யோவான் 11:1-29

யோவான் 11:1-29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

லாசரு என்னும் ஒருவன் வியாதியாயிருந்தான். அவன் பெத்தானியா ஊரைச் சேர்ந்தவன். அவன் அங்கே தனது சகோதரிகளான மரியாளுடனும் மார்த்தாளுடனும் வாழ்ந்து வந்தான். வியாதியாய் இருக்கிற லாசருவின் சகோதரியான இந்த மரியாளே, பின்பு கர்த்தர்மேல் நறுமண தைலத்தை ஊற்றி அவருடைய பாதங்களைத் தன்னுடைய தலைமுடியினால் துடைத்தவள். லாசருவின் சகோதரிகள், “ஆண்டவரே, நீர் நேசிக்கிறவன் வியாதியாக இருக்கிறான்” என்ற செய்தியை அனுப்பினார்கள். இயேசு இதைக் கேட்டபோது அவர், “இந்த வியாதி மரணத்தில் முடிவடையாது. இது இறைவனுடைய மகிமைக்காகவும், இதன் மூலமாக மானிடமகனும் மகிமைப்படுவார்” என்றார். இயேசு மார்த்தாளிடமும், அவளுடைய சகோதரியிடமும், லாசருவிடமும் அன்பாயிருந்தார். ஆனால் லாசரு வியாதியாயிருக்கிறான் என்று அவர் கேள்விப்பட்டபோது, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் தங்கியிருந்தார். பின்பு இயேசு தமது சீடர்களிடம், “மீண்டும் நாம் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள்” என்றார். ஆனால் அவர்களோ, “போதகரே, சற்று முன்னதாகத் தான் யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள். மீண்டும் அங்குப் போகிறீரா?” என்று கேட்டார்கள். இயேசு அதற்கு மறுமொழியாக, “பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இருக்கின்றதல்லவா? பகல் வேளையில் நடக்கிறவன் உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறதால், அவன் இடறிவிழமாட்டான். அவன் இரவில் நடக்கிறபோது அவனுக்கு வெளிச்சம் இல்லாதபடியால், அவன் இடறிவிழுகிறான்” என்றார். இயேசு அவர்களுக்கு மேலும் சொன்னதாவது: “நம்முடைய சிநேகிதன் லாசரு நித்திரையாயிருக்கிறான்; நான் அங்கேபோய் அவனை எழுப்பப்போகிறேன்” என்றார். சீடர்கள் அதற்கு மறுமொழியாக, “போதகரே, அவன் நித்திரையாயிருந்தால் அவன் சுகமடைவான்” என்றார்கள். இயேசு அவனுடைய மரணத்தைக் குறித்துப் பேசினார். அவருடைய சீடர்களோ இயல்பான நித்திரையைக் குறித்தே அவர் சொன்னார் என்று நினைத்தார்கள். அப்பொழுது இயேசு, “லாசரு இறந்துவிட்டான்” என்று வெளிப்படையாக அவர்களுக்குச் சொல்லி, “நான் அங்கே இல்லாததைக் குறித்து, உங்கள் நிமித்தம் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் நீங்கள் விசுவாசிப்பதற்கு அது உதவியாயிருக்கும். நாம் அவனிடம் போவோம் வாருங்கள்” என்றார். அப்பொழுது திதிமு எனப்பட்ட தோமா மற்றச் சீடர்களைப் பார்த்து, “நாமும் சாகும்படி அவருடன் போவோம், வாருங்கள்” என்றான். இயேசு வந்து சேர்ந்தபோது, லாசரு கல்லறையில் வைக்கப்பட்டு ஏற்கெனவே நான்கு நாட்களாகிவிட்டன என்று கண்டார். பெத்தானியா எருசலேமில் இருந்து இரண்டு மைல்களுக்கும் குறைவான தூரத்திலேயே இருந்தது. இறந்துபோன அவர்களுடைய சகோதரனின் நிமித்தம், மார்த்தாளுக்கும் மரியாளுக்கும் ஆறுதல் சொல்வதற்கு அநேக யூதர்கள் அங்கே வந்திருந்தார்கள். இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவரைச் சந்திப்பதற்கு அவள் புறப்பட்டுப் போனாள். ஆனால் மரியாளோ வீட்டிலேயே இருந்துவிட்டாள். மார்த்தாள் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால், எனது சகோதரன் மரித்திருக்கமாட்டான். இப்பொழுதும்கூட நீர் கேட்பது எதுவோ அதை இறைவன் உமக்குக் கொடுப்பார் என்று நான் அறிந்திருக்கிறேன்” என்றாள். அப்பொழுது இயேசு அவளைப் பார்த்து, “உன்னுடைய சகோதரன் மீண்டும் உயிருடன் எழுந்திருப்பான்” என்றார். அதற்கு மார்த்தாள், “கடைசி நாளில் நடைபெறும் உயிர்த்தெழுதலில் அவன் உயிரோடு எழுந்திருப்பான் என்று எனக்குத் தெரியும்” என்றாள். அப்பொழுது இயேசு அவளிடம், “உயிரும், உயிர்த்தெழுதலும் நானே. என்னில் விசுவாசமாயிருக்கிறவன், மரித்தாலும் உயிர்வாழ்வான். உயிரோடிருந்து என்னில் விசுவாசிக்கிறவன் எவனும் ஒருநாளும் மரிக்கமாட்டான். நீ இதை விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, நீர் இறைவனின் மகன், உலகத்திற்கு வருகிற கிறிஸ்து. நான் இதை விசுவாசிக்கிறேன்” என்றாள். அவள் இதைச் சொன்னபின்பு திரும்பிப்போய். தன்னுடைய சகோதரி மரியாளை இரகசியமாகக் கூட்டிக்கொண்டுபோய், “போதகர் வந்து இருக்கிறார். அவர் உன்னைக் கூப்பிடுகிறார்” என்றாள். மரியாள் இதைக் கேட்டபோது, விரைவாய் எழுந்து அவரிடம் போனாள்.

யோவான் 11:1-29 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்தைச் சேர்ந்த லாசரு என்பவன் வியாதிப்பட்டிருந்தான். கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே; அவளுடைய சகோதரனாகிய லாசரு வியாதியாக இருந்தான். அப்பொழுது அவனுடைய சகோதரிகள்: ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாக இருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள். இயேசு அதைக் கேள்விப்பட்டபொழுது: இந்த வியாதி மரணம் ஏற்படுவதற்காக இல்லாமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்காக இருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார். இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாக இருந்தார். அவன் வியாதியாக இருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே மீண்டும் இரண்டு நாட்கள் தங்கினார். அதன்பின்பு அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: நாம் மீண்டும் யூதேயாவிற்குப் போவோம் வாருங்கள் என்றார். அதற்குச் சீடர்கள்: ரபீ, இப்பொழுது தான் யூதர்கள் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மீண்டும் நீர் அந்த இடத்திற்குப் போகலாமா என்றார்கள். இயேசு மறுமொழியாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறல் அடையமாட்டான். ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாததினால் இடறுவான் என்றார். இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களைப் பார்த்து: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரை அடைந்திருக்கிறான், நான் அவனை உயிரோடு எழுப்பப்போகிறேன் என்றார். அதற்கு அவருடைய சீடர்கள்: ஆண்டவரே, நித்திரை அடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள். இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னார் என்று நினைத்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாகச் சொல்லி; நான் அங்கே இல்லாததினால் நீங்கள் விசுவாசம் உள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்களுக்காக சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார். அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீடர்களைப் பார்த்து: அவருடன் மரிப்பதற்கு நாமும் போவோம் வாருங்கள் என்றான். இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆனது என்றுஅறிந்தார். பெத்தானியா ஊர் எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது. யூதர்களில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக்குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள். இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டு போனாள்; மரியாளோ வீட்டிலே இருந்தாள். மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளைப் பார்த்து: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளைப் பார்த்து: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாக இருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறன் எவனும் என்றென்றைக்கும் மரிக்காமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள். இவைகளைச் சொன்னபின்பு, அவள் போய், தன் சகோதரியாகிய மரியாளை இரகசியமாக அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள். அவள் அதைக் கேட்டவுடனே, சீக்கிரமாக எழுந்து, அவரிடத்தில் வந்தாள்.

யோவான் 11:1-29 பரிசுத்த பைபிள் (TAERV)

லாசரு என்ற பெயருள்ள ஒரு மனிதன் நோயுற்றிருந்தான். அவன் பெத்தானியா என்ற நகரத்தில் வாழ்ந்து வந்தான். இந்நகரத்தில்தான் மரியாளும் அவளது சகோதரி மார்த்தாளும் வாழ்ந்தனர். (இந்த மரியாள்தான் பின்பு இயேசுவிற்கு வாசனைத் தைலம் பூசித் தன் கூந்தலால் அவரது கால்களைத் துடைத்தவள்) மரியாளின் சகோதரன்தான் லாசரு. அவன் இப்போது நோயுற்றிருந்தான். ஆகையால் மரியாளும் மார்த்தாளும் இயேசுவிடம் செய்தி அனுப்பி “ஆண்டவரே, உங்கள் அன்பான நண்பன் லாசரு நோயுற்றிருக்கிறான்” என்று சொன்னார்கள். இயேசு இதனைக் கேட்டு “நோயின் முடிவு மரணம் அன்று. இந்த நோய் தேவனை மகிமைப்படுத்துவதற்காக ஏற்பட்டது. இது, தேவனின் குமாரனுக்குப் புகழைக் கொண்டுவருவதற்காகவே உண்டானது” என்றார். (மார்த்தாள், மரியாள், லாசரு ஆகிய மூவரையும் இயேசு நேசித்து வந்தார்) இயேசு லாசருவின் நோயைப்பற்றி அறிந்தபோது மேலும் இரண்டு நாட்கள் ஏற்கெனவே இருந்த இடத்திலேயே தங்கினார். பிறகு இயேசு தன் சீஷர்களிடம் “நாம் மறுபடியும் யூதேயாவுக்குத் திரும்பிப் போவோம்” என்றார். அவரது சீஷர்கள், “ஆண்டவரே, யூதேயாவில் உள்ள யூதர்கள் உம்மைக் கல்லெறிந்து கொல்ல முயற்சித்தார்கள். அது நடந்தது சமீபகாலத்தில்தான். எனவே, இப்பொழுது அங்கே திரும்பிப் போக வேண்டுமா?” என்று கேட்டனர். இயேசுவோ, “பகலில் பன்னிரண்டு மணிநேரம் வெளிச்சம் இருக்கும். சரிதானே. ஒருவன் பகலில் நடந்தால், அவன் தடுமாறி விழமாட்டான். ஏனென்றால், அவனால் உலகின் வெளிச்சத்தைப் பார்க்க முடியும். ஆனால் ஒருவன் இரவிலே நடந்தால் அவன் தடுமாறுவான். ஏனென்றால் அவனுக்கு உதவி செய்ய வெளிச்சம் இல்லை” என்றார். அவர் மேலும், “நமது நண்பன் லாசரு இப்பொழுது தூங்கிக்கொண்டிருக்கிறான். ஆனால் நான் அவனை எழுப்பப்போகிறேன்” என்றார். அவரது சீஷர்களோ, “ஆண்டவரே, அவன் தூங்கிக்கொண்டிருந்தால் நிச்சயம் குணமாவான்” என்றார்கள். லாசரு இறந்து போனான் என்பதைக்குறித்தே இயேசு அவ்வாறு சொன்னார். ஆனால் அவரது சீஷர்களோ லாசரு உண்மையில் தூங்குவதாக நினைத்துக்கொண்டனர். பிறகு இயேசு தெளிவாக, “லாசரு இறந்துபோனான். அங்கே அப்பொழுது நான் இல்லை என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்பொழுது என்னை நீங்கள் நம்புவீர்கள். அதனால்தான் மகிழ்கிறேன். நாம் அவனிடம் போவோம்” என்றார். பிறகு தோமா என்று அழைக்கப்படும் சீஷன், ஏனைய சீஷர்களைப் பார்த்து, “நாமும் அவரோடு போவோம். யூதேயாவில் இயேசுவோடு நாமும் சாவோம்” என்றான். இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். அங்கு வந்ததும் லாசரு இறந்துபோனாதாகவும் அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆனதாகவும் அறிந்தார். எருசலேமிலிருந்து இரண்டு மைல் தூரத்தில் பெத்தானியா உள்ளது. யூதர்கள் பலர் மார்த்தாளிடமும் மரியாளிடமும் வந்திருந்தனர். அவர்களின் சகோதரன் லாசருவின் மரணம் குறித்து துக்கம் விசாரிக்க வந்தனர். இயேசு வந்துகொண்டிருப்பதாக மார்த்தாள் கேள்விப்பட்டாள். அவரை வரவேற்க அவள் போனாள். ஆனால் மரியாள் வீட்டிலேயே தங்கிக்கொண்டாள். மார்த்தாள் இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான். ஆனால் இப்பொழுதுகூட நீர் கேட்பவற்றை தேவன் உமக்குத் தருவார்” என்றாள். இயேசுவோ, “உன் சகோதரன் எழுவான், மீண்டும் உயிர்வாழ்வான்” என்றார். மார்த்தாளோ, “உயிர்த்தெழுதல் நடைபெறும் கடைசிநாளில் அவன் மீண்டும் எழுந்து உயிர் வாழ்வான் என்று எனக்குத் தெரியும்” என்றாள். இயேசு அவளிடம், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னில் நம்பிக்கை வைக்கிற எவனும் தான் இறந்த பிறகும் எழுந்து வாழ்வு பெறுவான். என்னில் வாழ்ந்து நம்பிக்கை வைக்கிற எவனும் உண்மையிலேயே இறப்பதில்லை. மார்த்தாளே, இதை நீ நம்புகிறாயா?” எனக் கேட்டார். “ஆம், ஆண்டவரே. நீர்தான் கிறிஸ்து என்று நம்புகிறேன். நீர்தான் தேவனின் குமாரன். நீரே உலகத்திற்கு வரவிருந்தவர்” என்றாள் மார்த்தாள். மார்த்தாள் இவ்வாறு சொன்ன பிறகு அவள் தன் சகோதரி மரியாளிடம் திரும்பிச் சென்றாள். அவள் தனியாக அவளிடம் பேசினாள். “இயேசு இங்கே இருக்கிறார். அவர் உன்னை அழைத்தார்” என்றாள் மார்த்தாள். இதைக் கேட்டதும் மரியாள் எழுந்து இயேசுவிடம் விரைவாகப் போனாள்.

யோவான் 11:1-29 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்திலுள்ளவனாகிய லாசரு என்னும் ஒருவன் வியாதிப்பட்டிருந்தான். கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே; அவளுடைய சகோதரனாகிய லாசரு வியாதியாயிருந்தான். அப்பொழுது அவனுடைய சகோதரிகள்: ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள். இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார். இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார். அவன் வியாதியாயிருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டுநாள் தங்கினார். அதன்பின்பு அவர் தம்முடைய சீஷரை நோக்கி: நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார். அதற்குச் சீஷர்கள்: ரபீ, இப்பொழுதுதான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான். ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான் என்றார். இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார். அதற்கு அவருடைய சீஷர்கள்: ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள். இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னாரென்று நினைத்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச் சொல்லி; நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார். அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்ற சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான். இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நாலுநாளாயிற்றென்று கண்டார். பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டுமைல் தூரத்திலிருந்தது. யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள். இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டுபோனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள். மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். அதற்கு மார்த்தாள்: உயிர்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள். இவைகளைச் சொன்னபின்பு, அவள் போய், தன் சகோதரியாகிய மரியாளை இரகசியமாய் அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள். அவள் அதைக் கேட்டவுடனே, சீக்கிரமாய் எழுந்து, அவரிடத்தில் வந்தாள்.