாழ்ந்து வந்தான். (இவன் இறந்த பின்னரும் இயேசுவால் உயிர் பெற்று எழுந்தவன்) பெத்தானியாவில் இயேசுவுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்தனர். மார்த்தாள் உணவு பரிமாறினாள். இயேசுவோடு லாசருவும் இன்னும் பலரும் விருந்தில் கலந்துகொண்டனர். மரியாள் சுத்தமான நளதம் என்னும் விலை உயர்ந்த வாசனைத் தைலத்தை ஒரு இராத்தல் கொண்டு வந்தாள். அவள் அதனை இயேசுவின் பாதங்களில் ஊற்றினாள். பிறகு அதனைத் தன் தலை மயிரால் துடைத்தாள். வீடு முழுவதும் தைலத்தின் வாசனை நிறைந்துவிட்டது. யூதாஸ்காரியோத்தும் அங்கிருந்தான். (யூதாஸ் இயேசுவின் சீஷரில் ஒருவன். இவன்தான் பிறகு இயேசுவிற்கு எதிரானவன்.) மரியாள் செய்தவற்றை இவன் விரும்பவில்லை. அவன் “இத்தைலம் முந்நூறு வெள்ளிகாசுகள் மதிப்பு உடையது. இதனை விற்று, அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாம்” என்றான். ஆனால் உண்மையில் அவனுக்கு ஏழைகளின்மீது அக்கறையில்லை. அவன் ஒரு திருடனானபடியால் இவ்வாறு சொன்னான். இவன்தான் இயேசுவின் சீஷர்களுள் பணப்பையை வைத்திருந்தவன். இவன் அவ்வப்போது பணப்பையிலிருந்து பணம் திருடி வந்தான். இயேசு அவனிடம், “அவளைத் தடை செய்யாதீர்கள். என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதைச் சேமித்து வைத்திருந்தாள். ஏழை மக்கள் எப்பொழுதும் உங்களோடு இருப்பார்கள். நானோ எப்பொழுதும் உங்களோடு இருப்பதில்லை” என்றார். யூதர்களில் பலர், இயேசு பெத்தானியாவில் இருப்பதாக அறிந்தனர். ஆகையால் அவர்கள் அங்கே சென்றனர். அவர்கள் இயேசுவை மட்டுமல்லாமல் லாசருவையும் பார்க்க எண்ணினர். லாசரு இயேசுவால் மரணத்துக்குப் பின்னும் உயிரோடு எழுப்பப்பட்டவன். ஆகவே, தலைமை ஆசாரியர்களும் இயேசுவோடு லாசருவையும் கொல்லத் திட்டமிட்டார்கள். ஏனென்றால் லாசருவின் நிமித்தம் ஏராளமான யூதர்கள் தங்கள் தலைவர்களை விட்டுவிட்டு இயேசுவை நம்பத் தொடங்கினர். அதனால்தான் யூதத் தலைவர்கள் லாசருவையும் கொலைசெய்ய விரும்பினர். மறுநாள் இயேசு வருவதாக எருசலேமிலுள்ள பெருங்கூட்ட மக்கள் கேள்விப்பட்டனர். இம்மக்கள் பஸ்கா பண்டிகைக்காக வந்தவர்கள். அந்த மக்கள் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு இயேசுவைச் சந்திக்கச் சென்றனர். அவர்கள்: “‘அவரைப் புகழ்வோம்! வருக!’ ‘தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவரே கர்த்தரின் பேரால் வருகிறவரே!’ “தேவன் இஸ்ரவேலின் ராஜாவை ஆசீர்வதிப்பாராக!” என்று முழங்கினர். இயேசு ஒரு கழுதையைக் கண்டு அதன் மேல் ஏறிக்கொண்டார். “சீயோன் நகரமே அஞ்சவேண்டாம். பார். உன் ராஜா வந்துகொண்டிருக்கிறார். அவர் இளங்கழுதைமேல் சவாரி செய்து வருகிறார்” என்றும் மக்கள் ஆரவாரம் செய்தனர். இயேசுவின் சீஷர்கள் இவற்றை முதலில் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இயேசு மகிமையில் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, அவர்கள் இவை ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறதே என்று உணர்ந்துகொண்டனர். அத்துடன் அவருக்காகத் தாங்கள் செய்த செய்கைகளையும் நினைவுகூர்ந்தனர். மரணத்திலிருந்து லாசருவை இயேசு எழுப்பி “கல்லறையை விட்டு வெளியே வா” என்று சொன்னபோது இயேசுவுடன் பலர் இருந்தனர். இப்பொழுது அவர்கள் மற்றவர்களிடம் இயேசு செய்தவற்றைப்பற்றிக் கூறினர். இயேசு இந்த அற்புதத்தைச் செய்ததைக் கேள்விப்பட்ட ஏராளமான மக்கள் இயேசுவை வரவேற்பதற்காகத் திரண்டனர். அதனால் பரிசேயர்கள் தங்களுக்குள், “பாருங்கள், நமது திட்டம் நன்மையைத் தரவில்லை. எல்லா மக்களும் அவரைப் பின்தொடர்கிறார்கள்” என்று பேசிக்கொண்டனர்.
யோவான் 12:1-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பஸ்கா பண்டிகை வர ஆறுநாளைக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார். அங்கே அவருக்கு இராவிருந்துபண்ணினார்கள்; மார்த்தாள் பணிவிடை செய்தாள்; லாசருவும் அவருடனேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான். அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது. அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிகொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து: இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான். அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான். அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள். தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன் என்றார். அப்பொழுது யூதரில் திரளான ஜனங்கள் அவர் அங்கேயிருக்கிறதை அறிந்து, இயேசுவினிமித்தமாகமாத்திரம் அல்ல, அவர் மரித்தோரிலிருந்தெழுப்பின லாசருவைக் காணும்படியாகவும் வந்தார்கள். லாசருவினிமித்தமாக யூதர்களில் அநேகர் போய், இயேசுவினிடத்தில் விசுவாசம்வைத்தபடியால், பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனைபண்ணினார்கள். மறுநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள். அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிறபிரகாரமாக, இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார். இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்த பின்பு, இப்படி அவரைக்குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள். அன்றியும் அவருடனேகூட இருந்த ஜனங்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடே எழுப்பினாரென்று சாட்சி கொடுத்தார்கள். அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டுபோனார்கள். அப்பொழுது பரிசேயர் ஒருவரையொருவர் நோக்கி: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே என்றார்கள்.