யோவான் 11:14-27
யோவான் 11:14-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது இயேசு, “லாசரு இறந்துவிட்டான்” என்று வெளிப்படையாக அவர்களுக்குச் சொல்லி, “நான் அங்கே இல்லாததைக் குறித்து, உங்கள் நிமித்தம் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் நீங்கள் விசுவாசிப்பதற்கு அது உதவியாயிருக்கும். நாம் அவனிடம் போவோம் வாருங்கள்” என்றார். அப்பொழுது திதிமு எனப்பட்ட தோமா மற்றச் சீடர்களைப் பார்த்து, “நாமும் சாகும்படி அவருடன் போவோம், வாருங்கள்” என்றான். இயேசு வந்து சேர்ந்தபோது, லாசரு கல்லறையில் வைக்கப்பட்டு ஏற்கெனவே நான்கு நாட்களாகிவிட்டன என்று கண்டார். பெத்தானியா எருசலேமில் இருந்து இரண்டு மைல்களுக்கும் குறைவான தூரத்திலேயே இருந்தது. இறந்துபோன அவர்களுடைய சகோதரனின் நிமித்தம், மார்த்தாளுக்கும் மரியாளுக்கும் ஆறுதல் சொல்வதற்கு அநேக யூதர்கள் அங்கே வந்திருந்தார்கள். இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவரைச் சந்திப்பதற்கு அவள் புறப்பட்டுப் போனாள். ஆனால் மரியாளோ வீட்டிலேயே இருந்துவிட்டாள். மார்த்தாள் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால், எனது சகோதரன் மரித்திருக்கமாட்டான். இப்பொழுதும்கூட நீர் கேட்பது எதுவோ அதை இறைவன் உமக்குக் கொடுப்பார் என்று நான் அறிந்திருக்கிறேன்” என்றாள். அப்பொழுது இயேசு அவளைப் பார்த்து, “உன்னுடைய சகோதரன் மீண்டும் உயிருடன் எழுந்திருப்பான்” என்றார். அதற்கு மார்த்தாள், “கடைசி நாளில் நடைபெறும் உயிர்த்தெழுதலில் அவன் உயிரோடு எழுந்திருப்பான் என்று எனக்குத் தெரியும்” என்றாள். அப்பொழுது இயேசு அவளிடம், “உயிரும், உயிர்த்தெழுதலும் நானே. என்னில் விசுவாசமாயிருக்கிறவன், மரித்தாலும் உயிர்வாழ்வான். உயிரோடிருந்து என்னில் விசுவாசிக்கிறவன் எவனும் ஒருநாளும் மரிக்கமாட்டான். நீ இதை விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, நீர் இறைவனின் மகன், உலகத்திற்கு வருகிற கிறிஸ்து. நான் இதை விசுவாசிக்கிறேன்” என்றாள்.
யோவான் 11:14-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாகச் சொல்லி; நான் அங்கே இல்லாததினால் நீங்கள் விசுவாசம் உள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்களுக்காக சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார். அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீடர்களைப் பார்த்து: அவருடன் மரிப்பதற்கு நாமும் போவோம் வாருங்கள் என்றான். இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆனது என்றுஅறிந்தார். பெத்தானியா ஊர் எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது. யூதர்களில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக்குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள். இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டு போனாள்; மரியாளோ வீட்டிலே இருந்தாள். மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளைப் பார்த்து: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளைப் பார்த்து: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாக இருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறன் எவனும் என்றென்றைக்கும் மரிக்காமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.
யோவான் 11:14-27 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு இயேசு தெளிவாக, “லாசரு இறந்துபோனான். அங்கே அப்பொழுது நான் இல்லை என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்பொழுது என்னை நீங்கள் நம்புவீர்கள். அதனால்தான் மகிழ்கிறேன். நாம் அவனிடம் போவோம்” என்றார். பிறகு தோமா என்று அழைக்கப்படும் சீஷன், ஏனைய சீஷர்களைப் பார்த்து, “நாமும் அவரோடு போவோம். யூதேயாவில் இயேசுவோடு நாமும் சாவோம்” என்றான். இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். அங்கு வந்ததும் லாசரு இறந்துபோனாதாகவும் அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆனதாகவும் அறிந்தார். எருசலேமிலிருந்து இரண்டு மைல் தூரத்தில் பெத்தானியா உள்ளது. யூதர்கள் பலர் மார்த்தாளிடமும் மரியாளிடமும் வந்திருந்தனர். அவர்களின் சகோதரன் லாசருவின் மரணம் குறித்து துக்கம் விசாரிக்க வந்தனர். இயேசு வந்துகொண்டிருப்பதாக மார்த்தாள் கேள்விப்பட்டாள். அவரை வரவேற்க அவள் போனாள். ஆனால் மரியாள் வீட்டிலேயே தங்கிக்கொண்டாள். மார்த்தாள் இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான். ஆனால் இப்பொழுதுகூட நீர் கேட்பவற்றை தேவன் உமக்குத் தருவார்” என்றாள். இயேசுவோ, “உன் சகோதரன் எழுவான், மீண்டும் உயிர்வாழ்வான்” என்றார். மார்த்தாளோ, “உயிர்த்தெழுதல் நடைபெறும் கடைசிநாளில் அவன் மீண்டும் எழுந்து உயிர் வாழ்வான் என்று எனக்குத் தெரியும்” என்றாள். இயேசு அவளிடம், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னில் நம்பிக்கை வைக்கிற எவனும் தான் இறந்த பிறகும் எழுந்து வாழ்வு பெறுவான். என்னில் வாழ்ந்து நம்பிக்கை வைக்கிற எவனும் உண்மையிலேயே இறப்பதில்லை. மார்த்தாளே, இதை நீ நம்புகிறாயா?” எனக் கேட்டார். “ஆம், ஆண்டவரே. நீர்தான் கிறிஸ்து என்று நம்புகிறேன். நீர்தான் தேவனின் குமாரன். நீரே உலகத்திற்கு வரவிருந்தவர்” என்றாள் மார்த்தாள்.
யோவான் 11:14-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச் சொல்லி; நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார். அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்ற சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான். இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நாலுநாளாயிற்றென்று கண்டார். பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டுமைல் தூரத்திலிருந்தது. யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள். இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டுபோனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள். மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். அதற்கு மார்த்தாள்: உயிர்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.