யோவான் 10:1-23

யோவான் 10:1-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு மேலும் சொன்னதாவது: “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஆட்டுத் தொழுவத்தினுள்ளே ஒருவன் வாசல் வழியாய் உள்ளே போகாமல் வேறு வழியாய் ஏறி உள்ளே வருகிறவன், அவன் கள்வனும் கொள்ளைக்காரனுமாய் இருப்பான். வாசல் வழியாய் உள்ளே போகிறவனே ஆடுகளின் மேய்ப்பனாய் இருக்கிறான். காவலாளி அவனுக்கு வாசல் கதவைத் திறந்து விடுகிறான். ஆடுகளும் அவனுடைய குரலுக்குச் செவிகொடுக்கின்றன. அவன் தன்னுடைய ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வழிநடத்திச் செல்கிறான். அவன் தனக்குச் சொந்தமான எல்லா ஆடுகளையும் தொழுவத்திற்கு வெளியே கொண்டுவந்து விட்டபின்பு, அவைகளுக்கு முன்னாக நடந்து செல்கிறான். அவனுடைய ஆடுகளும் அவனுடைய குரலை அறிந்திருப்பதால், அவை அவனுக்குப்பின் செல்கின்றன. ஆடுகள் ஒருபோதும் அறியாத ஒருவனைப் பின்பற்றிச் செல்லமாட்டாது; ஒரு அவனுடைய குரலை அவை இன்னாருடைய குரல் என்று அறியாதபடியால், அவை அவனைவிட்டு ஓடிப்போகும்” என்றார். இயேசு இதை உவமையாக பேசி அவர்களுக்குச் சொன்னபோது, இயேசு தங்களுக்கு என்ன சொல்கிறார் என்று அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை. எனவே இயேசு மீண்டும் அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், ஆடுகளுக்கு வாசல் நானே. எனக்கு முன்னே வந்த எல்லோரும் கள்வரும் கொள்ளைக்காரருமாய் இருக்கிறார்கள். ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. நானே வாசல்; என் வழியாய் உள்ளே போகிறவர்கள் யாரோ அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அவர்கள் சுதந்திரமாய் உள்ளே வந்து வெளியே போய், தமக்குரிய மேய்ச்சலைப் பெற்றுக்கொள்கிறார்கள். திருடனோ திருடவும் கொல்லவும் அழிக்கவுமே வருகிறான்; நானோ அவர்கள் ஜீவனை அடையும்படியாக வந்திருக்கிறேன். அவர்கள் அந்த ஜீவனை நிறைவாய் பெற்றுக்கொள்ளும்படியாகவே வந்தேன். “நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுக்கிறான். கூலிக்காரனோ ஆடுகளின் உரிமையுள்ள மேய்ப்பன் அல்ல. எனவே அவன் ஓநாய் வருகிறதைக் காண்கிறபோது, ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போகிறான். அப்பொழுது ஓநாய் மந்தையைத் தாக்கி, அதைச் சிதறடிக்கிறது. கூலிக்காரனோ தான் கூலிக்காரனாக இருப்பதால், ஆடுகளைக் குறித்து அக்கறை இல்லாமல் அவன் ஓடிப்போகிறான். “நானே நல்ல மேய்ப்பன்; நான் என் ஆடுகளையும் என்னுடைய ஆடுகள் என்னையும் அறிந்திருக்கின்றன. பிதா என்னை அறிந்திருக்கிறதுபோல நானும் பிதாவை அறிந்திருக்கிறேன், ஆகையால் நான் ஆடுகளுக்காக என் உயிரையும் கொடுக்கிறேன். இந்தத் தொழுவத்திற்குள் இராத வேறு ஆடுகளும் எனக்கு உண்டு. அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும். அவைகளும் என்னுடைய குரலுக்குச் செவிகொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாய் இருக்கும். நான் என் உயிரைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். நான் அதைத் திரும்பவும் பெற்றுக் கொள்வேன். என் உயிரை ஒருவரும் என்னிடத்திலிருந்து பறித்துக் கொள்வதில்லை. என் சுயவிருப்பத்தின்படியே நான் என் உயிரைக் கொடுக்கிறேன். அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்த கட்டளையை நான் என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன்” என்றார். இந்த வார்த்தைகளை யூதர்கள் கேட்டபோது, அவர்களிடையே மீண்டும் பிரிவினை ஏற்பட்டது. அவர்களில் பலர், “இவனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது, பைத்தியமும் பிடித்துவிட்டது, இவன் பேச்சை ஏன் கேட்கிறீர்கள்?” என்றார்கள். மற்றவர்களோ, “இவை பிசாசு பிடித்தவனுடைய வார்த்தைகள் அல்லவே. பார்வையற்றவனுடைய கண்களைப் பிசாசினால் திறக்க முடியுமோ?” என்றார்கள். எருசலேமிலே ஆலயத்தின் அர்ப்பணிப்புப் பண்டிகை நடந்தது. அது குளிர்க்காலமாயிருந்தது. இயேசு ஆலயப் பகுதியில் சாலொமோன் மண்டபத்தில் உலாவிக்கொண்டிருந்தார்.

யோவான் 10:1-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்திற்குள் வாசல்வழியாக நுழையாமல், வேறுவழியாக ஏறுகிறவன் திருடனும், கொள்ளைக்காரனுமாக இருக்கிறான். வாசல்வழியாக நுழைகிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாக இருக்கிறான். வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பெயர் சொல்லிக் அழைத்து, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான். அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறதினால் அவனுக்குப் பின்னே செல்லுகிறது. தெரியாதவர்களுடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் தெரியாதவனுக்குப் பின்னே செல்லாமல், அவனைவிட்டு ஓடிப்போகும் என்றார். இந்த உவமையை இயேசு அவர்களிடம் சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை. ஆதலால் இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து: நானே ஆடுகளுக்கு வாசல் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். எனக்கு முன்பே வந்தவர்கள் எல்லோரும் திருடர்களும், கொள்ளைக்காரர்களுமாக இருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. நானே வாசல், என்வழியாக ஒருவன் உள்ளே பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும், வெளியும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். திருடன், திருடவும், கொல்லவும், அழிக்கவும் வருகிறானே அன்றி வேறொன்றுக்கும் வரமாட்டான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். மேய்ப்பனாக இல்லாதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தம் இல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைப் பார்த்து ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். வேலையாள் கூலிக்காக வேலைசெய்கிறவன், ஆகவே, ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படமாட்டான். நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டும் இருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். இந்தத் தொழுவத்தில் உள்ளவைகள் அல்லாமல் வேறு ஆடுகளும் எனக்கு இருக்கிறது; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும், ஒரே மேய்ப்பனுமாகும். நான் என் ஜீவனை மீண்டும் பெற்றுக்கொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாக இருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்தில் இருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது, அதை மீண்டும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார். இந்த வசனங்களினால் யூதர்களுக்குள்ளே மீண்டும் பிரிவினை உண்டானது. அவர்களில் அநேகர்: இவன் பிசாசு பிடித்தவன், பைத்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவி கொடுக்கிறீர்கள் என்றார்கள். வேறுசிலர்: இவைகள் பிசாசு பிடித்தவனுடைய வசனங்கள் இல்லை. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள். பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகை வந்தது; குளிர்காலமுமாக இருந்தது. இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே நடந்துகொண்டிருந்தார்.

யோவான் 10:1-23 பரிசுத்த பைபிள் (TAERV)

“உண்மையாகவே நான் உங்களுக்குக் கூறுகிறேன், ஒருவன் ஆட்டுத்தொழுவத்திற்குள் வாசல் வழியாகவே நுழையவேண்டும். வேறு வழியாக நுழைந்தால், அவன் ஒரு திருடன். அவன் ஆடுகளைத் திருடவே முயற்சி செய்வான். ஆனால் மேய்ப்பன் வாசல் வழியாக நுழைகிறவன். அவனே மேய்ப்பன். வாசலைக் காக்கிற காவல்காரன் மேய்ப்பனுக்காகக் கதவைத் திறந்துவிடுவான். ஆடுகள் மேய்ப்பனின் குரலுக்கு செவி கொடுக்கும். மேய்ப்பன் தன் சொந்த ஆடுகளை அவற்றின் பெயரைச் சொல்லி அழைப்பான். அவன் அவற்றை வெளியே நடத்திக்கொண்டு போவான். மேய்ப்பன் தனது ஆடுகளையெல்லாம் வெளியே கொண்டுவந்த பின் அவற்றுக்கு முன்னால் நடந்து அவற்றை நடத்திக்கொண்டு போகிறான். ஆடுகள் அவனது குரல் குறிப்புகளை அடையாளம் கண்டபடியால், அவை அவன் பின்னே செல்கின்றன. ஆனால் ஆடுகள் தாம் அறியாதவன் பின்னால் செல்வதில்லை. அவனைவிட்டு அவை விலகி ஓடும். ஏனென்றால் அவற்றிற்கு அவனது குரல் புரியாது” என்று இயேசு மக்களிடம் இந்த உவமையைச் சொன்னார். இந்த உவமையின் உட்பொருளை அந்த மக்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. எனவே இயேசு மேலும் சொன்னார், “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், ஆடுகளுக்கு நானே வாசலாக இருக்கிறேன். எனக்கு முன்னால் வந்தவர்கள் அனைவரும் கள்ளரும், கொள்ளைக்காரர்களுமாக இருந்தார்கள். ஆடுகள் அவர்களைக் கவனிக்கவில்லை. நானே வாசல். என் மூலமாக நுழைகிறவனே மீட்கப்படுவான். அவன் உள்ளேயும் வெளியேயும் போய் மேய்ச்சலைக் கண்டடைவான். திருடன் திருடுவதற்காகவே வருகிறான். அவன் ஆடுகளைக் கொல்லவும் அழிக்கவுமே செய்வான். ஆனால் நானோ ஜீவனைக் கொடுக்க வந்துள்ளேன். அந்த ஜீவன் பூரணமும், நன்மையுமானது. “நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் தனது ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுப்பான். கூலிக்காக ஆடுகளைக் கவனிக்கிறவன் மேய்ப்பனைவிட வித்தியாசமானவன். கூலிக்காரனுக்கு ஆடுகள் சொந்தமானவை அல்ல. ஆகையால் ஓநாய் வருவதைக் கண்டால் கூலிக்காரன் ஆடுகளை விட்டு, விட்டு ஓடிப் போவான். பிறகு ஓநாய்கள் ஆடுகளை கிழித்து கொன்று சிதறடிக்கும். அந்த மனிதன் ஓடிவிடுகிறான். ஏனென்றால் அவன் கூலிக்காரன். அவனுக்கு ஆடுகளைப்பற்றிய அக்கறை இல்லை. “ஆடுகளைப்பற்றி (மக்களைப்பற்றி) அக்கறை கொண்ட நல்ல மேய்ப்பன் நான். என் பிதா என்னை அறிந்திருப்பது போலவே நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன். நான் என் பிதாவை அறிந்திருப்பது போலவே என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. நான் என் ஆடுகளுக்காக என் ஜீவனைக் கொடுக்கிறேன். எனக்கு வேறு ஆடுகளும் உள்ளன. அவை இந்த மந்தையில் இல்லை. நான் அவற்றையும் அழைத்து வர வேண்டும். அவை என் குரலைக் கவனிக்கும். வருங்காலத்தில் எல்லாம் ஒரே மந்தையாகவும் ஒரே மேய்ப்பனாகவும் இருக்கும். என் பிதா என்னை நேசிக்கிறார். ஏனென்றால் நான் என் ஜீவனைக் கொடுக்கிறேன். நான் என் ஜீவனைக் கொடுப்பதால் அதனை மீண்டும் பெறுவேன். என்னிடமிருந்து என் ஜீவனை எவரும் பறிக்க முடியாது. நானே என் ஜீவனைத் தாராளமாகக் கொடுக்கிறேன். அதற்கான உரிமை எனக்குண்டு. அதுபோல் அதனைத் திரும்பப் பெறுகிற உரிமையும் எனக்குண்டு. இதைத்தான் பிதா எனக்குக் கட்டளையிட்டார்” என்றார். இயேசு சொன்ன இக்காரியங்களினால் மீண்டும் யூதர்கள் பிரிந்துபோயினர். பல யூதர்கள் “பிசாசு அவனுக்குள் புகுந்துகொண்டது. அவன் பைத்தியமாக உளறுகிறான். அவன் கூறுவதை ஏன் கேட்கிறீர்கள்?” என்றனர். அதற்குப் பதிலாக வேறு சில யூதர்கள், “பிசாசு பிடித்து உளறுகிறவனால் இதுபோன்ற உண்மைகளைப் பேசமுடியுமா? குருடனின் கண்களைப் பிசாசு குணமடையச் செய்யுமா? செய்யாது” என்றனர். அது மழைக் காலமாயிருந்தது. எருசலேமில் தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகை வந்தது. இயேசு தேவாலயத்தில் சாலமோனின் மண்டபத்திலே இருந்தார்.

யோவான் 10:1-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான். வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டு போகிறான். அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போகும் என்றார். இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை. ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான். நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக்கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார். இந்த வசனங்களினிமித்தம் யூதருக்குள்ளே மறுபடியும் பிரிவினையுண்டாயிற்று. அவர்களில் அநேகர்: இவன் பிசாசு பிடித்தவன், பயித்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவிகொடுக்கிறீர்கள் என்றார்கள். வேறே சிலர்: இவைகள் பிசாசு பிடித்தவனுடைய வசனங்களல்லவே. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள். பின்பு எருசலேமிலே தேவாலயப்பிரதிஷ்டைபண்டிகை வந்தது; மாரிகாலமுமாயிருந்தது. இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார்.