யோவான் 10:11-42

யோவான் 10:11-42 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுக்கிறான். கூலிக்காரனோ ஆடுகளின் உரிமையுள்ள மேய்ப்பன் அல்ல. எனவே அவன் ஓநாய் வருகிறதைக் காண்கிறபோது, ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போகிறான். அப்பொழுது ஓநாய் மந்தையைத் தாக்கி, அதைச் சிதறடிக்கிறது. கூலிக்காரனோ தான் கூலிக்காரனாக இருப்பதால், ஆடுகளைக் குறித்து அக்கறை இல்லாமல் அவன் ஓடிப்போகிறான். “நானே நல்ல மேய்ப்பன்; நான் என் ஆடுகளையும் என்னுடைய ஆடுகள் என்னையும் அறிந்திருக்கின்றன. பிதா என்னை அறிந்திருக்கிறதுபோல நானும் பிதாவை அறிந்திருக்கிறேன், ஆகையால் நான் ஆடுகளுக்காக என் உயிரையும் கொடுக்கிறேன். இந்தத் தொழுவத்திற்குள் இராத வேறு ஆடுகளும் எனக்கு உண்டு. அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும். அவைகளும் என்னுடைய குரலுக்குச் செவிகொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாய் இருக்கும். நான் என் உயிரைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். நான் அதைத் திரும்பவும் பெற்றுக் கொள்வேன். என் உயிரை ஒருவரும் என்னிடத்திலிருந்து பறித்துக் கொள்வதில்லை. என் சுயவிருப்பத்தின்படியே நான் என் உயிரைக் கொடுக்கிறேன். அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்த கட்டளையை நான் என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன்” என்றார். இந்த வார்த்தைகளை யூதர்கள் கேட்டபோது, அவர்களிடையே மீண்டும் பிரிவினை ஏற்பட்டது. அவர்களில் பலர், “இவனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது, பைத்தியமும் பிடித்துவிட்டது, இவன் பேச்சை ஏன் கேட்கிறீர்கள்?” என்றார்கள். மற்றவர்களோ, “இவை பிசாசு பிடித்தவனுடைய வார்த்தைகள் அல்லவே. பார்வையற்றவனுடைய கண்களைப் பிசாசினால் திறக்க முடியுமோ?” என்றார்கள். எருசலேமிலே ஆலயத்தின் அர்ப்பணிப்புப் பண்டிகை நடந்தது. அது குளிர்க்காலமாயிருந்தது. இயேசு ஆலயப் பகுதியில் சாலொமோன் மண்டபத்தில் உலாவிக்கொண்டிருந்தார். அப்பொழுது யூதர்கள் இயேசுவைச் சூழ்ந்துகொண்டு, “நீர் எவ்வளவு காலத்துக்கு எங்களைச் சந்தேகப்படவைப்பீர்? நீர் கிறிஸ்துவானால் அதை எங்களுக்குத் தெளிவாகச் சொல்லும்” என்றார்கள். அதற்கு இயேசு, “நான் உங்களுக்குச் சொன்னேன். ஆனால் நீங்கள் விசுவாசிக்கவில்லை. என் பிதாவின் பெயரினால் நான் செய்கிற கிரியைகளே என்னைக் குறித்துப் பேசுகின்றன. ஆனால், நீங்கள் என்னுடைய ஆடுகளாய் இராதபடியால், விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள். என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிகொடுக்கின்றன. நான் அவைகளை அறிந்திருக்கிறேன். அவைகள் என்னைப் பின்பற்றுகின்றன. நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவை ஒருபோதும் அழிந்து போவதில்லை. ஒருவராலும் அவைகளை என்னுடைய கைகளிலிருந்து பறித்துக்கொள்ள முடியாது. அவைகளை எனக்குக் கொடுத்த என்னுடைய பிதா, எல்லோரைப் பார்க்கிலும் மிகவும் பெரியவர்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து ஒருவராலும் பறித்துக்கொள்ள முடியாது. நானும் பிதாவும் ஒன்றே” என்றார். அப்பொழுது யூதத்தலைவர்கள் இயேசுவின்மேல் எறியும்படி மீண்டும் கற்களை எடுத்துக்கொண்டார்கள். ஆனால் இயேசுவோ அவர்களிடம், “என் பிதாவினிடத்தில் இருந்து பல நற்கிரியைகளை நான் உங்களுக்குக் காண்பித்தேன். இவைகளில் எதினிமித்தம் நீங்கள் என்மேல் கல்லெறிகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு யூதர்கள், “நற்செயலினால் நாங்கள் உன்மேல் கல்லெறியவில்லை. ஆனால் ஒரு சாதாரண மனிதனாகிய நீ, உன்னைக் கடவுள் என்று சொல்லிக்கொள்கிறாயே. அவ்விதம் நீ இறைவனை நிந்தித்துப் பேசியதற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம்” என்றார்கள். “உங்கள் சட்டத்தில், ‘நீங்கள் “தெய்வங்களாய்” இருக்கிறீர்கள்’ என்று எழுதியிருக்கவில்லையா? என இயேசு அவர்களிடம் கேட்டார். இறைவனுடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டவர்களை அவர், ‘கடவுள்கள்’ என்று சொல்லியிருக்கிறாரே. வேதவசனமும் தவறாக இருக்கமுடியாதே. அப்படியானால் பிதாவினால் தனக்கென வேறுபிரித்து இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டவரைக் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் என்னை, ‘இறைவனுடைய மகன்’ என்று சொன்னதால், நான் இறைவனை நிந்திக்கிறேன் என்று நீங்கள் எப்படி என்னில் குற்றம் காணலாம்? நான் என் பிதாவுக்குரியவற்றைச் செய்யாவிட்டால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டாம். ஆனால் அவைகளை நான் செய்தால், நீங்கள் என்னை விசுவாசிக்காவிட்டாலும் கூட கிரியைகளையாவது விசுவாசியுங்கள். அப்பொழுது பிதா என்னில் இருக்கிறார் என்பதையும், நான் பிதாவில் இருக்கிறேன் என்பதையும் நீங்கள் அறிந்து விளங்கிக்கொள்வீர்கள்” என்றார். எனவே அவர்கள் மீண்டும் இயேசுவைக் கைதுசெய்ய முயன்றார்கள். ஆனால் அவரோ அவர்களுடைய பிடியில் அகப்படாமல் தப்பிப்போய்விட்டார். பின்பு இயேசு மீண்டும் யோர்தானைக் கடந்து ஆரம்ப நாட்களிலே யோவான் திருமுழுக்கு கொடுத்துக்கொண்டிருந்த இடத்திற்கு போய், அங்கே தங்கினார். அநேகர் அவரிடத்தில் வந்து. அவர்கள் அவரிடம், “யோவான் ஒருபோதும் ஒரு அடையாளத்தையும் செய்யவில்லை. ஆனாலும் இவரைக்குறித்து யோவான் சொன்னவை எல்லாம் உண்மையாய் இருக்கிறது” என்றார்கள். அவ்விடத்திலே அநேகர் இயேசுவில் விசுவாசம் வைத்தார்கள்.

யோவான் 10:11-42 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். மேய்ப்பனாக இல்லாதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தம் இல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைப் பார்த்து ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். வேலையாள் கூலிக்காக வேலைசெய்கிறவன், ஆகவே, ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படமாட்டான். நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டும் இருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். இந்தத் தொழுவத்தில் உள்ளவைகள் அல்லாமல் வேறு ஆடுகளும் எனக்கு இருக்கிறது; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும், ஒரே மேய்ப்பனுமாகும். நான் என் ஜீவனை மீண்டும் பெற்றுக்கொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாக இருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்தில் இருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது, அதை மீண்டும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார். இந்த வசனங்களினால் யூதர்களுக்குள்ளே மீண்டும் பிரிவினை உண்டானது. அவர்களில் அநேகர்: இவன் பிசாசு பிடித்தவன், பைத்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவி கொடுக்கிறீர்கள் என்றார்கள். வேறுசிலர்: இவைகள் பிசாசு பிடித்தவனுடைய வசனங்கள் இல்லை. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள். பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகை வந்தது; குளிர்காலமுமாக இருந்தது. இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே நடந்துகொண்டிருந்தார். அப்பொழுது யூதர்கள் அவரை சூழ்ந்துகொண்டு: எவ்வளவு காலம்வரைக்கும் எங்களுடைய ஆத்துமாவிற்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாக சொல்லும் என்றார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற செயல்களே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது. ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாக இல்லாததினால் விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள். என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப்பின் செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதும் இல்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லோரையும்விட பெரியவராக இருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் என்றார். அப்பொழுது யூதர்கள் மீண்டும் அவர்மேல் கல்லெறியும்படி, கற்க்களை எடுத்துக்கொண்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நான் என் பிதாவினாலே அநேக நற்செயல்களை உங்களுக்குக் காட்டினேன், அவைகளில் எந்தச் செயலுக்காக என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். யூதர்கள் அவருக்கு மறுமொழியாக: நற்செயலினால் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனிதனாக இருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இந்தவிதமாக தேவ அவமதிப்பு சொல்லுகிறதினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: தேவர்களாக இருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாக உங்களுடைய வேதத்தில் எழுதவில்லையா? தேவவசனத்தைப் பெற்றுக் கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் ஒழிந்துபோகாததாக இருக்க, பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவ அவமதிப்பு சொன்னேன் என்று நீங்கள் சொல்லலாமா? என் பிதாவின் செயல்களை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. அவைகளை செய்தால், நீங்கள் என்னை விசுவாசியாமல் இருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தச் செயல்களை விசுவாசியுங்கள் என்றார். இதனால் அவர்கள் மீண்டும் அவரைப் பிடிக்கத் தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி, யோர்தானுக்கு அக்கரையிலே முன்னே யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்த இடத்திற்குத் திரும்பிப்போய், அங்கே தங்கினார். அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆனாலும் இவரைக்குறித்து யோவான் சொன்னது எல்லாம் உண்மையாக இருக்கிறது என்றார்கள். அந்த இடத்தில் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.

யோவான் 10:11-42 பரிசுத்த பைபிள் (TAERV)

“நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் தனது ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுப்பான். கூலிக்காக ஆடுகளைக் கவனிக்கிறவன் மேய்ப்பனைவிட வித்தியாசமானவன். கூலிக்காரனுக்கு ஆடுகள் சொந்தமானவை அல்ல. ஆகையால் ஓநாய் வருவதைக் கண்டால் கூலிக்காரன் ஆடுகளை விட்டு, விட்டு ஓடிப் போவான். பிறகு ஓநாய்கள் ஆடுகளை கிழித்து கொன்று சிதறடிக்கும். அந்த மனிதன் ஓடிவிடுகிறான். ஏனென்றால் அவன் கூலிக்காரன். அவனுக்கு ஆடுகளைப்பற்றிய அக்கறை இல்லை. “ஆடுகளைப்பற்றி (மக்களைப்பற்றி) அக்கறை கொண்ட நல்ல மேய்ப்பன் நான். என் பிதா என்னை அறிந்திருப்பது போலவே நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன். நான் என் பிதாவை அறிந்திருப்பது போலவே என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. நான் என் ஆடுகளுக்காக என் ஜீவனைக் கொடுக்கிறேன். எனக்கு வேறு ஆடுகளும் உள்ளன. அவை இந்த மந்தையில் இல்லை. நான் அவற்றையும் அழைத்து வர வேண்டும். அவை என் குரலைக் கவனிக்கும். வருங்காலத்தில் எல்லாம் ஒரே மந்தையாகவும் ஒரே மேய்ப்பனாகவும் இருக்கும். என் பிதா என்னை நேசிக்கிறார். ஏனென்றால் நான் என் ஜீவனைக் கொடுக்கிறேன். நான் என் ஜீவனைக் கொடுப்பதால் அதனை மீண்டும் பெறுவேன். என்னிடமிருந்து என் ஜீவனை எவரும் பறிக்க முடியாது. நானே என் ஜீவனைத் தாராளமாகக் கொடுக்கிறேன். அதற்கான உரிமை எனக்குண்டு. அதுபோல் அதனைத் திரும்பப் பெறுகிற உரிமையும் எனக்குண்டு. இதைத்தான் பிதா எனக்குக் கட்டளையிட்டார்” என்றார். இயேசு சொன்ன இக்காரியங்களினால் மீண்டும் யூதர்கள் பிரிந்துபோயினர். பல யூதர்கள் “பிசாசு அவனுக்குள் புகுந்துகொண்டது. அவன் பைத்தியமாக உளறுகிறான். அவன் கூறுவதை ஏன் கேட்கிறீர்கள்?” என்றனர். அதற்குப் பதிலாக வேறு சில யூதர்கள், “பிசாசு பிடித்து உளறுகிறவனால் இதுபோன்ற உண்மைகளைப் பேசமுடியுமா? குருடனின் கண்களைப் பிசாசு குணமடையச் செய்யுமா? செய்யாது” என்றனர். அது மழைக் காலமாயிருந்தது. எருசலேமில் தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகை வந்தது. இயேசு தேவாலயத்தில் சாலமோனின் மண்டபத்திலே இருந்தார். யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். “இன்னும் எவ்வளவு காலம் உங்களைப்பற்றிப் புதிராக வைத்திருப்பீர்கள். நீங்கள் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாகச் சொல்லும்” என்று கேட்டனர். “நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். ஆனால் நீங்கள் நம்பவில்லை. நான் என் பிதாவின் பேரில் அற்புதங்களைச் செய்கிறேன். அந்த அற்புதங்கள் நான் யாரென்று உங்களுக்கு காட்டுகின்றன. ஆனால் நீங்கள் நம்புகிறதில்லை. ஏனென்றால் நீங்கள் எனது ஆடுகள் அல்ல. எனது ஆடுகள் எனது குரலைக் கேட்கும். நான் அவற்றை அறிவேன். அவை என்னைப் பின் தொடரும். நான் என் ஆடுகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் இறந்துபோவதில்லை. அவைகளை என் கையிலிருந்து எவரும் பறித்துக்கொள்ளமுடியாது. என் பிதா எனக்கு ஆடுகளைத் தந்தார். அவர் எல்லோரையும்விடப் பெரியவர். எவரும் ஆடுகளை என் பிதாவின் கைகளில் இருந்து திருடிக்கொள்ளமுடியாது. நானும் பிதாவும் ஒருவர்தான்” என்றார், இயேசு. மீண்டும் யூதர்கள் அவரைக் கொல்வதற்காகக் கற்களை எடுத்துக்கொண்டனர். ஆனால் இயேசு அவர்களிடம், “நான் என் பிதா மூலமாகப் பல நற்செயல்களைச் செய்தேன். அந்தச் செயல்களை நீங்களும் பார்த்தீர்கள். அவற்றில் எந்த நல்ல செயலுக்காக என்னைக் கல்லெறிய விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு அவர்கள் “நீ செய்த எந்த நல்ல செயல்களுக்காகவும் நாங்கள் உன்னைக் கொல்லவில்லை. ஆனால் நீ சொல்லுகிறவை எல்லாம் தேவனுக்கு எதிராக இருக்கின்றன. நீ ஒரு மனிதன். ஆனால் நீ தேவன் என்று கூறுகிறாய். அதற்காகத்தான் உன்னைக் கல்லால் எறிந்து கொல்லப் பார்க்கிறோம்” என்றனர். “‘தேவர்களாயிருக்கிறீர்கள், என்று நான் சொன்னேன்’ என்பதாக உங்கள் சட்டத்தில் எழுதியிருக்கிறது. தேவனின் செய்தியைப் பெற்றுக்கொண்ட மக்களை தேவர்கள் என்று சொல்லலாம் என பரிசுத்த வேதவாக்கியங்கள் கூறுகின்றன. வேதவாக்கியங்கள் எப்போதும் உண்மையானவை. ஆகவே, ‘நான் தேவனின் குமாரன்’ என்று கூறியதை, தேவனுக்கு எதிராகப் பேசுவது என்று நீங்கள் ஏன் கூறுகிறீர்கள்? தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த உலகத்துக்கு அனுப்பப்பட்டவன் நான்தான். என்னுடடைய பிதா செய்தவற்றை நான் செய்யாவிட்டால் நீங்கள் என்னை நம்பவேண்டியதில்லை. ஆனால் எனது பிதா செய்தவற்றை நானும் செய்வேனானால் நீங்கள் என்னை நம்பித்தான் ஆகவேண்டும். நீங்கள் என்னை நம்புவதில்லையானாலும் நான் செய்கின்றவற்றை நம்பித்தான் ஆகவேண்டும். நான் பிதாவிடமும் பிதா என்னிடமும் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார், இயேசு. யூதர்கள் இயேசுவைப் பிடிக்க மீண்டும் முயன்றார்கள். ஆனால் இயேசு அவர்களிடமிருந்து தப்பித்துக்கொண்டார். பிறகு இயேசு யோர்தான் நதியைக் கடந்து திரும்பிப் போனார். யோவான் முன்பு ஞானஸ்நானம் கொடுத்த இடத்துக்குப் போனார். அங்கே அவர் தங்கினார். அவரிடம் பலர் வந்தனர். “யோவான் எவ்வித அற்புதமும் செய்யவில்லை. ஆனால் இயேசுவைப்பற்றி அவன் சொன்னவை எல்லாம் உண்மையாக இருக்கின்றன” என்றனர். அங்கே அநேக மக்கள் இயேசுவிடம் நம்பிக்கை வைத்தனர்.

யோவான் 10:11-42 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான். நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக்கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார். இந்த வசனங்களினிமித்தம் யூதருக்குள்ளே மறுபடியும் பிரிவினையுண்டாயிற்று. அவர்களில் அநேகர்: இவன் பிசாசு பிடித்தவன், பயித்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவிகொடுக்கிறீர்கள் என்றார்கள். வேறே சிலர்: இவைகள் பிசாசு பிடித்தவனுடைய வசனங்களல்லவே. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள். பின்பு எருசலேமிலே தேவாலயப்பிரதிஷ்டைபண்டிகை வந்தது; மாரிகாலமுமாயிருந்தது. இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார். அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது. ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள். என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவதூஷணஞ்சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ்சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா? என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார் இதினிமித்தம் அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்கத் தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி, யோர்தானுக்கு அக்கரையிலே முன்னே யோவான் ஞானஸ்நானங்கொடுத்துக்கொண்டிருந்த இடத்துக்குத் திரும்பிப்போய், அங்கே தங்கினார். அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆகிலும் இவரைக்குறித்து யோவான் சொன்னதெல்லாம் மெய்யாயிருக்கிறது என்றார்கள். அவ்விடத்திலே அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

யோவான் 10:11-42

யோவான் 10:11-42 TAOVBSIயோவான் 10:11-42 TAOVBSIயோவான் 10:11-42 TAOVBSIயோவான் 10:11-42 TAOVBSI

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்