யோவான் 11:47-57

யோவான் 11:47-57 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூட்டினார்கள். அவர்கள், “நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? இதோ இவன் பல அடையாளங்களைச் செய்கிறானே. நாம் இப்படியே இவனைப் போகவிட்டால், எல்லோரும் இவனில் விசுவாசம் வைப்பார்கள். அப்பொழுது ரோமர்கள் வந்து நமது ஆலயத்தையும், நமது ஜனத்தையும் அழித்துப்போடுவார்களே” என்றார்கள். அப்பொழுது அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனான காய்பா எனப்பட்ட ஒருவன் அவர்களிடம், “நீங்கள் எதுவுமே தெரியாதவர்களாய் இருக்கிறீர்களே. மக்கள் அழிவதைப் பார்க்கிலும், மக்களுக்காக ஒருவன் சாவது நல்லது என்று நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்” என்றான். இதை அவன் தன்னுடைய சுயமாகச் சிந்தித்துச் சொல்லவில்லை. அந்த வருடத்துப் பிரதான ஆசாரியன் என்ற வகையில் யூத மக்களுக்காக இயேசு மரிக்கப்போகிறார் என்று இறைவாக்காகவே இதைச் சொன்னான். இஸ்ரயேல் மக்களுக்காக மாத்திரமல்ல, சிதறி இருக்கும் இறைவனுடைய பிள்ளைகளை ஒன்றுச் சேர்க்கும்படியும் மரிக்கப்போகிறார் என்பதை அவன் சொன்னான். எனவே அன்றிலிருந்து அவர்கள் அவரைக் கொலைசெய்வதற்குச் சூழ்ச்சி செய்தார்கள். ஆகவே இயேசு தொடர்ந்து யூதர்கள் மத்தியிலே வெளிப்படையாக நடமாடவில்லை. அவர் பாலைவனத்தின் அருகே உள்ள பகுதிக்குப் போய், அங்கே எப்பிராயீம் எனப்பட்ட ஒரு கிராமத்தில் தம்முடைய சீடர்களுடனே தங்கினார். யூதர்களுடைய பஸ்கா என்ற பண்டிகைக் காலம் நெருங்கி வந்தது. அப்பொழுது பஸ்கா என்ற பண்டிகைக்கு முன்னதாகவே தங்களுடைய சுத்திகரிப்பைச் செய்துகொள்ளும்படி, அநேகர் நாட்டுப் புறத்திலிருந்து எருசலேமுக்குச் சென்றார்கள். அவர்கள் இயேசுவைப் பார்க்க விரும்பித்தேடினார்கள். அவர்கள் ஆலயப் பகுதியில் நின்றுகொண்டு ஒருவரையொருவர் பார்த்து, “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்தப் பண்டிகைக்கு அவர் வருவாரா?” என்று கேட்டார்கள். ஆனால் தலைமை ஆசாரியர்களும் பரிசேயர்களும் யாராவது இயேசு இருக்கும் இடத்தை அறிந்தால், அவரைக் கைதுசெய்யும்படி அதைத் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள்.

யோவான் 11:47-57 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் ஆலோசனை சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்ன செய்கிறது? இந்த மனிதன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே. நாம் இவனை இப்படியே விட்டுவிட்டால், எல்லோரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர்கள் வந்து நம்முடைய இடத்தையும் மக்களையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள். அப்பொழுது அவர்களில் ஒருவனும், அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களைப் பார்த்து: உங்களுக்கு ஒன்றும் தெரியாது; மக்கள் எல்லோரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனிதன் மக்களுக்காக மரிப்பது நமக்கு நலமாக இருக்கும் என்று நீங்கள் சிந்திக்காமல் இருக்கிறீர்கள் என்றான். இதை அவன் தானாகச் சொல்லாமல், அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதமக்களுக்காக மரிக்கப்போகிறார் என்றும், அந்த மக்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறார் என்றும் தீர்க்கதரிசனமாக சொன்னான். அந்தநாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனை செய்தார்கள். ஆகவே, இயேசு அதன்பின்பு வெளியரங்கமாக யூதர்களுக்குள்ளே தங்காமல், அந்த இடத்தைவிட்டு வனாந்திரத்திற்கு அருகான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீடர்களோடு தங்கியிருந்தார். யூதர்களுடைய பஸ்காபண்டிகை நெருங்கியிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்வதற்கு தங்களுடைய நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள். அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கும்போது, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள். பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனுக்காவது தெரிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள்.

யோவான் 11:47-57 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு ஆசாரியர்களும் பரிசேயர்களும் யூதர்களின் ஆலோசனைச் சபையைக் கூட்டினர். “இனி என்ன செய்யலாம்? இயேசு பல அற்புதங்களைச் செய்து வருகிறான். அவனை இவ்வாறு தொடர்ந்து செய்ய அனுமதித்தால் பிறகு மக்கள் அனைவரும் அவனை நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். பின் ரோமானியர்கள் வந்து நமது ஆலயத்தையும், நாட்டையும் அபகரித்துக்கொள்வார்கள்” என்று பேசிக்கொண்டனர். அங்கே அவர்களில் ஒருவன் காய்பா. அவன் அந்த ஆண்டின் தலைமை ஆசாரியன். அவன் “உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. நாடு முழுவதும் அழிவதைவிட மக்களுக்காக ஒருவன் இறந்துபோவது நல்லது அல்லவா? இதை ஏன் நீங்கள் எண்ணிப்பார்க்கவில்லை?” என்று சொன்னான். காய்பா இவற்றைச் சொந்தமாகச் சிந்தித்துச் சொல்லவில்லை. அவன் அந்த ஆண்டின் தலைமை ஆசாரியன். இயேசு யூத நாட்டுக்காக மரிக்கப்போகிறார் என்பதை அவன் உண்மையில் தீர்க்கதரிசனமாகவே கூறினான். ஆம். இயேசு யூதர்களுக்காகவே மரிக்கப் போகிறார். உலகில் சிதறிக் கிடக்கிற மக்களையெல்லாம் ஒன்று திரட்டி, அவர்களை ஒரே மக்களாக்க அவர் மரிக்கப் போகிறார். அன்றிலிருந்து யூதத்தலைவர்கள் இயேசுவைக் கொலைசெய்யத் திட்டம் தீட்டினர். ஆகையால் இயேசு யூதர்களின் மத்தியில் வெளிப்படையாக நடமாடுவதை நிறுத்தினார். இயேசு எருசலேமை விட்டு வனாந்தரத்திற்கு அருகிலுள்ள இடத்துக்கு சென்றார். இயேசு எப்பிராயீம் என்று அழைக்கப்படுகிற நகரத்துக்குச் சென்றார். அங்கே அவர் தம் சீஷர்களோடு தங்கினார். யூதருடைய பஸ்கா பண்டிகை நெருங்கிக்கொண்டிருந்தது. பஸ்கா பண்டிகைக்கு முன்பே நாட்டிலுள்ள மக்களில் பலர் எருசலேமிற்குச் சென்றனர். அங்கு அவர்கள் தம்மை சுத்தப்படுத்திக்கொள்வதற்கான சடங்குகளைச் செய்வர். மக்கள் இயேசுவை எதிர்ப்பார்த்தனர். அவர்கள் ஆலயத்தில் நின்றுகொண்டு “இயேசு பண்டிகைக்கு வரமாட்டாரா? நீ என்ன நினைக்கிறாய்?” என ஒருவரை ஒருவர் விசாரித்துக்கொண்டனர். ஆனால் தலைமை ஆசாரியரும் பரிசேயரும் இயேசுவைப்பற்றிய ஒரு புதிய கட்டளையைக் கொடுத்திருந்தனர். எவராவது இயேசு எங்கே இருக்கிறார் என்று தெரிந்துகொண்டால் உடனே வந்து தெரிவிக்க வேண்டும். பிறகு, தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் இயேசுவைக் கைதுசெய்ய முடியும்.

யோவான் 11:47-57 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே. நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப் போடுவார்களே என்றார்கள். அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந்தெரியாது. ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான். இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும், அந்த ஜனங்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான். அந்நாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனைபண்ணினார்கள். ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார். யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்ளும்பொருட்டு நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள். அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கையில், ஒருவரையொருவர் நோக்கி: உங்களுக்கெப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள். பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனாவது அறிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருந்தார்கள்.