யோவான் 11:38-43

யோவான் 11:38-43 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு மீண்டும் துயரமுடையவராய் கல்லறைக்கு வந்தார். அது ஒரு குகையாய் இருந்தது. அதன் வாசலிலே ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. இயேசு அங்கு நின்றவர்களைப் பார்த்து, “அந்தக் கல்லை அகற்றுங்கள்” என்றார். அப்பொழுது இறந்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள், “ஆண்டவரே, இப்பொழுது அது நாற்றம் வீசுமே. அங்கே, அவனை வைத்து நான்கு நாட்கள் ஆயிற்றே” என்றாள். அப்பொழுது இயேசு, “நீ விசுவாசித்தால், இறைவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?” என்று கேட்டார். எனவே அவர்கள் அந்தக் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணார்ந்து பார்த்து, “பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்துக் கேட்டபடியால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் எப்பொழுதும் எனக்கு செவிகொடுக்கிறீர் என்பதை நான் அறிவேன். ஆனால் இங்கு நிற்கிற மக்கள் நீரே என்னை அனுப்பினீர் என்று விசுவாசிக்கும்படி இதைச் சொன்னேன்” என்றார். இயேசு இதைச் சொன்னபின்பு, அவனை உரத்த குரலில், “லாசருவே, வெளியே வா!” என்று கூப்பிட்டார்.

யோவான் 11:38-43 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது இயேசு மீண்டும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாக இருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. இயேசு: கல்லை எடுத்து போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரைப் பார்த்து: ஆண்டவரே, இப்பொழுது நாற்றம் எடுக்குமே, நான்கு நாட்கள் ஆனதே என்றாள். இயேசு அவளைப் பார்த்து: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார். அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்து நிற்கும் மக்கள் விசுவாசிக்கும்படியாக அவர்களுக்காக இதைச் சொன்னேன் என்றார். இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாகக் கூப்பிட்டார்.

யோவான் 11:38-43 பரிசுத்த பைபிள் (TAERV)

மீண்டும் இயேசு மனதில் மிகவும் வருத்தம் அடைந்தார். பிறகு லாசரு வைக்கப்பட்ட கல்லைறைக்கு வந்தார். அக்கல்லறை பெரிய பாறையால் அடைக்கப்பட்டிருந்த குகைக்குள் இருந்தது. இயேசு, “அந்தப் பாறையை அகற்றுங்கள்” என்றார். மார்த்தாளோ, “ஆண்டவரே, லாசரு இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. அதில் கெட்ட நாற்றம் வீசுமே” என்றாள். அவள் இறந்துபோன லாசருவின் சகோதரி. இயேசு மார்த்தாளிடம், “நான் சொன்னவற்றை நினைத்துப்பார். நீ என்னை நம்புகிறதானால் தேவனின் மகிமையை அறியலாம் எனச் சொல்லியிருக்கிறேன்” என்றார். ஆகையால் அவர்கள் அந்தப் பாறையை குகையின் வாசலில் இருந்து அகற்றினார்கள். இயேசு மேலே ஏறிட்டுப் பார்த்து “பிதாவே! நான் சொல்வதை நீர் கேட்டதற்காக நன்றி கூறுகிறேன். எப்பொழுதும் நான் சொல்வதை நீர் கேட்கிறீர் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நான் இங்கே கூடியிருக்கிற இம்மக்களுக்காகவே இவற்றைக் கூறுகிறேன். நீர்தான் என்னை அனுப்பினீர் என்று இவர்கள் நம்பவேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார். இவ்விதம் சொன்னபிறகு இயேசு உரத்த குரலில், “லாசருவே, வெளியே வா” என்று அழைத்தார்.

யோவான் 11:38-43 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள். இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார். அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார். இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.