யோவான் 11:30-57
யோவான் 11:30-57 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இயேசு இன்னும் கிராமத்துக்குள் வராமல், மார்த்தாள் தம்மைச் சந்தித்த இடத்திலே இருந்தார். அப்பொழுது, வீட்டிலே அவளுடனேகூட இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், மரியாள் சீக்கிரமாய் எழுந்துபோகிறதைக் கண்டு: அவள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று சொல்லி, அவளுக்குப் பின்னே போனார்கள். இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான் என்றாள். அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து: அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள். இயேசு கண்ணீர் விட்டார். அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்! அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர், இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள். அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள். இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார். அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார். இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார். அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே. நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப் போடுவார்களே என்றார்கள். அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந்தெரியாது. ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான். இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும், அந்த ஜனங்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான். அந்நாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனைபண்ணினார்கள். ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார். யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்ளும்பொருட்டு நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள். அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கையில், ஒருவரையொருவர் நோக்கி: உங்களுக்கெப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள். பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனாவது அறிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருந்தார்கள்.
யோவான் 11:30-57 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இயேசு இன்னும் கிராமத்திற்குள் வராமல், தான் மார்த்தாளைச் சந்தித்த இடத்திலேயே இருந்தார். வீட்டிலே மரியாளுடன் இருந்து அவளுக்கு ஆறுதல் கூறிய யூதர்கள், அவள் விரைவாய் எழுந்து புறப்பட்டுப் போகிறதைக் கண்டபோது, அவர்களும் அவள் பின்னே சென்றார்கள். அவள் அழுவதற்காக கல்லறைக்குப் போகிறாள் என்றே அவர்கள் நினைத்தார்கள். இயேசு இருந்த இடத்திற்கு மரியாள் போய்ச் சேர்ந்தபோது, அவள் அவரைக்கண்டு, அவருடைய பாதத்தில் விழுந்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால், என்னுடைய சகோதரன் மரித்திருக்கமாட்டான்” என்றாள். அவள் அழுவதையும், அவளுடன் வந்திருந்த யூதர்கள் அழுவதையும் இயேசு கண்டபோது, அவர் ஆவியில் கலங்கி, துயரமடைந்து, “அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆண்டவரே வாரும், வந்துபாரும்” என்றார்கள். இயேசு கண்ணீர்விட்டார். அதைக்கண்ட யூதர்கள், “பாருங்கள், இவர் லாசருமீது எவ்வளவு அன்பாயிருந்தார்!” என்றார்கள். ஆனால் அவர்களில் சிலரோ, “பார்வையற்றவனுடைய கண்களைத் திறந்த இவர், அவனைச் சாகாமல் காத்திருக்கலாமே?” என்றார்கள். இயேசு மீண்டும் துயரமுடையவராய் கல்லறைக்கு வந்தார். அது ஒரு குகையாய் இருந்தது. அதன் வாசலிலே ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. இயேசு அங்கு நின்றவர்களைப் பார்த்து, “அந்தக் கல்லை அகற்றுங்கள்” என்றார். அப்பொழுது இறந்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள், “ஆண்டவரே, இப்பொழுது அது நாற்றம் வீசுமே. அங்கே, அவனை வைத்து நான்கு நாட்கள் ஆயிற்றே” என்றாள். அப்பொழுது இயேசு, “நீ விசுவாசித்தால், இறைவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?” என்று கேட்டார். எனவே அவர்கள் அந்தக் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணார்ந்து பார்த்து, “பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்துக் கேட்டபடியால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் எப்பொழுதும் எனக்கு செவிகொடுக்கிறீர் என்பதை நான் அறிவேன். ஆனால் இங்கு நிற்கிற மக்கள் நீரே என்னை அனுப்பினீர் என்று விசுவாசிக்கும்படி இதைச் சொன்னேன்” என்றார். இயேசு இதைச் சொன்னபின்பு, அவனை உரத்த குரலில், “லாசருவே, வெளியே வா!” என்று கூப்பிட்டார். மரித்துபோனவன் வெளியே வந்தான். அவனுடைய கைகளும் கால்களும் மென்பட்டு துணிகளால் சுற்றப்பட்டிருந்தன. அவனுடைய முகத்தைச் சுற்றியும் ஒரு துணி கட்டப்பட்டிருந்தது. இயேசு அவர்களைப் பார்த்து, “பிரேதத் துணிகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்” என்றார். மரியாளைச் சந்திக்க வந்திருந்த பல யூதர்கள் இயேசு செய்ததைக் கண்டு அவரில் விசுவாசம் வைத்தார்கள். ஆனால் அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்ததைக் குறித்துச் சொன்னார்கள். அப்பொழுது தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூட்டினார்கள். அவர்கள், “நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? இதோ இவன் பல அடையாளங்களைச் செய்கிறானே. நாம் இப்படியே இவனைப் போகவிட்டால், எல்லோரும் இவனில் விசுவாசம் வைப்பார்கள். அப்பொழுது ரோமர்கள் வந்து நமது ஆலயத்தையும், நமது ஜனத்தையும் அழித்துப்போடுவார்களே” என்றார்கள். அப்பொழுது அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனான காய்பா எனப்பட்ட ஒருவன் அவர்களிடம், “நீங்கள் எதுவுமே தெரியாதவர்களாய் இருக்கிறீர்களே. மக்கள் அழிவதைப் பார்க்கிலும், மக்களுக்காக ஒருவன் சாவது நல்லது என்று நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்” என்றான். இதை அவன் தன்னுடைய சுயமாகச் சிந்தித்துச் சொல்லவில்லை. அந்த வருடத்துப் பிரதான ஆசாரியன் என்ற வகையில் யூத மக்களுக்காக இயேசு மரிக்கப்போகிறார் என்று இறைவாக்காகவே இதைச் சொன்னான். இஸ்ரயேல் மக்களுக்காக மாத்திரமல்ல, சிதறி இருக்கும் இறைவனுடைய பிள்ளைகளை ஒன்றுச் சேர்க்கும்படியும் மரிக்கப்போகிறார் என்பதை அவன் சொன்னான். எனவே அன்றிலிருந்து அவர்கள் அவரைக் கொலைசெய்வதற்குச் சூழ்ச்சி செய்தார்கள். ஆகவே இயேசு தொடர்ந்து யூதர்கள் மத்தியிலே வெளிப்படையாக நடமாடவில்லை. அவர் பாலைவனத்தின் அருகே உள்ள பகுதிக்குப் போய், அங்கே எப்பிராயீம் எனப்பட்ட ஒரு கிராமத்தில் தம்முடைய சீடர்களுடனே தங்கினார். யூதர்களுடைய பஸ்கா என்ற பண்டிகைக் காலம் நெருங்கி வந்தது. அப்பொழுது பஸ்கா என்ற பண்டிகைக்கு முன்னதாகவே தங்களுடைய சுத்திகரிப்பைச் செய்துகொள்ளும்படி, அநேகர் நாட்டுப் புறத்திலிருந்து எருசலேமுக்குச் சென்றார்கள். அவர்கள் இயேசுவைப் பார்க்க விரும்பித்தேடினார்கள். அவர்கள் ஆலயப் பகுதியில் நின்றுகொண்டு ஒருவரையொருவர் பார்த்து, “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்தப் பண்டிகைக்கு அவர் வருவாரா?” என்று கேட்டார்கள். ஆனால் தலைமை ஆசாரியர்களும் பரிசேயர்களும் யாராவது இயேசு இருக்கும் இடத்தை அறிந்தால், அவரைக் கைதுசெய்யும்படி அதைத் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள்.
யோவான் 11:30-57 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இயேசு இன்னும் கிராமத்திற்குள் வராமல், மார்த்தாள் தம்மைச் சந்தித்த இடத்திலே இருந்தார். அப்பொழுது, வீட்டிலே அவளுடனே இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், மரியாள் சீக்கிரமாக எழுந்துபோகிறதைப் பார்த்து: அவள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று சொல்லி, அவளுக்குப் பின்பாகப் போனார்கள். இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைப் பார்த்தவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான் என்றாள். அவள் அழுகிறதையும் அவளோடு வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு பார்த்தபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து: அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள். இயேசு கண்ணீர் விட்டார். அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாக நேசித்தார் என்றார்கள். அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர். இவனை மரித்துப் போகாமலிருக்கச் செய்யமுடியாதா என்றார்கள். அப்பொழுது இயேசு மீண்டும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாக இருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. இயேசு: கல்லை எடுத்து போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரைப் பார்த்து: ஆண்டவரே, இப்பொழுது நாற்றம் எடுக்குமே, நான்கு நாட்கள் ஆனதே என்றாள். இயேசு அவளைப் பார்த்து: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார். அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்து நிற்கும் மக்கள் விசுவாசிக்கும்படியாக அவர்களுக்காக இதைச் சொன்னேன் என்றார். இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாகக் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதத் துணிகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் துணியால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களைப் பார்த்து: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார். அப்பொழுது மரியாளிடத்தில் வந்து, இயேசு செய்தவைகளைப் பார்த்தவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். அவர்களில் சிலர் பரிசேயர்களிடம்போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் ஆலோசனை சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்ன செய்கிறது? இந்த மனிதன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே. நாம் இவனை இப்படியே விட்டுவிட்டால், எல்லோரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர்கள் வந்து நம்முடைய இடத்தையும் மக்களையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள். அப்பொழுது அவர்களில் ஒருவனும், அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களைப் பார்த்து: உங்களுக்கு ஒன்றும் தெரியாது; மக்கள் எல்லோரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனிதன் மக்களுக்காக மரிப்பது நமக்கு நலமாக இருக்கும் என்று நீங்கள் சிந்திக்காமல் இருக்கிறீர்கள் என்றான். இதை அவன் தானாகச் சொல்லாமல், அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதமக்களுக்காக மரிக்கப்போகிறார் என்றும், அந்த மக்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறார் என்றும் தீர்க்கதரிசனமாக சொன்னான். அந்தநாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனை செய்தார்கள். ஆகவே, இயேசு அதன்பின்பு வெளியரங்கமாக யூதர்களுக்குள்ளே தங்காமல், அந்த இடத்தைவிட்டு வனாந்திரத்திற்கு அருகான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீடர்களோடு தங்கியிருந்தார். யூதர்களுடைய பஸ்காபண்டிகை நெருங்கியிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்வதற்கு தங்களுடைய நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள். அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கும்போது, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள். பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனுக்காவது தெரிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள்.
யோவான் 11:30-57 பரிசுத்த பைபிள் (TAERV)
இயேசு இன்னும் அக்கிராமத்துக்கு வந்து சேரவில்லை. மார்த்தாள் சந்தித்த இடத்திலேயே அவர் இருந்தார். யூதர்கள் பலர் மரியாளோடு அவளது வீட்டில் இருந்தனர். அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தனர். மரியாள் எழுந்து வேகமாகச் செல்வதைப் பார்த்து அவள் லாசருவின் கல்லறைக்குப் போகக்கூடும் என எண்ணினர். அவள் அங்கு அழப்போகலாம் என்று கருதி அவளோடு அவர்களும் சென்றனர். இயேசு இருந்த இடத்துக்கு மரியாள் சென்றாள். அவள் இயேசுவைப் பார்த்ததும் குனிந்து அவரை வணங்கினாள். “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என்னுடைய சகோதரன் இறந்துபோயிருக்கமாட்டான்” என்று சொன்னாள். மரியாள் அழுவதை இயேசு பார்த்தார். அவளோடு வந்த யூதர்களையும் அவர் கவனித்தார். அவர்களும் அழுதனர். இயேசு மனப்பூர்வமாக வருந்தி, ஆழமாக வேதனைப்பட்டார். “அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று அவளிடம் கேட்டார். அவர்கள் அவரிடம், “கர்த்தரே, வந்து பாரும்” என்றனர். இயேசு அழுதார். இதைக் கண்ட யூதர்கள், “பாருங்கள், இயேசு லாசருவை மிகவும் நேசித்திருக்கிறார்” என்றனர். ஆனால் சில யூதர்களோ, “இயேசு குருடனின் கண்களைக் குணப்படுத்தினார். லாசருவுக்கு உதவிசெய்ய. அவனை ஏன் சாகாமலிருக்கச் செய்திருக்கக் கூடாது?” என்று கேட்டனர். மீண்டும் இயேசு மனதில் மிகவும் வருத்தம் அடைந்தார். பிறகு லாசரு வைக்கப்பட்ட கல்லைறைக்கு வந்தார். அக்கல்லறை பெரிய பாறையால் அடைக்கப்பட்டிருந்த குகைக்குள் இருந்தது. இயேசு, “அந்தப் பாறையை அகற்றுங்கள்” என்றார். மார்த்தாளோ, “ஆண்டவரே, லாசரு இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. அதில் கெட்ட நாற்றம் வீசுமே” என்றாள். அவள் இறந்துபோன லாசருவின் சகோதரி. இயேசு மார்த்தாளிடம், “நான் சொன்னவற்றை நினைத்துப்பார். நீ என்னை நம்புகிறதானால் தேவனின் மகிமையை அறியலாம் எனச் சொல்லியிருக்கிறேன்” என்றார். ஆகையால் அவர்கள் அந்தப் பாறையை குகையின் வாசலில் இருந்து அகற்றினார்கள். இயேசு மேலே ஏறிட்டுப் பார்த்து “பிதாவே! நான் சொல்வதை நீர் கேட்டதற்காக நன்றி கூறுகிறேன். எப்பொழுதும் நான் சொல்வதை நீர் கேட்கிறீர் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நான் இங்கே கூடியிருக்கிற இம்மக்களுக்காகவே இவற்றைக் கூறுகிறேன். நீர்தான் என்னை அனுப்பினீர் என்று இவர்கள் நம்பவேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார். இவ்விதம் சொன்னபிறகு இயேசு உரத்த குரலில், “லாசருவே, வெளியே வா” என்று அழைத்தார். இறந்தவன் வெளியே வந்தான். அவனது கைகளிலும் கால்களிலும் துணிகள் சுற்றப்பட்டிருந்தன. அவன் முகத்தை ஒரு துண்டுத் துணி மூடியிருந்தது. இயேசு மக்களிடம், “துணிகளை அப்புறப்படுத்தி அவனை விடுவியுங்கள்” என்றார். மரியாளைப் பார்ப்பதற்காக ஏராளமான யூதர்கள் வந்திருந்தனர். இயேசு செய்ததை அவர்கள் பார்த்தார்கள். அவர்களில் பலர் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தனர். ஆனால், சிலர் பரிசேயர்களிடம் சென்றனர். இயேசு செய்ததை அவர்கள் பரிசேயர்களிடம் சொன்னார்கள். பிறகு ஆசாரியர்களும் பரிசேயர்களும் யூதர்களின் ஆலோசனைச் சபையைக் கூட்டினர். “இனி என்ன செய்யலாம்? இயேசு பல அற்புதங்களைச் செய்து வருகிறான். அவனை இவ்வாறு தொடர்ந்து செய்ய அனுமதித்தால் பிறகு மக்கள் அனைவரும் அவனை நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். பின் ரோமானியர்கள் வந்து நமது ஆலயத்தையும், நாட்டையும் அபகரித்துக்கொள்வார்கள்” என்று பேசிக்கொண்டனர். அங்கே அவர்களில் ஒருவன் காய்பா. அவன் அந்த ஆண்டின் தலைமை ஆசாரியன். அவன் “உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. நாடு முழுவதும் அழிவதைவிட மக்களுக்காக ஒருவன் இறந்துபோவது நல்லது அல்லவா? இதை ஏன் நீங்கள் எண்ணிப்பார்க்கவில்லை?” என்று சொன்னான். காய்பா இவற்றைச் சொந்தமாகச் சிந்தித்துச் சொல்லவில்லை. அவன் அந்த ஆண்டின் தலைமை ஆசாரியன். இயேசு யூத நாட்டுக்காக மரிக்கப்போகிறார் என்பதை அவன் உண்மையில் தீர்க்கதரிசனமாகவே கூறினான். ஆம். இயேசு யூதர்களுக்காகவே மரிக்கப் போகிறார். உலகில் சிதறிக் கிடக்கிற மக்களையெல்லாம் ஒன்று திரட்டி, அவர்களை ஒரே மக்களாக்க அவர் மரிக்கப் போகிறார். அன்றிலிருந்து யூதத்தலைவர்கள் இயேசுவைக் கொலைசெய்யத் திட்டம் தீட்டினர். ஆகையால் இயேசு யூதர்களின் மத்தியில் வெளிப்படையாக நடமாடுவதை நிறுத்தினார். இயேசு எருசலேமை விட்டு வனாந்தரத்திற்கு அருகிலுள்ள இடத்துக்கு சென்றார். இயேசு எப்பிராயீம் என்று அழைக்கப்படுகிற நகரத்துக்குச் சென்றார். அங்கே அவர் தம் சீஷர்களோடு தங்கினார். யூதருடைய பஸ்கா பண்டிகை நெருங்கிக்கொண்டிருந்தது. பஸ்கா பண்டிகைக்கு முன்பே நாட்டிலுள்ள மக்களில் பலர் எருசலேமிற்குச் சென்றனர். அங்கு அவர்கள் தம்மை சுத்தப்படுத்திக்கொள்வதற்கான சடங்குகளைச் செய்வர். மக்கள் இயேசுவை எதிர்ப்பார்த்தனர். அவர்கள் ஆலயத்தில் நின்றுகொண்டு “இயேசு பண்டிகைக்கு வரமாட்டாரா? நீ என்ன நினைக்கிறாய்?” என ஒருவரை ஒருவர் விசாரித்துக்கொண்டனர். ஆனால் தலைமை ஆசாரியரும் பரிசேயரும் இயேசுவைப்பற்றிய ஒரு புதிய கட்டளையைக் கொடுத்திருந்தனர். எவராவது இயேசு எங்கே இருக்கிறார் என்று தெரிந்துகொண்டால் உடனே வந்து தெரிவிக்க வேண்டும். பிறகு, தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் இயேசுவைக் கைதுசெய்ய முடியும்.